ஜோதிர்லதா கிரிஜா
(டிசம்பர் 1977 புன்னகை – யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)
“பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு பெரிசாக் கத்தினாங்க. நான் ஓட்றதை நிப்பாட்டிக்கிட்டுத் திரும்பிப்பாத்து, “சரிம்மா,”ன்னு சொல்லிட்டு மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். அம்மாவுடைய பஸ் வர்றது தூரத்துல தெரிஞ்சிச்சு. நான் நின்னு திரும்பிப் பாத்தேன். அம்மா கையைக் காட்டினதும் பஸ் நின்னிச்சு. அம்மா என்னைப் பாத்துக் கையை ஆட்டிப்போட்டு அதுல ஏறிக்கிட்டாங்க. அம்மாவுக்கு உக்கார இடம் கிடைச்சிச்சா இல்லையான்னு அவ்வளவு தொலைவிலேர்ந்து கண்டுபிடிக்க முடியல்லே. ஏன்னா, பஸ்ல அவ்ளோ கும்பல். நேத்துக் கூட அம்மா அப்பாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. ‘ஆல்மோஸ்ட் தெனமும் நின்னுக்கிட்டேதான் ஆபீசுக்குப் போறேன், உக்கார இடமே கிடைக்க மாட்டேங்குது’ன்னு. நேத்து யாரோ ஒரு சின்னப் பையன் – பதினாறு வயசு கூட இருக்காதாம் அவனுக்கு – அம்மா மேல ஆக்வேடா இடிச்சுட்டானாம். அப்பா கிட்ட சொன்னாங்க. ஆக்வேட்னா என்னன்னு கேட்டேன். உனக்கு ஒண்ணுமில்லே. நீ போய்ப்படின்னுட்டாங்க. ஒருவேளை அது எதுனாச்சும் கெட்ட வார்த்தையோ என்னவோ. அப்புறம் அப்பா, கொளத்தையெப் பக்கத்துல வெச்சுக்கிட்டு இதெல்லாம் என்ன பேச்சுன்னு அம்மாவைக் கோவிச்சுக்கிட்டாரு. இன்னிக்கு மிஸ் கிட்ட ஆக்வேட்னா என்ன அர்த்தம் மிஸ்னு ஞாபகமாக் கேக்கணும். ஆனா அது கெட்ட வார்த்தையா இருந்திச்சுன்னா மிஸ் கூடத்தான் மீனிங் சொல்லமாட்டாங்க. … இந்தப் பெரியவங்க பேசிக்கிட்றது சில நேரங்கள்ள ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது.
நேத்துகூட அந்த பாட்டி – அவங்க தலையில வெள்ளைத் துணி போட்டிருப்பாங்க – ஒரு மாதிரியாத் தமிழ் பேசுவாங்க, சில சமயம் ஒண்ணுமே வெளங்காது. ‘ஏண்டியம்மா! குளிக்காம இருக்கியா என்ன?’ன்னு அம்மாவைக் கேட்டாங்க. அம்மா சிரிச்சுட்டுப் பேசாமெ இருந்தாங்க. ‘எத்தனை மாசமாக் குளிக்கல்லே?’ன்னு கேட்டாங்க. அம்மா, ‘நாலு மாசமாச்சு குளிச்சு’ன்னாங்க. ‘அம்மா! நீதான் டெய்லி குளிக்கிறியே?’ன்னு கேட்டேன். அந்தப் பாட்டியும் அம்மாவும் பெரிசாச் சிரிச்சுப் போட்டாங்க. ‘போடா… பெரியவங்க பேசுற எடத்துல உனக்கென்னடா சோலி? போய்ப் படி, போ’ ன்னு அம்மா திட்டினாங்க. அந்தப் பாட்டிக்கு எம்பது வயசு ஆகப் போகுதாம். முப்பது வயசுல தாத்தா செத்துட்டாங்களாம். அப்ப மொட்டை யடிச்சாங்களாம். ஒரு நாள் அம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. பக்கத்து வீட்டில கூட ஒரு பெரிய தாத்தா இருந்தாங்க. அவங்களும் இந்தப் பாட்டி மாதிரிதான், எங்காத்துல அப்படி இப்படின்னு பேசுவாரு, ஒரு மாதிரியா. அவருக்குக் கூடத்தான் பாட்டி போன வருசம் செத்துப் போயிருச்சு. ஆனா அந்தத் தாத்தாவுக்கு மட்டும் முடியை எடுக்கவே இல்லே. நீளமா வளத்து முடிஞ்சுக்கிட்டிருக்காரு. சிலதெல்லாம் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.
நான் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளாற நொளையறச்சே எட்மிஸ்ட்ரெஸ்ஸோட கார் என்னைத் தாண்டிக்கிட்டுப் போச்சு. ‘ஓரமாப் போடா கண்ணா’ன்னு சொல்லிக்கிட்டே கார்லேர்ந்து பாத்து சிரிச்சாங்க. அவங்களுக்குப் பசங்களே இல்லியாம். அன்னிக்கு எங்க மிஸ் இன்னொரு மிஸ் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. வேணாம், வேணாம்கிறவங்களுக்குப் பசங்களை டஜன் கணக்குல சாமி குடுக்குறாராம். வேணும் வேணும்கிறவங்களுக்கு சாமி பசங்களே குடுக்க மாட்டாராம். அதுக்கு ஒரு மிஸ் சிரிச்சாங்க. ‘வேணும்கிறவங்களுக்கு சாமி குடுக்கிறதில்லைங்கிறதை வேணா ஒத்துக்கறேன். ஆனா வேணாம்கிறவங்களுக்குப் பிறக்கிறதுக்கு சாமிதான் காரணம்கிறதை நான் ஒப்புக்க மாட்டேன். அதுக்குக் காரணம் சாமி இல்லே. ஆசாமி…’ன்னு சொல்லிட்டுப் பெரிசாச் சிரிச்சாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல்லே. இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்றதுக்கு சட்னு பெரியவனாயிடணும்னு ரொம்ப ஆசையா இருக்குது …
இன்னிக்கு சாயங்காலம் அம்மா ஸ்கூலுக்கு வந்து என்னை வீட்டுக்கு இட்டுக்கிட்டுப் போறதுக்குக் கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லியிருக்காங்க. அவங்க ஆபீஸ்ல என்னமோ இன்ஸ்பெக்ஷனாம். காலையிலே அப்பா கிட்ட கூட சொன்னாங்க. ‘நீங்க இன்னிக்குக் கொஞ்சம் கந்தப்பனை இட்டாந்துருங்களேன்’னு. ஆனா அப்பா முடியாதுன்னுட்டாரு. எங்கேயோ வெளியிலெ போகணுமாம். ஒரு நாளைக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போனா என்னவாம்? இந்த அப்பா எப்பவுமே இப்பிடித்தான். அம்மாதான் எல்லாத்துக்கும். மளையானாலும் வெயிலானாலும், அம்மாதான் இட்டாந்து விடுவாங்க. இட்டுக்கிட்டும் போவாங்க. அம்மா என்ன வூட்டிலயேவா குந்திக்கிட்டு இருக்குறாங்க? அம்மாவும்தான் அப்பா மாதிரி ஆபீசுக்குப் போறாங்க. டைப் அடிக்கிறாங்க. சம்பாதிக்கிறாங்க. அம்மாவுக்குத்தான் வூட்டுலெ வேலை ரொம்ப இருக்கும். அப்பா ஏதாச்சும் வெளி வேலை செய்வாரு. அம்புட்டுத்தான். எதிர் வூட்டுல மணியோட அப்பா நெறைய வேலை செய்வாரு. எங்க வூட்டுல என்னாடான்னா, சொவத்துல ஆணி அடிக்கிறதுன்னாக்கூட அம்மாதான் செய்வாங்க. என்னிக்காச்சும் ஒரு நாளு அப்பா ஆணி அடிக்க வந்தாருன்னா, ரொம்பத்தான் அலட்டிக்குவாரு. அப்பாவுக்கு ஏறி நின்னுக்கிட அம்மா ஸ்டூல் கொண்டுட்டு வந்து போடணும். ஆணிப்பெட்டி, சுத்தியல் எல்லாம் கொண்டுட்டு வந்து தயாரா வெக்கணும். பக்கத்துல நின்னுக்கிட்டு ஸ்டுல் ஆடாம பிடிச்சுக்கிட்டே நிக்கணும். ஆனா, அம்மா ஆணி அடிக்கிறச்சே தானேதான் எல்லாத்தையும் செய்துக்குவாங்க. ஸ்டூலை யாரும் பிடிக்காமயே நிப்பாங்க. ‘நீங்க ஆணி அடிக்கிறதை விட நானே அடிச்சுப்பேன். உங்களுக்கு இத்தினி உபசாரமும் செய்யிற நேரத்துல பாதிச் சமையலை முடிச்சுப்போடுவேன்’னு சொல்லிச் சிரிப்பாங்க. அம்மா சிரிக்கிறப்ப ரொம்ப அளகா இருக்கும். எனக்கு அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்பாவையும் பிடிக்கும். ஆனா அம்மாவை அதிகமாப் பிடிக்கும்.
அம்மா ஆபீஸ் முடிஞ்சு என்னைக் கூட்டிக்கிட்டுப் போறதுக்கு எங்க ஸ்கூலுக்கு வர்ற வரைக்கும் நான் எங்க ஸ்கூல் என்ட்ரன்ஸ் படியிலே உக்காந்துக்கிட்டிருப்பேன். நான் படிக்கிறது இங்லீஷ் மீடியம் ஸ்கூல். அதனால ஸ்கூல் ஃபீஸ் ரொம்பக் குடுக்கணும். அதனால வேன் ஃபீஸ் கட்ட எங்க பேரன்ட்ஸால முடியல்லே. காலையிலே என்னைக் கொண்டுட்டு வந்து விட்டுப்போட்டு அம்மா பஸ் பிடிச்சு ஆபீசுக்குப் போவாங்க. சாயங்காலமும் அம்மாவேதான் வருவாங்க. அப்பா ஒரு நாளைக்குக் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டாரு. … யூனிஃபாம் அயன் பண்ண மாட்டாரு. எனக்குக் குளிப்பாட்ட மாட்டாரு. பல் வெளக்கிவிட மாட்டாரு. அம்மா காயலாப் படுத்து முடியாம கெடந்தா மட்டுந்தான் இதையெல்லாம் செய்வாரு. அன்னிக்குக் கூடப் பெரிசா அலட்டிக்குவாரு. இதனாலேயெல்லாந்தான் அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னேன் ….
எங்கம்மா ஒசரமா இருப்பாங்க. கறுப்பா இருப்பாங்க. ஆனா அவங்க கண்ணு ரெண்டும் குண்டு குண்டாப் பளிச்னு இருக்கும். அவங்க சிரிக்கிறப்ப கன்னத்துல குளி் விளும். அப்ப அம்மா கே.ஆர். விஜயா மாதிரி இருப்பாங்க. நேத்து அம்மாவும் அப்பாவும் எதுக்கோ சண்டை போட்டுக்கிட்டாங்க. எதுக்குன்னு சரியாத் தெரியல்லே. ஆனா அது எங்க வூட்டுக்குப் புதுசாப் பொறக்கப்போற பாப்பாவைப் பத்தின்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சிச்சு. இன்னொரு பாப்பா வர்றதுல அம்மாவுக்கு இஸ்டமில்லேன்னும் புரிஞ்சிச்சு. ஆனா, அப்பா ஏதோ சொன்னதுக்கு, ‘நம்ம தப்புக்கு நம்ம கொளந்தையெ நாமே சாகடிக்கிறதா என்ன?’ ன்னு கத்தினாங்க அம்மா. ‘மிருகம், மிருகம்னு மட்டமாப் பேசுறோமே, அது மிருகங்களுக்குப் புரிஞ்சா நம்மைக் கொதறிப் போட்டுடும். மிருகங்களே மனுசங்களைக் காட்டிலும் தேவலை. தன்னை ஒசந்தவன்னு சொல்லிக்கிற மனுசன்தான் உண்மையில மட்டமானவன். மிருகங்கள் வேணும்னே அபார்ஷன் பண்ணிக்கிறதில்லே’ அப்படின்னு அம்மா கத்தினாங்க. அழுதாங்க வேற. அபார்ஷன்னா என்னன்னு தெரியல்லே. ஆனா அப்பா மேல ஏதோ தப்பு இருந்திச்சுன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சிச்சு. கடைசியில, ‘நான் அபார்ஷன் பண்ணிக்க மாட்டேன். பெறத்தான் போறே’ன்னு சொன்னாங்க. அப்பா வாயே திறக்கல்லே.
இன்னும் கொஞ்ச நாள் களிச்சு எங்க வூட்டுக்கு இன்னொரு பாப்பா வந்துடுமாம். தம்பிப் பாப்பா வேணுமா, இல்லே தங்கச்சிப் பாப்பா வேணுமான்னு அம்மா நேத்து கேட்டாங்க. எனக்குத் தங்கச்சிப் பாப்பாதான் வேணும்னு சொன்னேன். அதுக்கு அம்மா, ‘பாக்கலாம். கடவுள் என்ன கொடுப்பாரோ என்னவோ’ அப்படின்னாங்க. பாப்பா வேணாம்னு அம்மா நினைச்சாக் கடவுள் கிட்ட வேணாம்னு சொல்லிப்போட்டு, வாங்கிக்கிடாம இருந்துடலாமே இந்த அம்மா? சில சமயம் இந்தப் பெரியவங்க சமாசாரம் தலையும் வெளங்கல்லே, வாலும் வெளங்கல்லே…
எப்படியோ. எனக்குத் தங்கச்சிப் பாப்பாதான் வேணும். ஏன்னா, அது அண்ணன் கிட்ட பிரியமா இருக்கும். சண்டை போடாது. எதிர் வூட்டுல இருக்கிறவங்க ரெண்டு பேரும் ஆம்பளைப் பசங்க. எப்பப் பாத்தாலும் சண்டைதான். அடுத்தாப்போல, பக்கத்து வூட்டுல இருக்குற அண்ணனும் தங்கையும் சண்டையே போட்டுக்கிட மாட்டாங்க. அதனால எங்க வூட்டுலயும் கேர்ள் பாப்பாதான் வேணும். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் கூட கேர்ள் பாப்பாதான் வேணுமாம். அன்னிக்குப் பேசிக்கிட்டாங்க. …
ப்ரேயர் முடிஞ்சு நான் க்ளாஸ்ல போய் உக்காந்ததும், பக்கத்து வூட்டு வரதன் தனக்கு பர்த்டேன்னு சொல்லி எனக்குக் காட்பரீஸ் குடுத்தான். எனக்கும் பர்த்டே வரும். ஏப்ரல் மாசம் வரும். போன வருசம் அம்மா எனக்கு சாக்லெட் கலர்ல ஷர்ட்டும், ப்ரவுன் கலர்ல ஷார்ட்சும் வாங்கியாந்தாங்க. அப்பா ரொம்பக் காஸ்ட்லின்னு சொல்லி அம்மாவைக் கோவிச்சுக்கிட்டாங்க. அம்மா பதிலே சொல்லல்லே. …
பக்கத்து வூட்டு வரதன் எப்பவும் கார்லதான் வருவான். கார்லதான் போவான். அவன் பணக்கார வூட்டுப் பையனாம். எங்கப்பா இன்னும் ஸ்கூட்டர்கூட வாங்கல்லே. அது கூட ஆபீஸ்ல லோன் போட்டுத்தான் வாங்கணுமாம். அத வாங்கிட்டாருன்னா, காலையில என்னை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிடுவாரு. ஈவ்னிங்ல மட்டும் அம்மா வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. …
“டேய்! தேவாங்கு! எங்கே பராக்குப் பார்த்துண்டிருக்கே?”ன்னு டீச்சர் கத்தினதும்தான் அவங்க என்னைக் கூப்பிட்டு ஏதோ கேள்வி கேட்டிருக்கணும்கிறது எனக்குப் புரிஞ்சிச்சு. அவங்க எப்பவும் என்னைத் தேவாங்குன்னுதான் கூப்பிடுவாங்க. தேவாங்குன்னா என்னன்னு தெரியல்லே. நான் எளுந்திரிச்சு நின்னேன். மறுபடியும் கேள்விய ரிபீட் பண்ணினாங்க. சரியாப் பதில் சொல்லிப்போட்டு உக்காந்தேன். டீச்சருக்கு சந்தோசம். ‘ஏண்டா தேவாங்கு! படிப்பில கெட்டிக்காரனா இருந்தா மட்டும் போறாதுடா. இப்பிடித் தேவாங்கு மாதிரி உடம்பை வெச்சிண்டிருக்கியே – காத்தடிச்சா விழுந்துட்றாப்ல! உங்கம்மா கிட்டச் சொல்லி நல்ல டானிக்கா வாங்கிண்டு வரச் சொல்லி சாப்பிடு…’ன்னாங்க. தேவாங்குன்னா ஒல்லியா இருக்குறதுன்னு அப்பப் புரிஞ்சிச்சு. ‘அம்மா எனக்கு நிறைய டானிக், மாத்திரை யெல்லாம் தந்துக்கிட்டுத்தான் இருக்குறாங்க, மிஸ்’னு பதில் சொன்னேன். ‘பின்ன ஏண்டா இப்பிடி இருக்கே?’ன்னு சொல்லிட்டுப் பாடத்தை நடத்த ஆரம்பிச்சாங்க.
அந்த மிஸ் கூட எங்கம்மா மாதிரியே ரொம்ப நல்லவங்க. க்ளாஸ்ல யாருக்காச்சும் ஒடம்பு சரியில்லேன்னா சொந்த மகனைப் பாத்துக்குற மாதிரி பாத்துப்பாங்க. கண் கலங்கி வருத்தப்படுவாங்க. ஆனா, அவங்களுக்குப் பசங்களே இல்லியாம். எங்க எட்மிஸ்ட்ரெஸ்ஸுக்கும் பசங்க இல்லே. கடவுள் எல்லாருக்கும் ஏன் பசங்க குடுக்கிறதில்லே? அம்மா வாணாம்கிறச்சே எதுக்குக் குடுக்கறாரு?
ஸ்கூல்ல அன்னிக்கி நிறைய வெளையாட முடிஞ்சிச்சு. ஏன்னா ரெண்டு மிஸ்ஸுங்க வரல்லே. கேம்ஸ் வேற இருந்திச்சு.
நாலரை மணிக்கு பெல் அடிச்சாங்க. வேன்ல போற பசங்க வேன்ல ஏறிக்கிட்டுப் போயிட்டாங்க. கார் வெச்சிருக்கிறவங்க வந்து சில பசங்களைக் கார்ல கூட்டிக்கிட்டுப் போனாங்க. எல்லாரும் போனதுக்குப் பெறகு நான் மட்டுந்தான் பாக்கி இருந்தேன். எட்மிஸ்ட்ரெஸ் உங்கம்மா வரல்லியான்னு கேட்டாங்க. இன்னிக்குக் கொஞ்சம் லேட்டா வருவாங்கன்னு சொன்னேன். வாட்ச்மேன் கிட்ட என்னைப் பாத்துக்கச் சொல்லிப்போட்டு அவங்களும் வூட்டுக்குப் போயிட்டாங்க. கொஞ்ச நேரங் களிச்சு, தம்பி, நீ இங்கிட்டே உக்காந்திரு. நான் போய் வகுப்பு அறையை யெல்லாம் பூட்டிக்கிட்டு வாரேன்னு ஏங்கிட்ட சொல்லிப்போட்டு வாட்ச்மேன் போயிட்டாரு. நான் மட்டும் வாசப்படியிலேயே உக்காந்துக்கிட்டு அம்மா வராங்களான்னு பாத்துக்கிட்டிருந்தேன். வாட்ச்மேன் போய் ரெண்டே நிமிசத்துக்கெல்லாம் அம்மா வந்துட்டாங்க. நான் படியிலேர்ந்து கொரல் குடுத்து வாட்ச்மேன் கிட்ட அம்மா வந்துட்டாங்கன்னு சொல்லிட்டு அவங்களோட கெளம்பினேன். அம்மா மொகம் ஒரு மாதிரி இருந்திச்சு. அளுத மாதிரி வருத்தமா இருந்திச்சு. ‘ஏம்மா நீ எப்பிடியோ இருக்குறே?’ன்னு கேட்டேன். பதிலே சொல்லல்லே. மறுபடியும் கேட்டேன். பதிலே சொல்லல்லே.
எப்பவும் வழியெல்லாம் பேசிக்கிட்டே வர்ற அம்மா ஏன் சைலன்ட்டா இருந்தாங்கன்னு தெரியல்லே. ஒண்ணுமே பேசல்லியே! என்ன கோவம்? ஆபீஸ்ல ஏதாச்சும் நடந்திருக்குமா? ஆனா ஏங்கிட்ட அப்படி இருக்கமாட்டாங்களே! … நான் கொஞ்சம் பேசினதுக்குப் பெறகும் அம்மா ஒண்ணுமே சொல்லாம நடந்ததால நானும் பேசுறதை நிறுத்திப்போட்டு சைனன்ட்டா நடந்தேன். …
கடைசியிலே எங்க வூடு இருக்குற தெருமுக்குகு வந்ததும், நீ போய்க்கன்னு எனக்கு ஜாடை காட்டிட்டு அவங்க விடுவிடுன்னு பக்கத்து வீதிக்குள்ள நொளைஞ்சாங்க. எனக்கு ஒண்ணும் வெளங்கல்லே. எங்க வூடு தெருமுனைக்கு ரொம்பவும் பக்கத்துல இருந்ததால நான் ஒண்ணுமே சொல்லாம நடந்துட்டேன். ஒருவேளை அம்மாவுக்கு வாந்தி வருதோன்னு நெனச்சேன். ஆனா வூட்டுக்குள்ள கூட வராம ஏன் பக்கத்துத் தெருவுக்குள்ள நொளையணும்னு வெளங்கல்லே.
ரெண்டு ஸ்டெப் நடந்ததும்தான் எங்க வூட்டு வாசல்ல ஒரே கூட்டமா இருந்ததைப் பாத்தேன். நெறையப் பேரு இருந்தாங்க. நான் எங்க வூட்டு வாசல் கிட்ட் வந்ததும், அங்கே ரேளியில நின்னுக்கிட்டிருந்த பாட்டியம்மா, ‘அட, துக்கிரிப்பிள்ளே’ ன்னு சொல்லிப்போட்டு என்னைச் சேத்துப் பிடிச்சுக்கிட்டு ஓன்னு அளுதாங்க. அங்கிட்டு ஒரு ஓரமா அப்பாவும் இருந்தாரு. மொகத்தை மூடிக்கிட்டுச் சின்னப் புள்ள மாதிரி அளுதுக்கிட்டிருந்தாரு. ‘இதோ, உன் பிள்ளை வந்துட்டாண்டி, கடங்காரி’ ன்னு
சொல்லிட்டு அந்தப் பாட்டி அங்க ஓரமா வச்சிருந்த பெரிய மூட்டயைப் பாத்து அளுதங்க.
அம்மா ஆபீசை விட்டுக் கெளம்பினதும் ரோட் க்ராசிங்க்ல லாரி ஏறிச் செத்துப் போய்ட்டாங்களாம். அவங்க பேசிக்கிட்டதுலேர்ந்து புரிஞ்சிச்சு. அப்பா யார் கிட்டயோ சிபாரிசு பிடிச்சு பாடியை எடுத்துக்கிட்டு வந்துட்டாராம். … அஞ்சு மணிக்கே செத்துப் போய்ட்ட அம்மா எப்படி எங்க ஸ்கூலுக்கு வந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்தாங்க? ‘அம்மாவை இப்பத்தானே நான் பாத்தேன்? பக்கத்துத் தெருவால நொளைஞ்சு போனாங்களே? என்னை அம்மாதானே தெரு முக்கு வரைக்கும் கூட்டிக்கிட்டு வந்தாங்க?’ன்னு நான் கத்தினப்போ, அப்பா கொகத்தை மூடியிருந்த துணியை வெலக்கிட்டு என்னைப் பாத்து முளிச்சாரு. பாட்டி கூட, ‘இது ஏதுடி அதிசயமா யிருக்கு!’ன்னாங்க.
‘உங்கம்மா செத்துப் போயிட்ட அமக்களத்துல உன்னை ஸ்கூல்லேர்ந்து கூட்டிண்டு வரணுமேங்குற ஞாபகமே இப்பத்தாண்டா எங்களுக்கு வந்துது. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முந்தித்தான் எங்காத்து ரங்கனை அனுப்பி வெச்சேன்’ அப்படின்னு பாட்டி சொன்னாங்க. செத்துப் போய்ட்ட அம்மா என்னை எப்படி அளைச்சுக்கிட்டு வந்தாங்கன்னு பெரியவங்களுக்கே புரியல்லே. எனக்கு எப்படிப் புரியுமாம்?
…….
- கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்
- நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும்.
- ஆவணப்பட விமர்சனப் போட்டி
- சில நேரங்களில் சில சில மனிதர்கள்
- எனக்குப் புரியவில்லை
- கடிதம் கிழிந்தது
- குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை
- குடிகாரன்
- பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை
- இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்
- மௌனம் ஒரு காவல் தேவதை
- ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்
- பரிதாப மானுடன்
- கவிதைகள்
- கனத்த பாறை
- அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !
- இருளும் ஒளியும்
- சோமநாத் ஆலயம் – குஜராத்
- இறுதிப் படியிலிருந்து கர்ணன்
- குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)