முனைவர் கோட்டி திருமுருகானந்தம்
சிங்கப்பூர்
thiru560@hotmail.com
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் சி.கு. மகுதூம் சாயபு குறிப்பிடத்தக்க ஒருவராவார். இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த யாழ்ப்பாண வண்ணை நகர் சி. ந. சதாசிவ பண்டிதரிடம் முறையாகத் தமிழ் கற்ற இவர் ஆங்கிலம், அரபு மொழிகளில் புலமையுடையவர். மக்களுக்குத் தரமான செய்திகளைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இவர் தீனோதய வேந்திரசாலை என்னும் அச்சகத்தை 1872 ஆம் ஆண்டு நிறுவி அதன் உரிமையாளராய் விளங்கியவர்.
இவர் நடத்திய சிங்கை நேசன் 27 – 06 – 1887 முதல் 23 – 06 – 1890 வரை சிங்கப்பூர்ச் செய்தி வானில் வாரந்தோறும் சிறகு அடித்துப் பறந்துள்ளது. சிங்கை நேசன் இதழ்கள் அனைத்தும் சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியத்தில் நுண்படச்சுருள் வடிவில் இருப்பதால் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் பயனளிக்கிறது. இவர் இக்காலக் கட்டத்தில் தமிழ், சீனம், மலாய் முதலிய மொழிகளில் நூல்களையும் அச்சிட்டுக் கொடுத்துள்ளார். குறிப்பாகச் சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதை நூல்களை அச்சிட்டுக் கொடுத்துள்ளது சிங்கப்பூர்த் தமிழர் பெற்ற பெரும் பேறாகும்.
இவர் இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பத்தி எழுத்தாளர், இலக்கிய ஈடுபாடு கொண்டவர், அங்கதச்சுவை மிக்கவர், இறைபற்று மிக்கவர், சமய ஈடுபாடு மிக்கவர், அச்சக உரிமையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவராக இருப்பதைச் சிங்கை நேசன் உணர்த்துகிறது.
இதழாசிரியர்:
மகுதூம் சாயபு தலைசிறந்த பத்திராதிபர் – இதழாசிரியர் என்பதை இவர் நடத்தியுள்ள இதழ்கள் புலப்படுத்துகின்றன. இக்காலத்தில் பத்திரிகை நடத்தும் ஆசிரியர்களைப் பத்திரிகை ஆசிரியர், இதழாசிரியர் என நாம் அழைக்கின்றோம். மகுதூம் சாயபு பத்திரிகை நடத்தியபோது பத்திரிகை ஆசிரியர்களைப் பத்திராதிபர் என அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதையே இவரும் பின்பற்றி உள்ளார். இக்காலக் கட்டத்திலும் இதற்கு முன்பும் இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் பத்திரிகை நடத்தியவர் களையும் இப்படியே அழைத்துள்ளனர் என்பதும் இவண் சுட்டத்தக்க செய்தியாகும். இவர் சிங்கை நேசன் இதழை நடத்துவதற்கு முன் சிங்கை வர்த்தமானி, தங்கை நேசன், ஞானசூரியன் முதலிய மூன்று இதழ்களை நடத்தி அனுபவம் பெற்றவர். எனவே சிறந்த பத்திரிகையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமோ அவை அனைத்தையும் இவர் நடத்திய இதழில் சிறந்த முறையில் வடிவமைத்து வெளியிட்டு உள்ளார். இறுதியில் அச்சிட்டோர் விபரம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சிறந்த இதழுக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் தொடக்கம் முதல் இறுதி வரை இவர் நடத்திய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளதால் இவரைத் தலைசிறந்த இதழாசிரியர் எனலாம்.
கவிஞர்:
மகுதூம் சாயபு சிறந்த கவிஞர் என்பதைச் சிங்கை நேசனில் இவர் படைத்துள்ள கவிதைகள் உணர்த்துகின்றன. இவர் சிங்கை நேசனில் படைத்து உள்ள கவிதைகளைத் தவிர வேறு கவிதைகள், கவிதை நூல்கள் படைத்துள்ளாரா என்பது ஆய்விற்குரியதாகும்.
தேரும்விக் டோரியாசேர்ஜீ பிலித்தினத்தைச்
சாருமிப் பத்திரிகை தான்
என்று மகுதூம் சாயபு எழுதியுள்ள குறள் வெண்பாவுடன் இவ்விதழ் வந்து உள்ளது. அதாவது விக்டோரியா மகாராணியின் நினைவாகத் தொடங்கிய இதழ் இதுவாகும். எனவே ஒவ்வொரு தலையங்கத்தின் தொடக்கத்திலும் இக்குறள் இடம் பெற்றுள்ளது. இதனால் இவர் குறள்வெண்பா இயற்றுவதில் வல்லமை பெற்றவர் என்பதை உணரமுடிகிறது.
உலகில் வாழும் இசுலாமிய மக்கள் அனைவரும் நபிகள் நாயகத்தை இறைதூதர் என்று போற்றுகின்றனர், வணங்குகின்றனர். உமறுப்புலவர் இவரின் அருமை பெருமைகளைச் சீறாப்புராணத்தில் பாடியுள்ளார். அதைப் போல இங்கு வாழும் முசுலீம்களும் இவரை வணங்குகின்றனர். அதனால் அவரது சிறப்புகளைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
சீரான ஹஜ்ஜின் சிறப்பான நற்றினத்தைப்
பேரான நாயன் பெருநபிமேல் – நேரான
மக்கமதிற் கொண்டாட வைத்தபடி யெவ்விடத்துந்
தக்கபடி செய்தல் தகும்
என மகுதூம் சாயபு நபிகள் நாயகத்தின் சிறப்புகளைப் பாடியுள்ளார். இக்கவிதை சிங்கை நேசன் இதழில் பல இடங்களில் இடம் பெற்று உள்ளது.
பினாங்கிற்கு அருகிலிருக்கும் கூலிம் பகுதியில் தம்பி மாமா என்னும் முகியித்தீன் மதினா சாயபு, 1884 ஆம் ஆண்டு வாகை நேசன் என்னும் பத்திரிகை நடத்தித் தமிழை வளர்த்துள்ளார். இவர் தமிழகம் நாகூர் பகுதியைச் சார்ந்தவராவார். இவர் சிங்கை நேசனின் பினாங்கு பகுதியின் முகாமையாளராக இருந்துள்ளார். தம்பி மாமா இறப்பைக் கேள்விப்பட்ட பினாங்கு நண்பர்கள் அவரை முறைப்படி அடக்கம் செய்தனர். இதனை,
தம்பிமாமா பேரிற் தமிழ்வாகை நேசனென்பான்
நம்பி யிருந்து நயனடைந்தான் – வெம்புவியை
விட்டு வியனுலகை மேலோனடைந்த புகழ்
எட்டமெங்கு சென்று மெழில்
ஏப்பிரல் மாதமதிலீரெட்டாந் தேதி தன்னில்
ஏப்பமிடும் வருகயெழிற்றமிழான் – தோப்புமிகு
நன்னாகூர்ச் செல்வன் நபிநா யகத்தருளாற்
பொன்னாகூந் சென்றான் புகழ்
என மகுதூம் சாயயு சிறப்பாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இவருக்குமுன் தம்பி மாமா வாகைநேசன் என்ற இதழைப் பினாங்கிலிருந்து நடத்தியுள்ளது தெரிகிறது. மேலும் அவரை இசுலாம் கொள்கைபடி அடக்கம் செய்ததையும் அறிய முடிகிறது. இக்கவிதைகள் இவரது கவியாற்றலைக் காட்டுகின்றன.
கட்டுரை ஆசிரியர்:
பல நூற்றாண்டுகளாகச் செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியம், தத்துவம் முதலியன படைக்கப் பெரிதும் பயன்பட்டது. உரைநடை இலக்கணங்களுக்கும் செய்யுள் களுக்கும் விளக்கம் கூறப்பயன்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலேயே உரைநடை வளர்ச்சி பெற்று மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகிறது. தர்க்கக்கட்டுரை, செய்திக்கட்டுரை, விபரக்கட்டுரை, பகுத்தாய்வுக் கட்டுரை, செயல்முறை விளக்கக் கட்டுரை, எடுத்துரைத்தல் கட்டுரை, ஒப்பீட்டுக் கட்டுரை, புனைவுக்கட்டுரை போன்ற கட்டுரைகள் உள்ளன. இதழாசிரியர்கள் செய்திகளைக் கோர்வையாக்கி வாசகர்களின் தேவைக்கேற்பக் கட்டுரைகளாகப் படைப்பது வழக்கம். இதற்கு ஏற்ப மகுதூம் சாயபு சிறந்த கட்டுரைகளைப் படைத்து உள்ளதால் இவரைச் சிறந்த கட்டுரையாளர் என அழைப்பதில் தவறேதும் இல்லை. இவர் சிங்கை நேசனில் தர்க்கக்கட்டுரை, செய்திக் கட்டுரை, விபரக்கட்டுரை, விளக்கக் கட்டுரை, எடுத்து உரைத்தல் கட்டுரை என்பன போன்ற கட்டுரைகளைப் படைத்து உள்ளார்.
பத்தி எழுத்தாளர்:
பத்தி எழுத்து என்பது தகவல் அடிப்படையில் அல்லது நிகழ்வு அடிப்படையில் பேசப்படுவதும் எழுதப்படுவதும் ஆகும். எந்த தகவல் குறித்தும் வருணனை செய்து எழுதாமல் சுருக்கமாகச் சுவையாக எழுதப்படும் Column Writing எனப்படும் பத்தி எழுத்துகளை இன்று பரவலாக இணையத்தளங்களில் எழுதப்படும் வலைப் பதிவுகளுக்கு முன்னோடியாகக் கொள்ளலாம். பத்தி எழுத்துக்கள் தாம் கூறவந்த தகவலை மாத்திரம் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையுடன் வாசகரைக் கவரும் திறனைப் பெற்று இருக்க வேண்டும். கணையாழில் சுஜாதா எழுதிய கடைசிப் பக்கங்களையும் விகடன் வலைத்தளத்தில் சாருநிவேதிதா எழுதிய கோணல் பக்கங்களையும் சிறந்த பத்தி எழுத்துகளாகக் கொள்ளலாம். இதைப் போல மகுதூம் சாயபு சிங்கை நேசனில் பல பத்தி எழுத்துகளைப் படைத்து உள்ளார்.
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்:
மகுதூம் சாயபு தமிழைத் திறம்படக் கையாளும் திறமை பெற்றவர் என்பதை இவர் படைத்துள்ள தலையங்கங்கள், கட்டுரைகள் முதலியன உணர்த்துகின்றன. தகுந்த இடங்களில் தக்க பழமொழிகளையும் சிறந்த சொற்றொடர்களையும் பயன்படுத்தும் திறமை பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர் என்பதை அறிய முடிகிறது.
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு
என்ற குறள், குற்றம் கடிதல் அதிகாரத்தின் 436 வது குறளாகும். இக்குறளை இதழாசிரியர் இதழின் தொடக்கப் பக்கத்தில் போடுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். இதனைப் படித்த வாசகர் ஒருவர் இக்குறளுக்கு விளக்கம் கேட்டதற்கு இதழாசிரியர் மகுதூம் சாயபு இக்குறளின் சிறப்பியல்புகளைத் தலையங்கமாக எழுதியுள்ளார். இத்தலையங்கக் கட்டுரை இதழாசிரியரின் இலக்கியப் புலமையைக் காட்டுவதுடன் எதையும் காரணகாரியப்படி அணுகவேண்டும் எனக் கூறியுள்ளதையும் உணரமுடிகிறது.
இவர் தமது கருத்தைத் தர்க்க ரீதியாகச் சொல்லும் திறமுடையவர். இவரது மொழிநடை மிகவும் சிறப்பாக இருக்கிறது. தகுந்த சொற்களைத் தகுந்த இடத்தில் பயன்படுத்தும் திறமையுடையவர். இதனால் இவரது நடை இலக்கியத் தன்மை கொண்டிலங்குகிறது. இதற்குச் சான்றாக நற்குணமுள்ளது சிறிதாயினும் உயரும் நிலைபெறு மென்பதைச் சொல்ல வேண்டுமா என்ற கருத்தை மகுதூம் சாயபு விளக்கியுள்ள வித்த்தைச் சுட்டலாம்.
ஊமத்தைப்பூவும் மல்லிகைப்பூவும் நிறத்திலும் உருவத்திலும் வடிவிலும் ஒத்திருந்தாலும் மல்லிகை பூவைப் பார்க்கிலும் ஊமத்தம்பூ ஆயிரம் மடங்கு பெரியது. ஊமத்தை பகல் நாலு மணிக்கே விரிந்து விடுமாதலால் மல்லிகை அதைக் கண்டு நாம் பிந்தி ஐந்து மணிக்குப் பூக்க ஆரம்பிக்கிறவனாக விருக்கின்றோம், ஊமத்தை நமக்குமுன் பூத்துவிட்டது. அது உருவத்தில் நம்மை யொத்துப் பருமனில் நம்மிலும் ஆயிரமடங்கு அதிக பெரிதானதாக இருக்கின்றதே அதுமுன் நாம் எப்படி புஸ்பிப்பது என்று அது அடங்கி மலராது ஒழியுமேல் அதுக்கென்ன யோக்கியதையுண்டு. அது அணிந்து பூத்தபடி யல்லவோ அதன் குளிர்ந்த வாசத்திற்கு மெச்சி பூமான்களும் சீமான்களும் பாமான்களும் நாமான்களும் மாமான்களும் கொண்டாடிச் சூட்டிக் கொள்ள அது அதிக உயர்வையும் கண்ணியத்தையும் புகழையும் பெற்றுக் கொண்டது. ஊமத்தைப் பூவைத் தேடியதார்? சூடியதார்? புகழ்ந்ததார்? ஆகையால் நற்குணம் உள்ளது சிறிதாயினும் உயரும் நிலைபெறு மென்பதைச் சொல்ல வேண்டுமா.
என மேலே படைத்துள்ள பத்தியில் இவரது மொழியாளுமை புலப்படுகிறது.
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்னும் புகழ் அதிகாரத்திலுள்ள குறள் எண் இருநூற்று முப்பத்தாறையும்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்
என்னும் பெருமை அதிகாரத்திலுள்ள 975 ஆம் குறளையும் இவர் தக்க இடத்தில் பயன்படுத்தியுள்ள பாங்கு இவரது இலக்கியப் புலமையைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவைச் சிங்கப்பூரிலுள்ள முசுலீம்களும் இந்துக்களும் மலாய்க்காரர்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். மலாய்க்காரர்களின் பிரதிநிதிகளாகக் கம்பங்கிள்ளாம் பகுதியைச் சேர்ந்த செய்யது முகம்மது பின் அகமது அல் சக்காப், அபூபக்கர் பின் அலி அல்ஜீனித் ஆகியோர் இருந்துள்ளனர். முசுலீம்களின் பிரதிநிதியாக குலாமுகியத்தீனும் இந்துக்களின் பிரதிநிதிகளாக ஆ. அண்ணாமலை பிள்ளையும் M. K. றாமன் செட்டியாரும் முன்னின்று சிறப்பாக நடத்தினர். இவர்கள் செய்த அரும்பணிகளை எழுதி முடிக்கும்போது மேற்கண்ட குறட்பாக்களை மேற்கோள் காட்டி இவர்களின் செயலாற்றலைச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
ஐயத்தினீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து
மெய்யுணர்தல் அதிகாரத்திலுள்ள மூன்றாம் குறளை 09 – 07 – 1890 நாளிட்ட சிங்கை நேசன் இதழில் பயன்படுத்தியுள்ளார்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
என்னும் குறட்பாக்களை 03 – 10 – 1887 நாளிட்ட சிங்கை நேசன் இதழில் பயன்படுத்தி உள்ளார்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
என்னும் குறட்பாவை 09 – 01 – 1888 நாளிட்ட சிங்கை நேசன் இதழில் தகுந்த இடத்தில் பயன் படுத்தியுள்ளார். மேலும் தேர்ந்த சொற்களையும் பழமொழிகளையும் கட்டுரை, தலையங்கங்களில் பயன்படுத்தியுள்ளார்.
சுண்டக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற் பணம்
அகப்பட்டதைச் சுற்றடா ஆண்டியப்பா
கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்
ஒற்றை மாட்டுக்காரன் ஊரைக் கெடுத்தான்
ஆற்று முதலைக்கு அடிவயிற்றிற் கையிருப்பு
ஊர்க்கு பெரிய கங்காதேவி குருவி குடிக்கத் தண்ணியில்லை
புத்திமான் பகையோ ஒன்றுஞ் செய்யாது
அவனன்றி யோரணுவுமசையாது
உருட்சிக்குத் திரட்சி புளிப்புக்கதுக் கப்பன்
தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்
குலமகட்கழகு கொழுநனைப் பேணுதல்
கல்லென்றாலுங் கணவன் புல்லென்றாலும் புருஷன்
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்
நீரளவே ஆகுமாம் நீராம்மல்
மெய் வருத்தக் கூலிதரும்
என்ற பழமொழிகளை, முதுமொழிகளைத் தகுந்த இடங்களில் பயன்படுத்தி இப்பழமொழிகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இதைப் போன்று வேறு பல பழமொழிகளை, முதுமொழிகளைத் தகுந்த இடங்களில் பயன்படுத்தி உள்ளதைச் சிங்கை நேசனில் காணமுடிகிறது.
பத்தாவுக்கேற்ற பதிவிரதையு ண்டானால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏதுமாறாக விருப்பளே யாமாயிற்
கூறாமற் சந்நியாசங் கொள்
என்னும் ஒளவையார் பாடலைத் தக்க இடத்தில் பயன்படுத்தி உள்ளார். தன் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழாமல் பிறரைக் கண்டு மயக்கும் பெண்களைப் பற்றி உரைத்தபோது மகுதூம் சாயபு மேற்கண்ட பாடலைக் கூறிப் பத்தியை முடித்துள்ளார். இவ்வாறு இவர் பழமொழி, அடுக்குத் தொடர், கம்பராமாயணம், திருக்குறள் எனப் பலவற்றையும் தம் கட்டுரைகளில் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவர் இலக்கியப் புலமையும் மொழியை ஆள்வதில் வல்லமையும் பெற்றவர் என்பதை அறிய முடிகிறது.
இறைபற்று மிக்கவர்:
இந்தியர்கள் எச்செயலைச் செய்யத் தொடங்கினாலும் இறைவனை வணங்கிச் செய்வர். இச்செயல் அவர்கள் வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றாகும். காது குத்துதல், திருமணம் மற்றும் சடங்குகளென எல்லா நிகழ்வுகளுக்கு முன்பும் இறைவனை வணங்கியபின் எடுத்த காரியம் யாவும் இனிது நடக்கவேண்டும் என வேண்டுவர். இதைப் போல இதழாசிரியர் மகுதூம் சாயபுவும் சிங்கை நேசன் தொடக்க இதழில், இப்பத்திரிகை மக்களுக்குத் தொடர்ந்து நன்மையளிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறார்.
எக்காரியத்தைத் தொடங்கினாலும் அக்காரியம் இடையூறு இன்றி இனிது முடியும் பொருட்டுக் கடவுளை வாழ்த்துவது மரபாதலின் யாமும் கடவுளை வாழ்த்தி இப்பத்திரிகையை ஆரம்பம் பண்ணுதல் முறைமையாகும். கடவுளை நாம் வாழ்த்தும் பொழுது சகலசராசரங்களையும் படைத்துக் காத்து அழித்து வரும் ஒரு ஆதி காரணவஸ்து இருக்குமென்பதைக் குறுஆன் முதலிய வேதங்களினாலும் பெரியோர் வாக்கியங்களினாலும் எங்கள் மனச்சாட்சியினாலும் அறிந்திருக்கின்றோம். உலகத்திலே நாஸ்திகர்களாகிய சந்தேகவாதிகள் சிலரேயன்றி, மற்றையோர் யாவரும் கடவுள் ஒருவர் இருக்கிறாரென்று திரிகரணங்களாகிய மனம், வாக்கு, காயங்களினாலே தியானித்து வாழ்த்தி வணங்கி வருகிறார்கள்.
முஸ்லீமானவர்கள் அக்கடவுளை அல்லா குத்தஆலா வென்றும் சைவர் சிவனென்றும் வைணவர்கள் விஷ்ணு வென்றும் இங்கிலீஷ்காரர் காட் என்றும் இன்னுமொரு சாதியார் ஜெஹோவா என்றும் திபேல் என்றும் தியோஸ் என்றும் எல் என்றும் இன்னும் பற்பல விதமாக அழைக்கின்றார்கள். இவர்கள் மார்க்கச் சடங்குகள் பேதமாயிருப்பினும் கடைசியிலே நம்மைப் படைத்த கிருபா சமுத்திரமாகிய ஒரு காரண வஸ்துண்டென்பது சித்தாந்தம்.
இப்பத்திரிகை நெடுங்காலம் நீடிக்கவும், இதனை வாசிப்போர் அறிவிலே தேறி மகிழ்ச்சியடையவும், யாம் பிரயோசன மடையவும் இக்கடவுள் கிருபை செய்வாராக.
இவ்வாறு கூறியுள்ளதிலிருந்து மகுதூம் சாயபு கடவுளைப் போற்றும் குணத்தினர் என்பதும் இவ்விதழ் நீண்ட காலம் நீடித்து மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதையும் காணமுடிகிறது. எனவே இவர் ஆழ்ந்த இறைபற்று மிக்கவர் என்பதும் பிற கடவுளரையும் மதிக்கும் மாண்பினர் என்பதும் இதனால் புலப்படுகின்றன.
அங்கதச்சுவை மிக்கவர்:
பொதுவாக இந்தியர்கள்தாம் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற கருத்து உலகில் நிலவுகின்றது. உலகிலுள்ள பிற இனத்தவர் களும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற தகவலை அங்கதச் சுவையுடன் இதழாசிரியர் கூறியுள்ளார். இதற்குச் சான்றாக, இலண்டனில் உள்ள ஒரு பெண்ணுக்கு இருபத் தொன்பது குழந்தைகள் இருக்கின்றதாம். இதைவிடச் சிறப்பான செய்தி என்னவெனில் இந்நாட்டிலுள்ள இன்னொரு பெண்ணுக்கும் இருபத்தொன்பது குழந்தைகள் இருந்த போதிலும் இப்பெண் இப்போது முப்பதாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இருக்கிறாள் என அங்கதமாகக் கூறியுள்ளார். அனேக பிள்ளைக்கப்பன் என்ற செய்தி இவரது அங்கதச் சுவையை உணரவைக்கிறது. முப்பது வயது பூரணமாய்ச் செல்லாத சீயதேயத்தான் பெற்ற பிள்ளைகள் 263. இவருக்கு எத்தனை மனைவியோ? அறியோம். தஞ்சாவூர் சிவாஜி மகாராஜா அவர்களுக்கு ஏறக்குறைய 50 மனைவிகளிருந்தும் பிள்ளை ஒன்றாவது மில்லையே! ஆச்சரியந்தான் என அங்கதச் சுவையோடு கருத்தைக் கூறியுள்ளார். இதைப் போலப் பல செய்திகளை அங்கதச் சுவையுடன் எழுதியுள்ளார்.
சமய ஈடுபாடு மிக்கவர்:
மகுதூம் சாயபு சமய ஈடுபாடு மிக்கவர் என்பதைச் சிங்கை நேசன் வழி உணர முடிகிறது. இவர் தாம் சார்ந்துள்ள மதத்தை மதித்துப் போற்றுவதுடன் பிற மதத்தையும் போற்றும் குணமுள்ளவராக இருந்துள்ளார். அதனால் தமது இதழில் பிற சமயத்தார் கருத்துகளைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை, தவறான கருத்துகள் ஏதும் கூறவில்லை. இவரது ஆசிரியர் சி.ந. சதாசிவ பண்டிதர் கருத்துகளையும் வெளியிட்டு உள்ளார். அப்துல் காதிறுப்புலவர் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். சீறாப்புராணக் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார், பெரியபுராணக் கருத்துகளையும் வெளியிட்டு உள்ளார்.
கடவுள், பொய் சொல்ல வேண்டாம், களவெடுக்க வேண்டாம், கள்ளச் சாட்சி சொல்ல வேண்டாம், ஒருவர் பொருளை இச்சிக்க வேண்டாம் என்று சொல்லுகிறார். இக்கட்டளைகளுக்கு அமைந்து நடப்பதினாலே எங்களுக்கு மோட்சங் கிடைக்குமா? அல்ல. இக்கட்டளைகளுக்கு அமைந்து நடப்பது கடமை. அமையாவிடின் தேவதண்டனை கிடைக்கும்.
என மகுதூம் சாயபு படைத்துள்ள பத்தி, மேலுள்ள கருத்தை வலியுறுத்திக் கூறுகிறது. இதனால் இவர் சமய ஈடுபாடு மிக்கவர் என்பது புலப்படுகிறது.
அச்சக உரிமையாளர்:
மகுதூம் சாயபு தீனோதய வேந்திரசாலை என்னும் பெயரில் அச்சகம் ஒன்றை 1872 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தியுள்ளார். தமது அச்சகத்தின் வாயிலாக ஞானசூரியன், சிங்கைநேசன் பத்திரிகைகளை அச்சிட்டுள்ளார். தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூல்களை அச்சிட்டுக் கொடுத்து உள்ளார். இக்கால கட்டத்தில் வேறு அச்சகங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை.
சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதை நூல்களை அச்சிட்டவர்:
மகுதூம் சாயபு தமது தீனோதய வேந்திரசாலை மூலமாக ஷாகு முகம்மது அப்துல் காதிறு ஜெயினுத்தீன் படைத்துள்ள இரத்தினச் சுருக்கம், முகியித்தீன் அப்துல் காதர் படைத்துள்ள சந்தக்கும்மி, நெல்லையப்ப செட்டியார் படைத்துள்ள சிங்கை வடிவேலவர் ஸ்தோத்திரம், செவ்வலூர் மதுவநாயகியம்மை பதிற்றுப் பத்தந்தாதி, இராமநாத பிள்ளையார் பாடல், செவத்த மரைக்காயரின் மலாக்காப் பிரவேசத் திரட்டு, மீறா சாகிபுவின் பாயாலேபர் பங்கலாவின் அலங்காரச் சிந்து, சி.ந.சதாசிவப் பண்டிதரின் வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி, சித்திர கவிகள், மெய்யப்ப செட்டியாரின் சிங்கப்பூர் பிரபந்தத் திரட்டு, இரங்கசாமி தாசனின் குதிரைப் பந்தய லாவணி, க.வேலுப்பிள்ளையின் சிங்கை முருகேசர் பேரில் பதிகம் முதலிய கவிதை நூல்களை அச்சிட்டுத் தந்துள்ளார். அதாவது சிங்கப்பூரின் தொடக்ககாலக் கவிதை நூல்களை அச்சிட்டுத் தந்த பெருமை இவரையே சாரும்.
கவிஞர் செவத்த மரைக்காயரின் பாராட்டுரை:
கவிஞர் செவத்த மரைக்காயரின் மலாக்கா பிரவேசத்திரட்டு என்னும் கவிதை நூலை மகுதூம் சாயபு தமது தீனோதய வேந்திரசாலை அச்சுக் கூடத்தில் அச்சிட்டுக் கொடுத்துள்ளார். அதற்கு இவர் தன்னுடைய நூலைச் சிறப்பாக அச்சிட்டுக் கொடுத்த தீனோயத வேந்திரசாலை அச்சுக்கூட உரிமையாளர் மகுதூம் சாயபுவைப் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ளார்.
தங்கமென்று கக்குந்தானந் தகுதியுமருள் சேர்மானம்
எங்கினுங் கிடையாநானம் இலங்கிடு மச்சின்தேனம்
துங்கவான் மகுதூம்சாகிப் துரைசெயும் வாகைபோல
மங்கையே கண்டதில்லை மதிசலா முரைப்பாய் நீயே
அச்சினைக் கோர்வை செய்தவருள் மகுதூம்சாகிபு
வச்சிரக் கரத்தை நோக்கி வளம்பெரு மெடிட்டர்மார்கள்
அச்சமுற்ற டைந்தாரென்னில் ஆர்நிகர் கூடம்போல
மெச்சினேனின்னை நோக்கிமேன் சலாமுமக் குண்டாமால்
என்று செவத்த மரைக்காயர் மகுதூம் சாயபு குறித்தும் அவர் ஆற்றும் பணிகள் குறித்தும் பாடியுள்ளார். இதுகாறும் கிடைத்துள்ள தரவுகளின்படி இவரைத் தவிர வேறுயாரும் மகுதூம் சாயபுவைப் பாராட்டிப் பாடி இருப்பதாகத் தெரியவில்லை.
சிங்கப்பூர்த் தமிழ் இதழியலின் தந்தை என்று மகுதூம் சாயபுவைப் போற்றுவதில் தவறேதும் இல்லை. அந்த அளவிற்கு இவர் தலைசிறந்த இதழாசிரியராக விளங்கியுள்ளதை இவர் நடத்தியுள்ள இதழ்கள் மூலம் அறிய முடிகிறது. இவர் சிறந்த கவிஞர் என்பதைச் சிங்கை நேசனில் படைத்துள்ள கவிதைகள் வழி உணரமுடிகிறது. இவர் நல்ல கட்டுரை ஆசிரியராகத் தடம் பதித்துள்ளார். சிங்கை நேசன் இதழில் இவர் படைத்து உள்ள பத்தி எழுத்துகள் இவரைச் சிறந்த பத்தி எழுத்தாளராக அடையாளம் காட்டுகின்றன. இவர் இலக்கிய ஈடுபாட்டைச் சிங்கை நேசனில் படைத்து உள்ள கட்டுரை, குறள் விளக்கம், தலையங்கம், பத்திகள் முதலியன கொண்டு அறிய முடிகிறது. பத்திரிகையாளர்கள் அங்கதச்சுவை மிக்கவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் சமூக அவலங்களைச் சாடமுடியும். இவர் படைத்துள்ள பத்திகளில் அங்கதபாணி வெளிப்படுகிறது.
உலகில் பல சமயத்தினர் வாழ்கின்றனர். இதைப் போலச் சிங்கப்பூரிலும் பல சமயத்தைச் சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். அதனால்தான் இதழாசிரியர்கள் பல சமயங்களின் கருத்துகளை, தகவல்களை இதழில் வெளியிட வேண்டியவர்களாக இருக்கின்றனர். தாம் சார்ந்திருக்கும் சமயத்தைப் பற்றி மட்டும் கருத்துக் கூறும் இதழாசிரியாக இவர் இல்லாமல் இறைபற்று மிக்கவராகவும் சமய ஈடுபாடு மிக்கவராகவும் இருந்துள்ளார். தீனோதய வேந்திரசாலை என்னும் பெயரிய அச்சகத்தை 1872 ஆம் ஆண்டு நிறுவி அச்சுத் தொழிலுடன் சிங்கப்பூர்க் கவிதை நூல்களை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளராகவும் இவர் விளங்கி இருக்கிறார். இதனால் இவர் பன்முக ஆளுமை கொண்டவர் என உறுதியாகக் கூறலாம்.
இவர் நடத்தியுள்ள சிங்கை வர்த்தமானி, தங்கைநேசன், ஞானசூரியன், சிங்கை நேசன் முதலிய பத்திரிகைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து முழுமையான ஆய்வைச் செய்யும் போதுதான் இவருடைய ஆளுமையை நன்குணர முடியும். மேலும் இவ்வாய்வு சிங்கப்பூர்த் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றின் தொடக்கத்தையும் அதன் சிறப்புகளையும் உலகிற்கு எடுத்துக்காட்ட ஏதுவாக இருக்கும்.
- நான் ஒரு பிராமணன்?
- தொடுவானம் 106. சோக கீதம்
- அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்
- கானல் வரிகள்
- ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்
- இரு கவிதைகள்
- காதலர் தினம்
- ‘நறுக்’ கவிதைகள்
- இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…
- கதை சொல்லி .. நிகழ்ச்சி
- சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை
- “நியாயம்”
- ஒத்திகைகள்
- “ஒரு வார்த்தை ஒரு லட்சம்”
- “எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்
- இறுதி விண்ணப்பம்
- பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…
- இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்
- மெக்காவை தேடி -1