அப்படி இருக்கக் கூடாது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 8 in the series 9 மே 2021

இரவி

அந்த ஓட்டுவீடு செல்வராஜ் வீட்டிற்கு எதிர்ச்சாரியில் இருந்தது.

இந்த முறை மாயவரம் சென்றிருந்தபோது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த செல்வராஜைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல கதிர் அவர் வீட்டிற்குப் போனான்.  பட்டமங்கல ஆராயத் தெருவின் நடுவில் கோவிலுக்கு அருகில் மாடியில் என்று சொல்லியிருந்தார். ’இல்லை, மொபைலில் கூப்பிடுங்கள். வெளியில் வந்து நிற்கிறேன்.’

 ஆனால், தேவை ஏற்படவில்லை. கோவிலைப் பார்த்தாயிற்று. வலது பக்க சந்தில் திரும்பும் போதுதான் இடது பக்கமிருந்த அந்த வீடு கண்ணில் பட்டது. பச்சை மரங்களுக்கு நடுவில் பட்டமரம் போல்.

கதிரின் நண்பன் கிருஷ்ணன் அந்த வீட்டில்தான் குடியிருந்தான். பி.காம் மூன்று ஆண்டுகளும் இந்த வீட்டிலிருந்துதான். இதற்கு முன்னாடி செங்கழுநீர் பிள்ளையார் கோவில் அருகில் குடியிருந்த நாட்களிலிருந்தே கிருஷ்ணன் பழக்கம். இந்த வீட்டின் படிக்கட்டில், வராந்தாவில் உட்கார்ந்து நேரம்போவது தெரியாமல் பேசியிருக்கிறார்கள். அவன் தம்பியும் சேர்ந்துகொள்வான்.   சில நாட்கள் அவன் அம்மாவும் நிலைக்கு  கீழிருக்கும் அரைவட்டப் படியில் உட்கார்ந்தவாறே அவர்களுடன் பேச்சில் கலந்து கொள்வாள்.

சிதம்பரத்திடம் மீண்டும் பேசவேண்டும்.  அவரிடம் ஏற்கனவே மூன்று நான்கு முறை  பேசியிருந்தான்.  ஒரு மாதத்திற்கு முன்பும்.  ‘போக முடியல தோழர். எப்படியும் இன்றோ நாளையோ போய்ப் பார்க்கிறேன்’ என்று சொன்னதாக நினைவு.  

நல்லவேளை செல்வராஜ்,  தெருவிற்கே வந்துவிட்டார்.  பேசிக்கொண்டே அவர் வீடிருந்த சந்திற்குள் இருவரும் நுழைந்தனர்.

சில விஷயங்களை எண்ணிப்பார்த்தால், இப்படியும் நடக்குமா என்று வியப்பாகத்தான் இருக்கிறது. கிருஷ்ணன் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அப்படித்தான் இருக்கின்றன. விடைகளற்ற புதிர்களாய்.

நல்லூர் பஜார் ஸ்கூலில் படிக்கும்போது, கிருஷ்ணனும் அங்கு படித்தான்.  பால் பாட்மிண்டன் விளையாட்டும், டெனிகாய்ட்டும் நன்றாக விளையாடுவான்.  அவன் அப்பாவிற்கு மின்வாரியத்தில் வேலை.  கை சுத்தம். பேச்சும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான்.  அவருக்குக் கோட்டையூருக்கு மாற்றலாகியதும் குடும்பமும் அந்த ஊருக்குச் சென்றுவிட்டது.

அங்கு போனபிறகு சந்திப்பு ஆண்டிற்கு ஒருமுறை என்பது போலாகிவிட்டது. பணிப் பயிற்சியிலிருக்கும் போது ஒருமுறை, வேலையில் சேர்ந்தபிறகு இரண்டு மூன்று முறைகள். அப்புறம் வேலை, சங்கப் பணி என்று மும்முரமாகி விட்டதால்  போக்குவரத்து குறைந்துவிட்டது.  

திடீரென்று ஒரு நாள் கிருஷ்ணனிடமிருந்து தபால் கார்டில் ‘அப்பா இறந்துவிட்டார்’ என்ற செய்தி வந்தது.  அடக்கம் செய்து ஒருவாரம் ஆகிவிட்டதாம்.  இரண்டு மூன்று நாட்கள் கழித்து கோட்டையூர் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தான். இறப்பு இயற்கையானதுதான். ஆனால், ஓய்வுபெற்ற சில ஆண்டுகளுக்குள் என்பது அந்தக் குடும்பத்திற்கு ஓர் அதிர்ச்சிதான். கிருஷ்ணனுக்கு ஒரு தம்பியும் இரண்டு மூத்த சகோதரிகளும். என்ன காரணமோ, அந்தப் பெண்களுக்குத் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது.

