முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

author
0 minutes, 30 seconds Read
This entry is part 16 of 17 in the series 23 ஜனவரி 2022

 

 

வாசிப்பு அனுபவம் :

 

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

 

இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !

 

                                                          ஜோதிமணி  சிவலிங்கம்

 

அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

 

 மல்லிகை ஜீவா அவர்களால்  அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை,  நாவல்  முதலான துறைகளில்  இலங்கையில்  இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர்.

 

இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை.

இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

 

கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள் வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து.

 

கணத்திற்குக்  கணம்   மாறிக்கொண்டிருக்கும்  இப்பூவுலகில்  இந் நூலானது கடந்து போன காலங்களையும்,   அக்காலத்தில்   நடந்த சம்பவங்களையும் எமது   கண்  முன்னே  கொண்டு வந்து நிறுத்துகின்றது.

அத்துடன்  இந்நூலில் இடம்பெற்றுள்ள   பல நிகழ்வுகள்  நம்மை எமது  முந்திய காலத்திற்கும்   அழைத்துச் செல்கிறது.  உதாரணத்திற்கு  வீரகேசரி,  லேக் ஹவுஸ்  (Lake  house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின்  வரலாறுகளாகும்.

 

பிரித்தானியரின்  ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது.    களனி கங்கையின்   ஆரம்பப்  பெயர்  கல்யாணி  என்பதையும் நாளடைவில் அது  களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார்.  அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில்  நடந்த குதிரைப் பந்தயம்,  சூதாட்டம்  பற்றியும்  கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு  புரிந்தது.

 

இதே காலகட்டத்தில்  குதிரைப் பந்தயத்திடலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்  களனி பாலத்தின் ஊடாக எடுத்துச்செல்லப்பட்ட செய்தியும், பின்னர், அதே சம்பவம்  சிங்களத்  திரைப்படமாக  எடுக்கப்பட்டுள்ள செய்தியையும் இந்நூல்  ஆதாரங்களுடன் கூறுகிறது.

 

இதிலிருந்து  இலங்கையின் இன்றைய   பாதாள  உலகக் கோஷ்டி பற்றியும்  விளங்கிக் கொள்ள முடிந்தது. இவற்றால் நாட்டில் இன்றுவரையில் காலத்திற்குக்  காலம் தோன்றும்  அதிர்வலைகளையும்   உணரக்  கூடியதாக   உள்ளது.

 

ஒவ்வொரு    சம்பவங்கள் பற்றி எழுதத் தொடங்கும் போதும்  அக்காலத்தில்  பிரசித்தி பெற்ற  மிகச் சிறந்த சினிமாப் பாடல் வரிகளுடனும் முருகபூபதி  ஆரம்பித்திருப்பது “பீட்சா”  மீது தூவும்  பாலாடைக்கட்டி (Cheese) போன்று  சுவையளிக்கின்றது. 

 

அஹிம்சையின் அவதாரங்களான கௌதமபுத்தர் வந்த இடம், மகாத்மா  காந்தியின் அஸ்தி கரைத்த இடம் முதலானவற்றையும் காண்பித்து,  அதே இடத்திலேயே  இலங்கையின்  இன்றைய நேற்றைய அரசியல்வாதிகளின்   இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத அரசியல்  பக்குவத்தினால்  இம்சை அரசியலும் நிகழ்ந்துள்ளது  என்ற  பார்வையிலும்  களனி நதி தீரத்தின் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார்.

 

அக்கால அரசியல் வாதியான  S.W.R.D. பண்டாரநாயக்கா பற்றிய பதிவும் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

 

பண்டாரநாயக்கா,   பிரதமராகவிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.  அன்றைய நாளில்  நாம்  10 அல்லது 11 வயதுப் பராயத்தில்  இருந்திருப்போம்.

 

பாடசாலை முடிந்து திரும்பும் போது வானொலியில்  செய்தி கேட்டு  நாம் பயந்த காலங்களும்  இது பற்றிய தகவல்களை வாசித்தபோது கண்முன்னே தோன்றுகின்றது. 

 

பண்டாரநாயக்காவின் மறைவின் பின்னர் அவர் மனைவி பதவியேற்றார்.  அதன்பின் அவர்கள் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தார்.  இவ்விதமாக இவர்கள்  பிறந்து  வளர்ந்த வரலாறுகள் பற்றி எமது எழுத்தாளர் முருகபூபதி அழகாகச் சித்தரித்துள்ளார்.

 

எமக்கு அன்று இலவசக் கல்வியை அறிமுகம் செய்த கன்னங்கராவைத் தவிர வேறு சிங்களத் தலைவர்கள் எவரும் எமது நினைவுக்கு வருவதில்லை. ஆனால்,  இன்றைய  அன்றைய அத்தனை அரசியல்வாதிகளையும் இப்பதிவில்  முருகபூபதி எம்முன்னே நிறுத்தியுள்ளார்.

 

பனை ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எமது முன்னோர்கள் எழுதியதிலிருந்து  அதன் பின்னர் அறிமுகமான பலரக பேனாக்கள் முதல், நாம் பாவிக்கும்  Ball point  pen  வரை எழுதுகோல்களின் காலத்தையும்  விளக்கமாகக் கூறியிருக்கின்றார்.   இது எமது இளம் சந்ததியினருக்கு  சுவாரஸ்யமாயிருக்கும்.

 

போர்க்கால நெருக்கடிகளின்  பல  உண்மைச் சம்பவங்களை  முருகபூபதி எழுதி நினைவூட்டியிருப்பதிலிருந்து  எத்தனை விடயங்களை நாம் தொலைத்து விட்டோம் என நினைக்கத்.தோன்றுகிறது.

 

இராவணன் காலம் முதல்  இராஜபக்க்ஷ  காலம் வரையில்  இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்த பலரும் இந்தியாவிலிருந்து சமாதானத் தூதுவர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நசூக்காகச் சொல்லிச்செல்கிறார்.  

 

இன்று கோத்தபாய இராஜபக்க்ஷ  காலமும் ஒரு சிறந்த நடுநிலையான தீர்வை முன்வைக்க முடியாது முனகிக் கொண்டிருப்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர்.பொன்னம்பலம்   அருணாசலம்   எனும்  பெரியாரின் சகோதரர் சேர். பொன். இராமநாதன் ஆவார். இவர் இங்கிலாந்தில் கேம்பிரிஜ்  பல்கலைக்   கழகத்தில்  பரிஸ்டர் பட்டம்  பெற்றவர்.  இங்கிலாந்தின் ஐந்தாம் ஜோர்ஜ்  மன்னர்  பக்கிங்காம்  மாளிகையில் இவருக்கு   “சேர்” பட்டம் வழங்கினார்.  இப்படிப்பட்டவர்கள்    தமிழ் அறிஞர்களாக , அரசியல்வாதிகளாக   இருந்தாலும்  இவர்கள் கோயில்களின்  நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும்,   இவர்கள்   எவராலும்  தமிழினத்திற்கு  ஒரு  சரியான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதையும் இந்நூலின்  மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

மற்றுமோர்  பிரசித்தமானவர்தான்  ஜுனியஸ்ட்    ரிச்சர்ட்                    ஜெயவர்த்தனா ஆவார்.  இவர் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் பிறந்தவர்.  இவரும் பிறப்பால்  ஒரு கத்தோலிக்கர். சொலமன்  டயஸ் (S.W.R.D) பண்டாரநாயக்கவும்    பீலிக்ஸ் டயஸ்  பண்டாரநாயக்காவும்   கத்தோலிக்க மதப்பின்னணி  உடையவர்கள்.   இவர்கள் பற்றிய தகவல்கள் இதில் நிறைய எழுதப்பட்டுள்ளன.

 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்ற அரசியல்வாதிகள் போன்று  பிரதமர் பதவியில் இருந்து  ஜனாதிபதியானாலும் வாரிசு அரசியலுக்குத்   துணை  போகவில்லை  என்ற செய்தியையும்  நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.  இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்களை ஒன்றன்  பின் ஒன்றாக  அடுக்கிக்  கொண்டே   இந்நூலை அழகுற   வைத்துள்ளார்  நமது  எழுத்தாளர்.

 

பழையன கழிதலும்  புதியன   புகுதலும்  என்பதற்கு  ஏற்ப இலங்கை அரசியல்  சமூக பொருளாதார மாற்றங்கள், உற்பத்தி  ஏற்றுமதி  இறக்குமதி வர்த்தகம் என இலங்கை வரலாறு, குறிப்பாக தலைநகரத்தின் வரலாறு இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளது.  

 

  கல்வி  கற்கும்  மாணவர்கட்கு  விளங்கும் வகையில் எளிமையாக அவர்  எழுதியிருப்பது மிகவும் சிறப்பானது.

அக்கால அரசியல்வாதிகள் , கலைஞர்கள் பற்றியும் பல பெரிய  நிறுவனங்கள், வீதிகளின் பெயர்கள் என கொழும்பு  வாழ்க்கையில்  நாம் சந்தித்தவைகளையும்   இழந்தவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.

 

அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய பல்கலை  வேந்தன்     சில்லையூர்  செல்வராசன்  போன்றவர் களை பற்றியும்  சிங்களப்பட உருவாக்கமும்  அதன் பின்னர் காலப்போக்கில் தமிழ்ப்பட  உருவாக்கம்   பற்றியும் இந்நூலில் திறம்பட  விபரிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவிலிருந்து   இலங்கை   வந்த ஒளிப்படக் கலைஞரும்  ராஜா   ஸ்ரூடியோவை    கொழும்பில் உருவாக்கியவருமான   ராஜப்பனைப் பற்றியும் அவர் மனைவி கௌரீஸ்வரி ராஜப்பனைப்  பற்றியும்  இந்நூல் கூறத் தவற வில்லை.   

 

 எனது மகள் ஆர்த்தி,  திருமதி. கௌரீஸ்வரி  ராஜப்பனிடம்தான்  சங்கீதம் கற்றாள்.   அவரது  வீட்டில்  நுழைந்தால்   அங்கு தென்படும்  வீணையும்  அவர் குளித்து முடிந்த தலையும்  பெரிய நெற்றிப்பொட்டும் எனக்கு நினைவுக்கு வந்தன.  எனது பழைய பசுமையான நினைவுகளுக்கும்  இந்நூல் விருந்தளித்தது.

 

அது மட்டுமல்ல,  திருமதி .   ரோஸி. சேனநாயக்க அழகுராணியான செய்தியும்  பின்னர் அவர்  அரசியல்வாதியாக வலம் வருவதும்    போன்ற விறுவிறுப்பான செய்திகளுக்கும்  இந்நூலில் பஞ்சமில்லை.

 

மொத்தத்தில், நடந்தாய் வாழி களனி கங்கை  மூலம் நேரத்தை சிறகு கட்டிப் பறக்கச் செய்திருக்கின்றார் நமது மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்கள்.

 

இலங்கைத் தலைநகரின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் பற்றிய  பல  அரிய தகவல்களுடன்  சுருங்கக் கூறி எளிதாக விளங்க வைக்கும்  இந்த நூல் வாசகர்களுக்கு மாத்திரமன்றி  மாணவர்களுக்கும் பயனுள்ளது.

 

தற்போது, இந்த நூல் கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது 

நடந்தாய் வாழி களனிகங்கை – Kindle link

 

https://www.amazon.com.au/dp/B09MF9Q679/ref=sr_1_1?keywords=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&psr=EY17&qid=1637666536&s=black-friday&sr=1-1

 

—0—

Series Navigationகவிதைகள்ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *