மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன் குடை, சிறுவர்க்கான சின்னக்குடை என்று பல வகையான குடைகள்! கேரளாவில் தாழங்குடை இல்லாமல் நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்ல மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அரைப் பணத்துக்குப் பவிஷு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்” என்று கேலியாகச் சொல்வதும் உண்டு. குடைகள் மான்மார்க் குடை, சிங்கம் மார்க் குடை என்று பல்வேறு பெயர்களில் தயாராகின்றன.
கோவர்த்தனக் குடை
அன்றொருநாள் ஆயர்பாடியில், ஆயர்கள் தன்னை அவமரியாதை செய்துவிட்டதாக எண்ணிச் சீற்றமடைந்த இந்திரன் மேகங்களை ஏவ ஏழு நாட்கள் விடாமல் மழை பொழிய ஆயர்கள் தங்கள் ஆநிரைகளுடன் வந்து, “கண்ணா! நீதான் எங்களைக்காக்க வேண்டும் என்று அபயக்குரல் எழுப்பிய போது, இந்த மழையிலிருந்து இந்த ஆயர்பாடியைக் காக்க
வேண்டுமென்றால் சாதாரணக் குடை போதாது என்று எண்ணி கண்ணன் கோவர்த் தன மலையையே குடையாகப் பிடித்தான் என்று சொல்வார்கள். ஏழு நாட்கள் கோவர்த்தனத்தைக் குடை யாகப் பிடித்ததால் கிரிதாரி என்று பெயரும் பெற்றான். இந்த நிகழ்ச்சியில் பெரிதும் ஈடுபட்ட பெரியாழ்வார் பத்து பாசுரங்களில் இதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் போற்றுகிறார்
கோவர்த்தன பூசை
ஆய்ப்பாடியிலுள்ள ஆயர்கள் தங்களுக்கு வேண்டிய மழை பொழிய இந்திரனுக்குப் படையலிட்டு வழி படு வது வழக்கம். இதனால் இந்திரன் மிகவும் கர்வமடைந்தான். இந்திரன் கர்வத்தை அடக்க எண்ணிய கண்ணன்,” மழைபொழிய இந்திரனுக்குப்பூசை செய்வதைவிட இந்த கோவர்த்தன மலைக் குப் பூசை செய்வோம். ஏனென்றால் இந்தமலைதான் நமக்கு வேண்டிய மழையைத் தருகிறது என்று சொல்ல ஆயர்களும் அப்படியே கோவர்த்தன மலைக்கு வழிபாடு செய்தார்கள்.
மலைபோல் சோற்றைக் குவித்து அதன்மேல் தயிரை ஊற்ற அது மலையிலிருந்து விழும் அருவி போலிருந்தது
மேலும் மலைபோல் சோற்றைக் குவித்து அதன்மேல் நெய்யை ஊற்ற அந்தச் சோறு சேறு போலாயிற்று!
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும்
நெய் அளறும் அடங்கப் [3ம்பத்து,5ம்திருமொழி1] 264
படையலிட்டார்கள்.
ஏழுநாள் பெய்தமழை
இப்படிப் படையலிட்டதைக் கண்ணன் ஒரு தேவதை வடிவில் தானே அப்படையல் முழுவதையும் உண் டதால் அவமானமடைந்த இந்திரன் மேகங்களை ஏவி ஏழு நாட் கள் விடாமல் கல்மாரி பொழிந்தான். இத்துன்பத்தைத் தாங்க முடியாத ஆயர்கள் கண்ணனை வேண்ட, கண்ணன் அநாயாச மாக அடிமண்ணோடு கோவர்த்தன மலையைக் கிளப்பி அம் மலையைக் குடையாகப் பிடித்தான்.
வானவர் கோன்
வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழைவந்து ஏழுநாள் பெய்து மாத்தடுப்ப
மதுசூதன் எடுத்து மறித்த மலை
[3ம்பத்து, 5ம்திருமொழி 2] 265
என்று போற்றுகிறார் பெரியாழ்வார்.
பெருமழை பெய்தவேகம்
மேகங்கள் கடலில் சென்று, கடல் நீரும் வற்றி போகும் என்று சொல்லும்படி, ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி குடத்திலிருந்து நீர் கொட்டுவது
போல் மழை பொழிந்ததை,
கடல்வாய்ச்சென்ற மேகம் கவிந்திறங்கிக்
கதுவாய்ப்பட நீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்பட நின்று மழை பொழிந்தது
[3ம்பத்து,5ம்திருமொழி4] 267
என்கிறார்.
மலைக்காட்சிகள்
இக்காலத்தில் திரைப்படக் காட்சிகளை பெரிதாக்கிக் (zoom)காட்டுவது போல் அம்மலையிலுள்ள காட்சிகளை நமக்குக் காட்டுகிறார் ஆழ்வார்.
குறப் பெண்களின் அக்கறை.
கோவர்த்தன மலையிலுள்ள குறவர்கள் வேட்டையாடச் செல்லும் போது மான் குட்டிகளைக் கண்டால் அவற்றை அம்புபோட்டுக் கொல்லாமல் அவற்றை பிடித்து வந்து தங்கள் வீட்டுப் பெண்களிடம் கொடுக்கிறார்கள்.
அவர்கள் அந்த மான் குட்டிகளுக்குப் பால் கொடுப்பதைப் பார்ப் போமா? பஞ்சை சுருளாகச் சுருட்டி அதன் ஒரு முனையைப் பாலில் தோய்த்து அம்மான் குட்டிகளுக்கு ஊட்டுகிறார்கள்.
வட்டத்தடங்கண் மடமான் கன்றினை வலை
வாய்ப்பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
[3ம்பத்து,5ம்திருமொழி1] 264
கோவர்த்தன மலை. ஒரு குழந்தையை வளர்ப்பதுபோல் மான் குட்டிகளை வளக்கும் குறப் பெண்கள் வசிக்கும் மலை அது!
மலையிலுள்ள யானைகள்
ஒரு பெண் யானை, தான் ஈன்ற குட்டியை ஒரு சிங்கக்குட்டிவந்து கொல்ல முயல, அதைக் கண்ட அப்பெண்யானை தன் குட்டியைத் தன் கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு, அந்தச் சிங்கக் குட்டியை எதிர்த்து விரட்டு கிறது
இழவு தரியாதோர் ஈற்றுப்பிடி இளஞ்சீயம்
தொடர்ந்து முடுகுதலும்
குழவி யிடைக்காலிட்டு எதிர்ந்து பொரும்
கோவர்த்தனம்
[3ம்பத்து,5ம்திருமொழி2] 265
அம்மலையில் யானைகள் கூட்டங்கூட்டமாகத் தண்ணீர் அருந்தச் செல்லும். ஒருயானை நீரில் விளையாடும் போது தன் தந்தத்தை இழந்து விடுகிறது. அந்த யானை மதநீர் பெருகத் தன் தந்தத்தைத் தேடியலைகிறது. வானில் பிறைச்சந்திரன் தோன்றவும் ஒடிந்த தன் தந்தமோ என்று எண்ணித் தன் துதிக்கையை உயரே தூக்கிப் பிடிக்க முயல்கிறது. இப்படிப்பட்ட மலை வளம் உடையது கோவர்த்தனம்!
முனிவரும் புலிகளும்
இம்மலையில் பர்ணசாலைகள் அமைத்து முனிவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தின்ன வரும் புலியிலும் இறைவனைக் காண்பவர்கள்! அதனால் புலிகள் முனிவர்கள் நடுவே போய் நிற்கும் பொழுது அம்முனிவர்கள் அப்புலிகளின் கழுத்தைச் சொறிந்து கொடுப்பார்கள். புலிகளும் சுகமாகத் தூங்கும். இப்படி அம்மலையில் சத்வகுணம் மேலோங் கிக் காணப்படும் .
இலைவேல் குரம்பைத்தவ மாமுனிவர் இருந்தார்
நடுவே சென்று அணார் சொறிய
கொலைவாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும்
கோவர்த்தனமலை
[3ம்பத்து,5ம்திருமொழி8] 271
மந்திகள்
யானை தான் ஈன்ற குட்டியைச் சிங்கக்குட்டி யிடமிருந்து எப்படிப் பாதுகாத்தது என்று பார்த்தோம் பெண் குரங்குகள் தம் குட்டியை எப்பத் தூங்கச் செய்கின்றன? பெண் குரங்குகளும் தாலாட்டுப் பாடுகின்றனவாம்! அவைகள் தம் முன்னோனான அனுமன் இலங்கை சென்று செய்த வீரச்செயல் களையெல்லாம் தாலாட்டாகப்பாடி குட்டிகளைத் தூங்கச் செய்கின்றன.
அடங்கச்சென்று இலங்கையை ஈடழித்த அனுமன்
புகழ்பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்க்கும் மலை.
[3ம்பத்து,5ம்திருமொழி 7] 270
அனுமன் புகழ்பாடித் தம் குட்டன்களை வளர்த்த மந்திகள்(பெண்குரங்குகள்) அக்குட்டன்களுக்கு மரத்
துக்கு மரம் தாவும் வித்தையையும் கற்றுக் கொடுக்கின்றன
முன்பேயிருந்து வழிகாட்ட முசுக்கணங்கள்
முதுகிற் பெய்து குட்டன்களை
கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும்
கோவர்த்தன மலை[3ம்பத்து 5ம்திருமொழி9] 272
கண்ணனுக்கு அணிவித்த
முத்துச்சட்டை.
பல படங்களை உடைய ஆதிசேடன் பூமியைத் தாங்குவது போல கண்ணன் தன்னுடைய ஐந்து விரல்களையும் பரப்பி வைத்து கோவர்த்தன மலையைத் தாங்கிக் கொண்டி ருக்கிறான். அவனுடைய தோள் குடைக்காம்பாகவும் விரல்கள் குடைக்காம்பின் கம்பிகள் போன்றும் காட்சியளிக்கின்றன. மலை யைத்தூக்கிப் பிடித்தபோது மலையிலிருந்து கீழே இறங்கிய அருவிநீர் அழகிய முத்தாரம் போல் காட்சியளிக்கிறது! அந்நீர் கண்ணன் மேல் விழுந்தபோது அவனுக்கு முத்துச்சட்டை அணி வித்தது போலிருந்தது என்கிறார் ஆழ்வார்.
செப்பாடுடைய திருமாலவன் தன் செந்தாமரைக்
கைவிரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக்
கொடுத்துக் கவித்தமலை
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்குமணி
முத்துவடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும்
[3ம்பத்து,5ம்திருமொழி 6] 269
இந்திரஜாலம்
ஏழு நாட்களால விடாமல் கல்மாரி பெய்ய கண்னன் கோவர்த்தமலையைக் குடையாகப் பிடித்தபோது அவன்
மலர் போன்ற கையும் விரல்களும் இயற்கையழகு அழிய வில்லை தளர்ச்சியால் வாடவுமில்லை. நகங்கள் கூடச் சிறிதும் துன்பமடையவில்லை. அது ஒரு இந்திரஜாலம் தான்!
கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்
கோலமும்அழிந்தில, வாடிற்றில
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன்
மலையுமோர் சம்பிரதம்
[3ம்பத்து,5ம்திருமொழி 10] 273
உண்மையிலேயே கண்ணன் கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து ஆயர்பாடியைக் காத்தது இந்திரஜாலம் தான் இந்த ஜாலம் செய்த பெருமானைச் சரணமடைந்து போற்றுவோம்
=======================================================================
- யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?
- புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்
- தொலைத்த கதை
- மீளாத துயரங்கள்
- ஆவி எதை தேடியது ?
- கோவர்த்தமென்னும் கொற்றக் குடை
- கவிதை
- நகுலனிடமிருந்து வந்த கடிதம்
- அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]