கன்னித்தீவு 

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 16 in the series 24 அக்டோபர் 2021

 

                                  ஜனநேசன்

 

    கையில் உறையும் ,முகத்தில் கவசமும்  அணிந்து செய்தித்தாளை விரித்தேன்.   தலைப்புச் செய்தியே  அதிர்ச்சியாக இருந்தது. நேற்று இந்திய  சீன  எல்லையில்  மூவர்  இறந்தததாக செய்தி. இன்று    இருபது இருபது  இராணுவ வீரர்கள்  வீரமரணம். சீனத் தரப்பில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள்  இறந்திருக்கலாம்  என்ற  தகவல். இத்தனைக்கும்  துப்பாக்கியோ ,பீரங்கி தாக்குதலோ  இல்லை. வெறும்  கைகலப்பும்  தள்ளு முள்ளு தானாம். இந்தியத்  தரப்பு வீரமரணம் . சீனதரப்பு சாவு என்ற  சொல்லாடல்களுக்குப் பின்னுள்ள  கருத்தாடல்  ரணமாக உறுத்தியது. மேலே  சுழலும்  காற்றாடியில்  செய்தித்தாளைப்  போலவே  என் மனதும்  படபடக்க  நினைவு பால்யத்துக்கு   அலைந்தது.

                              **********

   1962 இல்  நடந்த சீன படையெடுப்பின்  போது , நான்  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. அப்போதெல்லாம்  காலையில் எழுந்ததும் பல்லைத்  துலக்கி  காபியை  குடித்ததும்  பொதுகக்கூசுக்கு  ஓடுவேன். காலைக்கடனை  முடுச்சிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில்  சலூன் கடைக்குப்போய்  முதல் வேலையாய்  தினத்தந்தியில் கன்னித்தீவு  வாசிப்பேன். மூணாம் பக்கத்தில் தலைப்பில் அச்சாகி  இருக்கும் அந்த நாலு படமுள்ள  பதினாறு வார்த்தைகளை வாசிக்க என்போன்ற சிறுவர்கள்  பல உத்திகளைக் கொண்ட போரே  நடத்த வேண்டியிருக்கும். இப்படி  கன்னிதீவுக்கான  காத்திருப்பு  பொழுதில் தான்   இந்திய எல்லையில்  சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவல். பிரதமர் நேரு ,    ராணுவமந்திரி ,தளபதிகளோடு  அவசர ஆலோசனை என்ற செய்தியை வாசித்தேன்.

    அன்று  பள்ளியில்  இறைவணக்கம்  பாடுவதற்கு முன் தலைமை ஆசிரியர் சொல்ல , சீனர்கள் தாக்கியதில் வீரமரணம்  அடைந்தவர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தினோம்.   மௌனமாகவே  வகுப்புக்கு செல்லுமாறு சொன்னார்கள்.  சரித்திர ஆசிரியர் சரோஜா டீச்சரிடம் கேட்டேன் .” டீச்சர் , சீனாக்காரர்கள்  நம்ம எல்லையைத் தாண்டி  வந்து  தாக்கும்போது  நம்ம வீரர்களும்  கத்தியைக் கொண்டு  தாக்கி                   இருப்பார்கள் இல்ல. சீனாக்காரங்களும் செத்துருப்பாங்க இல்ல.”    

    ”“நம்ம கருப்புவெள்ளை எம்ஜிஆர்  சினிமாவில காட்டறமாதிரி  கத்திச்சண்டை போடமாட்டாங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் கலர் சினிமாவில் காட்டுற மாதிரி   துப்பாக்கி ,பீரங்கிகள் கொண்டு சுடுவாங்க. சீன ராணுவம் நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்கினதினால  நம்ம பக்கம் உயிர்ச்சேதம்  அதிகமுன்னு  சொல்றாங்க.”                                                                 “ஏன் டீச்சர் . நம்ம வீரர்களும்  துப்பாக்கி வச்சிருந்திருப்பாங்க  இல்ல “ என்று  சந்திரன் கேட்டான்.  “ ஆமாம் “                                                    நான்  கேட்டேன் ,” டீச்சர் , நம்ம வீரர்கள் வீரமரணம்  அடைந்தார்கள்ன்னு  சொல்றாங்க . அவுங்க வீரர்கள்  செத்தார்கள்ன்னு  சொல்றாங்க .ரெண்டும் வேற வேறையா.”    

“ அது அப்படித்தான் .சும்மா தொணத் தொணன்னு  கேட்கக்கூடாது , உட்காரு. இன்னைக்கு  கவுதம புத்தர் நடத்தணும் .எல்லாரும் கவனிங்க.” என்று  பாடத்தைத்   தொடங்கினார்.

     அடுத்த  பாடவேளையில்  பியூன்  பழனி  சுற்றறிக்கை கொண்டு வந்தார். கிருஷ்ணவேணி  டீச்சர் படிச்சு பார்த்துட்டு  சொன்னார் “.நாளைக்கு  மத்தியானம் இரண்டு மணிக்குதான் பள்ளிக்கு வரணும். யுனிபார்ம்  இல்லை. நல்ல டிரெஸ்ஸா  போட்டுக்கிட்டு வாங்க .ராஜலிங்கம் மன்ற மைதானத்தில் எல்லா ஸ்கூல் பிள்ளைகளும் ஊர்வலமாகப் போய்      சப்-கலெக்டர் , டிஎஸ்பி ,மாவட்டக் கல்வி அதிகாரிகள் , முன்னிலையில் நமது தேசபக்தியைத்  தூண்டும் விதமாகவும் ,நமது ராணுவவீரர்களுக்கு  உற்சாகமூட்டும் விதமாகவும்  கலை நிகழ்ச்சி நடக்குது. எல்லாரும் தவறாம அவுங்கவங்க பெற்றோரை சாயந்திரமா  மைதானத்துக்கு வரச் சொல்லிருங்க.” என்றார் 

  .நாளைக்கு  அரை நேரம் லீவு. அரை நேரம்  ஜாலியா கலர்டிரெஸ் போட்டுகிட்டு   கலை நிகழ்ச்சியில்  கலந்துக்கலாம்.  என்ற  குதுகலத்தில் எல்லோரும் ஆரவாரம் செய்தோம்.” உஷ். இது கொண்டாட்டம் இல்லை. இது  நம்ம தேசத்துக்கு மரியாதை செய்யிற நிகழ்ச்சி.” என்றார் கிருஸ்ணவேணி டீச்சர். அவர் சொன்னவிதம்  வித்தியாசமாக  இருந்தது.. நாங்கள்   மௌனமானோம். .

    மறுநாள் ,எல்லோரும் அவரவருக்கு பிடிச்ச துணிமணிகள் அணிந்து வந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் முதல்  எல்லா ஆசிரியர்கள் கண்காணிப்பில் இரண்டிரண்டு பேர்  வரிசையாக  தேசியக்கொடி பிடித்து ஊர்வலம் ஜவகர்பஜார் வழியாக  புறப்பட்டு  ரெண்டு மைல்  தொலைவில்  ராஜலிங்கம் மன்ற மைதானத்தை அடைந்தது. ஊர்வலத்தில் ஜெயஹிந்த் , வந்தே மாதரம், கோஷங்களையும். “ சிங்க நாதம் பாயுது, சீன நாதம் ஓடுது “ என்ற பாடலையும்   அந்தந்த வகுப்பாசிரியர்கள் பாட  மாணவர்கள்  பின்னால் பாடிக்கொண்டே  நடந்தோம்.

மைதானத்தில்  பெரிய அளவிலான  இந்திய வரைபடம்  வரைந்து இருந்தார்கள் . அதில் நாங்கள்  நின்றது  வண்ணமயமான  இந்தியாவை  வெளிப்படுத்துவதாக  கரூர்  சப் கலெக்டர்  சொன்னார். இந்தியில்               ‘ நேர் நில் ,தளர்வாய் நில்’  சொன்னார்கள் ,அவ்வாறே  செய்தோம்.            “சிங்க நாதம்  பாயுது ;  சீன  நாதம்  ஓடுது “,.                                        “சின்னக் கைகள் பத்திரம் பத்திரம் ;                                         பேசுவாய்  நல்லவை  மாத்திரம் .                                                     நாட்டுக்கு நீ நலமுடன் சேவை செய்வதே  மந்திரம் “. என்ற பாடல்களுக்கு  மேடையில்  பாடி  இருவர்  ஆடுவதுபோல் நாங்களும்  ஆடினோம். அப்புறம்  நமது  நாட்டின்  ஒருமைப்பாட்டுக்காக   பாரதியார் போன்றவர்களின்  பாடல்களைப் பாடினர். வெல்க , “வெல்கவே   நமது  இந்திய வீரர்களின் தீரம்.” என்றும் எல்லோரும்  கைகள் உயர்த்தி “ஜெயஹிந்த் “ முழங்கினோம். இந்த நிகழ்ச்சியும் ,மேடையில் பேசப்பட்ட பேச்சுகளும், பாடல்களும் ,பேண்டு வாத்திய இசையும்    எங்களுக்கு      புது உற்சாகத்தையும்  ,நம் நாட்டின் மீது  மரியாதையும்  உணர்த்தியது. நிகழ்ச்சி  ஐந்து மணிக்கு  முடிந்தது.  பெரும்பாலான  பெற்றோர்கள்  வரவில்லை . பள்ளிக்குத்  திரும்பி  அங்கிருந்து  நான்கைந்து பேராக சேர்ந்து  வீடு திரும்பினோம்.

   டீக்கடைகளில் நிறையப்பேர்  கூடி  ரேடியோவில் ஆகாசவாணி  சிறப்புச்செய்திகள்  கேட்டபடி   இருந்தனர். ஒவ்வொருத்தரும்  முகத்தை  கடுகடுப்பாக வைத்துக்  கொண்டு  ஆவேசமாகப்   பேசினார்கள். இந்த பேச்சில் கட்சி வேறுபாடின்றி   ஒன்றுபட்டிருந்தனர் .தேசியக்கொடியோடு  கூட்டம் கூட்டமாய்  தெருத் தெருவாகப் போய்  நிதி திரட்டி                              சப்- கலெக்டர் மூலம்  அரசுக்கு  அனுப்பி வைத்தனர்.  

    யாரோ ஒருவன்  கரூர் முழுக்க வழங்கும் குடிநீர் தொட்டியில்  விஷம் வைக்க  ஏறினானாம்.. சீன உளவாளி என்று சந்தேகப்பட்டு போலீஸ் பிடித்துப் போனதாம்  ,என்று  பேச்சு பரவியது.  அச்செய்தி  வதந்தி  என்று போலீஸ்   தெருத் தெருவாக  மைக்கில்  அறிவித்த பின்தான்   குழாயில்  மக்கள்  குடிநீர் பிடித்தார்கள். ரயில்வே  தண்டவாளத்தில்  குண்டு  வைத்து விட்டார்கள்.  ஈரோடு  திருச்சி  ரயில்கள்  நிறுத்தப் பட்டதாகப்  பேசினார்கள். இரண்டாவது ஆட்டம்  சினிமா  நிறுத்திட்டாங்க. சீனாக்காரன் குண்டு போட   எரோப்ளானில்  வருவதாகக் கூறி  இரவு ஒன்பதுமணிக்கு  தெரு விளக்குகள்  அணைக்கப்பட்டன. ஊர் முழுவதும் ராத்திரியில் போலீஸ்  ரோந்து  சுற்றிக் கொண்டிருந்தது.  

    எங்களது  பக்கத்து வீட்டுக்காரர்  வீட்டை பூட்டிவிட்டு  ராத்திரியோடு ராத்திரியாக  எங்கோ போய்  விட்டார்கள். அவரை  போலீஸ் தேடிவந்தது. எங்கப்பாவிடம்  விசாரித்தார்கள். எங்களுக்கு  தெரியாது  என்று சொல்லிவிட்டோம். அவரைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் ஸ்டேஷனில்  சொல்லுங்கள்  என்று கண்டிப்பான குரலில் சொல்லி  போலீஸ் போனது. எங்கப்பாவிடம்  அம்மா விவரம்  கேட்டது. “அவரு கம்யுனிஸ்ட் கட்சிக்காரர் .அவரை  சீன ஏஜெண்டுன்னு  போலீஸ் நினைக்குது “ 

   “அவங்க குடும்பம்  நல்லகுடும்பம். தெருவில் எந்தப் பிரச்சினைனாலும்  முன்னால வந்து நின்னு உதவுவாரு. மளிகைக்கடை வச்சிருக்கிறவரே  விலைவாசி உயர்வு போராட்டதில ஜெயிலுக்கு போனாரு “ என்றது அம்மா .” மெல்லப்பேசு. போலீஸ்  காதில விழுந்திறப் போகுது. அவரோட  ஆதரவாளருன்னு நம்மலை  கூட்டிட்டுப் போயிரூவாங்க.”  வீடே  கப்சிப்பானது. எங்க தெருவில்  ஒருத்தரும்  வாய் திறக்கலை.

   பத்திரிகையில்  பக்கம் பக்கமாக  போர்ச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. நேரு  சோகம் தோய்ந்த முகத்தோடு  உறுதியான  வார்த்தைகளைப் பேசினார்.” இந்தப் போருக்கு  தயாராகாத நிலையில்  நம் வீரர்கள் தீரமாகப் போராடினார்கள். அவர்களது  தீரமும் தியாகமும்  போற்றத் தக்கது. இந்நிலையில்  ஏற்பட்ட பொருளாதாரச்  சவால்களை எதிர்கொள்ளப் பணம் படைத்தவர்கள்  தாராளாமாக  நிதியைத் தாருங்கள்.”

   பிரதமரின் வேண்டுகோளுக்கு  இணங்க  நமது தமிழ்நாட்டு செல்வந்தர் களும் ,நடிகர் நடிகைகளும்  நிதி வழங்கிய பட்டியல்   போட்டோவோடு வந்தது. அரசியல் தலைவர்களும் நிதி வசூலித்துக் கொடுத்தனர். நமது  நடிகர்கள் நடிகைகள் குழு  எல்லைப்பகுதிக்கு சென்று ராணுவவீரர்களை  உற்சாகப் படுத்திய போட்டோ செய்திகளும் வெளியாகின.

   சீனாவிடமிருந்த  நவீன ஆயுதங்களும் , போர்வீரர்களுக்கான  பாதுகாப்பு கவசங்களும் நமது வீரர்களுக்கு போதுமான அளவு இல்லை. இந்தப்  போரில் ஏற்பட்ட பின்னடைவுக்கு  பொறுப்பேற்று  பாதகாப்பு மந்திரி  கிரிஷ்ணமேனன் பதவி விலகியதாக செய்தி வந்தது.    இனி  விவசாயத்துக்கும் ,உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் கொடுக்கும் முன்னுரிமை  நாட்டின் பாதுகாப்புக்கும் வழங்கப்படும்  என்று  நேரு  அறிவித்தார். தமிழ்நாட்டில் ராணுவடாங், ,துப்பாக்கித் தொழிற்சாலைகளும் தொடங்க இருப்பதாக செய்திகள்  வந்தன.

                ************

     இந்த  நினைவுகளோடு  பத்திரிகையைப் புரட்டினேன். கொரோனா தாக்கம் குறித்த செய்திகள் குறைந்து இருந்தன.  இந்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர்  நவீன ராணுவ விமானங்கள் வாங்க ரஷ்யாவுக்கு போகிறார் என்ற  செய்தி வந்திருந்தது.  இன்னொரு  கருத்துப்படம்  வந்திருந்தது .அதில் ஒரு செய்தியாளர்  பிரதமரிடம் கேட்கிறார் ,                            ,”பிரதமர் அவர்களே, 2024 ல் மறுபடியும் எல்லைப்பிரசினை இருக்குமா ?  ” பிரதமர்  மௌனமாக இருக்கிறார் .

கன்னித்தீவு படக்கதை இன்னும்  முடியவில்லை.

 

[ஆகஸ்ட் ௨௦௨௦- புதிய ஆசிரியன் .]

Series Navigationசைக்கிள்குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *