ஜெமியின் காதலன்

author
0 minutes, 1 second Read
This entry is part 19 of 19 in the series 19 ஏப்ரல் 2015

மாதவன் ஸ்ரீரங்கம்

ஒரு கருக்கலில்தான் அவன் இருப்பைஉணர்ந்தேன். கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி ஒரு குறுநகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் என்னை.

என் திடுக்கிடலை ஒரு சைகையால் அமைதிப்படுத்தினான். அருகில் படுத்திருந்த என் மனைவி மகனை அச்சுறுத்தலோடு பார்த்துக்கொண்டேன்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.

மெல்ல அவனை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு நகர்ந்தேன். படுக்கையறைக்கும் ஹாலுக்குமான சிலநொடிகளில் கடந்திருந்தேன் பல நூற்றாண்டுகளை.

சோபாவில் உட்கார்ந்தபடி என்னைப் பேச அழைத்தவனை நன்றாகத்தெரியுமெனக்கு. ஏன் உங்களுக்கும்கூட தெரிந்திருக்கக்கூடும்.

வறண்ட என் தொண்டைக்கிதமான தேநீர் தேவைப்பட்டது எனக்கு. அவனிடம் கேட்டேன். பால்கலக்காது வேண்டுமென்றான்.

அடுப்பை பற்றவைக்கும் ஓசையும் கொதிக்கும் தேநீரின் ஓசையும் ஒரு மர்மத்தை உடைத்தெடுக்கப்பட்ட பயங்கரத்தைத் தோற்றுவித்தது.

அவன் ஹாலின் சுற்றுச்சுவரிலிருந்த என் குழந்தையின் நிழற்படங்களை சலனமின்றிப்பார்த்துக்கொண்டிருந்தான். தேநீரை ஒருவாய் உறிஞ்சியபடி என்னிடம் கேட்டான்.

“இது யார் வரைந்த ஓவியம் ? மிக தத்ரூபமாக வரைந்திருக்கிறார். அது உனது மகனா ” ?

அதிர்ச்சி விலகாமல் நான் பதிலுரைத்தேன். அது இந்த நூற்றாண்டில் கண்டுபிடித்த ஒரு கருவியாலான சாத்தியமென்று.

இப்பொழுது அதிர்ச்சி அவன்வசமானது.

சிலவிநாடி மவுனத்தை தொலைதூர மசூதியொன்றின் பாங்கொலி கலைத்தது.

நான் எதுவும் பேசும் நிலையிலில்லை என்பதைப் புரிந்துகொண்டவனாக அவனே பேசத்தொடங்கினான் மறுபடி.

“பயமாக இருக்கிறதா”?

“ஆமாம்”

“நான் உன்னை எதுவும் செய்துவிடமாட்டேன். சற்று பேசிவிட்டுப்போகலாமென்று வந்தேன். ஏதும் இடையூறில்லையே”?

நான் எதுவும் பேசவில்லை. அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த பவுதீக விதிப்படி அவனது இந்த வருகை சாத்தியமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

“என்ன யோசிக்கின்றாய் ?.” என்று என்னை கலைத்தான்.

“இல்லை நான் கனவுகானுகின்றேனோ என யோசிக்கின்றேன். இல்லையெனில் உனது இந்த வருகை எப்படிச்சாத்தியம்” ?

அவன் அதிக சத்தமின்றி சிரித்தான். அந்த நேரத்தின் பெரும் அமைதியில் அவன் சிரிப்பு எனக்கு திகிலூட்டியது. மார்கழிமாதத்தின் குளிர்கடந்தும் எனக்கு வியர்த்தது. அவன் சொன்னான்,

“பிரபஞ்சத்தில் அனைத்துமே சாத்தியம்தான் எதுவுமே சாத்தியமில்லாததைப்போல”.

நான் குழப்பமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் குழப்பத்தை கொஞ்சம்போல ரசித்துவிட்டு கேட்டான்,

“உன்னிடம் ஒன்று கேட்கிறேன். நீ இருக்கிறாய் என்பதை எப்படி நிரூபிப்பாய்” ?

“நிரூபணம் எதற்கு ? நான்தான் இருக்கின்றேனே” ?

“இல்லை. என் கேள்வி உனக்கு புரியவில்லையென்று நினைக்கிறேன். சரி இப்படி வைத்துக்கொள்வோம். நீ என்ற ஒன்று இல்லவேயில்லை என்கின்றேன் நான். உண்மையிலேயே நீ நீதான் என்பதையோ, நீ இருக்கிறாய் என்பதையோ எப்படி என்னை நம்பவைப்பாய்” ?

நான் கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னேன்,
“இது சற்று சிரமமான ஒன்று. ஒரு பொருள் இல்லை என்பதை அதன் இல்லாமையால் உணரவைக்கலாம். ஆனால் இருக்கின்ற ஒன்றை இருக்கிறதென்று உணரவைக்க தேவைதான் என்ன? அதுதான் இருக்கின்றதே. அதன் இருப்புதான் அது இருப்பதற்கான ஆதாரம்”.

அவன் இப்போது மிகவும் உற்சாகமானான். “சரி நல்லது. உன் கூற்றுப்படி நம்மால் உணரக்கூடியதெல்லாம் இருக்கின்றது. உணரமுடியாததெல்லாம் இல்லை. அப்படித்தானே” ?

நான் புரிந்தும் புரியாமல் மையமாக தலையை ஆட்டிவைத்தேன். அவன் தனது விரல்களால் காற்றில் கோலம்போடுவதுபோல ஏதோ செய்தான். பிறகு என்னிடம் கேட்டான்.

“சரி இப்போது என் விரல்களைபோல நீயும் காற்றில் துழாவிப்பார்”.

“ஏன் எதற்கு” ?

“அட சும்மா ஒரு விளையாட்டிற்குத்தான். செய்யேன்”.

நான் ஒருவித தயக்கத்துடன் காற்றில் என் விரல்களை அளைந்தேன். யாரேனும் இந்த நிலையில் என்னை பார்த்தால் பாவபுண்ணியம் பார்க்காமல் பான்டிமடத்திற்கு என்னை பார்சல் செய்துவிடுவதற்கு அனேக சாத்தியங்களுண்டு.

“காற்றில் துழாவினாயே எதேனும் தட்டுப்பட்டதா? உன் விரல்கள் எதையேனும் உணர்ந்ததா” ?

“இல்லை” என்று பதிலளித்தபோது எனக்கு அவன் என்ன சொல்ல வருகின்றான் என்பது லைட்டாக புரிந்தது

“இப்போது நீ உணரவில்லை என்பதற்காக இந்த வெற்றுவெளி இல்லையென்று ஆகிவிடுமா”?

நான் மவுனமாயிருந்தேன். அவன் தொடர்ந்தான்.

“இப்போது உன் கண்முன்பு நான் அமர்ந்திருப்பதை நீ உணர்கின்றாய் என்பதற்காக நான் இருக்கிறேன் என்று சொல்லிவிடமுடியுமா”?

இப்போது உண்மையாகவே எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று யோசிக்கத்துவங்கினேன். இவன் நிஜமாகவே அவன்தானா என்று அவனை பார்த்தேன். இடதுகன்னத்து மச்சம், புருவத்தின் சிறுவயது காயத்தழும்பு. வாரப்படாத சுருட்டை முடி, எல்லாம் பொருந்துகின்றதே. சந்தேகமின்றி சர்வநிச்சயமாக இது அவன்தான்.

பெட்ரூமிலிருந்து என் மகன் மெல்ல அழும் குரல்கேட்டது. பாவம் பசியாக இருக்கும். நான் அவனிடம் ஜாடை செய்துவிட்டு பாலை ஆற்றி பாட்டிலில் ஊற்றிக்கொண்டுபோய் மனைவியை எழுப்பினேன். எத்தனை தூக்கத்திலும் தாய்தான் பால் புகட்டவேண்டும். சோறூட்டவேண்டும். நாலுவயதிற்கே நாநூறு கன்டிஷன்கள் போடும் மகன்.

அவள் சினுங்கிக்கொண்டே அரைத்தூக்கத்தில் அவனை மடியிலிட்டு பால் புகட்டினாள். கடிகாரத்தின் டிக்டிக் ஓசையும், தூரத்தில் எங்கோ ஒரு ஓட்டைலாரி ஸ்பீட்பிரேக்கரில் ஏறியிறங்கும் ஓசையும் துல்லியமாக கேட்டது.

மகனை கீழே கிடத்திவிட்டு பாத்ரூம்செல்ல ஹாலுக்குள் நுழைந்த என் மனைவி அவன் இருந்த திசைபக்கமே திரும்பவில்லை. அவள் சென்று தூக்கத்தை தொடர்ந்ததும் நான் பெட்ரூம் கதவை சாத்திவிட்டுவந்து அவனருகில் உட்கார்ந்துகொண்டேன்.

கொஞ்சநேரம் இருவரும் எதுவும் பேசாமலிருந்தோம். அவன்தான் மவுனத்தை உடைத்தான்.

“நிம்போ இப்போது எங்கிருக்கிறான்” ? எனக்கு அவனை சந்திக்கவேண்டும். சில விஷயங்கள் தீர்க்கப்படவேண்டும்”.

என் உடலெங்கும் அதிர்ச்சி பரவியது. ஒருமாதிரி சமாளித்துக்கொண்டு “எனக்கு தெரியாது” என்று பதிலளித்தேன். அவன் நம்பியதாக தெரியவில்லை. நடுவாந்திரமாக தன் தலையை ஆடுபோல ஒருமுறை உலுக்கிக்கொண்டான்.

“நிச்சயம் உனக்கு தெரியாமலிருக்காது. தயவுசெய்து அவன் இருக்குமிடத்தை சொல்லிவிடு”.

அவன் குரலில் கொஞ்சம் கெஞ்சலும் மிரட்டலும் கலந்திருந்தது. நான் அப்பாவியாக சொன்னேன்.

“நிஜமாகவே எனக்குத்தெரியாது. என்னை நம்பு”.

அவன் என்னையே இமைக்காமல் பார்த்தான். என் கண்களின் ஆழத்தில் இறங்கி எதையோ தேடுபவன்போல உற்றுப்பார்த்தான். பிறகு தனது கோட்டின் உள்பக்கத்தில் கைவிட்டு அந்த பிஸ்டலை எடுத்து எங்கள் இருவருக்கும் நடுவில் வைத்தான்.

அப்போதுதான் எனக்கு இந்த சந்திப்பின் நிதர்சனம் உறைத்தது. நான் தப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை யோசிக்கத்துவங்கினேன்.

உள்பக்கம் தாழிடப்பட்டிருக்கும் வாசற்கதவை அடைய அவனை கடந்துதான் செல்லவேண்டும். அந்தவழி உதவாது.

சட்டென்று எழுந்து பெட்ரூமிற்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொள்ளும் வழி அத்தனை உசிதமாகத் தோன்றவில்லை. அதற்குள் நான்கு தோட்டாக்களை வாங்கநேரிடும்.

நான் முந்திக்கொண்டு பிஸ்டலை எடுத்துக்கொண்டாலும் பயனில்லை. எனக்கு சுடத்தெரியாது. திடீரென்று அவன் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினான்.

“நான் நிம்போவை எத்தனை நம்பினேன். அவன் ஏன் எனக்கு துரோகம் செய்தான் ? என்னை ஏதாவது செய்திருந்தால்கூட பரவாயில்லை. என் ஜெமியை எதற்காக கொன்றான் ? இந்தநொடிவரைகூட நிம்போதான் ஜெமியை கொன்றிருப்பானென்று என்னால் திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை”

எனக்கு அவனை பார்க்க பாவமாயிருந்தது. மெல்ல அவன் முதுகை தொட்டேன். அவன் உடல் சிலிர்த்தது.

“ஜெமி சாகவில்லை ரூடோ”.

அவன் படாரென்று நிமிர்ந்தான்.
“என்ன சொல்கிறாய் ? அவள் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தமிழந்து மூச்சையிழந்து…”

“எல்லாம் நிஜந்தான். ஆனால் நான் அவளை காப்பாற்றிவிட்டேன் ரூடோ. நிம்போவின் உதவியுடன். எந்த குழப்பமும் வேண்டாம். டியோலா கிராமத்தில் உனக்காகத்தான் அவர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள்”.

‘நீ.. நீ சொல்வதெல்லாம் நிஜந்தானா ? என்னால் நம்பவே முடியவில்லை”.

“நிஜந்தான் ரூடோ. உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் என் பிள்ளைமீது சத்தியம். ஜெமி உயிரோடிருக்கிறாள். ஏனோ அவள் இறப்பதில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு மட்டும் தெரியும்படி சில தடயங்களை விட்டுவிட்டு வந்தேன். நீ கண்டுபிடித்திருப்பாய் என்றுதான் நம்பியிருந்தேன்”.

அவன் பரவசமும் நன்றியுமாக எனது கைகளை பற்றிக்கொண்டான். கிளம்புவதற்கு ஆயத்தமாக எழுந்துகொண்டான்.

நான் அவனை கட்டியணைத்தபோது அவனது சந்தோஷத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. வாசற்கதவை திறந்துவைத்துவிட்டு அவனிடம் தயங்கித்தயங்கி சொன்னேன்.

“இப்படி சொல்வது அநாகரீகம்தான். ஆனால் என் நிலையையும் சற்று யோசித்துப்பார்”.

அவன் மிகுந்த புத்திசாலி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துகொண்டுவிட்டான். சிரித்தபடி சொன்னான்.

“மன்னித்துக்கொள். எனக்கு உன் நிலைமை புரிகிறது. இனிமேற்பட்டு இப்படியெல்லாம் நேரில்வந்து உன்னை தொல்லை பண்ணமாட்டேன். என் ஜெமி எனக்கு கிடைத்துவிட்டாள். அதுவே போதுமெனக்கு. அவளை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி”

மறுபடி ஒருமுறை என்னை கட்டிக்கொண்டு வெளியேறினான். நான் கதவை பூட்டிக்கொண்டு பெட்ரூம் நுழைந்து மேஜையிலிருந்த என் டைரியில் இன்றைய தேதியில் எழுதத்தொடங்கினேன்.

‘இன்று அதிகாலை, சென்ற ஆண்டு நான் எழுதிய நாவலின் நாயகன் கேரக்டர் என்னை சந்திக்க நேரில் வந்திருந்தான்.’.
—————————————–

“ஏங்க.. ஏங்க எந்திரிங்க” என்று என் மனைவி எழுப்பியபோது நன்றாக விடிந்திருந்தது. தலைபாரமாயிருந்தது. கண்கள் எரிந்தன.

“இத எப்பங்க வாங்கியாந்தீங்க. புள்ள எழுந்ததுல இருந்து இதவச்சிக்கிட்டுத்தான் ஒரே ஆட்டமான வெளையாட்டு. கொஞ்சம் கம்மி வெயிட்ல வாங்கியாந்துருக்கலாம்ல. பாருங்க பையன் அதைதூக்க எவ்ளோ கஷ்டப்பட்றான்”..

என்று என் மனைவிகாட்டிய திக்கில் என் மகன் நின்றுகொண்டிருந்தான்.

அவன் கையிலிருந்த ரூடோவின் துப்பாக்கி என்னை குறி பார்த்துக்கொண்டிருந்தது.

அவன் விரல் ட்ரிக்கரை நிரடியது.

 

_________________________________________________

Series Navigationசென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *