திருநம்பிகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 12 in the series 11 செப்டம்பர் 2016

அழகர்சாமி சக்திவேல்

மாமன் மீசை மழித்து அத்தை ஆனால்?
அவள் திருநங்கை..
சில ஆண்குலம் ஏக்கத்தில் சப்புக்கொட்டி ஜொள்ளு விடும்..
சில ஆண்குலம் எரிச்சலில் உச்சுக்கொட்டித் தள்ளி விடும்…

அத்தை மீசை வளர்த்து மாமன் ஆனால்?
அவன்தான் திருநம்பி..
சமூகம் இன்னும் சரியாய்ப் புரிந்து கொள்ளாத ஊமைகள்..
உலகச் சுவற்றில்
புரியாத கோடுகளால் வரையப்பட்ட புதிரான மாடர்ன் ஆர்ட்கள்.

நானும் ஒரு திருநம்பி..
வளர்ந்த தாடி மயிரைச் சிரைப்பதற்கு
சலூன் செல்ல முடியவில்லை.
கடைக்குச் சென்று பிளேடு வாங்கினால்..
கல்லாப்பெட்டிக்காரனின் ஏளனப்பார்வை.

ரோஜாவை..
முள்ளுடன் பார்த்து ரசிக்கத் தெரியாத
மனித ஜென்மங்கள் முன்
மல்லுக்கட்டும் என் ஆண்மை…
பலாக் கனிமேல் மூடிய முள் இருந்தால்
கவிதைபாடும் உலகம்
என் முகக்கனியின்மேல் முள் இருந்தால் மட்டும்
வசை பாடுவது ஏன்?

அழகிய பெண்களைக் கண்டால்…
என்னவளே.. அடி என்னவளே..என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்…
பிரபுதேவாவாய் நான்..
என் குரலோ ஜானகியாய்..
களுக் என்ற பெண்களின் ஏளனச் சிரிப்பில்
துடித்திடும் என் ஆண்மை.

பேக்கர் என்ற என் பிளாஸ்டிக் ஆண்குறியை
தெரியாத பெண்களின் முன் அணிந்து சென்றால்
முட்டுகிற என் பேண்ட்ஜிப் பார்த்து முறைக்கும் ஒரு கூட்டம்.
தெரிந்த பெண்களின் முன் அணியாது சென்றால்..
“மறுபடியும் பெண்ணா?” என்ற மொக்கைக் காமெடிகள்..
குஞ்சுக்கு ஆசைப்பட்டதால்..
பஞ்சாய்ப் பறக்கும் எங்கள் ரோசங்கள்
..
பொது இடங்களில்
கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தால்
பெண்ணாய் அறியப்படுவேனோ என்ற பயத்தில்
ஆண் குறி தெரிய எப்போதும் நான்
தொடை அகட்டி உட்காரும் துயரங்கள்..
கத்தியை எப்போதும் காட்டி கலவரப்படுத்தும்
காவலாளியாய் நாங்கள்..

“மேடம்” என்று பின்னால் கூப்பிட்ட பின்
முன்னால் வந்து…
“சாரி மிஸ்டர்” என சங்கடப்படுத்தும் ஒரு கூட்டம்…
“அக்கா” என அன்பாய்க் கூப்பிடும் அப்பாவிக் குழந்தையை
“அண்ணா எனக் கூப்பிட மாட்டாயா செல்லமே” என
மனதுக்குள் மறுகும் என் புது ஆண்மை

அரசுப் படிவங்களில்
நான் “ஆண்” என்று எழதினால்..
“தவறாய் எழுதிவிட்டீர்களே” என
படிவத்தை அடித்துத் திருத்தும் அதிகாரி..
கூடவே என் பரிதாபப் பார்வை..

அரவாணியை அறிந்த பாரதம்
என் போல் திருநம்பிகளை மறந்தது ஏன்?
ஹிஜ்ராக்களைத் தெரிந்த பாரதம்
என் போல் பையாக்களை புறந்தள்ளுவது ஏன்?
கோத்திகளை சேர்த்துக் கொண்ட பாரதம்
என் போல் கண்டபாசகர்களைக் கண்டுகொள்ளாதது ஏன்?

பெண்ணிலிருந்து ஆணாய் மாறிய சிகண்டினி..
பீஷ்மரை அழித்து பெருமை பெற்றாள்..
ஆண்மை நிறைந்த பெண்ணாய் வந்து
அரக்கர் குலம் அழித்தாள் மாகாளி..
எல்லாக் கதைகளுக்கும் ஓர் மதிப்பு உண்டு என்றால்
திருநம்பிகளின்
ஆண்மை விதைகளுக்கும்
மதிப்புக் கொடுங்கள்…

கவிதை – ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigation135 தொடுவானம் – மருந்தியல்உன் கொலையும் என் இறப்பும்…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *