கோ. மன்றவாணன்
அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கலாம். என்னோடு என் வயது பையன்கள் இருப்பார்கள். மேடையில் பிரமுகர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மேடைக்கு முன் தரையில் அமா்ந்து நாங்கள் பேசிக்கொண்டும் மண்ணில் விளையாடிக்கொண்டும் இருப்போம். கூட்ட அமைப்பாளா்கள் அடிக்கடி எங்களைப் பேசாதீங்க என்று அதட்டுவார்கள். நாங்கள் அப்போது மட்டும் அடங்கிப்போவோம். அப்புறம் அனிச்சை செயலாக நாங்கள் பேசத் தொடங்கி விடுவோம். இவை எழுபதுகளில் நடந்தவை.
ஒருமுறை ஜெயகாந்தன் அந்த மேடையில் பேசினார். அது ஸ்தாபன காங்கிரஸ் பொதுக்கூட்டம். அதை அப்போது சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் சொல்வார்கள். ஜெயகாந்தனின் கிருதாவும் மீசையும் என்னை ஈா்த்தனவோ என்னவோ அவரையே நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் பேசத் தொடங்கியதில் இருந்து முடிக்கும் வரை ஆா்ப்பாட்டமான பேச்சாக அது இருந்தது. எல்லாக் கூட்டங்களிலும் முன்வரிசையில் அமா்ந்து “ நீங்க எதுவானாலும் பேசுங்க நாங்களும் தனிக்கச்சேரி நடத்துவோம்” என்ற நிலையில் பழக்கப்பட்டுப்போன சின்னப்பசங்களான நாங்களும் ஜெயகாந்தனின் பேச்சை ஆா்வமாகக் கேட்டோம். அதற்குக் காரணம் அவா் பேச்சு எங்களுக்குப் புரியும்படி இருந்தது. ஆா்ப்பாட்டமான பேச்சாகவும் அது இருந்ததால் நாங்கள் ஆா்வமாகக் கேட்டோம்.
அன்று அவா் பேசிய அந்தக் காட்சி என்றும் பசுமையாகவே என் மனதில் இருக்கிறது. பேசத் தொடங்கும்போது என் பெயர் த. ஜெயகாந்தன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டுதான் பேசினார். ஜெயகாந்தன் பேசுகிறார் என்று விளம்பரப்படுத்தி இருந்த நிலையிலும்- அடுத்து “நாம் இதுவரை ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் பேசுவார்” என்று அறிவித்த நிலையிலும், அவா் தன்னை ஏன் த. ஜெயகாந்தன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார் என்று அப்போது புரியவில்லை.
என்னைச் சிறுகதை மன்னன் என்று அழைக்காதீா்கள் என்று சீறினார். மன்னா் காலம் முடிந்துவிட்டது. நாம் யாருக்கும் அடிமை இல்லை. வேண்டுமானால் என்னைச் சிறுகதை உழவன் என்று அழையுங்கள் என்றார். அவரைச் சிறுகதை மன்னன் என்று அழைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அதன்பிறகும் பல ஆண்டுகாலமாக அவரைச் சிறுகதை மன்னன் என்றுதான் அடைமொழியிட்டு அழைத்தார்கள். அவரின் விருப்பப்படி அவரை யாரும் சிறுகதை உழவன் என்று அழைக்கவே இல்லை. எனவேதான் இந்தக் கட்டுரைக்கு நான் சிறுகதை உழவன் என்று தலைப்பிட்டுப் பெருமைப்படுத்த விரும்புகிறேன்.
பேச்சினூடே எம்ஜிஆா் கறுப்புப்பணம் வாங்குவதாகச் சாடினார். கூட்டத்தினரின் கைதட்டல் அடங்க கொஞ்ச நேரமானது. அடுத்து, சிவாஜியும் கறுப்புப்பணம் வாங்குகிறார் என்று அதிரடியாகப் பேசினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சிவாஜி ரசிகர்களான காங்கிரஸ்காரா்கள் கலங்கித்தான் போனார்கள். மனதில் பட்டதை மறைக்காமல், தனக்குச் சரியெனப் பட்டதை நடுநிலையோடு பேசுபவா்தான் ஜெயகாந்தன்.
நிகழ்ச்சி முடிந்தது. கூட்டம் கலையத் தொடங்கியது. அவருடைய பேச்சு பிரமிப்பில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. மேடையை விட்டு இறங்கிய அவா், மேடையின் பின்புறம் உள்ள காசி விசுவநாதா் கோவில் வாசல் அருகே நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் வீட்டுக்குப் போகாமலும் பசி தெரியாமலும் அவர் பக்கத்தில் கிழிந்து நைந்த அழுக்குச் சட்டையுடன் நின்று கொண்டிருந்தேன். அந்தச் சிலரிடமிருந்து அவர் விடைபெற்றுக்கொண்டு அருகே இருந்த அவருடைய வீட்டுக்கு நடந்து போனார். அவருடன் ஆறேழுபோ் பேசியபடியே உடன்சென்றார்கள். நானும் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல் அவா் பின்னால் நடந்து சென்றேன். ஏன் சென்றேன் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. அவா் பெயரில் உள்ள காந்தன் என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்ப அவா் காந்தமானார். நான் இரும்புத்துகளாய் ஆனேன். கோவில் சுவா் ஓரமாக நடந்து சென்று பிராமணா் தெருவில் திரும்பினோம். அங்குதான் அவா் வீடு இருந்தது. அப்போது ஒரு தோழா் அவரிடத்தில் உங்க கதை புரியவில்லை என்று சொன்னார். உடனே கோபப்பட்டு, “புரியல்லனா வாத்தியார் வைச்சுப் படிச்சுக்கோ” என்றார். அந்தத் தோழா் நடுங்கித்தான் போனார். “உன்போ் என்ன?” என்று கேட்டார். தோழா் சொன்னார். அந்தத் தோழர் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. இமயத்தையே வியந்து மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு இடையில் தென்படும் சிறுகல் நினைவுக்குள்ளே ஏறாமல் போனது உளவியல் ரீதியாக சரிதான். அந்தத் தோழா் தன்பெயருக்கு முன் தலைப்பெழுத்தைச் சொல்லவில்லை. உடனே “அப்பா பேரு என்ன?” என்று கேட்டார். தோழா் அஞ்சியபடியே சொன்னார். “கூட்டத்துல என்பேச்சைக் கேட்டேல்ல. என் போ் த.ஜெயகாந்தன் என்று சொன்னேனில்ல… பேரு சொன்னா இனிஷியலோட சேத்துச் சொல்லணும்” என்று அறிவுறுத்தினார். அதற்குள் அவா் வீட்டு வாசலுக்கு முன் வந்துவிட்டோம். அவரிடத்தில் பேச வேண்டும் என்று ஆசை எனக்கு இருந்தது. தயக்கம் என்னைத் தடுத்தது. அவராகவே பேச மாட்டாரா என்ற ஏக்கமும் இருந்தது. அதுவரை கோபக்கனலாக பேசிய ஜெயகாந்தன், அந்தத் தோழரிடம் பாசமாகப் பேசி விடைபெற்று வீட்டுக்குள் சென்றார். கோபக்கனலாய்த் தகிக்கும் அவா் கொஞ்ச நேரத்திலேயே குளிர்புனலாய் மாறிவிடுவார் என்று பின்னர் பலர் சொல்லக் கேட்கும் போதெல்லாம் அந்தத் தோழா் நினைப்புத்தான் வரும்.
மறுநாள் காலை பத்து மணியளவில் எதிர்பாராமல் எனக்கு ஜெயகாந்தன் தரிசனம் மீண்டும் கிடைத்தது. கடலூா் முதுநகரில் காசுக்கடைத் தெரு, குமரக்கோவில் தெரு, கொத்தவால் சாவடித் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு ஆகியவை இணையும் நான்னுமுனை சந்திப்பில் ஒரு லைட்டுக்கடை இருந்தது. பெட்ரோமாக்ஸ் லைட்டு வாடகைக்குவிடும் கடை அது. அதன் உரிமையாளர் லைட்டுக்கடை பக்கிரிசாமி. குண்டாக- கருப்பாக இருப்பார். அவா் காங்கிரஸ்காரர். அந்த லைட்டுக்கடையில் பக்கிரிசாமியோடும் மற்றும் சிலரோடும் ஜெயகாந்தன் பேசிக்கொண்டிருந்தார். நான் அங்கே போய் நின்றுகொண்டு அவா் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தன் பிள்ளைகளுக்குக் காதுகுத்து செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்பின் பல பத்தாண்டுளாக நான் ஜெயகாந்தனை நேரில் பார்க்கவில்லை. ஆனால் ஜெயகாந்தன் பற்றிய செய்திகளையும் அவருடைய படைப்புகளையும் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.
இன்றிலிருந்து எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காலை, அப்போதைய ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சௌ. பத்மநாபன் என்னிடம் சில அழைப்பிதழ்களைக் கொடுத்து, தமிழன்பா்களிடத்தில் கொடுக்கச் சொன்னார். திருப்பாதிரிப்புலியூா் ஞானியார் மடத்தில் ஞானியார் பற்றிய நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளதற்கான அழைப்பிதழ்கள் அவை. அன்று மாலை நடக்கும் நிகழ்ச்சி அது. சென்னையில் உள்ள ஓா் தமிழமைப்பு, கடலூரில் ஞானியார் அடிகளாருக்கு எடுக்கும் விழா அது. ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், திருப்பூா் கிருஷ்ணன் உள்ளிட்ட பல இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்வதாக அழைப்பிதழ் விவரம் தெரிவித்தது. ஐந்தாறு நாட்களுக்கு முன்பாகவே சௌ. பத்மநாபன் அவா்களிடத்தில் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டும் அவருடைய முடுக்கடியான வேலை காரணமாக யாருக்கும் கொடுக்க இயலவில்லை என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி தானும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்று சொல்லி, எப்படியாவது நிகழ்ச்சிக்குக் கூட்டத்தைச் சேர்த்துவிடு என்று சொல்லி நழுவிக்கொண்டார். வேறு என்ன செய்வது? முடிந்த மட்டில் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் தமிழன்பர்களுக்குத் தகவல் தெரிவித்தேன்.
ஓரளவு கூட்டம் சேர்ந்தது. எளிமையாக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முழுவதும் ஜெயகாந்தன் உட்பட எல்லாரும் தரையில்தான் அமா்ந்திருந்தார்கள். அன்று நான் சொல்லி வந்த ஓரு தமிழன்பா் தாமாகவே சென்று ஜெயகாந்தன் பின்னால் அமர்ந்துகொண்டு, அவருக்கே தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு, அதைக்காட்டித் தான் ஜெயகாந்தனுக்கு நெருக்கமானவர் என்று கதை அளந்து வருகிறார். இப்படி ஊருக்கு ஊா் சிலா் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முழுவெண்மை மீசையோடும் தலைமுடியோடும் இருந்த ஜெயகாந்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் சின்ன வயதில் பார்த்த அவருடைய கம்பீரத்தை மட்டும் முதுமையால் பறிக்க முடியவில்லை. கூட்டத்தில் அமா்ந்திருந்த போது, பக்கத்தில் இருந்தவரோடுகூட அவா் பேசாமல் அவை நாகரீகம் காத்தார்.
அன்று அவா் பேசினார். அமைதியான நதியோட்டம்போல் அவா் பேச்சு இருந்தது. கடலூரில் வாழ்ந்த இளமை நினைவுகளை அவா் பேசும்போது, அவருக்குள் ஒருவித மகிழ்ச்சி இருந்ததை உணர முடிந்தது. கோவில் கோபுரத்தில் இருந்த அம்மன் சிலையின் கையில் தேசியக் கொடியைக் கட்டி வைத்திருந்ததையும், மஞ்சைநகர் மைதானத்தின் வரலாற்றுப் பெருமைகளையும், ஞானியார் மடத்தின் அருகில் தான் விளையாடி மகிழ்ந்த பொழுதுகளையும் சுவையோடு விவரித்தார். அவா் பேச்சில் என்னை இழந்தேன்.
காலம் அவரை வெகுவாக மாற்றி இருந்தது. ஆர்ப்பாட்டமான ஜெயகாந்தனாக அவா் இருக்கவில்லை. பழுத்த ஞானியைப்போல் காட்சி அளித்தார். அவா் பேச்சும் ஒரு முதிர்ந்த ஞானியின் முத்துமொழிபோல் இருந்தது.
ஞானியார் மடத்தின் அருகில் உள்ள விடுதியில்தான் அவா் தங்கி இருந்தார். மறுநாள் காலையில் சென்று எப்படியாவது அவரைப் பார்த்துப்பேச வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருந்ததால் தூக்கத்தைத் துறந்தேன். காலை எட்டு மணிக்கு விடுதிக்குச் சென்றேன்.
காலை ஆறு மணிக்கே அவா் சென்னைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார் என்ற தகவல்தான் பெற முடிந்தது.
பேச முடியவில்லையே…
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9