சில மருத்துவக் கொடுமைகள்

This entry is part 16 of 17 in the series 18 செப்டம்பர் 2016

 

அழகர்சாமி சக்திவேல்

மருத்துவம்..

மானிட உலகின் முதற் கணினியை

வேதியியல் விரைநீக்கம் செய்தது..

விஷம் கொடுத்துக் கொன்றது.

 

அறுபது வருடங்கள் கழித்து அந்தக்கணினியிடம்

மன்னிப்புக் கேட்டது வெள்ளையர் ஏகாதிபத்தியம்…

“குற்றம் செய்யாத உன்னை தண்டித்தோமே” எனக்

குமுறினார் ஒரு பிரிட்டிஷ் பிரதமர்.

விறைப்பாய் நிற்கும் வெள்ளைச்சட்டை

அன்று மட்டும் கசங்கிப் போனது.

 

முடியாளும் மகாராணி எலிசெபத்துக்கு

முடியாத சோகமும் கூடவே மானப்பிரச்னையும். என்பதால்

மரணத்துக்குப் பின் வழங்கும் மன்னிப்பினை

முதற்கணினிக்கு அருளினார்.

நீதி கொன்ற வெள்ளை நாடு

அன்று நாணத்தில் சிவப்பானது.

 

அறுபது வருடத்துக்கு முன் நீதிபதி கேட்டார்…

“காயடித்துக் கொள்கிறாயா…இல்லை கடுமைச் சிறை செல்கிறாயா?”

கணினி கலங்கியது…கடைசியில் காயடித்துக் கொண்டது.

ஆலன் டுரிங் என்ற அந்தக் கணினியியலின் தந்தை செய்த குற்றம்

ஓரினச்சேர்க்கை.

 

அந்த நாட்களில்…

அறிவியல் மண் வளர்த்த மருத்துவ மரங்களில்

அறிவீனப்புழுக்களும் வளர்ந்ததால்…

ஓரின இலைகள் பல ஓட்டையாகி அழிந்தன.

 

“அடே..ஓர் சுகம் விரும்பியே..

அழகிய ஆடவன் ஒருவன் ஆடையின்றி நிற்பதைப் பார்….

அடியில் உனக்குத் துடிக்கிறதா இப்போது?

இந்தா எடுத்துக்கொள் எலெக்ட்ரிக் ஷாக்..

துடிக்கட்டும் உன் விரைகள்…

இப்போதும் கீழே துடிக்கிறதா… இன்னும் கூட்டு மின்சாரததை..”

இப்படி சில மருத்துவக் கொடுமைகள்…

விளக்கு எரிக்க வேண்டிய மின்சாரம்

ஓரின மனிதனின் பல்பை ஃப்யூஸ் ஆக்கியது.

 

பெண்ணை மட்டுமே விரும்பும் ஆணிடம் இருந்து

அவரைக் கொட்டையை அறுத்து

ஓரினவிரும்பியின் துவரைக் கொட்டைக்குப் பதிலாய்

மாற்று மருத்துவம் செய்து பார்த்தனர்

சில மருத்துவ மடையர்கள்..

கொட்டைகள் குட்டைக்குள் போனதுதான் மிச்சம்.

 

வேதியியல் விரைநீக்கத்தால்

வலுவிழந்த எலும்புகள்..

மாமிகள் போல் விரிந்து போன மார்பகங்கள்..

முற்றிலும் சுருங்கியது ஓரினத்தின் விதைப்பை மட்டுமல்ல

அவர்தம் பணப்பையும்தான்.

 

மூளை நரம்புகள்தான் காரணம் என

மருத்துவம் மண்டையைக் குடைந்து பார்த்தது.

மயிர்கள் போனதுதான் மிச்சம்.

 

மனநல மருத்துவமும் தன் பங்குக்கு

ஓரின விரும்பிகளோடு ஓரியாடியது.

மனோவசியங்கள் கொண்டு ஓரினத்தின்

மனதை மாற்றப் போராடியது…

மதபோதகர்கள் சிலர் மேடைகளில்

“குருடன் பார்க்கிறான் செவிடன் நடக்கிறான்” என

காசு கொடுத்துக் கூட்டிவந்த கூட்டத்தைக் கதைக்க விடுவதைப்போல்

முன்னாள் ஓரின விரும்பிகள் சிலர் கொண்டு

உபதேசம் செய்வதுபோல் உபத்திரவம் செய்தது.

எல்லாமே..கடலில் கலந்துபோன ஆறுகளாய்..

 

அந்தோ பரிதாபம்..

உயிரை இழந்த ஓரின விரும்பிகள் பலர்.. ஊனமானோர் பலர்.

மூளை வற்றிப் போய் மூலையில் துவண்டோர் பலர்.

நரம்பு தளர்ந்து நாடி இழந்தோர் பலர்.

ஆறாம் அறிவு மருத்துவத்துக்குள்.

ஐந்தாம் அறிவாய் ஒடுங்கிய ஓரினம்.

 

மதம் சார்ந்த மருத்துவ அறிவியலின் முகமூடிகள்

மருத்துவத்தாலேயே ஒருநாள் கிழிக்கப்பட்டன.

நீர் அடித்து நீர் விலகியது.

“ஓரினச்சேர்க்கை ஒரு மனநோய் அல்ல” என இறுதியில்

மருத்துவம் பணிந்தது. மானிடம் ஜெயித்தது.

 

கவிதை – ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationபெண்மனசுயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *