தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 13 in the series 25 அக்டோபர் 2020

                             

                        உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப்

                              பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர

                        கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக்

கொற்றக் குடைவந்து கவிப்பவுமே.          [181]

[உவரி=கடல்; பரு=பெரிய; பள்ளி=இடம்; சிவிகை=பல்லக்கு; உம்பர்=வானின்தேவர்; கவரி=விசிறி; மிசை=மேல்;கவிப்ப=மூட]

      கடலிலிருந்து சிந்திய பெரிய நல்ல முத்துகள்கொண்டு இழைக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து வானத்துத் தேவர்கள் எல்லாரும் உடன்சூழ்ந்து வரத்தென்றல் காற்றானது சாமரம் வீச, மேலே வெண்கொற்றக் குடை விரித்து நிழல்தர திருஞானசம்பந்தர் புறப்பட்டார்.

=====================================================================================                  மேகத்தொரு பந்தர் எடுத்து உடுவாம்                                       வெண்முத்தம் ஒழுக்கி மினற்கொடியால்

                        மாகத்து நிரைத்து மழை சிலையால்

                              வழிதோரணம் இட்டனன் வாசவனே.        [182]

[உடு=நட்சத்திரம்; மகம்=ஆகாயம்; மழைச்சிலை=வானவில்; வாசவன்=இந்திரன்]

      திருஞானசம்பந்தர் புறப்பட்டார். இந்திரன் அவர் செல்லும் வழியெல்லாம் மேகத்தால் பந்தலிட்டான். நட்சத்திரங்களாகிய முத்துகளால் மாலை கட்டியது போல மின்னல் கொடிகளை வரிசையாக உண்டாக்கினான். ஆகாயத்தில் வானவில்லால் தோரணம் அமைத்தான்.

=====================================================================================

                         சதுரானனும் சக்ரா யுதனும்

                              சந்த்ரா தவரும் இந்திரா தியரும்

                        மடுரா புரிவாது அறிவாம் எனமேல்

                              வரவந்தனன் வைதிக வாரணமே.         [183]

[வாது=விவாதம்; வைதிகம்=வேதஒழுக்கம்; வாரணம்=யானை]

      நான்கு சிரங்களை உடைய பிரமனும், சக்கரப்படையை உடைய திருமாலும், இந்திரன் முதலான தேவர்களும், மதுரையில் நடக்க இருக்கும் விவாதப் போரைக் காண வானில் வந்தனர். வேத ஒழுக்க நெறி விளங்கத் தோன்றிய திருஞானசம்பந்தர் யானையைப் போலப் பெருமை பொங்க வரலானார்.

=====================================================================================                       

                        ஆலியும் கடிதிற் புலந்து

கலந்து குண்டர் துடைக்கும்அப்

பீலியும் சுறுநாறி ஏறி,

      எறிந்து போன பிரம்புமே.       [184]

[அலி=நீர்த்துளி; கடிதில்=விரைவில்; புலந்தது=காய்ந்தது; பீலி==மயில்தோகை; நாறுதல்=அழிதல்; எறிதல்வீசுதல்; பிரம்பு=குச்சி]

      அலி என்பது விகாரமாகி ஆலி எனவந்தது. சமணர்கள் மந்திரித்துத் தெளித்த நீர்த்துளிகள் விரைவில் காய்ந்து ஆவியாகின. சமணர் குளிர்ச்சிதரத் தடவிய மயில் தோகையும் எரிந்து கரிந்து போனது. அந்த மயில் தோகையைக் கட்டியிருந்த பிரம்பும் வீசி எறிய வேண்டியதாயிற்று.

=====================================================================================                 

பொறை சூழ்வரையில் புலிஏறு எழுதம்

பொன்மேரு வரைப் பெருமான் மகளார்

மறைசூழ் திருவெள்ளி மலைப்பெருமான்

மகனார் அடிவந்து வணங்கியுமே.                [185]

[பொறை=பாறை; புலிஏறு=ஆண்புலி; வரை=மலை; மறை=வேதங்கள்]

      பாறைகள் பல சூழ்ந்துள்ள மலைகளில் எல்லாம் தன் புலிச்சின்னத்தைப் பொறித்த பொன்னைப் போலான மேருமலைக்குரிய சோழமன்னன் திருமகளான மங்கையர்க்கரசியார் வேதங்கள் சூழ்ந்த வெள்ளிமலைப் பெருமானாம் சிவனின் திருமகனான திருஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கினார்.

=====================================================================================                 

”மன்காதலில் உய்வதில் வையமெலாம்

      மலையாள் முலை ஆரமு துண்டவனே

என்காதலன் எம்பெருமான் இவனுக்கு

இதுவேதகவு” என்றனள்; என்றலுமே.            [186]

[மன்=மன்னன்; மலையாள்=பார்வதி; ஆரமுது=தெவிட்டாத; தகவு=தன்மை]

      மன்னன் அன்பு காட்டும் திறத்தாலேதான் இவ்வுலக மக்கள் உயிர் வாழ்கின்றனர் என்பர். அப்படியிருக்க மலையரசன் மகளான பார்வதி ஊட்டிய ஞானப் பாலாகிய அமுதம் உண்டவரே! என் கணவன். எம் அரசர் அவருக்கு இந்நிலை வரலாமா?” என்று கூறி வருந்தினாள்.

=====================================================================================      .                                 

                   மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து

எரிமண்டினன் என்னும் மகீபதிநின்

கோமான் மரபின் சசிமண்டிலம் நேர்

குளிரும்படி காணுதி கோமளமே.      [187]

[மரபு=குலம்; பகல்=சூரியன்; எரி=வெப்பம்; மண்டுதல்=சூழ்தல்; மகீபதி=கணவன்; கோமான்=அரசன்; சசி=சந்திரன்; கோமளம்=தாமரை]

      திருஞானசம்பந்தர் பாண்டிமாதேவியிடம், “உன் கணவன் அவர்தம் மாமனார் குலமுதல்வன் சூரியன் போல வெப்பத்தால் வாடுகிறார். இனிமேல் அவர்தன் குலத்தின் முதல்வன் சந்திரன் போலக் குளர்ச்சி அடைவார். நீ அதைக் காணலாம்” என்றார். சோழன் குலம் சூரியகுலம். பாண்டியர் குலம் சந்திரகுலம்.

=====================================================================================                   என்னக் களிகூரும் இளங்கொடியோடு

எதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார்

தென்னற்கு அருகே ஒருபீடிகை இட்டு

      ’இனிதேறி இருந்தருள் செய்க’ எனவே.             [188]

[களி=மகிழ்ச்சி; பீடிகை=ஆசனம்]

      திருஞானசம்பந்தர் இப்படிச் சொன்னதைக் கேட்டதும், அரசி பாண்டிமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும், மனம் மகிழ்ந்தனர். சம்பந்தரைப் பாண்டிய மன்னன் அருகில் அழைத்துச் சென்றனர். அங்கே ஓர் ஆசனம் இட்டு அதில் அமருமாறு கேட்டுக்கொண்டனர்.

=====================================================================================

                   ஏறிச் செழியற்கு அருகுஇட்ட திரு

                        பள்ளித் தவசின்கண் இருந்தருளச்

                  சீறிச் சமண்மூகர் குலச்சிறையார்

                        செவிவேவன சிற்சில செப்புவரே.     [189]

[செழியர்=பாண்டியர்; பளி=படுக்கை=;தவிசு=இருக்கை; மூகர்=மூடர்;வேவ=வருத்த]

      திருஞானசம்பந்தர் அரசி கேட்டுக்கொண்டபடி பாண்டிய மன்னரின் அருகில் போடப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளினார். இதைக் கண்ணுற்ற சமண மூடர்கள் குலச்சிறையார் மனம் வருந்தும்படிச் சில சொற்கள் கூறலாயினர்.

====================================================================================         

                  வருவான் ஒருசோழிய வைதிகனாம்  

                        வந்தால் இவன்மாளிகை வாயிதனில்

                  வெருவாது புகுந்து தொடப் பெறுமோ

மீளச் செழியன்திரு மேனியையே”     [190]

வெருவாது=அஞ்சாமல்; மீள=திரும்பவும்; பெறுமோ=கூடுமோ]

”சோழநாட்டில் இருந்து ஒரு வேதியன் வருவானாம். வந்து இந்த அரண்மனைக்குள் அச்சமின்றி நுழைவானாம். நுழைந்து மன்னன் திருமேனியைத் தீடுவானாம். இது கூடுமோ”

Series Navigationகோபுரமும் பொம்மைகளும்யாருக்கு சொந்தம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *