பழமொழிகளில் வரவும் செலவும்

This entry is part 39 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

திட்டமிட்டு வாழும் வாழ்க்கை என்றும் தெவிட்டாத இன்பத்தைத் தரும். திட்டமிடாது வா்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்ல திட்டமிடல் என்பது முக்கியப் பஙக்கு வகிக்கின்றது.
இல்லறம் நல்லறமாக அமைய வரவு செலவு என்பது திட்டமிட்டு அமைதல் வேண்டும். நமது முன்னோர்கள்இல்லறம் சிறக்க வரவு செலவு குறித்த செய்திகளைப்பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். அவை என்றும் திட்டமிட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன.
வரவிற்கேற்ற செலவு
வருமானத்திற்குள் தகுந்தவாறு செலவுகள் செய்தல் வேண்டும். அளவுக்கு அதிகமாகச் செலவு செய்தால் குடும்பத்தில் வறுமை எற்படும். வருமானம் அதிகமுள்ளோர் செலவு செய்வதைப் பார்த்து, அவரைப் போன்று சிலர் தாமும் செலவு செய்து வாழ முற்படுவர். அது தவறு. அவரவர் நிலைக்கேற்றவாறு செலவு செய்தல் வேண்டும். பிறரைப் பார்த்து அவர்களைப் போன்று நடந்து கொள்வது துன்பந்தரும். இதனை,
‘‘புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதாம்’’
என்ற பழமொழி விளக்குகிறது. புலி-வருவாய் அதிகம் உள்ளவர்கள், பூனை- வருவாய் குறைவாக உள்ளோர்கள் எனக் குறியீட்டின் வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
தத்தமது தகுதிக்கேற்ப திட்டமிட்டுச் செலவு செய்தல் வேண்டும் என்பதை,
‘‘விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்’’
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர். நம்மிடம் அதிகமாக இருக்கின்றது அதனால் நாம் நினைத்த வண்ணம் மனம் போன போக்கில் செலவு செய்யலாம் என்று சிலர் கருதுவர். அது தவறு. வரவுக்கு ஏற்றவாறு செலவினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறியையும் மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகிறது.
வரவும் சேமிப்பும்
தமக்குக் கிடைத்த பொருளை அப்படியே சேமிப்பின்றி அனைத்தையும் செலவு செய்வது தவறான வாழ்க்கை முறையாகும். அளவாகவும், தேவைக்கேற்ற வண்ணமும் செலவிட வேண்டும். அதுமட்டுமல்லாது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிறிதளவு சேமிப்பதும் நலம் பயக்கும். இத்தகைய அரிய வாழ்வியற் கருத்தை,
‘‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்’’
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர் கூறிப்போந்துள்ளனர். எப்படிச் செலவு செய்தாலும் கணக்கு வைத்துக் கொண்டு அளவறிந்து அளவோடு செலவிட வேண்டும் என்பதை இதில் நமது பெரியோர்கள் வலியுறுத்தி இருப்பது போற்றுதற்குரியதாகும்.
வருவாய் அதிகம் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்வர். அவர்களுக்குக் கவலை இல்லை. இதனை,
‘‘மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விட்டுக்கொள்ளலாம்
அள்ளியும் முடிஞ்சுக்கலாம்’’
என்ற பழமொழியினைக் கூறி விளக்கினர். இங்கு மயிருள்ள சீமாட்டி என்பது வருவாய் அதிகம் பெறும் குடும்பத்தாரைக் குறிக்கும் (மயிர்-பொருள்). பணம் அதிகம் வைத்திருப்போரையே இத்தொடர் குறியீடாகக் குறிப்பிடுகின்றது எனலாம்.
செலவிடல்
தேவையின்றிச் செலவு செய்வது துன்பம் தரும். ஆடம்பரத்திற்காகச் செலவுதசய்தல், அவசியத்திற்காகச் செலவு செய்தல் என்று செலவிடலை இருவகைப்படுத்தலாம். இதில் முன்னது தேவையற்றது நீக்கப்பட வேண்டியது. பின்னது தேவையானது. ஆடம்பரமாகச் செலவிடுதலை,
‘‘கண்ணுக்குத் தலை தெரியலை’’
‘‘காலால நடந்தல் காத வழி போகலாம்.
தலையால் நடந்தால் போக முடியுமா?’’
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன. இப்பழமொழியின் கருத்து,
‘‘ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை’’
என்ற குறட்பாவின் கருத்துடன் ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது.
கண்ணுக்குத் தலை தெரியவில்லை என்பது வரவு அறியாது செலவிடலைக் குறிக்கும். வரவறிந்து இருந்தால் செலவினை தேவையறிந்து செய்வர். அவ்வாறு இல்லாதபோது வழக்கில் இப்பழமொழியைக் கூறுவர். அதுபோன்று காலால் நடப்பது –வரவுக்கேற்ற செலவு செய்தல் தலையால் நடப்பது- வரவறியாது செலவு செய்தல், அதாவது ஆடம்பரமாகச் செலவு செய்தல். இதனையே கால், தலை என்ற குறியீடுகள் வழி நமது முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
வரவறிந்து முறையாகவும், அளவோடும் செலவு செய்து வாழ்வதை இப்பழமொழிகள் குறிப்பிடுவதுடன் ஆடம்பரமான தேவையற்ற செலவுகளை நீக்கிவிட வேண்டும் என்பதையும் இவற்றின் வழி நமது முன்னோர்கள் வலியுறுத்துவது நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
பிறருக்குக் கொடுப்பது
பொருள் இருந்தாலும், வருவாய் அதிகம் வந்தாலும் பிறருக்கு அவற்றையெல்லாம் தேவையின்றிக் கொடுத்தல் கூடாது. ஏனெனில் அவ்வாறு பொருளைப் பெற்றவர்கள் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க நினைக்கமாட்டார்கள் அவ்வாறு கொடுக்காதிருப்போரிடம் திருப்பித் தருமாறு கேட்டால் பகை ஏற்படும். இதனை,
‘‘கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை’’
‘‘உதடு பெருத்தால் ஊருக்குள்ளயா அறுத்துக் கொடுப்பது’’
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
பொருளோ, பணமோ கடனாக பெற்றவர்கள், அதனைக் கொடுத்தவர்களைப் பற்றித்தவறாகக் கருத இடம் உண்டு. ஏனெனில் அவர்களுக்குத் தான் வருவாய் வருகிறதே. அவர்களுக்கு ஏது சிரமம் ஏற்படப் போகிறது என்று கருதி வாங்கியதைக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்வர். இதனால் தேவையற்ற பகை ஏற்படும். அதனால் நம்மிடம் வருவாய் அதிகம் இருப்பினும் பிறருக்குத் தேவையின்றி கொடுத்தல் கூடாது. இதனால் வீண் பகை ஏற்படுவது தடைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டு வரவறிந்து செலவு செய்து பண்பாடு மாறாது அவனியில் சிறக்க வாழ்வதற்கு இப்பழமொழிகள் நமக்கு வழிகாட்டுகின்றன. பழமொழி வழி நடப்போம் பண்பாட்டில் உயர்வோம்

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigationபுத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்சொல்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *