காற்றுக்கென்ன வேலி – அத்யாயம் 1 (குறுந்தொடர் )

This entry is part 19 of 20 in the series 26 ஜூலை 2015

உஷாதீபன்
———
அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலனுக்கு ஏனோ என்றும்போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று ரெகுலேட்டரைத் திருகினான். குளிர்ந்த காற்று மெல்லக் கீழே இறங்கி இவன் சட்டைக்குள் புகுந்து இவனைக் குளிர்வித்தது. அங்கிருந்தமேனிக்கே தலையைச் சாய்த்து வாயில்வரை பார்த்தான். மனம் ஒரு நிலையிலில்லை.
நீண்ட பட்டாசாலையாய்க் கிடந்த அந்த இடம் ஒரு காலத்தில் குதிரை லாயமாய் இருந்தது என்று சொன்னார்கள். அது இப்போது அலுவலகமாய் உள்ளது. இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அடுத்தாற்போல் ஒரு முற்றம். அங்கேதான் தொட்டியில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருக்கும். மதியச் சாப்பாட்டை முடித்த பணியாளர்கள் அங்கேதான் கை கழுவுவார்கள். வலது மூலையில் கழிவறை. ஆண்களும் பெண்களும் ஒரே வாசலில் நுழைவிடமுள்ள அவ்வழியே சென்று பிரிந்து கொள்ள வேண்டும். தினசரி இவனைச் சங்கடப்படுத்துவது இதுவும், இவன் அமர்வுக்கு எதிரே பணியாளர்கள் சத்தமாய் வாய் கொப்பளித்துக் காறித் துப்புவதும் மூக்குச் சிந்துவதுமான நடவடிக்கைகள். தன் பார்வைக்கு அது படக்கூடாது என்று இவன் எதிரே இருந்த கம்பிக் கிராதியில் காலண்டர்களையும், பணிகள் சம்பந்தமான வரைபடங்களையும் மாட்டி அந்த இடத்தை மறைத்திருந்தான். அப்படிச் சொல்வதை விட தன்னை மறைத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் சரி.
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன் பாலன். யாரும் அவனிடம் அவன் பிரிவு சம்பந்தமாக எந்தக் குறையும் சொல்லிவிடக் கூடாது. என்ன லேட்டு? என்று வாய் தவறிக் கூடக் கேட்டு விடக் கூடாது. அது அதற்கென்று உள்ள நேரத்திற்கு முன்பே முடித்து விட வேண்டும். காலையில் பத்து மணியானால் கரெக்டாக இருக்கையில் இருப்பான். மாலை ஐந்தே முக்கால் ஆனால் எழுந்து போய்க்கொண்டேயிருப்பான். முதல் நாள் வேலை பாக்கி, அன்றைய புதிய வேலைகள் என்று எல்லாமும் முடிக்கப்பட்டிருக்கும் அவனைப் பொறுத்தவரை. அப்படி முடிக்க முடியவில்லையா, யாரும் அவனுக்குச் சொல்ல வேண்டியதில்லை, அவனே கூடுதல் நேரம் இருந்து அதை முடித்துவிட்டுத்தான் கிளம்புவான். இல்லையென்றால் ராத்திரி அவனுக்குத் தூக்கம் வராது. அவன் எழுந்து வெளியேறுவதைப் பார்த்துத்தான் மணி ஆகி விட்டது என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஒரு டீ அடிச்சிட்டு வந்து உட்காருவோம் என்று அதற்கு மேல் தங்கள் வேலையைத் துவக்குபவர்கள்தான் அந்த அலுவலகத்தில் அதிகம். அது அவர்களின் பழக்கம். அவர்கள் பாடு. தனக்கு அது உதவாது. என் பாணி இது என்று இருந்து கொண்டிருந்தான் பாலன்.
அப்படிப்பட்டவனுக்கு இன்று ஏன் வந்து அரைமணியாகியும் வேலை ஓடவில்லை. இன்று பூராவும் வெறுமே உட்கார்ந்திருந்தாலும் ஒன்றும் பாதிக்கப் போவதில்லைதான். ஏனென்றால் அவன் பிரிவில் அவசரமாக இருந்தவற்றையெல்லாம் முடித்து விட்டான். இனி புதிதாய் வந்தால்தான் உண்டு. வந்தாலும் அவற்றுக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் டைம் உள்ளது. அதற்குள் முடித்துவிடலாம்தான். அலுவலரிடமிருந்து முக்கியமான ஒரு கோப்பில் உத்தரவினை எதிர்பார்த்தது அவன் மனம். எதனாலும் அவனுக்கு லாபமோ நஷ்டமோ கிடையாது. அப்படியான எதிர்பார்ப்பும் அவனிடம் இல்லை. விதி முறைப்படி எது உண்டோ அதை எழுதி அது ஓ.கே. ஆகும்போது தான் மதிக்கப்படுவதாக ஒரு திருப்தி. நிறைவு. உண்மையில் தான் மதிக்கப்படுகிறோமா என்று எதிர்பார்ப்பது கூடத் தவறுதான் என்று நினைப்பவன் இவன். விதிமுறைகள் மதிக்கப்படுகின்றனவா என்பதே சரி. இவன் எழுதியது எந்தத் திருத்தமும் இன்றி ஆணையாகும்போது கிடைக்கும் நிறைவு இருக்கிறதே அதற்கு ஈடேயில்லை.
பாலன் தன் பிரிவு வேலையை முடிப்பதற்குப் பிரயத்தனப் படுவதுபோல் மற்றவர் எவரும் அவ்வலுவலகத்தில் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அப்படித்தான் தோன்றியது இவனுக்கு. எதற்கும் அலட்டிக்கொள்வதாக இல்லை என்பதுபோலான இருப்பில் பலரும் இருந்தனர். எதையும் மெனக்கெட்டால்தான் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணமுள்ளவன் இவன். இருக்கையில் இருந்தமேனிக்கே எதுவும் நடக்காது என்ற எண்ணமுள்ளவன். எழுதி எழுதி அடுத்தடுத்த பிரிவிற்கு அனுப்பிப் பெற வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால் அது காலதாமதம் ஆகும். சமயங்களில் அது பிரச்னையும் ஆகும். தன்னையும் பாதிக்கும். எதிர்ப் பிரிவினரையும் பாதிக்கலாம். எதற்கு வம்பு? தன் பிரிவிற்குத் தேவையான விபரங்கள் மற்ற பிரிவுகளில் இருந்து பெற வேண்டும் என்றிருந்தால் அப்பிரிவுக்குச் சென்று அவர்களின் வேலைக்குக் கேடு இல்லாமல் அவர்களின் சாதகமான அனுமதியுடனே தனக்குத் தேவையானவைகளை அவனே எடுத்துக் கொண்டு வந்து தன் பிரிவின் வேலையை அன்றன்றைக்கே முடித்து விடுவான். இதுதான் இவன் தன் சர்வீசில் கண்ட உண்மை.
குறிப்பாக திங்கள்கிழமை நடக்கும் கூட்டத்திற்குச் செல்லுமுன் அவனிடம் பென்டிங் என்று எதுவும் இருக்கக் கூடாது. இதுவரை இருந்ததும் கிடையாது. அதனால்தான் அவனிடம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினை ஒப்படைத்திருந்தார்கள். திருச்சியில் இருந்து மாறுதலில் வரும்போதே இவனைப் பற்றிய விபரங்கள் எல்லாமும் அந்த அலுவலகத்திற்குத் தெரிந்திருந்தன. அப்பாடா! என்று மூச்சு விடுவதுபோல் தூக்கிக் கொடுத்து விட்டார்கள். தவறு, சுமத்தி விட்டார்கள் என்பதுதான் சரி. வேலைகளை, பொறுப்புகளைக் கை கழுவுவதுதானே இன்று பெரிய சாமர்த்தியமாக இருக்கிறது. அதில் யார் திறமைசாலி என்பதுதான் இன்று மதிக்கப்படும் விஷயம்.
திருச்சியில் இருந்த அலுவலகத்தில் எதிலிருந்து கொஞ்ச நாளாவது விடுபடுவோம் என்று இவன் நினைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு மாறுதலில் வந்தானோ அப்படி வந்த இடத்திலும் அதுவே அவன் தலையில் விடிந்தது. இத்தனை நாள்தான் பாடாப்பட்டு, ஓடாத் தேய்ஞ்சுட்டு வர்றேன். வந்த எடத்திலும் இதுதானா? என்று அலுத்துக் கொண்டான்.
அலுத்துக் கொண்டான் என்றால் அவனுக்குள் என்று பொருள். எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டான். வந்த இடத்தில் எதற்கு எடுத்த எடுப்பிலேயே கெட்ட பெயர்? ஆரம்பத்திலேயே முகம் சுளிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். கொஞ்ச நாளைக்கு செய்து காண்பித்து விட்டு, பிறகு அதிகாரமாக, உரிமையோடு கேட்க வேண்டும். அப்பொழுதுதான் தன் பேச்சு எடுபடும். புது இடத்தில் ஆரம்பத்திலேயே வாயைவிட்டால் ஒன்று திமிர் பிடித்தவன் என்பார்கள் அல்லது வந்ததும் வராததுமா என்னங்க இப்டி? முதல்ல கொடுக்கிறத வாங்கிட்டு சரின்னு வேலையப் பாருங்க என்று அட்வைஸ் பண்ணுவார்கள். உள்ளுர்ல இருக்கணுமா வேணாமா? என்று மிரட்டுவதுபோல் பேசுவார்கள். என்னவோ இவர்கள் முயற்சி செய்து வாங்கிக் கொடுத்தவர்கள் போல்.
குறிப்பிட்ட பிரிவை ஒப்படைத்தபோது, சரி சார்…இவ்வளவுதான் அவன் சொன்னது. சிரித்த முகத்தோடு அவன் பெற்றுக் கொண்டதைப் பார்த்து, மேலாளர் ஆல் த பெஸ்ட் என்று கை குலுக்கினார். அப்படியே இடிச்ச புளியாக வந்து உட்கார்ந்தவன்தான். இன்றுவரை எந்தக் குறையுமின்றித் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை ஒரே ஆறுதல் உள்ளுரில் இருக்கிறோம் என்பது. வீட்டுச் சாப்பாடு. சற்றுத் தாமதமானாலும் வீட்டிற்குச் சென்று அம்மா கையால் சாப்பிடும் சுகமே தனி. மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்கிற எண்ணமே ஒரு மகிழ்ச்சிதான்.
வெளியூரில் இருந்துகொண்டு, தேடித் தேடிச் சென்று பல இடங்களில் சாப்பிட்டு சாப்பிட்டு எல்லாமும் அலுத்து விட்டது அவனுக்கு. ஒரு கட்டத்தில் உணவு விடுதிகள், மெஸ்கள் என்று சாப்பாடே அலுத்துப்போய் பழமாக வாங்கி வைத்துக் கொண்டு தின்று கொண்டிருந்தான்.
சற்று வயிற்றுக் கோளாறு உள்ளவன் அவன். வெளியூரில் இருக்கையில் அறையில் மிளகுப்பொடி, சீரகப் பொடி, கருவேப்பிலைப் பொடி என்று அம்மா செய்து கொடுத்தவைகளை வைத்துக் கொண்டிருந்தான். மதியச் சாப்பாட்டிற்கு பொட்டணம் போட்டு வைத்துக் கொள்வான். மெஸ் சாப்பாடெல்லாம் உதவாது அவனுக்கு. சாம்பார் கொண்டுவந்தால் குறுக்கே கையைக் காண்பித்து மறுத்து விடுவான். இவன் கொண்டு போன ஏதேனும் ஒரு பொடியைச் சாதத்தில் தூவிப் பிசைந்து சாப்பிட்டுக் கொள்வான். ஆசைக்குக் கூட நூடுல்ஸ், பீஸா, அது இது என்று எதையும் தொட்டதில்லை அவன். அப்படி ஆசையாயிருந்தால் ஊருக்கு லீவில் செல்லுகையில் அம்மாவிடம் சொல்லி செய்யச் சொல்லுவான்.
இந்த ஒரு கரண்டியத்தாம்மா அவன் முப்பது, நாற்பதுன்னு விலை போடறான்…அநியாயம்ல….என்பான் அம்மாவிடம்.
அதனாலென்னடா ராஜா…சின்ன வயசுதானே…ஆசையாத்தான் இருக்கும்…என்னிக்காவது வேணும்போல இருந்தா வாங்கிச் சாப்பிடேன்…காசு போனாப் போயிட்டுப் போகுது….அப்படிச் சிக்கனமா இருந்து யாருக்குக் காசு சேர்க்கப் போறே….என்பாள் அம்மா.
பாலன் அம்மாவுக்கு ஒரே ஆண் பிள்ளை. கல்யாணம் கழிந்து இனி குழந்தையே பிறக்காது என்று டாக்டர் உறுதி செய்துவிட்ட பின்னர் பதினைந்தாண்டுகளுக்குப்பின் பிறந்தவன் அவன்.. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை.
எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லைன்னு எந்த டாக்டர் சொன்னது? அவர் யாரு இதை முடிவு பண்றதுக்கு? நான் ஜெயிச்சுக் காட்டறேன் பாரு….என்று தொடர்ந்த சிகிச்சைகளின் மூலமாகவும், நல்ல ஊட்டச் சத்து உணவுகளின் மூலமாகவும், அம்மாவைப் பல மடங்கு தேற்றி, தன்னையும் கவனமாகக் கவனித்துக் கொண்டு கடைசியில் வெற்றி கண்டே விட்டார் நாகநாதன். பாலனின் தந்தை.
அதற்குப் பின் அவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தது.. கடைசியாகக் கருத்தரித்திருந்தபோது அம்மாவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது இன்னும் அவன் மனதில் அப்படியே இருக்கிறது. ஐம்பது வயதிலுமா? என்று பலரும் மறைவாகக் கேலி செய்தார்கள். ஆனால் தங்கக் கட்டியாய் அம்மா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துத் தந்தாள். அதுதான் கடைசித் தங்கை கல்யாணி. அப்பா ஒரு சினிமா ரசிகர். பராசக்தி படத்தின் கல்யாணி பெயரை முதல் குழந்தைக்கே வைக்க வேண்டும் என்பது அவரின் அவா. அம்மாதான் மறுத்து மறுத்து, இரண்டு குழந்தைகளைத் தாக்காட்டிவிட்டாள். மூன்றாவதுக்கு அப்பா விடுவதாயில்லை. வைத்துத்தான் தீருவேன் என்று மருத்துவ மனையிலேயே பிறப்புச் சான்றிதழில் அந்தப் பெயரை எழுதச் சொன்னது அப்பாதான். ஜெகதாம்பாள் பொண்ணு ஜெகத்தையே ஆளப் போகுது பார் என்று சொல்லிக் கொள்வார்.
அதற்குப்பின் அவரின் கவனம் முழுதும் மாறிப்போனது. மூன்று பெண்டுகளுக்கும் திருமணம் செய்ய வேண்டுமே என்கிற பயம் பற்றிக்கொண்டது. செய்யும் ஜவுளி வியாபாரம் பத்தாது என்று ஏற்கனவே தொட்டும் தொடாமலும் இருந்த அரசியலிலும் தீவிரமாகக் காலடி பதித்தார். இன்று நகரில் அவர் ஒரு முக்கியப் புள்ளி. நிறையக் காரியங்கள் பலருக்கும் செய்து கொடுத்தார். தன்னைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டினார்.
அப்படியான ஒரு வேலையைத்தான் அவன் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அன்று காலையில் பாலனிடம் கோரியிருந்தார் நாகநாதன்.

*தொடரும்

##
உஷாதீபன் 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை – 625 014.

Series Navigationஉல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *