ருத்ரா
“தாய்மை”
ஏதோ ஒரு கடனை
தீர்த்துக்கொள்ளவா
இந்த தலைப்பு?
இலக்கணங்களின்
இலக்கணத்துக்கு
ஏது
இலக்கணக்குறிப்பு?
அம்மா
என்று சும்மா தான் கூப்பிட்டேன்.
செங்கல் பட்டு அருகே இருந்து
பங்காரு அடிகள் சிரித்தார்.
பாண்டிச்சேரி மண்ணின்
அடிவயிற்றிலிருந்து
வேர் ஊடி விட்ட
அரவிந்தப்புன்னகை
வெள்ளையாய்ப்பார்த்து
வெள்ளமாய் பாய்ந்தது.
அமிர்தமாய்
ஒரு அம்மாவின் குரல்
நெஞ்சை வருடியது.
வாஞ்சையாய்.
எனக்கு
அம்மா எதிரொலி
எங்கிருந்தோவெல்லாம் கேட்டது.
அன்பின் ஒலிக்கு
முகம் தேவையில்லை.
வறுமையும் பிணியும்
சமுதாய வக்கிரங்களும்
பெண்மையை ஒரு புதைகுழிக்கு
விரட்டிய போது
பெண்ணின் கர்ப்பகிருகங்கள்
குப்பைத்தொட்டியில் கிடந்தன.
அந்த மழலைக்கூளங்களை
மாணிக்கச்சுடர் ஆக்க வந்த
தாய்மையின் உருவகம்..
அன்னை தெரஸா..
தெய்வங்கள்
விடுமறை எடுத்துக்கொண்டனவோ
என்னவோ தெரியாது..
அவற்றுக்கும் கூட
கிரகணம் ஏற்படுத்திவிடும்
மானிட சேவை எனும்
மாபெரும் அன்பின் பூமி அல்லவா
அன்னை தெரஸா..
சங்கரர்
எந்திரமாய் கொல்லூரில்
ஒரு முகம் செய்தார்.
சௌந்தர்ய லஹரியும்
பிரம்ம சூத்திர பாஷ்யமும்
அங்கே
கடாமுடா என்று
ஒரு “மௌனத்தை” சுடரேற்றியது.
எனக்கும் அது
“எண்ட்ர மோனே”
என்று தான் கேட்டது.
பிறப்பு மதுரம்
இறப்பு மதுரம்
அந்த மலையோரம் பிதுக்கிய
பலாக்கனிகள் கூட
இப்படித்தான்
மதுரம் மதுரம்…
ஹீப்ரு மொழியில்
அரபு மொழியில்
அல்லது
இருண்ட கண்டத்து
பூமத்திய ரேகையை
ஒட்டியாணமாய் அணிந்து
சுழலும்
அந்த அமுத வயிற்று மண்ணில்
வாய்க்குள் நுழையா
ஏதோ ஒரு மொழியில் கூட
அன்னை சிரித்தாள்.
அங்கே தன் சிசு
எலும்புக்குச்சியில்
கருப்புவிழியில்
சுருட்டை முடியின்
சொக்கிய அழகிலும்
பசியை மட்டுமே
ருசியாக்கி பாலாக்கி
வெற்று முலையைச் சப்பும்
உலகமய பொருளாதாரத்தின்
விந்தையைக்கண்டு
கண்ணீர் உதிர்த்தாள்.
அந்த தெய்வக்கண்ணீரிலும்
உப்பு தான் கரித்தது.
ம்மா என்று
கன்று கூப்பிட்டது.
ம்ருத்யுஞ்ச ஹோமத்தின்
அவிர்பாகம்
மந்திரத்தோடு
அதன் வாய்க்குள்
திணிக்கப்பட்டது.
மந்திரத்தின் உயிர் எது?
மண்ணின் உயிர் எது?
மனிதனுக்கு
விளங்கியதெல்லாம்
வீட்டுக்கூரையின் வழியே
கனக தாரா மட்டுமே.
அவள் கூப்பிட்டாளா?
தெரியவில்லை
அம்பிகே என்று
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
“அம்மா என்றழைக்காத…”
அந்த அமுதக்கடல்
ஜேசு தாஸ் அவர்கள் வழியாய்
எல்லாம் உருக்கியது.
இந்த கல் காற்று..
எங்கோ பில்லியன் ஒளியாண்டு
தூரத்து தொப்புள் கொடியின்
“கருந்துளை” முடிச்சு…
எல்லாம் உருகியது
எல்லாம் பருகியது
அந்த பிரபஞ்ச தர்பூசணி ரசத்தை.
எங்கிருந்து கேட்டால் என்ன?
அந்த ஊற்று இதயம் நிமிண்டி நிற்கும்.
வாக்குப்பெட்டியிலிருந்து
செங்கோல் ஏந்தி
ஒரு ரூபாய் இட்லியில்
வந்தாலும்..
அந்த அம்மா எனும் லேபிள்
தமிழ் நாட்டையே
தூளிக்குள் சுருட்டி விட்டதே!
வேப்பந்தோப்புக்குயிலின்
குரல் கீற்றில் கூட
“ஆத்தாளே அண்டம் எலாம் பூத்தாளே”
என்று கேட்கிறது.
அது சரி!
அம்மா என்றால்
ஆத்திகமா? நாத்திகமா?
உயிர் ஃபிலிம் டெவலப் ஆகும்
அந்த கருப்பு அறையில்
மின்னல் வெட்டும் போது
நமக்கு தெரிந்ததெல்லாம்
இருட்டு..ஆனால்
இருட்டு இல்லை.
வெளிச்சம்..ஆனால்
வெளிச்சம் இல்லை.
………..
“ஏண்டா!
காபின்னு கத்தினே
டபரா டம்ளரோடு நிக்கிறேனே
எடுத்துக்கொள்ளடா.
என்ன யோசனை?”
“அம்மா காஃபி”
என்று அதிகாரமாய் கேட்டேனே!
எப்போ என்று ஞாபகம் இல்லை.
என்னைப்பற்றிய ஞாபகமே
இன்னும்
ஒரு கர்ப்பமாய் சுமந்து
எதிரே இங்கு
“பீபரி காஃபி”யின் ஆவியை
எனக்குள் சூடாய் ஏற்றும்
எந்திரமே!
உனக்கு எந்திரம் எழுத
ஆயிரம் சங்கரர்கள் போதாது…
- துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.
- உறையூர் என்னும் திருக்கோழி
- அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு
- செத்தும் கொடுத்தான்
- ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்
- வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்
- மட்டில்டா ஒரு அனுபவம்
- திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு
- தொடுவானம் 59. அன்பைத் தேடி
- நிழல் தரும் மலர்ச்செடி
- வரலாறு புரண்டு படுக்கும்
- போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்
- நாதாங்கி
- “மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”
- தொட்டில்
- மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்
- அம்மா
- தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !
- ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா
- புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
- எழுத்தாள இரட்டையர்கள்
- வேடந்தாங்கல்
- வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- மிதிலாவிலாஸ்-6