’என்னடா ஒரு தந்தி கொடுத்திருக்கக் கூடாதா,  வந்திருக்க மாட்டேனா’

’இருக்கட்டும்டா, உனக்கு எவ்வளவோ வேலையிருக்கும். இங்க எல்லோரும் உதவி செஞ்சாங்க. பக்கத்து வீட்டுக்காரங்களும் நல்ல உதவி.  மெட்ராசிலிருந்து மாமா மட்டும் வந்திருந்தார்’

பக்கத்து வீட்டுக்காரர் இறந்ததைப் பற்றி கூறுவதுபோல் அவன் பேச்சு இருந்தது.

’என்னடா இப்படி சாதாரணமா சொல்ற. எங்க அம்மா உங்களப் பத்தி பேசாத நாளே இல்ல தெரியுமா’

கோடை விடுமுறை நாட்களில் கிருஷ்ணனும், அவன் தம்பியும், சிவக்குமாரும் பாட்மிண்டன் விளையாட அவ்வப்போது  கதிரின் ஊருக்கு வருவார்கள். வீட்டுக்கு அருகிலிருந்த வயலை சுத்தம் செய்து  கதிர் ‘கோர்ட்’ ஒன்றைத் தயார் செய்திருந்தான்.  அதனால் அம்மாவுக்கு அவர்களை நன்கு தெரியும்.

’எப்படிடா?’ என்றான் கதிர்.

ஒன்னும் பிரச்சனை இல்லடா. தம்பியும் இப்போது எல்/ஐ.சி ஏஜெண்ட் ஆயிட்டான். ஊருணி போற ரோட்டுல, கயிறு ஃபாக்டரி ஒன்றும் நடத்துறோம்.’

துக்கம் விசாரிக்கச் சென்றவன் மேலும் ஒரு நாள் கோட்டையூரில் தங்கி, இவன் துறையில் வேலைபார்க்கும் ஒன்றிரண்டு நண்பர்களையும் பார்த்துவிட்டுத்தான் ஊருக்குத் திரும்பினான்.  அவர்களை தனக்குத் தெரியும் என்று கிருஷ்ணன் அப்போது சொன்னான். அவன் தம்பிக்கு இன்னும் நெருக்கமாத் தெரியுமாம்.

எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. எப்போதாவது இவன் கூப்பிடும்போது, ‘ரொம்ப நல்லா இருக்கோம்டா. அம்மா நல்லா இருக்காங்க. எல்.ஐ.சி. ஏஜெண்ட் கமிஷனே ஏராளம் வருது. ஊருணி போற பாதையில் ஒரு கயிறு ஃபாக்டரி வேற நடத்துறோம்’ என்பான்.  தம்பியிடம் பேசினாலும் இப்படித்தான். இதைப்போல் ஒற்றுமையா இருக்கிற அண்ணன் தம்பியைப் பார்க்கமுடியாது என்பதுபோல் பேசுவார்கள்.  கதிருக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

 ‘சரிடா அக்காவுக்கு ஏதாவது ஏற்பாடு? வயசாகுதேடா.’

‘எங்கடா… எங்காளுங்க இங்க ஒருவரும் கிடையாது. எல்லாம் திருக்கோவிலூர் பக்கம்தான்.  மெட்ராஸ்ல மாமாட்ட சொல்லியிருக்கோம். பாக்குறேன்னு சொல்லியிருக்காங்க’

பிரபலமான ஒரு சாதியின் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட ஓர் உப சாதி, அவர்களுடையது.

’நான் ஏதாவது பார்க்கலாமாடா’ என்று கதிர் கேட்டால், ’இல்லடா, பாத்துக்கிட்டிருக்கோம்’  என்பான் கிருஷ்ணன்.

பெரிய அக்கா ஜெயா, அம்மா மாதிரி, சிவப்பு, உடல் வாகு எல்லாம். சின்ன அக்கா லட்சுமி, அவங்க அப்பா மாதிரி. கொஞ்சம் நிறம் கம்மி. கிருஷ்ணனும், அவன் தம்பிக்கும் அதே உடல் வாகுதான். பேசும் பாணி எல்லாம் அப்பா போல. மாயவரத்து வீட்டில் இருக்கும்போதே பெண்களின் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களை அம்மா வாங்க ஆரம்பித்திருந்தார். நான்கு பேர் உட்கார்ந்தால் தலை தெரியாது. அந்த அளவு பெரிய மரப்பெட்டி நிறைய பாத்திரங்கள், கட்டில் என்று வாங்கி வைத்திருந்தார்கள். அவ்வப்போது இந்த  நகை வாங்கியிருக்கோம், இதோ இந்த சங்கிலி, என்று கதிரிடம் காட்டுவார்கள். இப்போது நிச்சயம் அவர்களுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். ஏன், இன்னும் திருமணம் அமையவில்லை.  வசதியிருந்தும் அழகிருந்தும் சமயங்களில் பெண்களுக்குத் திருமணம் தள்ளிப்போவதன் காரணம் தான் தெரியவில்லை.

            இப்போது, ஆண்டிற்கு ஒருமுறை இருமுறை பேசுவதாக குறைந்து போனது, தொடர்பு. எப்போதாவது கோட்டையூர் போனால்தான் சந்திப்பு; துறை நண்பர்கள் இல்ல நிகழ்வுகளுக்குப் போனால் சந்திப்பது என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.  இப்படி ஏழெட்டு ஆண்டுகள்.  ஒருநாள் கிருஷ்ணன் நினைவு. அவன் அம்மா நினைவு. பேசலாம் என்று அவனைக் கூப்பிட்டான்.   செல்போன் காலம்.

’என்னடா, எப்படி இருக்கே. அக்கா அம்மா எப்படி இருக்காங்க? கல்யாணம் ஏற்பாடு ஏதாவது…?’

‘கதிரு, நானே கூப்பிடணும்னு இருந்தேன். நீயே கூப்டுட்ட. லட்சுமி போய்ட்டாடா’

’என்னடா சொல்ற?’ லட்சுமி அக்காவின் முகம் மின்னல்போல் தோன்றி மறைந்தது. கிருஷ்ணனின்  இரண்டாவது அக்கா. பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்தவள்.  எப்போதுமே அலட்டலோ, அதட்டலோ இல்லாத அமைதியான, தன்மையான பேச்சு. ’எப்படிடா, உடம்பு சரியில்லாம இருந்தாங்கலா?’

’டாக்டர்ட்ட அழச்சுட்டு போனோம். மூளையில ஏதோ பிரச்சனைன்னு சொன்னார். காப்பாத்த முடியலே, செத்துட்டா’

’மூளைக்காய்ச்சலா? என்ன வியாதிடா?’

‘சரியா சொல்லல. போய்ட்டா. என்ன பண்றது. அம்மாதான் ரொம்ப ஒடஞ்சி போயிட்டாங்க’

 இருக்காதா?  கதிருக்குத் தாளவில்லை. எப்படி இவனால் இவ்வளவு இயல்பாகப் பேசமுடிகிறது?  தகவல் சொல்வதுபோலத்தான் அவன் பேச்சும் இருந்தது. கதிருக்கு மனத்தில் எழும் சந்தேகத்தை நீக்க முடியவில்லை. ’எப்படி என்ன வியாதின்னே தெரியாம இருக்கும்? ஏதோ மறைப்பதுபோல் தெரிகிறதே.’

 ’என்னடா இது. சொல்லக்கூடாதா. வந்திருப்பேனே’ என்றான் கதிர்.

’இல்லடா, சீக்கிரம் எடுத்துடலாம்னு சொன்னாங்க. மெட்ராஸ் மாமாவுக்கும் தகவல்தான் சொன்னோம். அவரும் வர முடியல.  காரியமும் முடிஞ்சுடுச்சு’

’அடப்பாவிகளா’ என்று கதிர் மனத்திற்குள் நினைத்துக்கொண்டான். என்ன காரியம் செய்திருக்க போகிறார்கள். அய்யரைக் கூப்பிட்டுப் பதினாறாம் நாள் சடங்கு செய்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான். நண்பன் என்று கூட பார்க்காமல் இப்படி ஒட்டாமல் பேசுகிறானே. கதிரைத் தவிர்த்து அவனுக்கு வேறு நெருங்கிய நண்பர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றிரண்டு ஒட்டாத உறவுக்காரர்களே. ஒரு மாமா தான் அடிக்கடி இவன்கள் பேச்சில் வருவார்.

கதிர் சென்னைக்கு மாற்றலாகி வந்த பிறகு கோட்டையூருக்கு அடிக்கடி செல்லமுடியவில்லை.  எப்போதாவது ஒருமுறை கிருஷ்ணனிடம் பேசுவதற்குக் கதிர் முயற்சிப்பான். பெரும்பாலும் பதில் இருக்காது. இரண்டு மூன்று நாள் தொடர்ந்து கூப்பிட்டால் தான் போனை எடுப்பான்; அல்லது அவன் திருப்பிக் கூப்பிடுவான்.

’ஒரு பிரச்சனையும் இல்லடா. நல்லா வசதியா இருக்கோம். மெட்ராஸ்ல கோர்ட் கேஸ் ஒன்னு இருக்கு. வரணும்.  அம்மாவிற்குப் பணம் வரும்’ என்று அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி பேசுவார்கள்.

கொஞ்ச நாள் கழித்து கதிர்  கிருஷ்ணனைக் கூப்பிட்டபோது,   ‘மெட்ராஸ் வந்திருந்தோம்’ என்றான் கிருஷ்ணனின் தம்பி.  ’கோர்ட் கேசுக்காக வந்திருந்தோம்’

பேசிக்கொண்டிருந்தவன், ’அம்மாவையும் அழைச்சுட்டு வந்திருந்தோம். சேலையூர்ல  மாமா வீட்டில் இரண்டு நாள் இருந்தோம்’ என்றான்.

  ’சேலையூருக்கா? ‘ஏண்டா, நான் அங்கதானடா இருக்கேன். ஒரு போன் பண்ணியிருக்கலாமே’ என்று ஆதங்கப்பட்டான் கதிர்.  ’அப்படியா. ஞாபகம் வரலடா. இரண்டு நாள் தான் இருந்தோம். அம்மா ஊருக்குப் போகலாம்னு சொன்னாங்க. வந்துட்டோம்’ என்றான் அவன் தம்பி.

இதற்குப் பிறகு ஓரிரு ஆண்டுகள் கழித்து ஒருமுறை கோட்டையூர்  சென்றபோது அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தான்.  ஸ்டோர் மாதிரியான காலனியில்தான் குடியிருந்தார்கள்.  ’இரண்டு பேரும் சொல்றதைப் பார்த்தால், வசதியான ஒரு வீட்டையே வாங்கியிருக்கலாமே;  சரி, காசை சேர்த்து வைக்கிறார்கள் போலிருக்கு.  புத்திசாலித்தனமா இருந்தா சரிதான்’ என்று கதிர் நினைத்துக் கொண்டான்.

வீட்டில் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான்.  ஹாலில் கதிருக்கு முதுகைக் காட்டியவாறு, எதிர்ச்  சுவரைப் பார்த்தவாறு அம்மா தரையில் உட்கார்ந்திருந்தார்.  அம்மாவிற்கு அருகே கிருஷ்ணனின் அக்கா சுந்தரி.  ஒரு குண்டு பல்புதான் எரிந்து கொண்டிருந்தது. ட்யூப் லைட்கூட இல்லை. போதிய வெளிச்சமற்றிருந்த, நோய்ச் சூழல் நிறைந்த அந்த ஹால் மனதிற்குள்  வெறுமையை நிரப்பியது.  எழுந்து நின்றால், நிற்க முடியாத, அல்லது திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு உடல் உபாதை உள்ளவர்கள் போல் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். இன்றைக்கு நினைத்துப் பார்க்கும்போது, தீர்க்க முடியாத ஏதோ ஒன்றை மனத்திற்குள் போட்டு வைத்துக் கொண்டு, இவனிடம் இதைச் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று அவர்கள் இருந்தார்களோ என்று தோன்றுகிறது.

அவனை விசாரிக்கும்போதும், அல்லது இவனிடம் பேசும்போதும் அம்மாவின் குரலில் எப்போதும் இருக்கும் வாஞ்சை இல்லை. தலையைச் சற்றே திருப்பிய இயந்திரத்தனமான பேச்சு. அவன் புறப்படும்வரை அவன் பக்கம், அம்மா திரும்பி உட்காரவேவே இல்லை. சுந்தரி அக்காவும் அப்படித்தான். எழுந்திருந்து கூட வழியனுப்பவில்லை, இவனைப் பார்த்ததில் முகத்தில்   கொஞ்சம் மலர்ச்சி அவ்வளவே.  வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா?

’மொழிபெயர்ப்பெல்லாம் செய்யறேன் அக்கா ‘

’அப்படியா, எங்க இப்பல்லாம் படிக்கறதே இல்லை, கதிர்’ பேச்சை தொடர விருப்பமில்லாத, மேலே அறிந்து கொள்ளும் விழைவே இல்லாத பதில்.

ஆச்சரியமாக இருந்தது. மாயவரத்திலிருக்கும்போது வாரத்தில் இரண்டு நாட்கள் கதிரும் கிருஷ்ணனும்  நூலகத்திற்குச் செல்வார்கள். கூறைநாட்டில்   முக்கிய சாலையில் செம்மங்குளத்திற்கு எதிரில் நாட்டு மருந்துக்கடையின் மாடியில் நூலகம் இருந்தது.  மாலை நேரத்தில் சாலையைப் பார்த்தவாறு இருக்கும் மரத்தள பால்கனியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால், நூலகர் எழுப்பினால்த்தான் உண்டு. நூலகர் முருகையன் இவர்களுக்கு மிகவும் பழக்கமானவர், கதிர் ஊர்க்காரர். எதிர்வீடு.  புத்தகங்களை தாராளமாக எடுத்துப்போக அனுமதிக்கிறவர். ’படிக்கிறதுக்குத் தானே’ என்பார். கோமதி அக்கா வீட்டிலிருந்தும் புத்தகங்கள் வரும்.  அம்மா, குமுதம் ஆனந்தவிகடன். அப்பா, செய்தித்தாள். மற்ற நால்வரும் தொடர்ந்து புத்தகங்கள் படிக்கிறவர்கள். விவாதம் செய்கிறவர்கள்

கதிர் புறப்படும்போதும், அம்மாவோ அக்காவோ எழுந்திருக்கவே இல்லை. உட்கார்ந்தே இருந்தார்கள்.  ’சாப்பிடு’ என்று கூட சொல்லாத, அவன் எதிர்பார்த்திராத உபசரிப்பு. அழையா வீட்டிற்கு வந்த விருந்தாளியாக உணர்ந்தான் கதிர்.

கிருஷ்ணன் தம்பிதான் ஏதோ ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று டிபன் வாங்கிக்கொடுத்தான். அவனிடம், ‘என்னமோ போல் இருக்குடா. வீட்டை மாற்றிப் பாருங்களேன்’ என்றான் கதிர். ‘ஏண்ணே, இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல். அப்புறம் பாத்துக்கலாம்.’

 

ஜெயா அக்கா இறந்த செய்தியும் இப்படித்தான் ஒரு நாள் கதிர்  தற்செயலாக மொபைலில் பேசிய போது கிருஷ்ணன் சொன்னான். கதிர் கோட்டையூருக்கு போய்வந்து மூன்று ஆண்டுகள் கழிந்திருக்கும். எல்லோருக்கும் எழும் சந்தேகம் உடனே கதிருக்கும் எழுந்தது. தற்கொலையா என்று நெருங்கிய நண்பனிடம் வாய்விட்டுக் கேட்கமுடியவில்லை. இருக்காது. ஆனால், அக்காவின் மன இறுக்கம் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.  ’எப்படிடா?’ என்றுதான் கேட்க முடிந்தது.

முந்தைய முறைகள்போல் ஏதோ காரணம் சொன்னான்.  பருத் தழும்புகள் நிறைந்த  அக்கா முகம் தான்  எவ்வளவு அழகானது. அந்தக் குடும்பத்தோடு பழக ஆரம்பித்த நாட்களில், இரண்டு அக்காக்களும் இவனிடம் பேசவே மாட்டார்கள். வீட்டிற்குள் தான் இருப்பார்கள். அரிதாக ஒன்றிரண்டு சொற்கள். ஆராயத்தெரு வீட்டிற்கு வந்தபிறகு, அவர்கள் வீட்டிற்குள் சென்று அமர்ந்து பேசும் அளவிற்கு  நட்பும் பழக்கமும் வளர்ந்திருந்தது. அக்கா வெடிச் சிரிப்பும்  உற்சாகமுமாக பேசுவாள். சின்ன அக்கா போலில்லை. சென்றமுறை பார்த்தபோதே முகத்தில் அவை மறைந்து போயிருந்தன. ஏக்கத்தோடு காத்திருந்த அம்மாவிற்கு மணக்கோலத்தை காட்டாமலேயே அந்தப் பெண்கள் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அவர்களுக்காக எத்தனை ஆண்டுகள் சேமிப்பு!

இடையில் கோட்டையூரில் பாண்டி வீட்டுக் கல்யாணத்திற்கும், சீனாதானா வீட்டுக் கல்யாணத்திற்கும் போனபோது கிருஷ்ணன் வீட்டிற்குக் கதிரால் போகமுடியவில்லை. உண்மையில் அவனுக்குப் போகப்பிடிக்கவில்லை என்பது சரியாக இருக்கும். கதிரின் மனைவியும் வந்திருந்தாள். நண்பர்களுடன் தங்கியிருந்ததால் மறுசிந்தனை எழவில்லை. ஆனால், பல தடவை மொபைலில் அவர்களைக் கூப்பிட்டான். பதில் பேசினால் எங்காவது சந்திக்கலாம். அல்லது தங்கியிருக்கும் லாட்ஜுக்கு வரச் சொல்லலாம். ஆனால், அண்ணன் தம்பி இரண்டுபேருமே அழைப்பை எடுக்கவே  இல்லை.

திடீரென்று ஒருநாள் மொபைல் அழைப்புக்குக்  கிருஷ்ணன் பதில் பேசிவிட்டான்.  வீடும் இடமும்  மாறினால் அவர்களுக்கு மனதளவில் உற்சாகம் கிடைக்குமோ என்று நினைத்து சென்னைக்கு  வீடு மாற்றச் சொன்னான் கதிர்.

’இல்லடா, இங்கேயே பல வருஷமா இருந்துட்டோம். பல பேரைத் தெரியும். ஒன்னும் பிரச்சனையில்லை’

‘சரிடா நீதான் கல்யாணம் பண்ணிக்கல. வயசாச்சுங்குற. தம்பிக்குப்  பண்ணலாமே’

’அவன பண்ணிக்கத்தான் சொல்றேன். அவன் வேணாங்கிறான். என்ன செய்யறது?’

’நான் பேசிப்பார்க்கட்டுமா’  என்று சொல்லி அவன் தம்பியிடம் கதிர் பேசியபோது, ’அதெல்லாம் வேணாம்ணே, இப்படியே  இருந்துரலாம்’ என்றான் அவன்

’அண்ணனுக்கும் உனக்கும் துணையா இருக்குமேடா. எவ்வளவு நாள் இப்படியே இருப்பீங்க. அம்மாவுக்கும் ரொம்ப முடியலயே.’

’அம்மாவை சமையல் செய்ய விடுறதில்ல. நான் பாத்துக்குறேன். காலையிலேயே எல்லாத்தையும் முடிச்சிட்டுத்தான் வெளியிலே போவோம். இல்ல ஹோட்டல்ல ஏதாவது வாங்கிக்குவோம்’

இப்படியே இரண்டு மூன்று வருடங்கள் போனபிறகு எதிர்பாராத ஒரு நாளில் வந்த மொபைல்  அழைப்பு, அம்மாவின் இறப்புச் செய்தியை சொன்னது. கதிருக்கு இரண்டு மூன்று நாட்கள் வேலையே ஓடவில்லை.  ஏன் இந்தக் குடும்பம், இப்படி ஆகவேண்டும்.  ஏதாவது சாபமா? ஏதாவது செய்த தவறுக்குத் தண்டனை அனுபவிக்கிறார்களா இந்த இருவரும்.  மேற்கொண்டு ஏதும் விசாரிக்கவில்லை கதிர். என்ன பதில் வரும் என்று தெரியும்.   ஆனால், அவர்கள் சொல்வதுபோல், வசதியிருந்தும் நல்ல வாழ்க்கை இவர்களுக்கு ஏன் அமையாமல் போய்விட்டது?  அவர்கள் வீட்டிற்குக் கடைசியாக போனபோது, அந்த ஹாலில் அவர்கள் அமர்ந்திருந்த காட்சி, திரைப்படத்தில் காட்டப்படும்  வாழ்ந்து கெட்ட குடும்பமொன்றின் மிகச் சோகமான காட்சியாக மீண்டும் கண்முன் தோன்றியது.  இப்போது மொபைல் தொடர்புகூட இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது ஒருமுறை திடீரென்று ஞாபகம் வந்து கூப்பிட்டால் இரண்டு பேர் மொபைல்களும் ’ஸ்விட்ச்டு ஆப்.’    மாதத்திற்கு ஒருமுறையாவது கூப்பிட்டுப் பார்த்து நொந்துபோய்விட்டான் கதிர்.  பேச முயற்சிப்பதையே விட்டுவிட்டான்.

அப்போதுதான் நண்பர் சீனாதானாவைப் பார்த்துவிட்டு வரச் சொன்னால் என்ன என்ற யோசனை வந்தது.  சிதம்பரம் ஒரு நல்ல நண்பர். துறை நட்பு, குடும்ப நட்பு அளவிற்கு வளர்ந்திருந்தது.  இவன் பேரில் அவருக்கு நல்ல மதிப்பு. உடன் பதிலாக ’போய் பாத்துவிட்டு வருகிறேன் தலைவரே’ என்றார்.  அவர் போய்ப் பார்த்துவிட்டு வந்தபின்  கிருஷ்ணன் ஒருநாள் பேசினான். எப்போதும்போல், ‘எல்லாம் நல்லாத்தாண்டா போயிட்டிருக்கு. தஞ்சாவூர்ல ஒரு மீட்டிங். அப்புறம் கோயம்புத்தூரில் மூன்று நாள் கேம்ப். பேசணும்னு நெனைப்பேன்.’

’சரிடா,  உன் தம்பி, அவனுக்கென்னடா ஆச்சு’

’தப்பா எடுத்துக்காதடா. அவனும் ஒருவாரம் பிஸி.  இனிமே பேசறேன்’

ஒட்டும் நட்புமற்ற சம்பிரதாயப் பேச்சாக அது இருந்தது.  அவ்வளவுதான் இனிமேல் இவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம்.  அவர்களாக பேசினால் பேசட்டும் என்று சும்மா இருந்தான் கதிர்.,

சிதம்பரத்துடன் பொதுவாக ஏதாவது  பேசிக் கொண்டிருக்கும்போது கதிர் அவரிடம் விசாரிப்பான். ‘அந்தப் பசங்களை  எப்போதாவது பாத்தீங்களா?’

இரண்டு தடவை பேசும்போது, ’இல்லை தலைவா.  பார்த்தா உங்களுக்கு போன் பன்றேன்’ என்று சொன்னவர், இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் கூப்பிட்டார்.  ‘தலைவரே, சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டிங்களே…’ என்று தயங்கியவாறே ஆரம்பித்தார்.

’என்னங்க எங்கிட்ட என்ன தயக்கம். சொல்லுங்க’ என்றான் கதிர். எதைப்பத்திச் சொல்ல வருகிறார். அவர் குடும்ப விஷயமா? என்று யோசித்தான்.

‘ஒருநாள் உங்க நண்பர் கடைக்கு வந்திருந்தார்.’ கோட்டையூரில் ஒரு பகுதிக்கு சிதம்பரம்தான் கேபிள் டிவி கனெக்‌ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 ’சொல்லுங்க’

‘அவசரமா வேணும்னு ஒரு ஐநூறு ரூபா பணம் கேட்டாரு. இரண்டு நாள்ல திருப்பித் தந்துவிடுறேன் என்று சொன்னார்’.

’கொடுத்தீங்கதானே? என்னங்க, ஷாக்காயிருக்கு. கடன் வாங்கற அளவுக்கு அவனுங்க நிலைமை மோசமாயிடுச்சா என்ன?’

’தெரியல தலைவரே. கொடுத்தேன். உங்களுக்குத் தெரிஞ்சவர் என்பதால்தான். இல்லாட்டி இப்படி கேட்கறவங்களுக்கு நான் கொடுக்க மாட்டேன்.’

கதிரால் ஜீரணிக்கவே முடியவில்லை. எப்படி கிருஷ்ணன் இவரைத் தேடிப்போனான். தனக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்று தெரிந்தும் தயங்காமல் போய்க் கேட்டிருக்கிறான் என்றால்…! அவர் கடை அவனுக்குத் தெரியுமா?   கிருஷ்ணன் வீட்டிற்குப் போய் சிதம்பரம்  விசாரித்தபோது   தெரிந்து கொண்டிருப்பானோ?

என்ன நடந்திருக்கும்? நெஜமாகவே அந்த நேரத்தில் கையில் காசில்லாமல் ஏதோ அவசரத்திற்குக் கேட்டிருப்பானோ? எப்போது கேட்டாலும் இரண்டு பேருக்கும் நல்ல வருமானம், எல்.ஐ.சி. கமிஷன், கயிறு தொழிற்சாலை, அப்படி இப்படி என்று சொல்வார்களே? ஏதாவது பிரச்சனை என்றால் போனில்  அவன் பேசியிருக்கலாமே.

உடனே கிருஷ்ணனை போனில் அழைத்தான் கதிர். எப்போதும்போல் இருவர் எண்களுமே கிடைக்கவே இல்லை. சில மாதங்கள் கழித்து, போய் பார்த்துவிட்டு வரச்சொல்லி, சிதம்பரத்திடம் கேட்கவே கஷ்டமாக இருந்தாலும், தப்பா எடுத்துக் கொள்ள மாட்டார் என்று அவரிடம் வேண்டினான்.  ’கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது தலைவரே, போய்ப்பார்க்கமுடியலே’ என்று சொல்வார் என்று நினைத்த கதிர்,  அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.

‘தலைவரே, உங்க பிரண்டு மறுபடியும் வந்தார்.  இன்னொரு இருநூறு ரூபா கொடுங்க அந்தப் பணத்தோட சேர்த்துத் தந்துடுறேன். ஒரு இடத்திலேர்ந்து வரணும்.  வரலன்னாரு.’

’அப்படியா! கொடுத்தீங்களா?’

’இல்லைங்க, சிலபேருக்கு இப்படி ஒரு பழக்கம்.   எனக்கு இப்படி ஆட்களைத் தெரியும்’ கிருஷ்ணனின் குணத்தைத் தாழ்த்தி அவர் பேசியது கதிருக்கு அவமானமாக இருந்தது.

’அவன் அப்படி ஆள் இல்லையே சீனாதானா. இப்படிக் கேட்கணும்னு தேவையே இல்லைங்க. ஆச்சரியமா இருக்கு!’

’எனக்கு அனுபவம் இருக்கு தலைவரே. இப்படியே பல பேர்ட்ட கேட்பாங்க. ஒருத்தங்க இல்லைன்னா இன்னொருத்தரு’

தன்னால்தானே அவருக்கு இந்த இழப்பு. வருத்தப்பட்டான் கதிர்.  ‘தப்பா நெனச்சுக்காதிங்க. இன்னொருமுறை அவனை பார்த்துப் பேசுங்களேன். அவன் போனே எடுக்க மாட்டேங்குறான். அவன் தம்பியும்.’

’சரிங்க பாக்குறேன்.’

கதிருக்கு வேதனையாக இருந்தது.  ஒருவேளை, உண்மையிலேயே அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றால்,  ஏதாவது உதவலாமே என்று நினைத்தான்.  இது  நடந்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அவரிடம் பேசினான் கதிர். போய் வந்ததாகச் சொன்னார். ‘பிரயோசனம் ஏதுமில்லை தலைவரே. வீட்டிலே யாருமே இல்லை. பக்கத்து விட்டிலே பதில் சொல்ல மாட்டேங்குறாங்க, பயப்படறாப் போலத் தெரியுது. அவங்களுக்கு எந்த விவரமும் தெரியாதாம். காலையிலே இரண்டுபேரும் வெளியில போனா எப்ப வருவாங்கன்னே தெரியாதாம்’

’ரொம்ப நன்றி சீனாதானா. இதுக்காக போகவேண்டாம். வேற எப்பவாவது குட்டக்குளம் பக்கம் போனா, பாருங்க’

அதற்கப்புறம் இரண்டு மூன்று தடவைகள் பேசியிருப்பார்கள். சிதம்பரத்திடமிருந்து சாதகமான பதில் ஏதும் இல்லை.

இரண்டு சகோதரிகளின் சந்தேகத்திற்குரிய இறப்பு, அம்மா இறந்துபோனது, கிருஷ்ணன் பணத்திற்குச் சிரமப்படுவது அனைத்தும் கதிரின் மனத்தில் அவ்வப்போது கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தன.  அவர்கள் சாவு இயற்கையானதுதானா? ஏன் அதை முறையாக அவர்கள் வெளிப்படுத்தவில்லை.  இப்போது கடன் வாங்கும் நிலைக்கு, அதுவும் ஏமாற்றி வாங்கும் நிலைக்கு அவர்கள் ஏன் போகவேண்டும்?  அவர்களுக்கு வரும்  எல்.ஐ.சி. கமிஷனே போதுமே வாழ்க்கை நடத்த.  ஏறத்தாழ இருபது ஆண்டு ஃபீல்ட் ஒர்க் வீணா போயிருக்குமா. ஒருதரம் கிருஷ்ணன் தன்னை ஃபீல்டு ஆபிஸர் என்று சொல்லிக்கொண்டானே.  அல்லது இவையெல்லாம் பொய்யா? ஒரு வேளை அப்பா ஓய்வூதியத்தில்தான் இதுவரை குடும்பம் ஓடியதா?  மின்வாரியத்தில் ஓய்வூதியம் உண்டா? திரும்ப திரும்ப எழுந்த கேள்விகள்… ஒரு முடிவை நோக்கித்தான் பயணித்தன. இல்லை அப்படி இருக்காது… அப்படி இருக்காது. இருக்கக்கூடாது.

மாயவரத்தில் வேலையை முடித்துக் கொண்டு சென்னை வந்த கதிர் உடனடியாகக் கூப்பிட்டது மறுபடியும் சிதம்பரத்தைத் தான்.

 ‘தலைவரே, நாளைக்கு எப்படியாவது போய்ட்டு வரேன்.’

ஆனால், அவரிடமிருந்து இரண்டு நாட்களுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அவரே கூப்பிட்டார்.  போனில் பேசவே பயமாக இருந்தது. இந்தத் தடவை என்ன ’திடுக்’ தகவல் சொல்லப்போகிறாரோ?

‘தலைவரே, நேற்றுப் போனேன். எப்போதும் போல அவங்க இரண்டு பேரும் வீட்டிலே இல்லை.’

‘பக்கத்துலே விசாரிச்சிங்களா?’

’ஆமாம். ஆனா அவுங்க ஆரம்பத்திலே பதில் பேசவே யோசிச்சாங்க’

கதிருக்கு ஏதேதோ தோன்றியது.  தன் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை சொல்லப் போகிறாரோ? அவர்களது விநோதமான நடவடிக்கைகளுக்குக் காரணம் சொல்லப்போகிறாரா?  ஓ…அப்படி இருக்கக் கூடாது.  

’பயப்படாதீங்க. சென்னையிலேருந்து அவங்க குடும்ப நண்பர்தான் பாத்துட்டு வரச்சொன்னார்ன்னு சொன்ன பிறகுதான் பேசினாங்க.  அவங்கள காலை வேளையிலத்தான் பாக்க முடியுமாம். மதியம் ஒரு மணி வாக்கிலே வந்துட்டு திரும்பிப்போனா இரவு எப்ப வருவாங்கன்னே தெரியாதாம்.’

’அப்படியா?’

’ஆமாம். அப்புறம் வேறு ஒரு தகவல் சொன்னாங்க, கொஞ்ச நாள் முன்ன யாரோ பொம்பள கைக்குழந்தையோட வந்து வீட்டு வாசல்ல நின்னு அழுது சத்தம் போட்டுட்டுப் போச்சாம்’.

’பொம்பளயா? கைக்குழந்தையோடா?’ கதிருக்கு உடல் நரம்புகள் சூடாயின. ஏதோ மோசமான விஷயம் சொல்லப்போகிறார்…

’ஆமாம். அது மட்டுமில்லை.  ஆறு மாதத்திற்கு முன்னால், ஒரு நாள் காலையில உடம்பு சரியில்லை என்று அண்ணங்காரரைத் தம்பி ஆட்டோவிலே கூட்டிக்கிட்டுப் போனாராம்.’

’அய்யோ…என்ன உடம்புக்காம்?’

 கதிருக்கு இதயம் படபடத்தது. மனம் எதையோ நினைத்தது. தொடர்ச்சியான புதிரான மரணங்கள் நினவுக்கு வந்தன. அப்படி இருக்கக் கூடாது… இருக்கக் கூடாது…இல்லை அப்படித்தானா?

 ‘அவங்களுக்குத் தெரியல… ஆனா இன்னைய வரைக்கும் அவர் வீட்டிற்கு வரலயாம். என்ன நடந்ததுன்னும் தெரியலையாம். தம்பி மட்டும்தான் கண்ணில் படுகிறாராம்.’

thendralaham@gmail.com

Series Navigationஇரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்உயிர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *