நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின்
தென் கோடி பகுதிக்கு பலபெயர்களுண்டு
அதிலொன்று வேளிமலை என்றபெயர்..
மலைமுழுக்க பெருமரங்கள் வளர்ந்திருந்து
மழைப்பொழிவை தவறாது தந்த மலை..
தன் அடிவார மக்களின் பெருவாழ்வை
நெஞ்சை நிமிர்த்தியது பார்த்து ரசித்த காலமது
தங்கள் கிளைக் கைகளசைத்து
மக்களை வாழ்த்தி நிற்கும் மரங்கள்..
மழை பெய்து ஓய்ந்தபின்னர் மெல்லிய
கதிரொளியில் குளத்தில் குளித்து கரையேறும்
களிற்றின் கருத்த மினுமினுப்பு
அதன் மேனிக்கு ஏறிவரும்..
பாறைகளில் ஓடியிறங்கும் மழைநீர்
யானைகளின் பெருந் தந்தங்களாய் நீண்டுவரும்…
மரங்களில் நிறையும் பறவைகளின் குரலில்
கண்ணயர்ந்து அமர்ந்திருக்கும்..
பலவித விலங்குகளை வாழவைத்து
இயற்கையின் சுழற்சியை முறையாய் தக்கவைக்கும்
வானில்ப் போகும் மேகங்களை
தடுத்து தன் தலைமீது தலைப்பாகை கட்டி
மழை பொழியவைத்து
அருவியாய் மாற்றி ஆறுகளில் ஓடவைக்கும்
ஏரி குளங்கள் நிரம்பி எங்கும்
பசுமை பட்டுடுத்தி
நிலமது
இளமங்கை கோலமுறும்.
நிம்மதியாய் மலை இருந்த காலமது..
காய்ந்த மரங்களை விறகுக்காக
பச்சை மரங்களை தேவைக்காக
வெட்டும் இடங்களில் விதைகளிட்டு
புது மரங்கள் வளர்க்கும் நல்மனம் படைத்த
பேராசை அண்டாத மனிதர்கள்
வாழ்ந்திருந்த காலமது …
மரம் வளர்த்து, மழை வளர்த்து
மண் வளர்த்து, கதிர் வளர்த்து
தாம் வளர்ந்து, நாடு வளர்த்த
நன்மக்கள் வாழ்ந்திருந்த பொற்கால நாட்களவை…
எங்கே போயிற்று அத்தனையும்
எல்லா மரங்களையும் வெட்டி
ரப்பர் தோட்டங்களாய் மாற்றும்
மனம் மனிதனுள் விரிய விரிய
மலை தன் இருப்பினை சுருக்கி
செய்வதறியாது சோகப்பட்டது..
பலவித பூக்களின் சுகந்தம் வீசிய
அதன் அருகாமையெங்கும்
இப்பொழுது ரப்பரின் நாற்றம்
மலையின் பகுதிகள்
உடைபட்டு சிதறி
கட்டிடங்கள் முளைக்கின்றன
கடித்துண்ண முடியா
ரப்பர் காய்களை தூக்கியெறிந்து
மலைவிட்டு குரங்குகள்
ஊருக்குள் நுழைகின்றன
உணவில்லா மலைமீது
வாழ முடியாமல்
பறவைகளும் விலங்குகளும்
இடம் பெயர்கின்றன அல்லது
இறந்து போகின்றன..
வெயிலுக்கும், மழைக்கும், பனிக்கும்
தன்னை அர்ப்பணித்து
மவுன சாட்சியாய்
மலை சமைந்திருக்கிறது
உடைபடும் தன் பாகங்களை
சோகமாய் பார்த்து
தன் மீது உருளும் ரப்பர்
காய்களை வெறித்தபடி ..
- குவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டது
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்
- மனநோய்களும் திருமணங்களும்
- கவிதைகள்
- கவிதை
- இலக்கியப்பூக்கள் 230
- சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்
- உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14
- விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை
- நகராத அம்மிகள்
- வேளிமலையின் அடிவாரத்தில்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2
- பசிபிக் பெருங்கடல் தீவு ஹூங்கா தொங்காவில் சீறிய கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி
- கவிதைகள்
- முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை
- ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு