குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்
இது திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம். இந்தப் பாசுரம்தான் பட்டரின் ‘நீளாதுங்க ஸ்தநகிரி’ எனும் தனியன் ஸ்லோகம் உருவாகக் காரணம் என்று முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் தெரிவிக்கிறார். மேலும் கடந்த 18-ஆம் பாசுரம் முழுக்க முழுக்க பிராட்டியின் பெருமை பேசும் பாசுரமாகும். அதனால் மகாலக்ஷ்மிக்கே உரிய அக்ஷரமான ‘உ’ வில் தொடங்கியது. இந்தப் பாசுரம் பாதி பிராட்டியையும், பாதி பெருமானையும் போற்றுகிறது. எனவே ‘கு’ [க்+உ] என்ற எழுத்தில் தொடங்குகிறது. அடுத்த பாசுரம் ‘மு’ [ம்+உ] வில் தொடங்குகிறது. இந்த இரண்டு பாசுரங்களும் பிராட்டி மற்றும் பெருமாளின் புகழ் பாடி நாராயண தத்துவத்தைக் கூறுகின்றன.
முந்தைய பாசுரத்தில் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள். இப்பெண்பிள்ளைகள் எழுப்பியவுடன் நப்பின்னையும் கதவைத் திறக்க எழுந்திருந்தாள். ஆனால் அப்பெண்பிள்ளைகள் நம்மைப் பற்றினவர்கள் அன்றோ? அவர்கள் நம்மீது அன்புடையவர்கள் அன்றோ? எனவே கதவு திறக்கும் ஏற்றத்தை பிராட்டிக்குத் தரக்கூடாது. கதவைத் திறந்து நாமே அந்த ஏற்றத்தைப் பெற வேண்டும்” என்று கண்ணபிரான் எண்ணியதால் நப்பின்னையை எழ விடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தானாம்.
அதை ஊகித்த இவர்கள் ‘நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்’ என்று கண்ணனை வேண்டுகிறார்கள். ஆனால் பிராட்டியோ ”இப்பெண்பிள்ளைகள் நம்மையன்றோ முதலில் அழைத்தார்கள்; எனவே நாம்தானே அருள் செய்ய வேண்டும்” என்று அவனை எழ விடாமல் கட்டிப் பிடித்தாள். உடனே இவர்கள், மீண்டும் “மைத்தடங்கண்ணினாய்” என்று நப்பின்னையை எழுப்பினார்கள்.
அருள் புரியும் அதிசய வைபவத்தைக் காட்டிலும் இல்லற வைபவம் காட்டும் பாடல் இது. உள்மனப் போட்டி நடக்கிறது என்பார் பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள். முதலில் நப்பின்னை எழுந்தவுடன் கண்ணன் ”உம்பர்கோமானே” என்று நம்மை எழுப்பியதால் அவளை எழவிடாமல் தான் எழுந்தான். ஆனால் பிராட்டியோ, “பிரானே! ஏன் வீண் சண்டை? உம்மை எழுப்பியவுடன் நீர் போகவேண்டியது தானே? போகாததால்தானே என்னை எழுப்புகிறார்கள். என்னை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கிளம்புகிறாள்.
”பிராட்டியே! நீ சாஸ்திரம் உணராதவள்; வீண் வழக்குத் தொடராதே; எப்பொழுதும் புருஷகாரம் க்ருதயத்தில் மட்டும்தான் உனக்கு அந்வயமே ஒழிய காரியம் செய்வதில் எனக்கே உரிமை உண்டு. உனக்கு இல்லை.”
“ஏன் இல்லை? மோட்சம் கொடுக்கும் பெரிய காரியத்தில் வேண்டுமானால் எனக்குத் தகுதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதவு திறக்கும் இந்தச் சிறிய செயலைக் கூடவா நான் செய்யக் கூடாது? நான்தான் திறப்பேன்.” என்று பிராட்டி சொல்ல கண்ணன், ”இல்லை இல்லை நான்தான் திறப்பேன் என்று அடியார்க்கு அருள் செய்வதில் போட்டி நடப்பதாக சுவையான ஒரு நிகழ்ச்சியை ஊகிக்கலாம்.
”தாயே! எம்பிராட்டியே! இந்த உலகில் பாவம் குற்றம் செய்யாதவர் யார் இருக்கிறார்? அவற்றை பொறுத்துக் கொண்டு எம்பிரானிடம் எம்ம்மைச் சேர்ப்பிப்பது நீதானே? அதனாலன்றொ நீ எங்கள் அனைவருக்கும் மாதாவாகிறீர்” என்று தாயாரின் பெருமையையும்,
”தன்னடியார் திறந்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”
என்று எம்பெருமானின் தன்மையையும் உணர்த்துகிறார்கள். மேலும், தம் அடியாருக்கு அருள்செய்யும் விதத்தில் ஒருவருக்கொருவர் இவ்வாறு போட்டி போடுகின்றனர் என்பதும் காட்டப்படுகின்றன.
”வாள் கெண்டையொண்கண் மடப்பின்னை தன்கேள்வன்
தாள்கண்டு கொண்டென் தலைமேல் புனைந்தேனே”
என்று நம்மாழ்வார் விரும்பியதை இப்பெண்களும் பெற ஆசைப்படுகிறார்கள்.
விளக்குகள் இருவகைப்படும். அவை குத்துவிளக்கு மற்றும் தோரண விளக்கு என்பனவாகும். இவற்றில் குத்து விளக்கு என்பது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் சென்று வைக்கக் கூடியது. ஆனால் தோரண விளக்கு என்பது நிலையாகக் கோயில் தொங்கிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது. குத்துவிளக்காக நாடெங்கும் சென்று ஸ்ரீவைஷ்ணவம் பேசிய உடையவர் ஸ்ரீமத் இராமானுஜரைக் கூறுவார்கள். திருக்கோஷ்டியூரிலேயே தன் திருமாளிகையிலேயே தங்கி இருந்து பெருமானை எண்ணிக் கொண்டிருந்த திருக்கோஷ்டியூர் நம்பியை தோரண விளக்காகக் கூறுவார்கள்.
ஆண்டாளின் நாச்சியாரின் திருப்பாவையில் ”அணிவிளக்கு, குலவிளக்கு, குத்து விளக்கு” என்றெல்லாம் விளக்குகள் பேசப்படுகின்றன. “குத்துவிளக்கே! நீ நப்பின்னைக்கு மட்டும் கண்ணனைக் காட்டுகிறாய்; எங்களுக்குக் காட்டக் கூடாதா? என்று கேட்பதாகவும் கொள்ளலாம். ஒன்பதாம் பாசுரத்திலேயே “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரிய” என்று பாடிய நாச்சியார் இப்பொழுது மீண்டும் குத்துவிளக்கெரிய என்று உள்ளே அறையில் விளக்குகள் எரிவதை வெளியே இருக்கும் பெண்கள் பார்ப்பதாகப் பாடுகிறார்.
”நப்பின்னைப் பிராட்டியே!, நீ குத்துவிளக்காகத் திகழ்கிறாய். நாங்கள் எல்லாரும் அகல் விளக்குகள்; மேலும் நாங்களோ ஊராருக்குப் பயந்துகொண்டு, இந்த விடியல் பொழுதிலே ஒளிக்குப் பயந்து, ”நள்ளிருட்கண் என்னை உய்த்து விடுமின்” என்று இருள் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ பகலையும் இரவாக்கிக் கொண்டு குத்துவிளக்கின் ஒளியிலே கண்ணனெம்பிரானின் முக அழகைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறாய்.” என்று பெண்கள் தங்கள் ஆற்றாமையைக் கூறுகிறார்கள்.
மேலும் குத்துவிளக்கு என்பது தன்னையும் விளக்கிப் பிற பொருள்களையும் விளக்கும் தன்மை உடையதாகும். அதுபோல பிராட்டி தன்னையும் விளக்கி மேலும் பெருமானின் பெருமையையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.
இராமாயணத்தில் ”எல்லாஇடங்களிலும் சர்வ வியாபியாய் இருக்கும் மகா விஷ்ணுவாகப்பட்டவர் ஸ்ரீதேவியினால் சோபிப்பதுபோல், மிகவும் அன்புள்ளவளான அந்த சீதாதேவியினால் இராமபிரான் மிகவும் சோபித்தார்” என்று வால்மீகியும்,
”திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலர்”
என்று அருளிச்செயலும் கூறுவதுபோல் இங்கே நப்பின்னை கண்ணனையும் பிரகாசிக்கும் ஒரு குத்துவிளக்காக இருக்கிறாள்.
கோட்டுக்கால் கட்டில் மேல் அவர்கள் சயனித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் பாடுகிறார்கள். ஓடு + வீடு = ஓட்டு வீடு என்றாவதுபோல, கோடு + கால் = கோட்டுக்கால் என்று வருகிறது.
”குத்து விளக்கு வேறு எரிகிறது. எங்களைப்போல் பிருந்தாவனைத்தையும், மணற்குன்றையும் தேடிப் போகாமல் கோட்டுக்கால் கட்டில் மேல் கூச்சம் இன்றிப் படுத்துக் கிடக்கிறாயே” என்கிறார்கள். கோடு என்றால் தந்தம் என்பது பொருளாகும். நப்பின்னையோ வீரத்திருமகள்; ஏழு எருதுகளை வளர்த்தவள்; அவள் தூங்கும் கட்டில் எப்படி இருக்க வேண்டும்? கம்சன் அழைத்துச் சென்றபோது அங்கே கண்ணன் குவலயாபீடம் என்ற யானையை வீழ்த்தினானே; அந்த யானையின் தந்தத்தைப் பறித்துக் கொண்டு வந்து அந்தத் தந்தங்களைக் கால்களாகக் கொண்டு செய்த கட்டிலாம் அது. வீரப்பெண்மணியாதலால் அதில் அன்றி வேறு எதிலும் நப்பின்னைக்குக் கண் உறங்காதாம். இவ்விடத்தில் சீதையின் வீரம் பற்றி வால்மீகி கூறுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது. அவர்,
“இராமபிரானின் தோள்களைப் பற்றியுருக்கும் சீதை, யானையையாவது, சிங்கத்தையாவது புலியையாவது கண்டு பயம் கொள்ளாமல் முகம் மலர்ந்தவளானாள்” என்று கூறுகிறார். மேலும் கோடு என்பதைக் கொம்பு என்று பொருள் கொண்டால் ஆழ்வார் பாசுர அடிகள் நினைவுக்கு வருகின்றன.
“இமிலேற்றுவன் கூன்கோட்டிடையாடினை கூத்தடலாயர்தம் கொம்பினுக்கே”
என்கின்றபடி நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புரிவதற்காக, கண்ணனெம்பெருமான் அடக்கிய ஏழு எருதுகளின் கொம்புகளையும் கால்களாக அமைத்துச் செய்த கட்டில் என்று பொருள் கொள்ளலாம். ”பின்னைதன் கேள்வன் தாள் கண்டுகொண்டு” என்றபடி பிராட்டியிம் காள்களில் விழும் முன் அவள் படுத்திருக்கும் கட்டிலின் கால்களில் விழுகிறார்களாம். “க்ருஷ்ணன் படுக்கையில் காலைப்பற்றினவர்களிறே பர்யங்க வித்தையில் சொல்லுகிற படுக்கையில் காலிட்டேறுவார்” என்று ஆறாயிரப்படி மொழிவதையும் சொல்வதையும் நினைக்க வேண்டும். அந்தக் கட்டில் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டிருந்தாலும் இவர்கள் ஆயர்கள் ஆனதால் சாதாரண மொழியில் ’கட்டில்’ என்று கூறுகிறார்கள்.
ஏனெனில், ”மாணிக்கங்கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுத்தான்”
என்று பெரியாழ்வார் பாடினார் அன்றோ?
பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகளின் விளக்கம் அருமையானதாகும். கட்டில் நான்கு கால்களால் தாங்கப்படுகிறது. அதுபோல இவ்வுலகம் நான்கு சாஸ்திரங்களால் தாங்கப் படுகிறது. அவையாவன: 1. சாந்தி [மனம், இந்திரியம் அமைதியாக இருத்தல்] 2. விசாரம் [ஆத்மாவைப்பற்றிச் சிந்திப்பது] 3. சந்தோஷம் [ எதிலும் திருப்தி மற்றும் உலகவாழ்வில் நிம்மதி] 4. சத்சங்கம் [மகான்களைச் சந்தித்தல் மற்றும் பாகவதர்களுடன் பழக்கமாக இருத்தல்]மேலும் “கட்டை நாடித் தேனுகனும், களிறும், புள்ளுடன் மடிய வேட்டையாடி வந்த கண்ணன் யானையை முடித்துக்கொண்டுக் கொணர்ந்த தந்தத்தினல் நப்பின்னைக்குக் கட்டில் அமைப்பதுபோல், ஆச்சாரியார் பர சம இத வேதங்களை வென்று முடித்து, அந்த வெற்றி தோன்ற வீற்றிருக்கும் இருப்பின் வீறு இங்கு அனுசந்திக்கப்படுகிறது.
முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் கோட்டுக்கால் என்பதற்கு தந்த்த்தின் கால் என்பது சாதாரண பொருளாகும். அவர் கூறுகிறார்.
”கோட்டுக்காலில் உள்ள கோடு என்பது ரேகையைக் குறிக்கும். கால் என்பது திருவடியாகும். பெருமாளின் திருவடியில் ஆயிரத்தெட்டு ரேகைகள் உள்ளன. அவற்றில் த்வஜ ரேகை, சங்கு ரேகை, சக்கர ரேகை, அங்குச ரேகை மட்டுமே வெளியில் தெரியும். வஜ்ர ரேகை, மிதுன ரேகை, ஊர்த்வ ரேகை, சந்தர ரேகை, சாமர ரேகை, போன்றவை வெளியில் தெரியாது. அவற்ரில் துர்வர்ண பங்க்தி நிரசன ரேகை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். துர்வர்ணம் என்றால் தலையெழுத்தாகும். அதை மாற்றக் கூடிய ரேகை நம் பகவானின் திருவடியில் உள்ளது. எனவே கோட்டுக்கால் என்பது பகவானின் உயர்ந்த ரேகைகள் கூடிய திருவடி என்பதைக் குறிக்கும்.”
அடுத்து அக்கட்டிலில் உள்ள படுக்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெத்தென்ற பஞ்சசயனம்’ என்கிறார்கள். பெரும்பாலும் மெத்தையானது இலவம் பஞ்சில் செய்தால் நல்லது என்பார்கள். அதற்குச் சான்றாக ‘இலவம் பஞ்சில் துயில்’ என்ற சொற்றொடரைக் காட்டுவார்கள். ஆனால் இது தவறென்று கூறுவாறும் உண்டு. அது இலவம் பஞ்சில் துயில் அன்று. ’இலவம் பிஞ்செனத் துயில்’ என்பதாகும். அதாவது சிறு காற்று பட்டாலும் இலவம் பஞ்சு பறப்பது போல உடனே எழுந்திருக்க வேண்டும். கூனி கை பட்ட உடனே கைகேயி எழுந்து விட்டாள். அதைக் கம்பன் ’தீண்டலும் உணர்ந்தனள் தெய்வக் கற்பினாள்’ என்று குறிப்பிடுவான்.
பஞ்ச சயனம் என்பதற்கு ஒரு படுக்கையானது ஐந்துவகைக் குணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அவை : 1. மென்மை. 2. அழகு. 3. குளிச்சி. 4. வெண்மை. 5. மணம் என்பனவாகும். இதில் சிலர் மென்மை என்பதற்குப் பதிலக ‘பரப்பு’ என்பதைக் கூறுவார்கள். இங்கே ’மெத்தென்று’ என்று முதலில் கூறிப் பின் ‘பஞ்ச சயனம் என்றும் கூறுவதால் அப்படுக்கை சற்று மென்மை மிகுந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது.
பஞ்ச சயனம் என்பது அர்த்த பஞ்சக ஞானத்தையும் குறிக்கும். அர்த்த பஞ்சக ஞானம் என்பது ஐந்து வகைப்பட்டதாகும். அவை :
- ஆன்ம சொரூபம்—- ஆன்மாவின் இயல்பை அறிதல்.
- ஈசுவர சொரூபம்— பெருமாளின் இயல்பை அறிதல்
- பல சொரூபம் — ஆன்மா அடையும் பயனை அறிதல்
- உபாய சொரூபம்— ஆன்மா அப்பயனை அடையும்வழிஅறிதல்
- விரோதி சொரூபம்— ஆன்ம்மாவிற்கு வரும் பகைகள் அறிதல்
இந்த அர்த்த பஞ்சக ஞானம் இல்லாவிடில் ஒவ்வொருவருக்கும் ஆதி
ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தைவீகம் எனும் மூன்று விதமான துன்பங்கள் ஏற்படும். ஆதி ஆத்மீகம் என்பது சரீர ஆத்மீகம் [உடல் நோய்] மற்றும் மன ஆத்மீகம் [காமம், பொறாமை] எனப்படும். ஆதி பௌதீகம் என்பது விலங்கு,பிசாசு, பேய் போன்றவற்றால் வருவன என்றும் ஆதி தைவீகம் என்பது காற்ரு, புயல், மழையால் வருவன என்றும் பொருள்படும். இந்த அர்த்த பஞ்சக ஞானம் கிடக்கும் இடம் ருக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களாகும். அவைதான் இங்கு கட்டிலின் நான்கு கால்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
பஞ்ச சயனம் என்பதை ஐந்து நிற நூல்களைக் கொண்டு நெய்த படுக்கை என்றும் கொள்ளலாம். திருப்பாற்கடல், ஆதிசேஷன், ஆலின் இலை, வேத உபநிடதங்களின் முடிவு, அர்ச்சிக்கும் அடியார்களின் வணக்கமான இதயம் எனும் பகவான் பள்ளி கொள்ளும் ஐந்து இடங்களைக் காட்டுவதாகவும் கொள்ளலாம். மேலும் ஐம்பொறிகளின் அடக்கத்தை உணர்த்தும் படுக்கையாகவும் கொள்ளலாம்.
”நாங்களெல்லாம் கண்ணனையும் உன்னையும் பிரிந்து துன்பப்படும்போது நீ மட்டும் படுக்கையின் மென்மையை அனுபவித்துக் கொண்டு கிடக்கலாமோ? மென்மையான் படுக்கையெல்லாம் எங்களுக்கு வெம்மையாயிருக்க உனக்கு மட்டுமெப்படி அது மென்மையாய் இருக்கிறது? எம்மைப்பிரிந்த உனக்கு அப்படுக்கை கடினமாக இருக்க வேண்டாமோ? நாங்கள் உனக்குக் குழந்தைகள் போன்றவர்கள் அன்றோ? நாங்களும் அதன் மேலேற வேண்டாமோ? குழந்தைகள் மேலேறித் துவைக்காத படுக்கையும் ஒரு படுக்கையா? எம்பெருமான் கூட எமக்கும் உறவு உண்டன்றோ? அவனுக்கு நாங்களும் குழந்தைகள்தானே? நாங்கள் மேலேறினாலன்றோ நீ படுக்கையில் ஏறிய பயன் கிடைக்கும். அவன் ஆதிசேஷனான படுக்கையை மிதித்து மேலேறுகிறான். அவன் ”நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய” என்பதற்கேற்ப அப்படுக்கையை விட்டு இந்தப் பஞ்ச சயனத்திற்கு வந்ததே எம்மைப் பெறுவதற்காகத்தானே?” என்றெல்லாம் ஆயர்குலப் பெண்கள் கேட்கிறார்கள்.
மேலும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்று அவளை அழைக்கிறார்கள்.கொத்துக் கொத்தாக அரும்புகளை நப்பின்னை தலையில் வைத்தாலும் அவை அவள் தலை பட்டதுமே மலர்ந்து விடுகின்றன. மேலும் வெளியில் வருவது யார் என்று போட்டி போட்டார்கள் அல்லவா? அந்த சம்பந்தத்தாலேயே அரும்புகள் மலர்ந்து விட்டனவாம். மேலும் ’காலோஸ்மிலோகக்ஷயக்ருத்’ என்று சொல்லப்படுபவன் சம்பந்தத்தால் அவை மலர்வது ஆச்சரியம் அல்லவே?
”இப்படி அரும்புகளுக்கெல்லாம் மலர்ச்சியைக் கொடுக்கும் நீ எங்களுக்கு மலர்ச்சியைத் தரவேண்டாமா? மலரிட்டு நாம் முடியோம் என்று நாங்களிருக்க நீ மட்டும் கொத்தலர் பூங்குழலியாய் இருக்கிறாயே?” என்று இவர்கள் கேட்கிறார்கள்.
’கொங்கைமேல் வைத்துக் கிடந்த’ என்பதற்கு நப்பின்னைப்பிராட்டியின் மார்பின் மேலே தன் மார்பை வைத்துக் கிடப்பவன் என்றும், அவள் மார்பைத்தன் மேல் வைத்துக் கொண்டு கிடப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள் ”இப்பாசுரம் ஸதஸ்ஸுக்கு உரியதன்று என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது வேதாந்த விழுப்பொருளை உடைய பாட்டு” என்கிறார்.மேலும் நப்பின்னை எப்படி மிகச் சிறந்து விளங்குபவளோ அதேபோல சிஷ்யர்களில் சிறந்து விளங்கும் ஒருவர் தன் ஆச்சாரியரிடம் எமக்கு வாய் திறந்து உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டுவர்தாக இது அமைந்துள்ளது என்கிறார்.
”அத்யந்த பக்தியுக்தஸ்ய ந ஸாஸ்திரம் நைவ ச க்ரம”
என்றபடி அன்பு மேலிட்டவருக்கு சாஸ்திரமுமில்லை; க்ரமுமில்லை என்பதையும் உணரமுடிகிறது. மேலும் “நான் களைப்பினால் ஸ்ரீராமனுடைய மடியில் நீண்ட நேரம் தலைவைத்துத் தூங்கினேன். அவரும் அப்படியே என் மடியில் தலை வைத்துத் தூங்கினார்” என்று சீதாபிராட்டி பேசியதும் இங்கு எண்ணத்தக்கது.
மேலும் “மலராள் தனத்துள்ளான்” மற்றும் “சங்குதங்கு முன்கை நங்கை கொங்கை தங்களுற்றான்” என்று ஆழ்வார்களும் அவன் ஏற்றத்தை அருளிச்செயல்களில் காட்டுகிறார்கள். அவன் மலர்ந்த மார்பை உடையவன்; அதாவது அவனுக்கு அவள் மார்பே அரணானான படி அவளுக்கு அவன் மலர் மார்பே இருப்பிடமாகும். அகலகில்லேன் என அலர்மேல்மங்கை உறையும் மார்பன்றோ? திருமங்கையாழ்வாரும் “முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகயத்துள்ளிருப்பாள்” என்கிறார்.
மலராது குவியாயாது கிடக்கும் அவன் மார்பு மலர்கிறது. ஏன் தெரியுமா? அன்பின் கூட்டுறவே காரணமாகும். அவளது அரவணைப்பாலே மலர்கிறது. “வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன் தாம்புகளால் புடைக்கலர்ந்தானை” என்று யசோதை அடிக்கே மலர்ந்தவன் அன்புக்கு மலராதிருப்பானா? எனவேதான் ’மலர்மார்பா’ என்றழைக்கிறார்கள்.
’உன் மலர் மார்பு நப்பின்னைக்கு மென்மையாயும் எமக்கு வன்மையாயும் இருக்கிறதே! ஆமாம்; அது எப்போதும் பக்தர்க்கு மென்மையாயும் பகைவர்க்கு வன்மையாயும் இருப்பதுதானே!” என்கிறார்கள். உள்ளே பிராட்டியும் கண்ணனும் ஒருவருக்கொருவர் அன்பினால் பிணைப்புண்டு கிடக்கிறார்கள். எனவேதான் ‘எழுந்திராய்’ என்று கூறாமல் ‘வாய் திறவாய்’ என்கிறார்கள்.
”பெருமானே! அவளது அணைப்பால் நெருக்குண்டு கிடப்பதால் எழமுடியாவிட்டாலும் வாயைத்திறந்து ஒரு வார்த்தை எங்களுக்கு உரைக்கக் கூடாதா? அது கூட முடியவில்லையா? உன் திருமார்பைத்தான் பிராட்டிக்குக் கொடுத்தாய்; பேச்சையாவது எமக்குத் தரக் கூடாதா? அர்ச்சுனனுக்குக் கீதை சொன்னதுபோல் எங்களிடம் பேசக் கூடாதா? மலர் மார்பா! வாய் திறவாய்” என்கிறார்கள். இந்த இடத்தில் வியாக்கியானம் செய்கையில் “நீ ஊமத்தங்காய் தின்று கிடக்க நாங்கள் யாரை எழுப்புவது?” என்று கேட்பதாக பெரியவாச்சான் பிள்ளை பேசுகிறார்.
இவர்கள் இப்படிக் கேட்டதும் கண்ணன் ”நம்மை விரும்பி அழைக்கும் இந்த ஆயர் குலப் பெண்களுக்கு ஒரு வார்த்தையாவது கூற வேண்டும்” என்று வருந்தி வாய் திறக்க ஆசைப்படுகிறான். ஆனால் “வந்து அழைக்கும் ஆயர்குடிச் சிறுமிகள் நம்மை நாடி வந்திருப்பவர்கள்; நம்மை எழுப்பி அழைத்துப் போக வந்திருப்பவர்கள்; எனவே இவர்களுக்கு நாம்தானே அருள் செய்ய வேண்டும் நம் மணாளனான கண்ணபிரான் அருள் செய்தல் தகாது” என்று எண்ணிய பிராட்டி மை தீட்டப்பட்ட
தன் அழகிய கண்களாலே பிரானை நோக்கி வாய் திறக்காமலிருக்க சைகை செய்கிறாள். பிராட்டியின் கண்படி செயல்படும் அவனும் பேசாமலிருந்தான்.
இதை உணர்ந்த வெளியே இருக்கும் பெண்கள் மீண்டும் நப்பின்னையின் அருளை வேண்டுகிறார்கள். ”அழகிய விசாலமான மை தீட்டப்பட்ட கண்களை உடைய பிராட்டியே! உன் கண்ணழகே எமக்குக் கதி என்றிருந்தோம். ஆனால் அதுவே எமக்குப் பாதகம் செய்துவிட்டதே. நீ அழகான உன் கண்களுக்கு மை தீட்டப் பெற்றிருக்கிறாய். ஆனால் ‘மையிட்டெழுதோம்’ என்று நோன்பு நோற்கும் நாங்கள் மைதீட்டாத கண்களுடன் வாடுகிறோம். அடியார்களாகிய நாங்கள் அனுபவிக்காததை நீ மட்டும் அனுபவிக்கலாமா? உன் கண்ணுக்க்கு மை அழகு செய்கிறது. ஆனால் மையாகிய இருட்டாகிய அஞ்ஞானம் எங்கள் கண்களில் இருக்கிறதே; அதை நீக்கி எமக்கு அருள் செய்வாயாக. என்று வேண்டுகின்றனர்.
கறுத்த கண்களினை உடையவளே என்றும் பொருள் கொள்ளலாம். வால்மீகி சொல்லும் போது “ந ஜீவேயம் க்ஷணமபி விந தாமஸிதேக்ஷணாம்” என்கிறார். அதாவது “கறுத்த கண்களை உடைய அப்பிராட்டியைப் பிரிந்து நான் ஒரு கணப்பொழுதும் உயிர் தரியேன்” என்று பெருமான் கூறினாராம். மேலும் “ராகவோஸ்ர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸிதேக்ஷணா” என்பதன் மூலம் பிராட்டி பெருமான் இருவருமே அழகு குணம் இரண்டிலும் ஒருவருக்கொருவர் தகுந்தவர்கள் என்று சொல்லவருகிறார் வால்மீகி. ஆனால் ‘அஸிதேக்ஷணா’ என்பதன் மூலம் பெருமானைக் காட்டிலும் பிராட்டி கண்ணழகில் சிறந்து விளங்குபவள் என்று சொல்கிறார். மேலும் ”என்னதான் நீ பிராட்டி போல அலங்காரம் செய்துகொண்டாலும் பிராட்டி போல உன்னால் கண்ணால் விழிக்கமுடியாது என்கிறார் பட்டர்.
அப்படியான ‘கண்ணழகை உடையவளே! உன் பரந்த கடல் போன்ற கண்களைத் தாண்டி வந்தால்தானே கண்ணபிரான் எம்மைக் காண முடியும்? எம் கண்ணுக்கும் மையிட அருள் செய்வாயாக” என்று வேண்டுகிரார்கள்.
இதற்கு திருச்சி புத்தூர் ஸ்ரீ உ.வே.கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி வியாக்கியானம் செய்யும்போது “மைப்படி மேனி” [திரு விருத்தம்] இறே” என்பது ஆறாயிரப்படி. நப்பின்னையின் கண்களில் இருப்பது உண்மையில் மையில்ல; அவள் அருகிலிருக்கும் கண்ணனின் சாயல்தான் இவளுக்கு மையாகிறது. இந்த ஆயர்குலப் பெண்கள் விரும்பும் மையும் அதுவேயாகும். என்வே உன் கண்ணுக்கு மையாய் இடும் அம்மேனியை எங்கள் கண்களுக்கும் இடுவாயாக” என்று கேட்பதாக அருளுவார்.
அடுத்து ”நீ உன் மணாளனை எப்பொழுதும் பிரியமாட்டாயா? எல்லாருக்கும் நாயகனாய் இருக்கும்போது நீ ஒருத்தி மட்டுமே துயிலெழவொட்டாமல் அவனைக் கணப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாயே?” என்கிறார்கள். “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா” என்று ஆழ்வார் பாடினாரன்றோ? “ராகவரே! உம்மைப் பிரிந்த சீதையும் உயிர் தரியாள். நானும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்று இலக்குவன் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது. கம்பனும்
”நீருளதெனின் உள மீனும் நீலமும்
யாருளதெனின் உள நானும் சீதையும்” என்று இலக்குவன் கேட்பதாகப் பாடுவான். இங்கே ஆச்சார்ய சிஷ்ய பாவம் பேசப்படுகிறாதாம். உண்மையான சீடனுக்கு ஆச்சார்யாரை விட்டுப் பிரிவது மிகவும் அஹஸ்யமாயிருக்குமாம்.
இப்பாசுரத்தில் தத்துவம் தகவு என்ற இரண்டு பேசப்படுகின்றன. தத்துவம் என்பதை சொரூபம் என்றும் தகவு என்பதை சுபாவம் என்று கொண்டோமானால் நீ இப்படி இருப்பது உன் புருஷகாரத்திற்கும் மற்றும் கிருபைக்கும் பொருந்தாது எனப் பொருள் வரும். தத்துவம் என்பதை சத்யம் என்றும் தகவு என்பதை தர்மம் என்றும் கொண்டால் பகவான் உனக்கு மட்டுமன்று; உலகுக்கே உரியவன் எனும் உண்மையை நீ உணரவில்லை; நீ இப்படி இருப்பது தர்மமன்று என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம்.
இப்பாசுரம் பல உள்ளர்த்தங்களை அடக்கியதாகும். இது பக்தியோடு அணுக வேண்டிய அகத்துறைப் பாடல். ஆன்மாக்களின் பரிபக்குவ நிலை காண இறைவன் முந்துகிறான். பாகவதரை வைத்து பகவானை அடைவது போலப் பிராட்டியை வைத்தே பெருமானை அடைய வேண்டும். யானையின் தந்தங்களாலான கட்டில் பாசுரத்தில் பேசப்படுகிறது. அந்தத் தந்தங்கள் இரண்டும் அகங்காரம் மற்றும் மமகாரம் ஆகும்.
ஆச்சார்யர்கள் சொல்லும் வார்த்தைக்கிணங்க எம்பெருமான் பரப்பிரம்ம்ம் என்பதை உணர்ந்து அவனை அடையவேண்டும் என்பதை இப்பாசுரம் உணர்த்துகிறது.
==============================================================================
- குரங்காட்டியும் குரங்கும்
- இசை – தமிழ் மரபு – 3
- ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்
- மைத்தடங்கண்ணினாய்
- திரைப்படங்களும் தமிழிலக்கியமும் கருத்தரங்கு – சென்னை பல்கலைக் கழகம் – 4-9-2015
- ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?
- தொடுவானம் 83. இறை நம்பிக்கை
- ஸ்பரிஸம்
- மின்னல் கீறிய வடு
- ஜி. நாகராஜனின் சிறுகதைகள்
- விஜய் சித்திரம் – மரி
- பொன்னியின் செல்வன் படக்கதை -2
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 6)