தமிழ்மணவாளனின் ‘ அதற்குத் தக ‘ தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும்
நேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான வெளியீட்டு முறை கொண்டவை. ‘ எதையும் கவிதையாக்கலாம் ‘ என்னும் அணுகுமுறை தெரிகிறது.
‘ தொலைந்து போன கவிதைகள் ‘ — ஒரு படைப்பாளியின் தவிப்பைக் கருப்பொருளாகக் கொண்டது.
இது பலரை உஷார்ப்படுத்தும். ஒரு சிறுகதையில் , வைக்கம் முகம்மது பஷீர் ஒரு ஓய்வூதியரின் பாஸ்
புத்தகம் தொலைந்து போன தவிப்பைச் சொல்லியிருப்பார். இக்கவிதை அதை நினைவுபடுத்தியது.
சொல்லாட்சியில் தமிழ்மணவாளன் சற்றே கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘ தபால் பெட்டி பற்றிய கவிதை ‘ — இதன் தலைப்பு ‘ தபால் பெட்டி ‘ என்று இருந்தால் என்ன?
அவ்வப்போது காகம்
வந்தமர்ந்து கரையும்
விருந்தினர் வருவதைத் தெரிவிக்கும்
தபால்போல
— என்பது மிகவும் யதார்த்தம்.
தபால் மட்டுமின்றி கொஞ்ச நாளாய்
பாக்கட் பாலும்
அதட்குள்தான் வைக்கப்படுகிறது
பத்திரமாய்
— இது உண்மையா ? கிண்டலா ? சிறுவர்களின் குறும்பாய்க் கல் போடப்படுவதும் உண்டு.
‘ எதிர் கொள்ளல் ‘ — என்ற கவிதை பெண் பற்றியது.
என்னை எதிரில் கண்டதும்
தேங்கிய நீரில்
பாதம் நனைந்து விடாதபடி
ஒதுங்கிச் செல்லும்
பாவனையோடு
விலகிச் செல்கிறாய்
நாம் பழகுவதற்கு முன்னரும்
இப்படித்தான் போவாய்
மரியாதை நிமித்தமாக
அதுவே இப்போது
அவமரியாதையாய் இருக்கிற தெனக்கு
— கவிதையில் உருவாகும் கனம் ரசிக்கத்தக்கது.
காதலை சீட்டாத்துடன் ஒப்பிடும் போக்கு அமைந்த கவிதை ‘ உள் ஒளித்தல் ‘ .
கால்சட்டைப் பைக்குள்
கபடமற்று நிரப்பிக் கொண்டு
ஓடிய பாதையெங்கும்
ஒழுக விட்ட சந்தோஷங்கள்
— என்பதை ஒருவித ஏக்கத்துடன் ரசிக்கிறோம்.
உன் ஞாபகம் வரைந்த சீட்டை மட்டும்
கவிழ்த்து மூடும் கடைசிச் சீட்டென
மறைத்து விடுகிறேன்
யாருக்கும் தெரியாமல்
— எனக் கவிதை முடிகிறது.
தினசரி வாழ்க்கையின் மீது தத்துவக் கவலை கொள்வதைச் சொல்கிறது ‘ அதனாலென்ன ?’
எதையும் எழுதிவிடக் கூடிய
வெள்ளைத் தாளென
விரிந்து கிடக்கிறது மனசு
— என்ற படிமம் அழகாக இருக்கிறது.
அமைதியாய் வரைந்தயிக் கோலம்
பாதங்களின் கீழே
சிதைந்து போகத்தான் செய்கின்றன
அதனாலென்ன ?
அடுத்த அதிகாலையிலும்
வரையத்தானே போகிறோம்
அழகான இன்னொரு கோலத்தை
— என்று திரும்பத் திரும்ப வரும் வாழ்க்கைச் சம்பவங்களை கசப்பு மருந்தாகவும் , மகிழ்ச்சியாகவும்
ஏற்கிறார் தமிழ்மணவாளன்.
‘ தெளிவுறுதல் ‘ — ஒரு புனைவுக் கவிதை !
மீனொன்று காற்றில் பறந்து போனது
வியப்பாக இருக்கிறது
— எனக் கவிதை தொடங்குகிறது. ‘ மீன் பறத்தல் ‘ என்பது குறியீட்டுச் செயல்பாடாகச் சுட்டப்படுகிறது.
இதன் உட்பொருள் , வியத்தக்க செயல் ஒன்று நடந்தது என்பதுதான் என் யூகம். ‘ மீன் பறவையானதா
செதில்கள் சிறகுகளாய் ‘ என்ற கேள்வியில் வெளிப்படும் ரசிக்கத்தக்கது. இது வித்தியாசமான கவிதை.
முழுமை என்று ஒன்றுமில்லை எனச் சொல்கிறது ‘ முழுமை ‘ .
முழுமை பெற்றதாகயெண்ணி
சிலாகித்திருக்கையில்
தொடரும் முடிவிலாத் துயரம்
உணர்த்தும்
வெற்று மாயை வெளியில்
— எனத் தொடங்கும் கவிதை ! வாழ்க்கையை ஆய்ந்து வெளிக்கொணரும் உண்மையிது . முழுமையின்மை என்பது இங்கு மனம் சார்ந்து இயங்கும் நிலைப்பாடு எனலாம். அறிவார்ந்து பார்த்தால்தமிழ்மணவாளன் சொன்னது போல
மழைக்கால ஏரியாய்
மனம் நிரம்பி வழிகிறது. [ பக்கம் ]
— என்ற திருப்தி கிட்டும்.
நிறைவாக , தமிழ்மணவாளன் கவிதைகள் படித்து ரசிக்கத்தக்கன. வாழ்க்கையின் மீதான இவரது
பார்வை பிற கவிஞர்களுக்கும் உதவக்கூடும்.
- விளக்கேற்றுபவன் – சிறுகதை
- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்
- நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)
- தொடுவானம் 181. பதிவுத் திருமணம்
- தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …
- வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு
- பெருந்துயர்
- கவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)