தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
மைதிலி எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அங்கே இருப்பது சித்தார்த்துக்கு இடைஞ்சலாக இருந்தது. கண்களை மூடி படுத்திருந்தானே தவிர தூக்கம் வரவில்லை. ஒருக்களித்துப் படுத்தான். அவளுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொள்வது மரியாதைக் குறைவாக இருக்குமோ என்று தோன்றியது. மல்லாந்துப் படுத்தான். அதுவும் வசதியாக இருக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
“நர்ஸ்!” அழைத்தான்.
“என்ன வேண்டும்?” மைதிலி அருகில் வந்தாள். அவன் இரண்டு கைகளிலும் முகத்தைப் பொத்திக் கொண்டு தலையைக் குனிந்தபடி ஒன்றும் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தான்.
“தலையை வலிக்கறதா?” கேட்டாள்.
இல்லை என்பது போல் தலையை அசைத்தான்.
ஒரு நிமிடம் அவனையே பார்த்த மைதிலி அவனுடைய இடைஞ்சலை தன்னிடம் சொல்வதற்கு சுமுகமாக இல்லை என்று உணர்ந்து கொண்டாள். போய் நர்சை அழைத்துக் கொண்டு வந்தாள்..
“சித்தார்த்! என்ன வேண்டும்?” அருகில் வந்து நர்ஸ் கேட்டாள்.
“தூக்கத்திற்கு மருந்து.”
“ஏன்? எங்கேயாவது வலிக்கிறதா?”
“இல்லை. தூங்குகிறேன்.”
“தூக்கம் வந்தால் தூங்கு. இல்லாவிட்டால் வேண்டாம். அதற்காக மருந்து எதற்கு? தாங்க முடியாத அளவுக்கு வேதனை எதுவும் இல்லையே?”
“இல்லை.” அவன் தலையை குறுக்கே அசைத்துக் கொண்டிருந்த போதே இருமல் வந்தது. நர்ஸ் நெருங்கி வந்து பிடித்துக் கொண்டாள். மூச்சு விட முடியாத அளவுக்கு இருமல்.
மைதிலி தன்னையறியாமல் தடவிக் கொடுப்பதற்கு ஓரடி முன்னால் வந்தாள். அதற்குள் நர்ஸ் மருந்து கொடுத்துவிட்டாள். இருமல் கொஞ்சம் தணிந்தது.
அவன் முகத்தில் தயக்கம், கூச்சம் தெளிவாக தென்பட்டது. “நான் வீட்டுக்குப் போய் விடுகிறேன் சிஸ்டர்” வேண்டுகோள் விடுப்பது போல் சொன்னான்.
“அதைச் சொல்ல வேண்டியது டாக்டர். உனக்கு சீக்கிரமாகவே குணமாகிவிடும். குணமான பிறகு ஒரு நிமிஷம் கூட இங்கே தங்கச் சொல்ல மாட்டோம்.” சமாதானப் படுத்துவது போல் நர்ஸ் சொன்னாள். அதற்குள் காலடிச் சத்தம் கேட்டது.
மைதிலி திரும்பிப் பார்த்தாள். அபிஜித் வந்தான். வந்ததுமே நேராக “ஹலோ! சித்தார்த்!” என்று கட்டில் அருகில் சென்றான். அபிஜித்தைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.
“எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.
“டெம்பரேச்சர் கொஞ்சம் குறைந்திருக்கு. இரவு நன்றாகவே உறங்கினான்.” நர்ஸ் சொன்னாள்.
அபிஜித் சித்தார்த்தின் கட்டில் மீது உட்கார்ந்தான். மனைவியின் பக்கம் பார்த்து கண்ணாலேயே குசலம் விசாரித்தான்.
நர்ஸ் ஊசி மருந்து கொண்டு வந்து சித்தார்த்துக்கு போட்டாள். “மருந்துகள் எங்களிடம் ஸ்டாக் இருக்கவில்லை. பக்கத்து மெடிகல் ஷாப்களிலும் கிடைக்கவில்லை. போன் செய்து மேடத்திடம் சொன்னேன். அவங்கதான் கொண்டு வந்தாங்க.” என்றாள் நர்ஸ்.
“ஐ ஸீ!” என்றான்.
“நீங்க ஒரு நிமிஷம் வெளியே இருக்கீங்களா? பேஷண்டுக்கு உடை மாற்ற வேண்டும்” என்றாள் நர்ஸ்.
அபிஜித், மைதிலி அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
“சாரி மைதிலி போன் செய்வதற்கு கூட நேரம் இருக்கவில்லை” என்றான்.
“மீட்டிங் முடிந்துவிட்டதா? என்ன முடிவு எடுத்தீங்க?”
“முடிந்தது. பாசிடிவ்!”
“வாழ்த்துக்கள்.”
“தாங்க்யூ. சாப்பிட்டாயா?”
மைதிலி பதில் பேசவில்லை.
“சாப்பிடவில்லை இல்லையா? நான் எத்தனை தடவை சொன்னாலும் இந்த பழக்கத்தை விட மாட்டேன் என்கிறாய். எனக்கு நேரம் கிடைக்காததால் வர முடியவில்லை. சாரி.”
“இதை இவ்வளவு பெரிய விஷயமாக நினைப்பானேன்? அது போகட்டும். சித்தார்த்தைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தாயா? அல்லது…”
“சித்தார்தைப் பார்ப்பதற்கு மாலையில் வரலாம் என்றுதான் நினைத்தேன். ராஜம்மா அம்மா வீட்டில் இல்லை. வெளியே போயிருக்காங்க என்று சொன்னதுமே இங்கேதான் வந்திருப்பாய் என்று கிளம்பி வந்து விட்டேன்.”
“இவ்வளவு சரியாக உன்னால் எப்படி ஊகிக்க முடிந்தது?”
“இன்ஸ்டிங்க்ட்!” மனைவியின் கையைப் பற்றிக் கொண்டே சொன்னான். “நேற்று இரவு டாக்டர் சித்தார்த்தை சோதிக்கும் போது நீ சுவற்றில் சாய்ந்து கொண்டு சலனமே இல்லாதது போல் நின்று இருந்த காட்சிதான் என் கண்முன்னால் இப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. உன் கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.”
மைதிலியின் பார்வை தரையில் படிந்தது. அபிஜித்திடம் தன்னால் ஏதும் மறைக்க முடியாது. அவனைப் பொறுத்த வரையில் தான் ஒரு திறந்த புத்தகம்.
“வாங்க சார்.” நர்ஸ் அழைத்தாள்.
கணவன் மனைவி இருவரும் அறைக்குள் போனார்கள்.
சித்தார்த் கட்டில் மீது அமர்ந்து இருந்தான். நர்ஸ் அவன் அணிந்திருந்த ஆடையைக் காண்பித்துக் கொண்டே “இந்த உடையை போட்டுக் கொள்வதற்கு லேசில் சம்மதிக்கவில்லை. சார். நீங்க வாங்கி வந்தீங்க என்று சொன்ன பிறகு மறுக்கவில்லை” என்றாள்.
அபிஜித்துக்கு ஒரு நிமிஷம் புரியவில்லை. மனைவியின் பக்கம் பார்த்தான்.
“அளவு சரியாக இருக்கு. பிடிப்பாக இருக்குமோ என்று பயந்தேன்” என்றாள்.
மைதிலி அவற்றை வாங்கி வந்திருக்கிறாள் என்று அபிஜித்துக்கு புரிந்தது. சித்தார்த் கட்டில் மீது முகத்தைக் கைகளில் தாங்கியபடி உட்கார்ந்திருந்தான்.
அபிஜித் கட்டில் மீது உட்கார்ந்து அவன் தோளில் கையைப் பதித்தான். “ஏதாவது வேதனையாய் இருக்கிறதா?”
சித்தார்த் பதில் பேசவில்லை.
“டிப்ரெஸ் ஆகாதே. டாக்டர் சீக்கிரம் வீட்டுக்குப் போய் விடலாம் என்று சொன்னார். நீ ஒய்வு எடுத்துக் கொண்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.”
“இதெல்லாம் எனக்கு நீங்க எதற்காக செய்யறீங்க?”
அபிஜித் ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை. பிறகு திடமான குரலில் சொன்னான். “உனக்குப் புரியவில்லையா? என்னுடைய சுயநலம் இது. உனக்கு சீக்கிரம் குணம் ஆகிவிட்டால் எனக்கு உடனே டிசைன்ஸ் கிடைத்து விடும். இந்த கோடை கால சீசனில் என் கம்பெனியில் தயாரான ஆடைகள் சூறாவளியாய் உலகத்தை சூழ்ந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.”
சித்தார்த் கைகளை எடுத்துவிட்டு முகத்தைத் திருப்பி அபிஜித் பக்கம் பார்த்தான். “தாங்க்யூ சர்” என்றான். அவன் சொன்ன அந்த தோரணைக்கு மைதிலிக்கு மட்டுமே இல்லை. அபிஜித்தின் மனமும் இளகி விட்டது. இந்த உலகத்தில் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் தன்னுடைய வேலை ஒன்றுதான் ஆதாரம் என்பது போல் இருந்தான்.
அபிஜித் அவன் கன்னத்தில் லேசாக தட்டினான். “சீக்கிரம் உடம்பைத் தேற்றிக்கொள் யங் மேன்! உன்னிடமிருந்து எனக்கு நிறைய வேலை வாங்க வேண்டியிருக்கிறது. ஐ நீட் யூ” என்றான்.
“நான் சீக்கிரம் குணமாகி விடுவேன்.”
“அது இருக்கட்டும். கண்ணாயிரம் எங்கே?”
“வீட்டுக்குப் போயிருக்கிறார்.”
“இங்கே இருக்கச் சொல்லியிருந்தேனே?”
“நான்தான் போகச் சொல்லி விட்டேன்.”
“உனக்குத் துணையாக யாராவது ஒருத்தர் இருக்க வேண்டும் இல்லையா?”
“தேவை இல்லை.” சித்தார்த்தின் குரல் திடமாக ஒலித்தது.
“குட். ஓ.கே. நான் வருகிறேன். ஏதாவது தேவைப் பட்டால் வீட்டுக்குப் போன் செய். நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேடம் இருப்பாங்க. சரிதானே மைதிலி?” என்றான். மைதிலி தலையை அசைத்தாள்.
சித்தார்த் பதில் பேசவில்லை.
அபிஜித் எழுந்து கொண்டு கிளம்புவதற்கு முற்பட்டது போல் இரண்டடி வைத்தான். மைதிலியும் அவன் பக்கத்தில் வந்து கொண்டிருந்தாள். அபிஜித் திடீரென்று பின்னால் திரும்பி கட்டில் அருகில் போனான். “என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் இந்த ஆஸ்பத்திரியை விட்டு ஓடிப போய் விட மாட்டாய் இல்லையா?” சீரியஸாக கேட்டான். நிமிர்ந்து பார்த்த சித்தார்த்தின் கண்ணிமைகள் படபடத்தன. அபிஜித்தின் கண்கள் அவன் மனதில் எல்லா மூலைகளையும் சோதிக்கும் டார்ச் லைட் போல் கூர்ந்து நோக்கின.
சித்தார்த்தின் கண்களில் தன்னுடைய திருட்டுத்தனம் ஏதோ வெளிப்பட்டு விட்டது போன்ற நிச்சயமற்றதன்மை!
“சொல்லு” என்றான் அபிஜித்.
போக மாட்டேன் என்பது போல் சித்தார்த் தலைய அசைத்தான்.
‘குட் பாய்!” அபிஜித் பின்னால் திரும்பி வாசலில் நின்றிருந்த மைதிலியைப் பார்த்துவிட்டு “உங்க மேடம்க்கு வணக்கம் சொன்னாயா?” என்றான். சித்தார்த் கைகளை ஜோடித்தான்.
“உனக்கு இன்னும் சரியாக அறிமுகம் ஆகவில்லை சித்தார்த்! உங்க மேடம் கையில் மந்திரக்கோல் இருக்கிறது. நான்கு நாட்கள் அவளுடன் பேசி பழகி விட்டால் யாராலேயும் அவள் கண்ணசைவைத் தாண்டி போக முடியாது” என்றான்.
“அபீ! ப்ளீஸ்” என்றால் மைதிலி தடுப்பது போல்.
“போய் வருகிறோம். நன்றாக ஒய்வு எடுத்துக் கொள். டாக்டர் சொன்ன பிறகு நானே உன்னை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்” என்றான். வீட்டைப் பற்றிய பேச்சு வந்ததும் சித்தார்த் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
மைதிலியும், அபிஜித்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இருவரும் லிப்டை நோக்கி வரும் போது மைதிலி சொன்னாள். “என்ன? ஓடிப் போய் விடுவாயா என்று கேட்டு அவனை அப்படி பயமுறுத்தி விட்டாய்?”
“அவனை கொஞ்சம் பயமுறுத்தணும்” என்றான்.
“எதற்காகவாம்?”
“அவன் இதுநாள் வரையில் வானத்தில் பறக்கும் பறவையைப் போல் சுதந்திர ஜீவி. நினைத்ததை அப்படியே செய்து பழக்கம் இருக்கும் போல் தெரிகிறது, அவன் இப்போது என்னிடம் வேலை பார்ப்பவன். அந்த பழக்கம் இனியும் தொடர்ந்தால் இடைஞ்சல். தன்னுடைய சுதந்திர போக்கு மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று அவன் புரிந்து கொள்ளணும்.”
“அவனை ரொம்பவும் பயமுறுத்துகிறாயோ?”
“அவன் யாருக்கும் பயப்பட மாட்டான். அந்த கடவுளுக்குக் கூட.” லிப்ட் பட்டனை அழுத்தி கொண்டே சொன்னான்.
- ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.
- காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே
- அபிநயம்
- ஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. !
- தாய்மொழி வழிக்கல்வி
- நேபாளத்தில் கோர பூபாளம் !
- இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு
- தொடுவானம் 65. முதல் நாள்
- பனுவல் வரலாற்றுப் பயணம் 3
- இரு குறுங்கதைகள்
- “மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “
- சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை
- ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…
- முக்காடு
- சொப்பன வாழ்வில் அமிழ்ந்து
- வைரமணிக் கதைகள் – 13 காலம்
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3
- தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?
- இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்
- ஒரு துளி கடல்
- பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)
- ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்
- ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்
- அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்
- சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்
- மிதிலாவிலாஸ்-11