இவன் இப்படித்தான்

This entry is part 7 of 10 in the series 6 டிசம்பர் 2020

1

‘என்னங்க பேப்பர் பையன் காசு வாங்கிட்டுப் பொயிட்டான்’

‘எவ்வளவு’

‘எப்போதும்போலதான்’

‘அது எப்புடி. போன மாதம் 10 நாள் பேப்பர் போடலியே. பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேனே. சபாபதியும் சரின்னு சொன்னாரே’

‘மறந்துருப்பாருங்க’

நக்கீரன் உடன் சபாபதிக்கு தொலைபேசினார்.

‘சார்’

‘என்ன சபாபதி நல்லாயிருக்கீங்களா?’

‘இருக்கேன் சார்’

‘போன மாசம் தேதியெல்லாம் சொல்லி 10 நாள் பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேன். நீங்களும் சரின்னீங்க. பில்லு எப்போதும்போல குடுத்திருக்கீங்க’

‘சாரி சார். பையன்ட சொல்ல மறந்துட்டேன். அவன் போட்ருப்பான்’

‘இருக்காது சபாபதி. வீட்ல பேப்பரு இல்லியே’

‘யாராவது எடுத்துட்டு போயிருப்பாங்க சார்’

‘வெளியேருந்து பாத்தா வீட்ல கெடக்குற பேப்பரு தெரியாது. வேறு யாரும் எடுத்திருக்க முடியாது சபாபதி. எத்தினி தடவெ போன் பண்ணிச் சொன்னேன். ஃபோன் பண்ணுனதுக்காச்சும் மரியாதெ வேணாமா?’

‘சாரிங்க சார்’

‘இது மொறெயில்ல சபாபதி. நியாயம்னு ஒன்னு இருக்குல்ல?’

****

2

நக்கீரனும் உமாவும் இரவு சாப்பாட்டுக்காக அந்த உணவகம் சென்றார்கள். இரண்டு இட்லிக்கு 6 வகைச் சட்னி தருகிறார்களாம். சுவையும் அருமையாம். உமா கேள்விப்பட்டிருக்கிறார். நக்கீரனும்தான். இருவரும் அந்தக் கடைக்குச் சென்றார்கள். உண்மைதான். இட்லியோடு நெய்தோசை, ஊத்தப்பம் சாப்பிட்டார்கள். பில் வந்தது. 24.80. பில்லின் இறுதியில் சர்வீஸ் சார்ஜ் என்று 5 சதவீதமும் ஜிஎஸ்டி என்று 7 சதவீதமும் சேர்த்திருந்தார்கள். அந்த வட்டாரத்தில் எத்தனையோ கடைகளில் நக்கீரன் சாப்பிட்டிருக்கிறார். இந்தக் கடையைவிட இன்னும் பெரிய கடைகளில்கூட சாப்பிட்டிருக்கிறார். எந்தக் கடையிலுமே சர்வீஸ் சார்ஜ் வாங்குவதில்லை. பில்லை எடுத்துக் கொண்டு நக்கீரன் நிர்வாகியிடம் சென்றார்.

‘சர்வீஸ் சார்ஜ் சேத்திருக்கீங்க’

‘யெஸ்ஸார்.’

‘சர்வீஸ் சார்ஜ் இருக்குன்னு நீங்க எங்கேயுமே சொல்ல்லியே. இந்த மெனு புக்ல கூட இல்லியே. வெறும் வெலெதானே போட்ருக்கீங்க. ஒங்க கடையெ விட பெரிய கடைகள்ல கூட சர்வீஸ் சார்ஜ் வாங்குறதில்லியே. நீங்க மட்டும் எப்புடி?’

‘நீங்க கேட்ருந்தா சொல்லியிருப்போம் சார்’

‘அப்புடி ஒரு சந்தேகமே இல்லியே. எப்புடி கேக்றது?’

‘சாரி சார். பில் போட்டாச்சு’

‘இது மொறெயில்ல ப்ரதர். நா கன்ஸ்யூமர் கவுன்சில்ல சொல்லவேண்டி வரும்’

‘சொல்லுங்க சார்’

‘நீங்க கன்ஸ்யூமர் கவுன்சிலக்கூட ஒத்துக்க வெக்கலாம். நீங்க அவுங்கள்ட சொல்லிக்கூட இருக்கலாம். ஆனா நியாயம்னு ஒன்னு இருக்குல்ல?

****

3

நக்கீரன் உமா இருக்கும் அந்தப் பகுதியில் அந்தப் பால் மிகவும் பிரபலம். செவ்வாய்க்கிழமை காலைதான் அந்த நிறுவனம் கடைகளுக்கு பால் விநியோகம் செய்யும். திங்கட்கிழமை இரவு பெரும்பாலான கடைகளில் அந்தப் பால் இருக்காது. அந்த அளவுக்கு அந்தப் பால் பிரபலம். கொதிக்கும்போதே அசல் பசும்பால் மணம். நக்கீரன் வீட்டிலும் அந்தப் பால்தான். இந்த வாரம் மறந்துவிட்டார். திங்கட்கிழமை பால் வாங்கச் சென்றார். எல்லாக் கடைகளிலும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு கடையில் மட்டும் இருந்தது. நக்கீரன் வாங்கினார். விலை 6.10 என்றார்கள்.

‘இந்தப் பால் எல்லார் வீட்டிலும் வாங்குகிறார்கள். இதற்கான விலை 5.90 தானே. எப்போதாவது வாங்கும் சாமானென்றால் பரவாயில்லெ. வெலெ வித்தியாசம் இதுல ஒடனே தெரியுமே. நீங்க மட்டும் எப்புடி 20 காசு கூட விக்கிறீங்க?’

‘நம்ம கடைல அதான் சார் வெலெ.’

‘சரிங்க ப்ரதர். நா நடெமொறயச் சொன்னேன். எல்லாரும் அடிக்கடி வாங்குற சாமானெ நீங்க அடுத்த கடைகள்ல அனுசரித்துத்தான் விக்கணும்.’

‘நடெமொறெ எங்களுக்கும் தெரியும் சார்.’

‘தாராளமா விக்கலாம். பாருங்க. யார்டயுமே பால் இல்ல. ஒங்கள்ட மட்டும் இருக்குன்னா அதுக்கு காரணம் இந்தக் கூடுதல் 20 காசுதான். எனக்கு ஒரு வகையில அதான் ஒதவியிருக்கு. இல்லாட்டி எனக்கும் இன்னிக்கு பால் கெடெக்காது. நா எதுக்கு சொல்றேன்னா நியாயம்னு ஒன்னு இருக்குல்ல?’

**** 

4

‘எங்களிடம் வாங்கிய உங்களின் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு புது நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள். சேதாரம், செய்கூலி, ஜிஎஸ்டி இல்லை’

அந்த நகைக் கடை விளம்பரம் உமாவைக் கவர்ந்தது. திருகு காணாமல்போன இரண்டு தோடுகள், சில பழைய மோதிரங்கள் எல்லாம் அந்தக் கடையில் வாங்கியதுதான். கொடுத்துவிட்டு ஒரு கழுத்துச் சங்கிலி வாங்கலாம் என்று ஆசைப்பட்டார் உமா. நக்கீரனும் ஒப்புக் கொண்டார். நகைக்கடைக்குச் சென்றார்கள்

நகைக்கடை. நகைகளைக் கொடுத்தார்கள். அந்தக் கடையில் வாங்கியதுதானா? ஒருவர் சரிபார்த்தார். அங்கு வாங்கியதுதான். பெற்றுக் கொண்டார்கள். உமா விரும்பியபடி கழுத்துச் சங்கிலியும் இருந்தது. வாங்கியாகிவிட்டது. 2 கிராம் கூட இருந்தது. அதற்கான காசு மட்டும்தான் கொடுக்க வேண்டும். எல்லாம் சரிபார்க்கப்பட்டு பில் போடப்பட்டது. எல்லாவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டு கணினியில் அச்சடித்த ஒரு பில் நக்கீரன் கையில் கொடுக்கப்பட்டது. அவர்கள் சொன்னபடி செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்று எதுவுமே சேர்க்கப்படவில்லை. ஆனால் கொடுத்த பழைய நகைக்கு கிராமுக்கு 5 வெள்ளி குறைத்துப் போட்டிருக்கிறார்கள். நக்கீரன் விடுவாரா? நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொன்னவரின் பெயரை அல்லவா வைத்திருக்கிறார். முதலாளியிடம் சென்றார்.

‘ஒங்க கடைல வாங்குன நகைதானே. ஏன் 5 வெள்ளி கொறச்சு எடுக்குறீங்க?’

‘உருக்குனா கொஞ்சம் கொறெயும் சார் அதான்.’

‘வாங்குற நகைக்கு 5 வெள்ளி கொறெச்சுக்குவோம்னு நீங்க பேப்பர்ல சொல்ல்லியே?’

‘கொறெக்க மாட்டோம்னும் சொல்ல்லியே?’

‘சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. ஒங்கள மாரி பெரிய கடக்காரங்க சொல்றது ஒன்னும் செய்றது ஒன்னுமா இருக்கக் கூடாது.’

‘சாரி சார். நாங்க மார்க்கெட் வெலெக்கி எடுப்போம்னு எங்கேயுமே சொல்ல்ல’

‘அப்ப செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்சி எல்லாத்தெயும் இந்த 5 வெள்ளில சரிக்கட்றீங்க. இல்லே?’

‘சார். நீங்க தேவெயில்லாமெ பேசுறீங்க. வாங்குறதுக்கு முன்னாடி கேட்ருந்தா சொல்லியிருப்போம். பில் போட்டாச்சு. ஒன்னும் செய்ய முடியாது சார்.’

‘தாராளமா. நானும் வாங்க மாட்டேன்னு சொல்லல. வாங்கிக்கிறேன். இந்த 5 வெள்ளி பெரிய காசு இல்லதான். ஆனாலும் நியாயம்னு ஒன்னு இருக்குல்ல?’

****

5

‘கார் கழுவுற பையன் வந்துருக்கான்.’ என்றார் உமா.

மாதத்துக்கு நான்கு தடவை கழுவ வேண்டும். 30 வெள்ளி. அந்த மாதம் ஒரு தடவை கழுவவில்லை. நக்கீரன் அந்தப் பையனிடம் கேட்டார்.

‘எவ்வளவு தம்பீ.’

’30 வெள்ளி சார்.’

‘இந்த மாசம் ஒரு தடவெ வரல தம்பீ’

‘சாரிங்க சார். மறந்துட்டேன். அப்ப 20 வெள்ளி குடுங்க சார். உண்மெயிலேயே மறந்துட்டேன் சார்.’

‘பரவாயில்ல தம்பீ. அப்புடியே பாத்தாலும் 22.50 வரும் தம்பி.’

‘மறந்தது தப்புதானெ சார். 20 வெள்ளி போதும் சார்’

நக்கீரன் சந்தித்த மனிதர்களைவிட இந்தப் பையன் வித்தியாசமாக இருக்கிறார்.

‘பேரென்ன தம்பீ?’

‘மகாதேவன்’

‘வயசு?’

‘20’

‘படிக்கலியா?’

‘பிஎஸ்எல்இ படிச்சேன் சார். வசதியில்லெ. நின்னுட்டேன்’

‘அப்பா என்ன பண்றார்?’

‘ஜெயில்ல இருக்காரு சார். ஏதோ ட்ரக் கேஸாம். எனக்கு ரெண்டு வயசாகும்போது போனவரு. அடுத்த வருஷம் வர்றாராம்.’

‘நீ ஜெயிலுக்குப் போயி அப்பாவெ பாத்துருக்கியா?’

‘அம்மா அப்பாவெ டைவர்ஸ் பண்ணிட்டாங்க. நா அம்மாவோடும் பாட்டியோடும் இருந்தேன். பாக்க ஆசெதான். அவுங்கள்டெ எப்புடிசார் கேக்றது. போன மாசம்தான் தெரிஞ்சுச்சு. அப்பாவோட அக்காவும் அம்மாவும் ஈசூன் ரிங் ரோட்ல இருக்காங்கன்னு. எப்புடியோ கண்டுபுடிச்சுட்டேன் சார். அவுங்க அப்பாவெ மூனு மாசத்துக்கு ஒருதடவெ போய் பாப்பாங்களாம். எங்க அம்மாவுக்குத் தெரியாமெ அவுங்களோட போயி அப்பாவெ பாத்தேன் சார். நா 40 வயசுல எப்புடி இருப்பேனோ அப்புடியே இருந்தாரு சார்’

‘அப்பாவோட பேசுனியா?’

‘அத்தெதான் நா யாருன்னு அப்பாக்கிட்ட சொன்னாங்க. கம்பியெப் புடுச்சிக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதாரு சார். ரொம்ப நேரம் அழுதாரு சார். நானும் அழுதேன். அத்தெயும் அழுதாங்க. அவரப் பாத்தா ரொம்ப பாவமா இருந்துச்சு சார். அவரெ நா ரொம்ப வெறுத்தேன். இப்ப எனக்கு அவரு வேணும்போல இருந்துச்சு சார். ‘நா ஒனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன். ஒன்ன பெரிய ஆளா ஆக்காமெ நா சாகமாட்டேன்’ னு அப்பா சொன்னாரு சார்.’

நக்கீரன் கண்ணீரை மறைக்க ரொம்ப சிரமப்பட்டார். அத்தனையும் கேட்ட உமா யாருக்கும் தெரியாமல் பொங்கி பொங்கி அழுதார். நக்கீரன் உள்ளே போய் ஒரு காகித உரையில் காசை வைத்து மகாதேவனிடம் கொடுத்தார்.

‘நன்றிங்க சார்’

மகாதேவன் அந்த உரையைப் பிரித்துப் பார்த்தான். அதில் 30 வெள்ளியும் தனியாக 500 வெள்ளியும் இருந்த்து. நியாயம்னு ஒன்னு இருக்குல்ல.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationகூக்குரலுக்காய்…எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    எதிலும் ஒரு நியாயம் வேணுமில்ல- யூசுப் ராவுத்தரின் கதை நெகிழ்வாக இருந்தது.எதற்காக இறக்கப்படனும், எதற்கெல்லாம் கண்டிப்பாக இருக்கணுமுன்னு எடுத்துரைக்கும் நெகிழ்வான கதை.வாழ்த்துகள் யூசுப்.

    1. Avatar
      Yousuf says:

      நன்றி ஜனநேசன். தங்களின
      கருத்து என்னை எழுதுவதற்கு மேலும் ஊக்குவிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *