முனைவர் இரா.முரளி கிருட்டினன்,
உதவிப்பேராசிரியர்,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 02
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு இன்றுவரை தோன்றவில்லை. தமிழுக்குரிய தனித் தன்மையுடைய காப்பியமாக சிலம்பு மட்டுமே உள்ளது. அதுவரை கடவுளையோ அரசனையோ காப்பியத் தலைவனாகக் கொண்ட வெளிவந்த இலக்கிய மரபிலே ஒரு சாதாரண குடியிலே பிறந்த கண்ணகி தெய்வநிலை எய்தியதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப் பெற்றதை விளக்கும் காப்பியம்தான் சிலப்பதிகாரம்.
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்”
என மூன்று உண்மைகளை உரைக்கிறது இச்சிலம்பின் பதிகம். இம்மூன்றில் “அரைசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று ஆவதூஉம்” என்ற உண்மையில் சித்தரிக்கப்பெறும் அரசியல் இக்கட்டுரையில் காண்போம்!
அரசுகளின் ஒருமைப்பாடு
தமிழ்நாட்டின் ஒருபகுதியாகச் சேர நாடாக இருந்து இன்று தனி மாநிலமாகத் திகழும் கேரள மாநிலம் தமிழ்நாட்டு அரிசியை, காய்கறிகளை பால்-இறைச்சிகளை தமிழ்நாட்டினின்று வாங்கிக் கொள்வர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அங்கு சென்றால் மட்டும் அவமானப்படுத்துவா்கள். முல்லைப் பெரியாரில் நமக்கு அல்லலை விளைவிக்கிறார்கள். கேரளத்துக் கோழி இறைச்சிக் கழிவுகளை, மருத்துவ-இரசாயனக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லையில் கொட்டிச் சென்று வீண் வம்பு இழுக்கிறார்கள். இன்று மாநில அரசுகளுடன் ஒற்றுமை இல்லாதது போலத்தான் சிலம்பு எழுந்த காலத்திலும் தமிழகத்தில் ஒற்றுமையின்மை மிகுதியாக இருந்தது. மூவேந்தா் தம்முள் மனவேறுபாடு கொண்டு போரிட்ட கதைகளையெல்லாம் நம் புறநானூற்றுப் பாடல்களில் அறியலாம்.
தமிழ் மூவேந்தரையும் ஒன்றுபடச் செய்ய ஒற்றுமைப்படுத்த எண்ணிய இளங்கோவடிகள் மூன்று காண்டங்களுக்கும் அவா்தம் தலைநகரங்களின் பெயரைத்தந்தார். சோழவேந்தனின் தலைநகா் புகார் புகார்க் காண்டமாக்கினார். பாண்டியவேந்தனின் தலைநகரம் மதுரை, மதுரைக் காண்டமாக்கினார் சேரவேந்தனின் தலைநகரம் வஞ்சி; வஞ்சிக் காண்டமாக்கினார். மூவேந்தா் ஆளும் பகுதிகளில் கதை நிகழ்ந்ததாகக் காட்ட விரும்பிய இளங்கோவடிகள், சோழ நாட்டில் கண்ணகி பிறந்தாள். பாண்டிய நாட்டில் கணவனை இழந்தாள்; சேரநாட்டில் தெய்வநிலை அடைந்தாள் என்று ஒருமைப்பாட்டை உயர்த்திக் காட்டுகிறார். அரசியல் மாண்பை ஆக்கித் தருகிறார்.
பாண்டியா் பெருமை
பாண்டியன் நெடுஞ்செழியன் தன் செவிகளாலே அந்தணா் ஓதுகின்ற வேத ஒலியினை அல்லாது ஆராய்ச்சி மணியின் ஓசையை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவன் அடி தொழுது வணங்காத மன்னரே இல்லை. குடிகள் அவனைப் பழி தூற்றியதே இல்லை.
“மறைநா ஓசை அல்லது யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே.
அடி தொழுது இறைஞ்சா மன்னா; அல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன் “
(கட்டுரைக் காதை வரிகள் 31-34)
குடிமக்கள் பழிதூற்றாதபடி ஆளுகிற திறம் கொண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன் மிகச் சிறந்த குடியில் பிறந்தவன்.
கதவைத் தட்டிய குற்றத்துக்காகத் தன் கையைத் தானே துணித்த பாண்டியன். கீரந்தை என்பான் மனைவியைப் பிரிந்து அயலூர் சென்றிருந்தான். அவன் மனைவி தனித்திருந்தாள். நாள்தோறும் நகா்க்காவல் புரிகின்ற பாண்டிய மன்னன் பாதுகாவலில் இருந்தாள். ஒருநாள் இரவு அவ்வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது. அயலூர் சென்றிருந்த அவள் கணவன் வந்துவிட்டான் என்பதை அறியாத பாண்டியன் அவ்வீட்டுக் கதவைத் தட்டினான். அரசன் பாதுகாவல் அல்லாது வேறுகாவல் இல்லை என்று என்னைக் காவலற்ற இடத்தில் இருத்திச் சென்றீரே, அந்த அரசன் காவல் இன்று என்னைக் காவாதோ? எனக் கூறினாள் அவன் மனைவி. அச்சொல் அரசன் காதில் பழுக்கக் காய்ச்சிய ஆணியினால் சுடுவது போன்று இருந்தது. கதவைத் தட்டிய கையைத் தன் தவறுக்காகத் தானே துணித்துக் கொண்ட பொற்கைப் பாண்டியன் குடியில் பிறந்தவன். அரசன் என்றால் குடிகளுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும்.
“குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்” – (குறள்:549)
“தம் குடிமக்களைப் பிறா் வருத்தாமல் காத்துத் தானும் வருத்தாமல் காப்பாற்றுதல் அரசனுடைய தொழில் என்கிறார் வள்ளுவா்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” – (குறள்:388)
என்றும் இறைமாட்சியிலே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
அரசன் தன் குடிமக்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் காக்க வேண்டும். அவ்வாறின்றி எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள், வறுமைகள், வழிப்பறிகள், கற்பழிப்புகள் நடந்தால் அப்படி நடப்பனவற்றைப் பற்றிக் கவலைப்படாது பார்த்துக் கொண்டிருந்தால் அந்த அரசனுக்கோ அரசுக்கோஅழகன்று! இதைத்தான் இளங்கோவடிகள்,
செவிச்சுட்டு ஆணியின் புகைஅழல் பொத்தி
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரா் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை”
(கட்டுரைக் காதை 48-53)
எனக் கூறுகிறார்.
மக்களைக் காக்கும் பணியிலே கதவைத் தட்டிய குற்றத்துக்காகத் தன் கையையே துணித்துக் கொண்ட கொற்கைப் பாண்டியன் வழிமரபிலே செங்கோலினையும் குறைபடாத வெற்றியினையும் உடைய பாண்டிய அரசன் குடியிலே வந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் பெருமைகள் பற்றி இன்னும் விரிக்கின் விரியும். அத்தகைய பெருமைமிகு பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு சாதாரண குடிமகளிடம் தன் குலப் பெருமைகளையெல்லாம் பறிகொடுத்தான்.
நீதி கேட்ட கண்ணகி
கணவன் தன் காற்சிலம்பு கொண்டு விலைபேசி விற்றுவர வந்தவன் ‘கள்வன்’ எனப் பெயர் சூட்டிக் கொலையுண்டான் எனில் அவள் இதயம் நைந்து போயிருக்கும். நீதி கேட்க கோட்டை கொத்தளம் நோக்கி வருகிறாள் கண்ணகி. வந்தவள் வாயிற்காவலனை நோக்கி,
“வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!” -(வழக்குஉரைகாதை 24-26)
என்று விளிக்கிறாள். “அறிவு முற்றும் அற்றுப் போன அற நினைவும் அற்றுப் போன நெஞ்சத்தை உடைய, அரச நீதியையும் முறைமையையும் பிழைத்தவனாகிய அரசனின் வாயில் காப்போனே!” என்கிறாள்.
“முடியாட்சிக் காலத்தில் ஒரு சாதாரண குடிமகள் அதுவும் வேற்று நாட்டிலிருந்து வந்து இங்கு பிழைக்க வந்த ஒரு குடிமகள் மாட்சிமை தங்கிய மன்னனை ‘அறிவு அறைபோகிய – அறிவு முற்றும் அற்றுப்போன அரசன்’ எனச்சொல்கிறாள். தனி ஒரு பெண்ணாக நின்று அரசனை ஏளனம் செய்கிறாள் என்றால் அவளது துணிவையும் பாராட்ட வேண்டும். இப்படி ஒரு சாதாரண குடிமகள் அரசனைக் கேட்கலாம் என்று உரிமை தந்த மன்னனையும் பாராட்ட வேண்டும். முடியாட்சிக் காலத்திலேயே அப்படியென்றால் குடியாட்சிக் காலமாகிய இன்றைக்கு இப்படி நம் ஆளுவோரை நாம் இடித்துரைக்க இயலாது. இடித்துரைத்த காரணத்தினாலேயே அடித்து, உதைத்து, துன்புறுத்தி, ஊருக்கு ஊர் அந்த நபா்மீது வழக்குகள் தொடுக்கப் பெறும்!
வளைந்த செங்கோலைத் தன் உயிர்கொடுத்து நிமிர்த்திய பாண்டியன் நெடுஞ்செழியன். அரசன் முன்னே அழைத்து வரப்பட்ட கண்ணணகியைப் பார்த்து,
“நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்!
யாரையோ நீ? மடக்கொடியோய்!” என மன்னன் கேட்க
“தேரா மன்னா!” — (வழக்குரை காதை 48-50) என்கிறாள்.
“ஆய்ந்து அறிகிற அறிவில்லாத மன்னனே! என்கிறாள். இப்படி ஓர்; அரசனிடம்இ ஆளுவோரிடம்இ ஒரு சாதாரண குடிமகன் நேருக்கு நோ; நின்று பேச முடியாது. பேசினால் அவன் உயிh; தப்பாது. இன்றைக்கு சகிப்புத் தன்மை பற்றிப் பேசுகிற நமக்கு அந்த சகிப்புத் தன்மை இல்லை. ‘செப்புவது உடையேன்’ -உன்னிடம் ஒன்று கூறுவது உடையேன்’ என்று சொல்லி
“எள்அறு சிறப்பின் இமையவா; வியப்பப்
புள் உறுபுன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும் பெயா்ப்புகார் என்பதியே; – (வழக்குரை 51-56)
என்றும் சொல்கிறாள்.
தன் நாட்டு மன்னா;கள் பெருமை, தன் குலப் பெருமை இவற்றையெல்லாம் “ நீ யார்? என்று வினவிய அரசனின் வினாவுக்கு விடையாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாங்கு கண்டு எந்த அரசனும் இவ்வளவு பொறுமையாக இருக்க மாட்டான். இக்கால நம்மரசுகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
நல்ல அறநெறியில் செல்லாத கொற்கை நகரத்து மன்னனே! என்கிறாள்.
இப்படி ஒரு மன்னனை நேருக்கு நோ் நின்று,
“அறிவு அற்றுப் போனவனே! என்கிறாள்;
“தேரா மன்னா!” என்கிறாள்;
“நல்திறம் படராக் கொற்கை வேந்தே!” என்கிறாள்.
இவை எல்லாவற்றையும் மன்னன் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தான்.
”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”(குறள் 448)
எனும் குறள்வழி கடைக்குடி மகனும் காவலனைக் கண்டு இடித்துரைக்கலாம் என்ற உரிமையைத் தந்து இடித்துரைகள் முற்றையும் கேட்டுக் கொண்டிருந்தது மன்னனின் அரசியல் மாண்பு.
“என் கால் சிலம்பில் உள்ளவை மாணிக்கப் பரல்கள்”என்று கண்ணகி கூறுகிறாள். “எம் சிலம்பு முத்துப் பரல்களை உடையது” என்று சொல்லிவிட்டு கோவலனிடமிருந்து திருட்டுச் சிலம்பெனக் கருதிப் பெற்ற சிலம்பினைத் தருமாறு கூறி அதைக் கண்ணகி முன் வைக்கிறான் மன்னன்; அதைக் கையினால் எடுத்து உடைக்கிறாள் கண்ணகி அதிலிருந்து வந்த மாணிக்கப் பரல் பாண்டியன் முகத்தே தெறித்து வீழ்ந்தது. வளையாத செங்கோல் வளைந்ததை உணா்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,
“…………………………. மணி கண்டு
தாழ்ந்த குடையன்;தளா்ந்த செங்கோலன்
பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே..” (வழக்குரை காதை 72-78)
என்கிறார் இளங்கோவடிகள்.
தான் ஆராயாது செய்த தவறினைத் தவறு என்று ஒப்புக் கொள்கிறான்! எந்த மன்னனும் தான் செய்த தவறினைத் தவறு என்று ஒப்புக் கொள்வதில்லை.எந்த அரசும் இப்படித் தான் செய்த தவறைத் தவறு என்று ஒத்து கொள்வதில்லை. ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியனோ தான் செய்த தவறினைத் தவறு என்று . ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தவறுக்காக வளைந்த செங்கோலை நிமிர்த்துவதற்காக தன் உயிரையேக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.
அஃறிணைக்கு நீதி வழங்கிய சோழ மன்னன்
ஓர் உயிருக்கு ஈடாகத் தன் உயிரையே தந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் நீதி நெறிஇஅரசியல் மாண்பு போற்றுதற்குரியது. ஆராய்ச்சி மணியின் நா அசைகிறது; கன்றினை இழந்த பசு கண்ணீர் சொரிகிறது. இது மன்னன் நெஞ்சைச் சுடுகிறது. தான் பெறுதற்கரிய ஒரு மகனைத் தன் தோக்காலில் இட்டுக் கொன்று கன்றின் உயிருக்குத் தன் மகனின் உயிரைக் கொடுத்து நீதி வழங்கிய மனுநீதிச் சோழ மன்னனின் நீதிநெறி அரசியல் மாண்பு – ஆராய்ந்து பாராது பொற்கொல்லன் சொற்கேட்டுக் கோவலனைக் கொன்றபின் தனது செயல் தவறு என்று உணா்ந்ததும் தன் உயிரையேக் கொடுத்து நீதியை நிலை நாட்டிய பாண்டியன் நெடுஞ்செழியனின் உயா்ந்த மாண்பு நெஞ்சம் நெகிழ்கிறது. இப்படிப்பட்ட மன்னா்களும் இங்கு இருந்திருக்கிறார்கள்; உயா்ந்த அரசியல் மாண்பினைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதைச் சிலம்பிலே அரசியல் மாண்பாக இளங்கோவடிகள் அழகாகச் சித்தரித்திருக்கிறார்.
போர்க்களத்திலே மடிந்த திறம்சால் வீரார்களுக்கு, ஆடவருக்கு நடுகல் நாட்டி வழிபடுவது வழக்கம். ஆனால் கண்ணகியோ போர்க்களத்தில் மாளவில்லை; மன்னனின் அவைக்களத்திலே சொற்சமா் புரிந்து பாண்டியனை வென்றாள், அந்தப் பெண்ணுக்கு நடுகல் நாட்டி, தெய்வமாக்கி வழிபட்டது இளங்கோவடிகள் செய்த புதுமை; புரட்சியும் கூட.
இமயம் சென்று பதினெண் நாழியில்
பகையைக் கொய்திட்டான்.
இமயக் கல்லை எடுத்தவா் தலையில்
சுமக்கச் செய்திட்டான்.
உத்தமி பத்தினி கண்ணகித் தாய்க்குக்
கோவில் சமைத்திட்டான்
பத்தினிக் கல்லில் அவள்திரு உருவை
ஆங்கே அமைத்திட்டான்.
பகையை மறந்து பாண்டியா; சோழா்
கயவா கைஅழைத்தான்
பகலவன் ஒளியினும் ஆற்றல் மிக்கது
பத்தினிக் கண்ணொளியாம்.”
- (ச.தோ.தமிழ்மாறனின் உருகுவதை விட்டுவிடு கவிதை நூலிலிருந்து)
தொகுப்புரை
அரசியலில் ஓர் ஒருமைப்பாட்டை நமக்கு உணா்த்தி, பாண்டியனின் பெருமையைப் புலப்படுத்தி, குற்றத்துக்காகத் தன் கையைத் தானே துணித்துக் கொண்ட பாண்டியனைக் காட்டி, நீதிகேட்ட கண்ணகியைப் படம்பிடித்து வளைந்த செங்கோலைத் தன் உயிர் கொடுத்து நிமிர்த்திய பாண்டியன் நெடுஞ்செழியனையும், பசுவிற்கு நீதி வழங்கிய சோழ மன்னனைக் காட்டி சோழ நாட்டுக் கண்ணகிக்காகச் சேர நாட்டில் கோயில் எழுப்பிய சேரன் செங்குட்டுவனைக் காட்டிய இளங்கோவடிகள் ஆட்சியாளர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்; குடிமக்களிடம் இப்படித்தான் பரிவுடன் அவா்தம் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும்; இப்படித்தான் நீதிநெறியை முறை செய்ய வேண்டும் என்று காட்டிய இளங்கோவடிகள், ஆளுவோருக்குப் பெருந்தன்மை, சகிப்புத்தன்மை இருக்கவேண்டும் என்பதையும் காட்டுகிறார். இவ்வாறு சிலம்பில் அரசியலையும் அரசியல் மாண்பையும் அழகாகக் காட்டுகிறார் இளங்கோவடிகள். இதை இன்றைய அரசியலாளர்கள் பின்பற்றினால் நாடும் செழிக்கும். மக்கள் நலன் சிறந்தோங்கும்.
பார்வை நூல்கள்
1.முனைவா; ச.வே.சுப்ரமணியனின் சிலப்பதிகார உரை நூல்.
2.பரிமேலழகர் உரை, திருக்குறள்
3.ச.தோ.தமிழ்மாறனின் “உருகுவதை விட்டுவிடு” கவிதை நூல்.
- புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்
- ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா
- சிலம்பு சித்தரிக்கும் அரசியல்
- இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1
- உயிர்ப்பேரொலி
- செய்தி
- உடைந்த தேங்காய் ஒன்று சேராது
- மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
- அந்தி
- நம்பிக்கை !
- சமையலும் பெண்களும்
- தொடுவானம் 220. அதிர்ச்சி
- கண்ணகி தேசம்
- மருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி
- மேடம் மெடானா !