ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளரத்
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
இது திருப்பாவையின் இருபத்தைந்தாவது பாசுரமாகும். இப்பாசுரம் முழுக்க முழுக்க கிருஷ்ணாவதாரம் பற்றிப் பேசுகிறது. “கடந்த பாசுரத்தில் என்னை மங்களாசாசனம் செய்தீர்கள்; அது சரி, பறைகொள்வான் என்று சொன்னீர்களே! அது என்ன” என்று பகவான் கேட்டானாம். பறை என்பதே பலன் பெறுவதாகும். அதுவும் உன்னைப் பெறுவதேயாகும்” என்று ஆயர் சிறுமிகள் பதில் சொன்னார்கள். “அதுபோல் யாரேனும் என்னைப் பெற்றிருக்கிறார்களா?” என்று அவன் கேட்க இவர்கள் எங்கள் ஆயர் குடி உன்னைப் பெற்றுள்ளதே” என்றார்களாம்”அதற்குத் தடைகள் பல இருக்குமே” என்று கண்ணன் கூற இவர்கள் ”தடைகளை நீக்கல் உனக்குக் கடினமான ஒன்று அல்லவே! நீயே எங்களுக்கு வரும் தடைகளையும் போக வேண்டும் என்கிறார்கள்.
மேலும் ”நான் உங்களின் ஆயர்பாடிக்குக் கண்ணனாக வந்துள்ளேன். ஆனால் நீங்கள் வாமனனையும் இராமனையும் பாடுகிறீர்களே” என்று கண்ணன் கேட்டானாம். எனவே இப்பாசுரத்தில் கண்ணனைப் பற்றி மட்டும் பாடுகிறார்களாம். தேவகியின் வயிற்றில் ஆண் மகனாகப் பிறந்தான். பிறப்பற்றவன் தன் வயிற்றில் பிறக்க அவள் என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்? பெரும்பாலும் புராணங்களில் கடவுள்களின் பிறப்பைப் பற்றிக் பேசும்போது பிறந்தான் என்று சொல்ல மாட்டார்கள். தோன்றினான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் வைணவத்தில் அவன் பிறந்தான் என்பதுதன் பெருமையாகும். பிறப்பில் பல் பிறவியானவன் அவன். ‘எண்ணற்ற யோனி வயிற்றில் பிறந்தவன்” என்று ஆழ்வார் பேசுவார். தவிர ‘பிறந்து’ என்பதன் மூலம் தூணிலே தோன்றாமல், ஆனைக்கு உதவியதுபோல் தோன்றாமல் கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறந்ததைக் காட்டுகிறார்கள்.
’பிறந்து’ என்பதன் மூலம் அடியார்களுக்காக அவர் துயர் நீக்க இம்மண்ணுலகில் பிறக்க வேண்டுமா? கர்மாவில் உழலும் மக்கள் போல நீயும் துன்பப்பட வேண்டுமா? என்கிறார்கள். சேற்றில் விழுந்தவரை சேற்றில் இறங்கித்தானே தூக்க வேண்டும். நாம் எல்லாரும் கர்ம வினையால் பிறவிக்கடலில் விழுகிறோம். அவன் நம்மைத் தூக்க நம்மைப்போல் வந்து பிறந்து நம் துயர் போக்குகிறான்.
இராமாயணத்தில் ஒருவன் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றான். ஆனால் இங்கோ வசுதேவன், தேவகி, நந்தகோபன், யசோதை ஆகிய நான்கு பேர் தவம் செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். இரு தாய் தந்தையரையும் இரு குலங்களையும் ஓரிரவில் ஒரு கணத்திலே ஏற்றுக்கொண்டான் என்கிறார் கூரத்தாழ்வான் தன் ஸூந்தரபாஹூ ஸ்தவத்தில்.
கண்ணனைப் பெற்றவளின் பெயரையோ வளர்த்தவள் பெயரையோ சொல்லாமல் இருவரையும் ‘ஒருத்தி’ என்று குறிப்பிடுகிறார்கள். ஏன் தெரியுமா? முக்கூரார் வேடிக்கையாக, ‘ஆண்டாள் மாமியார் பெயரைச் சொல்லலாமா?’ என்று நினைக்கிறாளாம். மேலும் பெரியவர்கள் பெயரைச் சொல்லக்கூடாது அன்றோ? பட்டர் ‘ஸ்ரீரங்க ராஜஸ்தவத்தில் ‘பிராட்டி’ என்றே எழுதுவார்.
தேவகி அப்படி என்ன பெரியவள்? தாய் தந்தை இல்லாதவனுக்குத் தாயானாள் அல்லவா? அதுவே பெருமை. “பரமபதத்திலிருக்கும் தேவனாகிற நாராயணன் ஒருவனே” என்றும், நராயணன் ஒருவனே முதலில் இருந்தான்” என்றும், ஊழி முதல்வன் ஒருவனே” என்றும் வேதம் கொண்டாடும் பெருமை பெற்றவனை, ஒப்பில்லாதவனைப் பெற்றதனாலே அவளும் ஒப்பற்றவள் ஆகிறாள். மேலும் கம்சனுக்குப் பயந்து தேவகி என்றால் அவன் அறிந்துவிடுவானே என்று ஒருத்தி என்கிறார்களாம். ’மகனாய்’ என்கிறார்கள். மகன் பிறப்பது விசேஷம். மகன் பிறப்பது பெற்றோர் சொற்படி நடக்கத்தானே? அதுவும் இவன் வீட்டுக்கு, ஊருக்கு நாட்டுக்கு நல்லவனாக இருக்கப் பிறந்தான்.
இராமனாவது பெரியவனான பிறகுதான் பெற்றொர் சொல் கேட்டான். ஆனால் கண்ணனோ பிறந்தவுடன் பெற்றோர் சொற்படி நடந்தான். அதாவது சிறையில் சங்கு சக்கரங்களுடன் அக்குழந்தை பிறந்தது. ”ஐயோ இதைக் கண்டால் கம்சனுக்குத் தெரிந்து விடுமே” என்று அஞ்சிய வசுதேவரும் தேவகியும் உன் சங்கு சக்கரங்களை ஒளித்துக் கொள் என்று வேண்ட அப்படியே அக்குழந்தை செய்தது. ஆகக் கண்ணன் பிறந்தவுடனேயே பெற்றோர் சொல் கேட்ட நல்ல பிள்ளை. அதுவும் அவன் மகனாகப் பிறந்தது மிகப்பெரிய பெருமை. அவன் சர்வ உலகங்களுக்கும் தந்தையானவன். அவன் தன் புத்திரனையே தந்தையாகக் கொண்டு அவதாரங்கள் தோறும் பிறக்கிறான். “மகனொருவர்க்கல்லாத மாமேனி மாயன் மகனாம்” என்பார் ஆழ்வார்.
அவன் சிறையிலேதான் பிறந்தான் அதில் அவனுக்கு ஓர் ஆசையாம். “இராமாவதாரத்தில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். அரசைத் துறந்தோம். மனைவியைப் பிரிந்தோம் பிராட்டியைத் தேடி, “மரமே! சீதையைக் கண்டாயா? மலையே! சீதையைக் கண்டாயா? நதியே! சீதையக் கண்டாயா?” என்று காடு மேடெல்லாம் அலைந்தோம். ஆனால் இராமகாதை எழுதிய வால்மீகியோ “ஸீதாயா: சரிதம் மஹத்” என்றாரே! சிரமம் எல்லாம் நாம் பட்டோம். அவர் ஏனோ சீதையின் சரிதம் என்று கூறி விட்டாரே. அவள் பத்து மாதங்கள் இலங்கையில் சிறையில் இருந்தாள் அல்லவா? அதனால்தான் அவளுக்கு ஏற்றம் வந்திருக்கும். ஆகவேதான் சிறையிருந்தால் ஏற்றம் கூறும் கதை அது என்று கூறி இருக்கலாம். எனவே அடுத்த அவதாரத்தில் நாம் ஒன்று செய்ய வேண்டும். சிறையில் இருக்க வேண்டாம். சிறையில் பிறக்க வேண்டும் என முடிவு செய்தானாம். அதனால்தான் கிருஷ்ணாவதாரத்தில் சிறைச்சாலையில் அவதரித்தானாம்.
அவன் ஓர் இரவில் பிறந்தான். இதுவரையில் யாரும் அதுபோல் ஒப்பற்ற ஓர் இரவைக் கண்டதில்லை. பிறக்க ஒரு தாய்; வளர்க்க ஒரு தாய்; இரு மாதாக்கள் உண்டான இரவு அல்லவா அது? மற்றும் மாதா பிதாக்களும் உதவாத தசையிலே அந்த இரவல்லவா உதவியது? ஏனெனில் பகலாய் இருந்தால் கோகுலம் சென்றிருக்க முடியுமா? எனவே அதை ஒப்பற்ற இரவெனக் கொண்டாடுகிறார்கள்.
சரி, அங்காவது தங்க முடிந்ததா என்றால் இல்லை. நாய்க்குடலிலே நறு நெய் தங்க மாட்டாதாப் போலே சம்ஸாரிகளின் தன்மையாலே எம்பெருமான் தான் பிறந்த இடத்திலே ஓர் இரவு கூட தங்க முடியாததாகி விட்டது. நமக்காக இவ்வுலகிலே பிறந்ததால் அந்த இரவிலே எம்பெருமான் என்ன பாடுபட்டான்? என்று சிறுமிகள் கலங்குகிறார்கள்.
அதுவும் பிறந்தது ஓரிடம்; வளர்ந்தது ஓரிடம்; தேவகியின் வயிற்றில் பிறந்தான்; யசோதையிடம் வளர்ந்தான். இவனைப் பிள்ளையாய்ப் பெற இருவரும் தவம் செய்திருந்தார்கள். ஒருத்திக்குத் தன் அவதார ரஸத்தைக் காட்டினான். மற்றொருத்திக்குத் தன் லீலாவிநோதங்களைக் காட்டி மகிழ்வித்தான். உண்மையில் பார்த்தால் யசோதையே பாக்கியசாலியாவாள். தேவகி பெற்றதோடு சரி. ஆனால் கண்ணனின் எல்லா பால்ய லீலைகளையும் கன்ண்டும் கேட்டும் அனுபவித்தவள் யசோதையே. அதனால் தான் “திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாலே” என்று தேவகி புலம்புவதாக ஆழ்வார் பாடுவார்.
சிறையிலே தான் பிறந்த இடத்திலே முலைப்பால் குடிக்கவும் அக்குழந்தைக்குக் காலமில்லை. ஆயர் பாடியான கோகுலம் சென்று அங்குதான் முலைப்பால் குடித்தது. யசோதை பிள்ளையாகவே வளர்ந்த்து. அதனாலேயே ‘கோபாலன்’ எனும் பெயர் பெற்றது. இந்த இடத்தில் “ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்த குழந்தை மற்றொருத்தியிடம் முலைப்பால் குடிக்குமோ? இவளுக்கும் பால் சுரக்குமோ?” என்று ஒருவன் கேட்டானாம். அதற்கு பட்டர், “அவளுக்கு முலை சுரவா நின்றதாகில், இவன் அழுது முலையுண்டானாகில் உமக்குச் சேதமென்” என்று ஆறாயிரப்படியில் அருளிச் செய்வார். கண்ணனை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டதுமே அவளை அறியாமல் பூதனைக்குப் பால் சுரந்ததே!
மேலும் இவளும் ஒருத்தியே என்று ஆயர் சிறுமிகள் வியப்படைகிறார்கள். ஏனெனில் யசோதை யாருக்குத் தாயாக இருக்கிறார்? யாரை உரலில் காட்டினாள்? இந்த உலகுக்கே நாதனாக இருக்கின்ற பரம்பொருளுக்கே அல்லவா தாயாக இருக்கிறாள். யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? கண்ணனான குழந்தையைப் பெற்ற தேவகி அந்தப் பிள்ளையை அந்த இரவிலேயே அதைக் கைவிட்டாள். ஆயர்பாடியிலோ கண்ணன் அங்கு வந்த நாள்தொட்டு அக்குழந்தையை பூதனை, சகடாசூரன், பகாசுரன் போன்றோர் வாயிலே விழ யசோதை பார்த்திருந்தாள். அப்படிப்பட்ட ஒருத்தி இவள் என்று கூறுகிறார்கள். மேலும் யசோதை தேவகி என்று பெயரைச் சொல்லாமல் இருவரையும் ஒருத்தி என்று கூறுகிறார்கள் ஏன் தெரியுமா? கம்ஸன் இறந்து பல நாளாகியும் இன்னும் அவனால் ஏதேனும் தீங்கு வரப்போகிறதே என்றூ அஞ்சிச் சொல்கிறார்களாம். அதனால்தான் அன்றோ பிறந்த நக்ஷத்திரத்தினையே மறைத்து “அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்” என்று கூறினார்கள். ஒருத்தி என்றதனால் அவர்களின் பெருமைகளும் விளங்குகின்றன.
அவன் ஒளித்து வளர்ந்தான் என்று பாசுரம் கூறுகிறது. ‘ஒளிந்து’ என்று சொல்லப்பட வில்லை. ஏனெனில் அப்பரம்பொருள் யாருக்கு அஞ்சி ஒளிய வேண்டும்? பிறந்த சிறைச்சாலையில் பெற்றோரின் பேச்சு கேட்டுத் தன் மேன்மையை ஒளித்துக் கொண்டவன், புகுந்த இடத்திலாவது தன்னிஷ்டப்படி வளர்ந்தானா என்றால் இல்லை. எதைத்தொட்டாலும் அசுரமா கூட்டமாயிருப்பதால் தன் மேன்மைகள் ஒளித்து வளர வேண்டியதாயிற்று. “நாட்டார் செய்வன செய்யப் பெறாதே கள்ளர் பட்டது படுவதே” என்று பேசுகிறார்கள்.
ஏனென்றால் ஒரு பிள்ளை ஒளித்து வளர்கிறான் என்று நாரதர் சொன்ன உடனேயே அக்கணமே எல்லாக் குழந்தைகளையும் கொன்று விட கம்ஸன் ஆணையிட்டான். அத்துடன் விட்டானா? கண்ணன் வரட்டும் என்று காத்திருந்தானா? பூதனை சகடாசூரன் வத்ஸாஸூரன் போன்றோரை அனுப்பினானே? அந்தக் கம்ஸன் செய்ய நினைத்ததைச் சொல்லக்கூட அஞ்சி அவன் தீங்கு நினைந்தான் என்று சொல்கிறார்கள். அவன் வில்விழா என்றழைத்து மல்லர்களையும் பட்டத்து யானையையும் ஏவியதைச் சொல்ல இவர்கள் விரும்பவில்லை. தவிர ‘தீங்கு நினைந்த’ என்று பேசுகிறார்கள். அடியவர்க்குத் தீங்கை மனத்தால் நினைத்தாலே எம்பெருமான் பொறுக்க மாட்டான்.
“உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
இரணியன் அகல்மார்வங் கீண்டஎன்
முன்னைக் கோளரியே”
என்று நம்மாழ்வார் அருளிச் செய்வார். மனத்தினால் தீமையைச் செய்ய நினைத்த காரணத்தாலேயே இரணியனைப் பெருமாள் அழித்தார். மேலும் கம்ஸனையே “தீய புந்திக் கஞ்சன்” என்று பெரியாழ்வாரும் குறிப்பிடுவார்.
”தீய புந்திக் கஞ்சன் உன்மேல்
சினமுடையன் சோர்வு பார்த்து
மாயந் தன்னால் வலைப்படுக்கில்
வாழகில்லேன் வாசுதேவா” என்பது அவர் அருளிச்செயல்.
மேலும் நம்மாழ்வார், “சாதுசனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு” என்று அருளிச் செய்திருப்பதிலிருந்து அவன் அடியவர்களுக்குத் தீங்கிழைப்பவன் என்பது புரிகிறது.
கண்ணன் அத் தீயபுத்திக் கம்சனின் கருத்தையே பிழைப்பித்தான். அவன் அனுப்பிய பூதனை போன்றவரை தான் ஒரு சிறுவனாக ஒன்றும் தெரியாதவன் போலிருந்து ஏதேனும் ஓர் உபாயத்தால் கொன்று தீர்த்தான்.
கம்ஸன் என்றாலே ஆயர்பாடியில் ஒவ்வொரு தாயும் வயிற்றினில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தாளாம். கண்ணனெம்பெருமான் அந்த நெருப்பை பயாக்னியாய் கம்ஸனின் வயிற்றில் வைத்தானாம். இவ்வாறு பிறர் வயிற்றில் கம்ஸன் கொளுத்திய தீ அவனுக்கே வந்தது. அவன் பல காலம் பலருக்குச் செய்த பாவம் நெருப்பாக அவனுக்கே வந்தது. கண்ணனுக்கு என்ன நேருமோ என்று கோகுலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தது. அந்த நெருப்பும் அவனையே சேர்ந்தது. ஏற்கனவே கண்ணன் எந்தக் குழந்தை என்று தெரியவில்லையே என்று அவன் வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருந்தான். இப்படியெல்லாம் கம்ஸன் வயிற்றில் நெருப்பை வைத்தான் நெடுமால்.
இன்னும் சொல்லப்போனால் அனுமன் சீதா பிராட்டியின் சோகாக்கினியைப் பெயர்த்துக் கொண்டுபோய் இலங்கையைக் கொளுத்தினான். கண்ணன் ஆயர்பாடியின் பயாக்னியைப் பெயர்த்துக் கொண்டுபோய் கம்ஸன் வயிற்றில் வைத்தான்.
கண்ணன் காளமேகம் போன்றவன். தன் அன்பர்க்கு அவன் தண்ணீரைப் பொழிகின்ற காளமேகம் தான். ஆனால் அக்காளமேகம் கம்ஸனுக்கோ நெருப்பைச் சொரிகிறதாம். அதனாலன்றோ ஆழ்வார் “கஞ்சனைக் காய்ந்த காளமேகத் திருவுருவன்” என்கிறார். நெருப்பன்ன நின்ற என்பது, “வெந்நரகம் சேராவகையே சிலை குனித்தான்” என்று சொல்வதுபோல் கண்ணன் நின்ற நிலையைக் காண்பதைக் காட்டிலும் வேறு நரகானுபவம் இல்லை என்னும்படிக் கம்ஸன் முன்னே நின்றதைச் சொலவதாகவும் கொள்ளலாம்.
’நெடுமாலே’ என்று அழைப்பதன் மூலம் “நாங்கள் படாத துயரெல்லாம் பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளோம்; அவனிடத்தில் நெருப்பை வைத்ததுபோல் நீ எமக்கு அன்பை வைப்பாய்; “வசுதேவன் பெற்றிலன்” என்றும் “ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன்” என்றும் வசுதேவரும் தேவகியும் கொண்ட துன்பமெல்லாம் தீரும்படியாக நீ அவர்களிடம் அன்பு காட்டியதுபோல் எமக்கும் காட்டுவாயாக” என்று ஆயர்குலச் சிறுமிகள் வேண்டுகிறார்கள். நெடுமாலே என்பதன் மூலம் அவன் பரம்பொருள், பரிபூரணன் என்பதை உணர்த்துகிறார்கள். மேலும் மால் என்றழைப்பதன் வழி அவன் அன்புடையவன் என்றும் கூறுகிறார்கள்.
“சரி; நான் அவன் வயிற்றில் நெருப்பை வைத்தேன்; உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கண்ணன் கேட்கிறான்.
“கண்ணா! நாங்கள் உன்னை அருத்தித்து வந்தோம். அதாவது உன்னைப் பிரார்த்தித்து வந்தோம். என்ன வேண்டினோம் தெரியுமா? உன்னையே வேண்டினோம்; ஆமாம்; உன்னிடம் குறை இரந்து வந்தோம்; நீ ப்ரேமை உடையவன்; நீ எம்மிடம் கொண்ட ப்ரேமையை இன்னும் அதிகமாக்க வந்தோம்; நீ எங்கள் மீது பித்துள்ளவன்; உன்னை மேலும் மேலும் பித்தனாக்க வந்தோம்; இப்போது உன்னை மணாளனக அடைய வேண்டும்; “கையில் கனி என்னைக் கண்ணனைக் காட்டித்தரிலும், உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்” என்பதற்கேற்ப உன்னைன் அருத்தித்து வந்தோம்.
”நீ எமக்காகப் பிறந்த வைபவம் காட்ட வேண்டாம்; ஆயர்பாடியில் ஒளித்து வளர்ந்த கோலம் காட்ட வேண்டாம்; கம்ஸனைக் கொன்ற வீரம் காட்டவும் வேண்டாம்; நீ இருந்தபடியே உன்னைக் காட்டு அதுவே எமக்குப் போதும்; உன்னிடத்தில் வேறொன்றைத் தேடி வருவோமா? உன்னையே வேண்டி வந்தோம்” என்ரு பேசுகிறார்கள்;
”எற்பரன் என்னை ஆக்கிக்கொண்டு எனக்கே தன்னைத்தந்து
கற்பகம் என்னமுதம் கார்முகில் போலும் வேங்கடநல் வெற்பன்”
என்ற திருவாய்மொழி [2-7-11] இங்கு அனுபவிக்கத்தக்கதாகும்.
மேலும், “எவனொருவன் தன்னையும் அளித்துத் தன்னை அனுபவிக்கத்தக்க பலத்தையும் அளிக்கிறானோ அவனிடம்தான் நாங்கள் அவனை வேண்டி வந்துள்ளோம். கண்ணா! முன்பு மாலாயிருந்த உன்னை நாங்கள்தாம் அருத்தித்து நெடுமாலாக்கினோம்; ஸ்ரீவைகுந்தத்திலிருந்து நீ இவ்வளவு தூரம் வந்ததால் நாங்கள் நீயிருக்குமிடம் நாடி வந்தோம்” என்கிறார்கள்.
“எதிர் சூழல்புக்கு ஆள்பார்த்து உழிதந்து ஆயர்குலத்தினில் வந்து தோன்றின வ்யாமோஹமெல்லாம் நாலடியிட்டு அஸத்கல்மாக்கினோம்” என்பது ஆறாயிரப்படி.
பாரதத்தில் துரியோதனன் கிருஷ்ணனின் படைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். ஆனால் அருச்சுனன் கிருஷ்ணனையே வேண்டிக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். அதனாலேயே கண்ணன் பக்கத்திலிருக்க போரில் வெற்றி பெற்றதோடு சகல செல்வங்களும் பாண்டவர்களுக்கு வந்து சேர்ந்தன. எனவே அதையும் அவனிடத்தில் கேட்கக் கூடாது. மாறாக அவனையே கேட்க வேண்டும். அதனால்தான் இந்த ஆயர் சிறுமிக்ஜள் “உன்னை அருத்தித்து வந்தோம்” என்கிறார்கள்.
அப்போது கண்ணன் “முதலில் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்” என்று பேசினீர்கள்; இப்போது உன்னை அருத்தித்து வந்தோம் என்று கூறுகிறீர்கள்; இது இரண்டு பேச்சாய் இருக்கிறதே! இதில் எது உண்மை/ உங்கள் எண்ணத்தில் இருப்பதென்ன?” என்று கேட்டானாம்.
“கண்ணா! எமக்குப் பறைதான் வேண்டும். அது எமக்குத் தரப்பட்டால் அதன் மூலம் நாங்கள் உம்மையே அடைந்து விடுவோம்; நாங்கள் விரும்பும் பறை என்ன தெரியுமா’ அதுதான் கைங்கர்யம்; புருஷார்த்தம்; இந்த நோன்பின் பலன்; உன் திருவடியில் நித்ய கைங்கர்யம் எனும் பறையை எங்களுக்குத் தந்தாகில் நாங்கள் திருத்தக்க செல்வம் பெற்ரவர்களவோம்” என்று அவனிடம் வேண்டுகின்றனர்.
இங்கு ஒரு சந்தேகம் எழலாம். ஏன் பறை தருதியாகில் என்று கேட்கிறார்கள். பறை தருவாய் என்றுதானே கேட்க வேண்டும். நாம் வேண்டிக் கேட்டால் போதுமா? அவன் திருவுள்ளம் நினைக்க வேண்டுமே! ஏனெனில் அவன் நம்மைப்போல் பரதந்திரன் அல்லன்; ஸ்வதந்தரன்; அவனை ஒருவரும் நியமிக்க முடியாது. எனவே அவன் நினைக்க வேண்டும். எனவேதான் பறை தருதியாகில் என்று வேண்டுகிறார்கள். மேலும் நாங்கள் உன்னைக் கேட்டு வந்து விட்டோம்; நீ உன் வடிவழகால் எம்மை மயக்கி நாங்கள் இங்கு வந்த காரியத்தை மறக்கும்படி செய்யாமல் நாங்கள் விரும்பிய பறை தருதியாகில் என்றும் பொருள் கொள்ளலாம்.
எதற்கும் அவன் திருவுள்ளம் இடம் தர வேண்டும் அல்லவா? நாம் நினைத்தால் மட்டும் போதாது. அவன் எண்ணப்படிதான் எதுவும் நடக்கும். அதனால்தான் இராமபிரான் கானகம் வந்தபோது அவரைக் காண வந்த குகப்பெருமாள் இராமனுக்கு உணவாகத் தேனும் மீனும் கொணர்ந்தான். அவற்றைக் கொண்டு வந்தவன் இவற்றை உண்ண வேண்டும் என்று கேட்க வில்லை. மாறாக “யாது உன் திருவுளம்?” என்று வேண்டியது இங்கு நினைக்கத் தக்கது.
அப்படி அவன் தன்னைத் தந்தால் தங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று சொல்ல வரும்போதுதான் திருத்தக்க செல்வமும் என்று பேசுகிறார்கள். திருத்தக்க செல்வம் என்பது திருவாகிய பிராட்டியாகிய செல்வம் என்றும் திருவினால் உனக்குக் கிடைத்த செல்வம் என்றும் திருவுக்கும் திருவான செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். பிராட்டியை விடச் சிறந்த செல்வம் ஏது? ஆனால் அவனோ பிராட்டியும் ஆசைப்படும்க் செல்வமாயிற்றே? அதனால்தான் “அகலகில்லேன்” என்றிருக்கிறார்.
“நாங்கள் எந்த செல்வம் பாடினோம் தெரியுமா? உன்னையே பாடினோம்; பிராட்டிக்குத் தக்க செல்வம் பெருமாள். பெருமாளுக்குத்தக்க செல்வம் பிராட்டி; இன்னொன்று தெரியுமா? எம்பெருமான் திருவடிக்கு எம்மைப் புருஷகாரம் செய்து கொண்டுபோய்ச் சேர்த்தலே பிராட்டிக்குச் செல்வமாகும்” என்கின்றனர்.
அடுத்து ’சேவகமும்’ என்கின்றனர். சேவகம் என்பது பராக்கிரமம், சௌலப்யம், தொண்டு போன்ற பல பொருள்களைத் தரும். செல்வம் பெற்றால் அதைக் காத்துக் கொள்ள வீரம் வேண்டும் அன்றோ? ”அன்று இவ்வுலகம் அளந்தாய்” பாசுரத்திலேயே இவர்கள் “என்றென்றும் உன் சேவகமே” என்றுதான் பாடுகிறார்கள். இன்னும் கடந்த பாசுரங்களில் ”ஆற்றப்படைத்தான் மகனே” என்றும்,” கப்பம் தவிர்க்கும் கலியே” என்றும் அவனுடைய பராக்கிரமத்தைப் பேசுகிறார்கள்.
”நாங்கள் எல்லாரும் நேற்று வரை உன் திருநாமம் கூறப் பேறு பெறாதவர்களாக இருந்தோம். ஆனால் இன்று அந்த வருத்தமெல்லாம் தீர்ந்து உன் குணங்களையே பாடுவோம்” என்கின்றனர். என்ன வருத்தம் தெரியுமா? “உன்னைப் பிரிந்த வருத்தம்; அது நீங்கினால் நாங்கள் உன் பெருமையைப் பாடுவோம்; மகிழ்வோம்;” என்கின்றனர்
அவனை நினைத்தாலே சிரமங்கள் எல்லாம் தீரும் என்கிறார் ஆழ்வார்.
”மனந்தனுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்; எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்
கண்கள் அசும்பொழுக
நினைந்திருத்தே சிரமம் தீர்ந்தேன்
நேமி நெடியவனே” என்பது ஆழ்வார் வாக்கு. ஆக இப்பாசுரத்தில் நோன்பின் நோக்கம் எம்பெருமான் திருவடியாகிய செல்வத்தைப் பெறுதலே என்று வேண்டுகிறார்கள்.
இப்பாசுரம் அருமையான பல உள்ளர்த்தங்கள் கொண்டதாகும். கண்ணன் தேவகியிடம் பிறந்து யசோதையிடம் வளர்ந்ததைப் பயங்கரம் அண்ணங்காசாரியார் ஸ்வாமிகள் கூறும்போது ஆச்சாரியார் காயத்ரியில் பிறந்து, அஷ்டாக்ஷரியில் வளர்வார் என்றும் அல்லது திருமந்திரத்தில் பிறந்து த்வயத்திலே வளர்வார் என்றும் காட்டுவார்.
அதேபோல ’ஒளித்து வளர’ என்பது முக்கியமான ஒன்றாகும். இதற்கு உடையவர் வாழ்வில் நடந்ததைக் காட்டுகிறார் சுவாமிகள்.
யாதவப்பிரகாசர் என்பவர் தன்னுடன் இராமானுஜரை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கே இராமானுஜரை முடிக்க எண்ணுகிறார். யாதவரின் கள்ள எண்ணமறிந்த கோவிந்தன் அதை உடையவரிடம் சொல்லப் பெருமாளால் அருளால் விந்தியா அடவியில் தள்ள ஒளிந்து ஓரிரவில் ஸ்த்யவ்ரதக்ஷேத்ரம் வந்து சேர்கிறார். ஒளித்து என்பதற்குக் காட்டப்படுகிறது.
அதேபோல நெருப்பு என்பதற்கு இராமானுஜரே நெருப்பு என்கிறார். “பாஷாண்ட ஸாஹர மஹாபடபா முகாக்நி” என்பது ஒரு வாக்கியம்.
முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சார்யார் ஸ்வாமிகள் ”“ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய்” என்பதில் முதலில் வரும் ஒருத்தி என்பது உயர்ந்த காயத்ரி மந்திரத்தையும், இரண்டாவது ஒருத்தி என்பது திருமந்திரத்தையும் குறிக்கும்” என்று கூறுகிறார். அதாவது காயத்ரியில் பிறந்து, மூல மந்திரத்தில் வளர்ந்து என்பது பொருளாகும். “ஒளித்து வளர” என்பதற்கு மந்திரங்கள் ரகஸ்யமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாகும். அதாவது மந்திரங்களைச் சாமானியமாக நினைக்கக் கூடாது.
”தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைந்த கருத்து” என்பதிஉல் உள்ள கருத்து என்பது மனத்தைக் குறிக்கும். கம்ஸன் எனும் மாமாவைக் கொன்றான் கண்ணன். ஆனால் இங்கே மனம் என்பதுதான் கம்ஸன் போன்ற மாமாவாகும். நம் மனத்தைக் கோணல்வழியில் செல்ல விடாமல் தடுப்பவந்தான் நெருப்பு போன்ற நெடுமாலாகும்.
இந்தப் பாசுரத்தின் உயிர்நாடியே ‘வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து’ என்பதாகும். வருத்தம் தீர்ந்து என்றால் இவ்வுலகில் உள்ள சம்சார பந்தம் நீங்குதல் என்று பொருளாகும். மகிழ்ந்து என்றால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்து மகிழ்ந்து என்று பொருளாகும். அதானால்தான் ஆண்டாள் நாச்சியார் “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து” என்று இப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.
===============================================================================
- காதற்காலம்- (பிரணயகாலம்)
- நாடோடிகளின் கவிதைகள்
- ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
- நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
- மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
- வெளிநாட்டு ஊழியர்கள்
- வாழ்க நீ
- வெங்காயம் — தக்காளி !
- பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
- பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
- தொடுவானம் 207. போதை
- இன்று ஒரு முகம் கண்டேன் !
- பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன