தன்னையே கொல்லும்

This entry is part 2 of 9 in the series 31 மே 2020

                    

                                                         

”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா என் பொண்ணு தூங்கவே இல்லை தெரியுமா? என்றான் பதிலுக்குக் கோபு.

”ஆமாம் அவ தப்புதான செஞ்சா?”

“என்னா பெரிய தப்பு?, வீட்டுக் கணக்கைப் போடல; அதான”

“ஆமாம் அது தப்பில்லையா? புள்ளங்க வீட்ல போட்டுக்கிட்டு வரணும்தான டீச்சர் தராங்க; அதைப்

போடாம வந்தா குத்தந்தான”

“அதுக்காக பெஞ்சு மேல ஏறி நிக்கச் சொல்றதா?

“சரி; எவ்வளவு நேரம் ஒன் பொண்ணு நின்னா?”

”ரொம்ப நேரம் இல்ல; ஒரு அஞ்சு நிமிஷந்தான்; ஏறின ஒடனேயே எறஙகச் சொல்லிட்டாங்களாம்”

”ஒன் பொண்ணை மட்டும் தான் சொன்னாங்களா?”

”இல்ல, இன்னும் நாலஞ்சு பேரைச் சேத்துத்தான்”

”அப்பறம் என்னா? நீ இதைப் பெரிசா எடுத்துக்கிட்டு அந்த டீச்சர் மேல எழுதப் போறேன்னு சொல்றயே?

“ஒனக்குத் தெரியாது. பொண்ணுக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா?”

”சரி, நீ நேரப் போய்க்கேளு. அதை உட்டுட்டு அவங்க மேலப் புகார் எழுதினா சரியா இருக்குமா? அதுவும் வழக்கமா எழுதற மாதிரிதான எழுதப்போற?”

“ஆமாம்” என்றான் கோபு சிரித்துக் கொண்டே.

”வேணாம் கோபு. ஒனக்கு இதே வேலையாய்ப் போச்சு; ஊர்ல ஒனக்கு என்னா பேரு வச்சிருக்காங்கன்னு தெரியுமா?” என்று சொன்ன சந்திரனிடம், ”என்னா வச்சிருக்காங்க?” என்று கேட்டான். ”பெட்டிஷன் கோபு” என்று சொன்ன சந்திரனிடம், “அவங்க ஏதாவது வச்சிக்கட்டும், நீ கெளம்பு; ஒன் வேலையைப் போய்ப் பாரு” என்று முடிவாகக் கூறி விட்டான் கோபு.

சந்திரனின் மனநிலை சரியில்லாததால் ஏரிக்கரை மீது உலாவப் போனான். ஏரியில் தண்ணீரே இல்லை. வறண்டு கிடந்தது. ஏரி மண்ணைத் தங்கள் வயலுக்கு உரமாக இடச் சிலர் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். கரை மீது நடப்பட்டிருந்த பனங்கொட்டைகள் துளிர் விடத் தொடங்கியிருந்தன. சந்திரனின் எண்ணம் முழுதும் கோபுவைப் பற்றியே இருந்தது.

முன்னாடி நல்லவனாத்தான் இருந்தான்; இப்ப எப்படி இப்படி மாறிப்போயிட்டான்? அதுவும் ஆளும்கட்சிக்குச் செயலாளரா வந்த பின்னர்தான் சுத்தமா கெட்டவனாயிட்டான். எதுக்கெடுத்தாலும் உண்மை விளம்பின்ற பேர்ல எழுதிடறது. அவங்க படற அவஸ்தையைப் பாத்து இவன் சந்தோஷப் படறது?

இதுல அவனுக்கு என்னா திருப்தியோ? திரியல” சந்திரன் நினைத்துக் கொண்டே எதிரே வந்த எருமைமாட்டு மந்தை தன் மீது மோதாமல் இருக்க சற்று ஒதுங்கினான்.

போனமாதம் இதே மாதிரி ஒண்ணு எழுதினான். அவருதான் இந்த வார்டுக்கு மெம்பர். ரொம்ப நல்லவரு. யார் எதை கேட்டாலும் சரின்னு செய்வாரு, தாலுக்கா ஆபீசு, ரிஜிஸ்டார் ஆபீசு எல்லாத்துக்கும் வந்து உதவி செய்வாரு; காசே வாங்க மாட்டாரு. அதால அவரு மேல இவனுக்குப் பொறாமை. எப்படா அவரு மாட்டுவாருன்னு பாத்துக்கிட்டிருந்தான். அவரு அவரோட வீட்டைக் கொஞ்சம் மாத்திக் கட்டினாரு. அதுக்காக வீட்டு வாசல்ல ஜல்லி.மணல், செங்கல்லாம் இறக்கி வச்சிருந்தாரு. போக வர்றதுக்கு நல்லாவே வழி இருந்திச்சு. ஆனா இவன்வேணும்னே உண்மை விளம்பியாய் எழுதிட்டான் நகராட்சிக் கமிஷனருக்கு.

”கமிஷனர் அவர்களுக்கு, இப்பவும் பிள்ளையார் கோயில் தெருவில் குடியிருக்கும் அந்த வார்டு மெம்பர் வீட்டு வாசலில் ஜல்லி, மணல், கல்லெல்லாம் கொட்டி வைத்துப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்கிறார். போய்க் கேட்டால் நான்தான் இந்த வார்டு மெம்பர்; என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார். இப்படி செய்ய வார்டு மெம்பருக்குத் தைரியம் கொடுத்தது நீங்கள்தானா?

அவர் வீதியைச் சரியாக வைக்காவிடில் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் சொல்லப்பட்டுத் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிக்கு உண்மை விளம்பி.

கமிஷனர் அந்த மெம்பரை அழைத்துப் பேசினார். “நீங்களே வந்து பாருங்க ஐயா” என்றார்அவர். கமிஷனர் போய்ப்பார்த்ததும் தெருவில் ஒரு லாரியே போகும் அளவிற்கு வழி இருந்தது. “ஏன் இந்தப் பெட்டிஷன் வந்தது” என்று அவர் மெம்பரிடமே கேட்டார். மெம்பர் சொன்ன பதில் ஆச்சரியமாய்இருந்தது. ”எல்லாம் அந்த கோபு செஞ்சதுதாங்க”

”எப்படிச் சொல்றீங்க”

”போன வாரம் வந்து ரெண்டாயிரம் பணம் கேட்டான். நான் தரல; அவங்கிட்டக் கொடுத்தாவராதுன்னு தெரியும். அதால என் மேல கோபம். நேத்திக்கே வந்து ஒங்களை இன்னும் கமிஷனர் கூப்பிட்டு விசாரிக்கலயான்னு வாயை உட்டுட்டான். இதுலேந்தே தெரியுதில்ல அவன்தான் போட்டிருக்கான்னு.”

”என்னா செய்யறது எல்லாம் கட்சியில இருக்கற துணிச்சல்தான்” என்றார் கமிஷனர்.

”அது சரிங்க; நான்மூணு நாளா கவலப் பட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க பெட்டிஷன்

வந்திருக்குன்னு கிளார்க் சோமுகிட்டவிவரம் சொல்லி அனுப்பிச்சிட்டீங்க. என் மனைவி சரியா சாப்பிடக் கூட இல்லீங்க; எல்லாம் சரியா நாம செய்யும் போதே இப்படி நடக்குதேன்னு அவளுக்கும் நெஞ்சு வலி”.

”எனக்கும்தாங்க; இருக்கற வேலையில இதை வேற கவனிக்கணுமேன்னு மன உளைச்சல்தான்”என்று சொன்னார் கமிஷனர்.

”இதுல அவனுக்கு என்னாங்க லாபம்?”

“அவனுக்கெல்லாம் மத்தவங்களுக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்துக்கிட்டே இருக்கணும்ற எண்ணம். அவங்க கவலைப்படறதைப் பாத்து அவன் சந்தோஷப் படணும் .அவனுக்கெல்லாம் நாலைஞ்சு பேரு சந்தோஷமா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தா பொறுக்காது” என்றார் கமிஷனர்.

ஒரு மாதம் ஓடிப் போனது. ஒருநாள் சந்திரன் தன் மகனின் தேர்ச்சி அறிக்கை பெற அப்பள்ளிக்குப்போக நேர்ந்தது. தேர்ச்சி அறிக்கையை வாங்கிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்ப வண்டியை எடுத்த போது பள்ளியில் பணியாற்றும் ஓர் ஆசிரியர் வந்து, ”ஐயா, ஒங்களைத் தலைமை ஆசிரியர் வரச் சொன்னார்” என்று சொல்ல அவனுக்கு வியப்பாக இருந்தது. “என்னையா?”எனக் கேட்டான். ”ஒங்க பேருதான சந்திரன்” என்று அவர் கேட்க ஆமாம் என்று சந்திரன் சொல்ல “ஒங்களைத்தான்” என்றார் அவர்.

சந்திரனுக்கு ஒரே குழப்பம். நம் பையனும் நல்ல மதிப்பெண்கள்தானே வாங்கி இருக்கிறான்? என்ன காரணமாக இருக்கும்” என்று யோசித்தவாறே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றான்.

வந்தவனை உட்காரச் சொன்ன தலைமை ஆசிரியர் எடுத்த எடுப்பிலேயே “நீங்களாவது ஒங்க நண்பருக்குக் கொஞ்சம் அறிவுரை சொல்லக்கூடாதா?”ன்னு கேட்க சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னாங்கய்யா” என்று கேட்டான். “அதாங்க அந்த கணக்கு ஆசிரியை மேலப் புகார் வந்திருக்குது. கோபு பொண்ணுக்குக் கடுமையான தண்டனை குடுத்திட்டாங்கன்னு. சி.இ.ஓவுக்கும் அமைச்சருக்கும் கூடப் போயிருக்குது. கட்சிக்காரங்களுக்கும் போயிட்டுது” ஓரளவிற்குச் சந்திரனுக்குப் புரிந்தது.

இருந்தாலும் தெரியாத மாதிரி கேட்டான். ”யாருங்க எழுதியிருக்காங்க”

”வழக்கமா வர்ற உண்மை விளம்பிதாங்க; அது யாருன்னு ஒங்களுக்குத் தெரியுமே. நல்லாப் பாடம் நடத்துற டீச்சரு அவங்க. மேலேந்து நடவடிக்கை எடுக்கணும்னு தகவல் வந்திடுச்சு. நான் சமாதானம் கேட்டேன். வகுப்பில் படிக்கும் பிள்ளைங்களையும் கேட்டேன். அஞ்சு நிமிஷம் பெஞ்ச் மேலஏறி நிக்கச் சொன்னாங்க. அதான்னு அந்தப் பொண்ணே சொல்லிடுச்சு. இதுக்கு ஒரு புகாரு. அதால அவங்களத் தூக்கி வேற ஊருக்கே மாத்திட்டாங்க. பாவம். அவங்க கணவரு இங்க வேல பாக்கறாரு. பிள்ளைங்க எல்லாம் சின்னப் புள்ளைங்க. அறுபது மைலு பஸ்ஸுலப் போக ரொம்பக் கஷ்டப்படறாங்க” தலைமை ஆசிரியர் புலம்பித் தள்ளிவிட்டார்.

“நான் மொதல்லயே எவ்வளவோ சொல்லிட்டேங்க. அவன்லாம் யாரு சொன்னாலும் கேட்காதவன். மத்தவங்க மனசைப் புண்படுத்தறதே வேலை அவனுக்கு” என்று வருத்தமாகச் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

அலுவலகம் சென்ற எனக்கு எந்த வேலையும் ஓடவே இல்லை. இதே நினைப்பாக இருந்தது.

தவறே செய்யாத அந்த ஆசிரியை மனம் எவ்வளவு கொதித்திருக்கும்? வீட்டில் பள்ளியில் சரியாகப் பணியாற்ற முடியுமா? இனிமேல் மாணவர்களைத் திருத்த அவர் நடவடிக்கை எடுக்க அச்சப்பட்டு விடுவாரே? அதனால் அவரிடம் படிக்கும் மாணவர்க்கன்றோ இழப்பு? தலைமை ஆசிரியர்க்கோ ஒரு நல்ல ஆசிரியைத் தம் பள்ளியைவிட்டுப் போனதால் வருத்தம் இருக்குமன்றோ?. இவன் திருந்தவே மாட்டானா? பிறர் மனம் படும் காயத்தை உணரவே மாட்டானா?” என்றெல்லாம் எண்ணச் சிதறல்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தன.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள் மாலை கோபு என் வீட்டிற்கு வந்தது வியப்பாக இருந்தது. அதைவிட அவன், “வாயேன் சந்திரா, ஏரிக்கரைப் பக்கம் போயிட்டு வரலாம்” என்று அழைத்தது. இன்னும் ஆச்சரியம். ஏரியின் மதகில் போய் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே அவன் குனிந்துகொண்டு அழத் தொடங்கினான். சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் முதுகு குலுங்கிக் கொண்டு இருந்தது.சிறிது நேரம் அழட்டும் என்று அமைதியாக இருந்தான் சந்திரன்.

“என்னாச்சு கோபு? நீயே அழற அளவுக்கு என்னாச்சு? சொல்லலாம்னா சொல்லு?” என்று கேட்டான். அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்ட கோபு, “ஒங்கிட்ட சொல்லாம யாருக்கிட்டச் சொல்வேன்?. மனசே நிம்மதியா இல்ல; மண்டையெல்லாம் ஒரே குத்து வலி; தற்கொலை செஞ்சுக்கலாமான்னு கூட நெனச்சுக்கிட்டேன். வெளியில யாருக்கிட்டயும் சொல்ல முடியாத நெலமை; என்னா செய்யறதுன்னே புரியல; ஒரு மாசமா வீட்ல ஒரே சண்டை;”

“யாரோட, ஒன் அப்பாக்கிட்டயா?”

“இல்ல, என் பொண்டாட்டிக்கிட்டதான். இத்தனை நாளா இல்லாம இப்ப என் மேல

சந்தேகப்படறா. நான் வேற யாரையோ வச்சிக்கிட்டிருக்கறதா சொல்றா. அதுவும் நெறய பேரோட தொடர்பு இருக்குன்னு நெனக்கறா. கட்சி வேலன்னு நான் சொல்லிட்டுப் போறதெல்லாம் அதுக்குதான்னு சொல்றா. அதோட எனக்கு நெருக்கமானக் கட்சிக்காரங்கக்கிட்டல்லாம் நான் எங்கெங்க போறேன்? எங்கெங்க தங்கறேன்னு விசாரிச்சிருக்கா. அவங்க சொல்றதையும் நம்பல. இப்ப அவங்களே என் மேலச் சந்தேகப்படறாங்க. அதோட விட்டுட்டாப் பரவாயில்ல. இந்த விஷயமாஅப்பாக்கிட்ட வேறச்சொல்லிட்டா. அவரு எனக்குப் புத்திமதி சொல்லித் திட்டறாரு”

“இப்படித் திடீர்னு சந்தேகம் வர என்னாக் காரணம்?”

“நான் கேட்டபோதெல்லாம் பதிலே சொல்லல. இன்னிக்குக் காலைல அடிக்கப் போயிட்டேன். கையை கிய்ய ஓங்காதீங்க; இதான் காரணம்னு இந்தக் கடிதத்தைத் தூக்கி என் மூஞ்சிக்கு நேரத் தூக்கிப்போட்டா”ன்னு சொன்ன கோபு ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதை வாங்கிப் படித்தான் சந்திரன்.

அதில், “அப்பாவியான கோபுவின் மனைவிக்கு, நீ உன் கணவனை உத்தமன் என்று

நினைத்துக் கொண்டிருக்கிறாய். அவனுக்கு ஊரெல்லாம் தொடுப்பிருக்கு. நிறைய பொம்பளங்கத் தொடர்பிருக்கு, அவன் கட்சி வேலை என்று வெளியூர் போய்த் தங்குவதெல்லாம் அவர்கள் வீடுகளில்தான். உன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள். இப்படிக்கு உண்மை விளம்பி” என்று இருந்தது.

========================================================================

வளவ. துரையன், 20, இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர். 607 002.

கைபேசி: 93676 31228 valavaduraiyan@gmail.com

=====================================================================

Series Navigationகேரளாவும் கொரோனாவும்அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *