தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 5 of 13 in the series 24 ஏப்ரல் 2022

 

                                    வளவ. துரையன்

 

கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான்

            ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே.            451

 

[கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது]

 

அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன். அந்தச் சிவனோ ஒற்றை ஆலமரத்தின் வெறுமையான நிழலில் வீற்றிருப்பான்.

            வான் ஏறுஉரூம் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள்

யான் ஏறுவது அயிராபதம் அவன்ஏறுவது எருதே.             453.

 

[உரும்=இடி; அயிராவதம்=ஐராவதம் என்னும் யானை; எருது=காளை மாடு]

 

வானத்தில் முழங்கும் இடி என் படைக்கலம்; சிவனின் ஆயுதம் மழு; நான் ஏறி அமர்வது ஐராவதம் என்னும் வெள்ளை யானை. சிவனுக்கோ வாகனம் காளை மாடு.

           

             என்கண்ணினில் இவை ஆயிரம்; எதிராய்வரும் ஈசன்

            தன்கண்ணினில் முக்கண்; இனி யார் கண்ணது தாழ்வே.       454

 

எனக்கோ ஆயிரம் கண்கள்; இவை எல்லாம் ஒன்று போன்றவையே; சிவனுக்கோ முக்கண்கள்; அவை ஒவ்வொன்றும் மூன்று விதமானவை; இதில் உயர்ந்தவர் யார்? தாழ்ந்தவர் யார்?

                 

 

எம் இன்னுயிர் அனையீர் படைஎல்லாம் உடன்வர நீர்

            வம்மின் எனவிடை நல்கினன் இதுவாசவன் செயலே.          455

 

வம்மின்=வருக; விடை=அனுமதி; நல்குதல்=தருதல்]

 

எனக்கு இன்னுயிர் போன்ற தேவர்களே! நீங்கள் படைகளோடு என் பின்னே வாருங்கள்; என விடை தந்தான் இந்திரன்.

                                   

                  சிகரக் குலக்கிரிகள் சிதறத் தகர்க்கும்எறி

                        திரையால் ஓரோர்

                  மகரக்களிக் களிறுமறுகக் கடற்கரசன்

                        வர வாரவே.                                  456

 

[சிகரம்=உச்சி; எறி=மெலெழும்; மகரக் களிறு=சுறா மீன்; மறுகுதல்=புரளுதல்]

 

உடனே மலைத்தொடர்களின் சிகரங்கள் எல்லாம் பொடிப்பொடியாகச் சிதறுண்டு போகுமாறு, எழும் பேரலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுறா மீன் போலப் புரண்டு வர, வருணன் புறப்பட்டு வந்தான்.

                   

                  கலகக் கனல்கொடிகள் ககனப் பரப்பில் எரி

கதிர் ஊடுபோய்

                  உலகக் கவிப்பு அடைய உருகக் கடைக்கனும்

                        உடன் ஏறவே.                                 457

 

கனல்=நெருப்பு; ககனம்=வானம்; கவிப்பு=மூடுதல்; கடைக்கனல்=ஊழித் தீ]

 

எரிக்கும் விண்மீன்கள் எல்லாம் வான வெளியைக் கடந்து சூரியனையும் உலகையே மூடி அழிக்கும் தீச் சுடர்களோடு பெரு நெருப்பு போல அக்கினிதேவன் வந்தான்.

 

             

            பலவெற்பு எடுத்துஅடவி பறியப் பறித்துநதி

                  பல வாரிநீர்

            விலகிப் புடைப்பவிடவி வைகைப் படுத்து அனிலன்

                  விளையாடவே.                                   458

 

[வெற்பு=மலை;அடவி=காடு; பறியப் பறித்து=அடியோடு பிடுங்கி; வாரி=கடல்; புடைப்ப=முட்ட; வி=வைக்கோல்; அனிலம்=வாயு]

 

பல மலைகளை புரட்டிக் காடுகளைக் காட்டு மரங்களை அடியோடு பெயர்த்து எடுத்து எறிந்து, பல நதிநீர்க் கடல்கள் எல்லாம் பொங்கி எழுந்து அண்ட முகட்டை முட்டச் செய்து,  வைக்கோல்களைத் தூற்றிப் பறக்கவிடுதலைத் தன் விளையாட்டாகக் கொண்ட வாயுதேவன் வந்தான்.

           

 

          தொழில்மிக்க செக்கர் எரிசுடர் இட்டெரிந்து உலகு

                  சுடுவார்கள் போல்

            எழில்மிக்கு இரட்டி அறுவரும் ஒக்க அரக்கர்தம்

                  ரதம் ஏறவே.                                        459

 

[தொழில்=செயல்; செக்கர்=சிவப்பு; எரிசுடநெருப்புக் கதிர்; இரட்டி=அறுவர்= இரண்டு ஆறு பேர்; ஒக்க=ஒன்றாக; அரக்கம்=காவல்]

 

எரிக்கும் செயல்கொண்ட சிவந்த நெருப்புச் சுடர்களால், இவ்வுலகையே சுட்டுச் சாம்பலாக்கி விடுவது போல, காவல் காக்கும் அழகிய பன்னிரு சூரியர்களும் ஒன்றாகத் தம் காவல் காக்கும் தேரில் ஏறினர்.

               

             குமுதம் பரப்பும் இதழ் குவியப் பனிப்பதொரு

                  குளிர் கூருமால்

            அமுதக் கதிர்க் கடவுள் ரவிகட் கிரட்டிதனி

                  அறை கூறவே.                                      460

 

[குமுதம்=ஆம்பல் மலர்; பனி=குளிர்ச்சி; ரவி=சூரியன்]

 

ஆம்பல் மலர்கள் குவியுமாறு குளிர்ச்சியைத் தந்தபடி, அமுதைப் பொழியும் குளிரான கதிர்களைக் கொண்ட சந்திரன், பன்னிரு சூரியர்களின் சூட்டை நான் தனியாக ஒருவனே தணிப்பேன் என்று அறைகூவுவது போல வந்தான்.

                                   

             எரிகக்கும் முக்கண்ணினர் இடிஒக்கும் முக்குடுமி

                  எறி வேலினோர்

            செறுவிற்கு உகுத்து எதிர்வர் சிலமுத்தெருத்தர்பதி

                  னொரு தேவரே.                                    461

 

 

[முக்குடுமி=மூன்று முனைகளை உடைய சூலாயுதம்; எறி=வீசும்; செரு=போர்; முத்தெருத்தர்=முதிர்ந்த காளைமாட்டை வாகனமாகக் கொண்டவர்]

 

 சுட்டெரிக்கும் நெருப்பைக் கக்கும் மூன்று கண்களும் இடி போலத் தாக்கிக் கொல்லும் மூன்று முனைகளை உடைய மூவிலைச் சூலத்தைப் போர் செய்யும் பகைவர்கள் மீது வீசும் வேல் ஏந்திய உருத்திரர் பதினொருவர் காளை வாகனம் மீதேறி வந்தனர்.

                 

                 

                   மறவைத் தனித்திகிரி வளை ஒத்திரட்டைநிதி

                        வர ஆளிலே

                  பறவைக் கழுத்தில்வரும் அரியொத்து இயக்கர்குல

                        பதி போதவே.                                   462

 

[மறவை=வெற்றியை; தனித்திகிரி=ஒப்பற்ற சக்கரம்; வளை=சங்கு; இரட்டைநிதி=சங்கநிதி; பதுமநிதி; பறவை=கருடன், இயக்கர்=கந்தருவர்;               

                  

வெற்றியைத் தரும் ஒப்பற்ற சக்கராயுதம் சங்கு போன்ற சங்கநிதி, பதுமநிதி இரண்டுடன் ஓர் ஆள் தோள் மீதமர்ந்து, கருடன் மேலமர்ந்து வரும் திருமாலைப் போல, கந்தருவர்கள் தலைவன் குபேரன் புறப்பட்டான்.

                     

                   அரிகட்கு வைத்த எழுநரகக் குலப்பகுதி

                        அணி ஏழினோடு

எரிகண் பணைத்தபடர் எருமைப் பகட்டின்மிசை

                        யமன் ஏறவே.                                   463

 

[அரிகள்=பாவிகள்; அணி=படை; எரி=நெருப்பு; பணை=பருத்த; பகடு-கடா; ஏழு நரகங்கள்=அள்ளல், இரௌரவம், கும்பிபாகம்; கூடகாலம்; செந்தத்தானம்; புதி, மாபூதி]

 

பாவிகளுக்காக உண்டாக்கப்பட்ட ஏழுநரகங்களின் தலைவர்களும் தத்தம் படைகளோடு, உடன்வர தீ நெருப்புப் போன்றிருக்கும் பெரிய கண்களை உடைய எருமை வாகனத்தில் யமன் வந்தான்.

                           

                    முடிஇட்ட முட்டவரும் முதுகல் குவட்டுமலை

                        முதல்காறும் வீழ்

                  இடி இட்டு வெட்டுவன எரியிட்டு உருக்குவன

                        இன மேகமே.                                   464

 

[முடி=தலை; முடுதல்=தடுத்தல்; முதுகல் பெரிய மலை; குவடு=உச்சி; எரி=நெருப்பு; இனமேகம்=மேகக்கூட்டம்; ஏழு மேகங்கள்= சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலவர்த்தம்; சங்காரித்தம், துரோணம், காலமுகி, நீலவருணம்]

 

தலை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பெரிய மலைச்சிகரங்கள் எல்லாம், அடியோடு வீழச்செய்து இரு துண்டாக்கி எரிந்து உருகிக் கருகச் செய்யும்; இடிகளை உண்டாக்கும் ஏழு மேகக்கூட்டங்களும் வந்தன.

                    

                 கரியைத் தொகுத்து உழுவைகஞலப் பெருக்கி உயிர்

                        கவர் யாளியோடு

                  அரியைப் பரப்பிஅதிர் அருவிக் குலக்கிரிகள்

                        அணி கூரவே.                              465

 

[கரி=யானை; உழுவை=புலி; கஞல=சூழ; அரி=சிங்கம்; கிரி=மலை; அணி=படை; கூரவே=மிகவே]

 

யானைக் கூட்டமும், புலிகளும், உயிரை கொல்லும் யாளி, சிங்கம் முதலியவை சூழ்ந்துவர ஆரவார நீர்ப்பெருக்கோடு தெய்வ மாமலைக் கூட்டங்கள் அணிதிரண்டு வந்தன.

                  

             தொக்கமேகம் மாகவெளி சுற்றும் ஓடிமூடிவன

                  துர்க்கம் யாவும் வேவஎரிதுற்று வேறும் ஏறுகொடு

            மிக்ககோடு கொடிபல வெற்பு அநேக பாகைபட

                  வெட்டிவாரி வாரிவர விட்டுவீசி மேல்விழவே.           466

 

[தொக்க=கூடிய; மாகவெளி=அண்டவெளி; வனதுர்க்கம்=காட்டரண்; வேவ=வேக; ஏறு=இடி; பாகைபட=பிளவுபட]

 

திரண்டு வந்த மேகங்கள் எல்லாம் அண்டவெளியையே மூடின. இடி, மின்னல் இவற்றால் காட்டரண்கள் எரிந்து கரிய, மலை அரண்கள், நீர் அரண்கள் ஆகியவற்றைத் துண்டு துண்டாக வெட்டி வாரி எடுத்து மேலே வீசின.

                 

             பைத்த சோதி ஆறிரு பதிற்று நூறுகாய விரை

                  பச்சை வாசிநால் இருபதிற்று மேலும் நால்உறழ

            அத்த சாலம் ஈர்அருகும் அத்ரசாலம் வீசிவர

                  அர்க்க த்வாத சாதிபர் இரட்டிஆறு தேர்விடவே.       467

 

[பைத்த=வருத்துகிற; சோதி=நெருப்புச்சுடர்; ஆறிரு=பன்னிரண்டு; பதிற்றுநூறு=பத்தாயிரம்; மொத்தம் பன்னீராயிரம்; காய=எரிக்க; விரை=விரைவு; வாசி=குதிரை; நால் இருபதிற்கு மேலும் நால்=எண்பத்து நான்கு; அத்தசாலம்=ஒளிக்கைள்; அத்ரசாலம்=அம்புத்தொகுதி; அர்க்க த்வாத சாதிபர்=பன்னிரு சூரியர்கள்]

 

வருத்துகிற நெருப்புச் சுடர்கள் பன்னீராயிரம் சுட்டெரிக்க, நல்லநிறம் உடைய எண்பத்து நான்கு குதிரைகளைச் செலுத்திப் பெருங்கூட்டமாக அம்பாகிய கிரணங்களைப் பொழிந்தபடி பன்னிரண்டு சூரியர்களும், பன்னிரு தேர்களைச் செலுத்தினர்.

              

       சுத்தஞான போதர் சுழல்கட்டி யானைதோறும் இடு

            தொட்டி தோறும் ஏறிஇடை தொட்ட கார்முகாசிசினியர்

      அத்த சாமகோடி எனநிற்பர் ஆவநாழிகையில்

            அப்புமாரி தூவிவரும் அட்டலோகன பாலகரே.              468

 

[சுத்தஞானம்=பரஞானம்; போதர்=போதிப்பவர்; கழல்=திருவடி; கட்டி=மதித்து; தொட்டி=அம்பாரி; கார்முகம்=வில்; அசனி=இடி; அத்தம்=பொருள்; அப்பு=அம்பு; மாரி=மழை]

 

மேலான அறிவுகொண்ட பரம்பொருளின் திருவடிகளை மதித்துப் போற்றும் பெருமை பெற்ற அட்டதிக்குப் பாலகர்கள், யானை மீது அமைத்த அம்பாரி மேலேறி, இடியோசை போல நாணொலி எழுப்பி சாமவேதம் அதன் கோடியான அதர்வண தனுர் வேதம் போல அம்பு மழை பொழிந்தனர்.

                   

             முற்றும் மேருவாதிகளை முக்கவாரி ஊழிஎரி

                  முத்தன் நீலமோனி எனமுட்ட ஓதம்மீது எரிய

            மற்றை ஆலகால எரிவர்க்கலோக கோடிசுடும்

                  மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல்வரவே.           469 

 

[வாரி=கடல்; முத்தன் சிவன்; நீலமோனி=சடை முடி; சாகரேசன்=வருணன்; மச்சம்=மீன்]

 

மேரு முதலான மலைகள் அனைத்தையும் வாரி எடுத்து, ஊழித்தீ சுட்டு கடல்களே புகையும்படிக்கு எரியச்செய்து, அவை சிவனின் முடி போலக் காணப்பட, ஆலகால நஞ்சைப் போன்ற வடமுகாக்கினியும், வருணனுடன், மச்சங்களின் அரசனான மச்சராசனும் போரிட வந்தனர்.

                             

            தக்கன் யாகசாலை வினைதப்ப மாடுசாமரைகள்

                  தைப்ப வீசிமீதுவிரி சத்ரசாயை தோயஉடன்

            மக்கள் யானை சூழவர மற்றை நாலுகோடுடைய

                  மத்த யானை ஏறிவரும் வச்ரபாணி வாசவனே.           470

 

[வினை=இடையூறு; மாடு=பக்கம்; தைப்ப=பொருந்த; சாயை=நிழல்; கோடு=தந்தம்; சக்ரபாணி=வச்ராயுதம் வைத்திருப்பவன்; வாசவன்=இந்திரன்]

 

 தக்கனின் வேள்வி தடையின்றி நடக்க, இருபுறமும் சாமரங்கள் வீசி வர,மேலே வெண்கொற்றக் குடை நிழல் தர மக்கள் மற்றும் யானைப் படைகள் உடன்வர, நான்கு தந்தங்கள் உடைய ஐராவதம் எனும் தன் பட்டத்துயானை மீதமர்ந்து வச்ராயுதம் கையிலேந்தி இந்திரன் வந்தான்.

               

             அங்கண் வாசவற்கு இளைய வாசவற்

                  காக ஆகவம் செய்க போய்எனத்

            தங்கள் சேனையின் பின்பு நின்றதன்

                  தானை ஏவினன் சக்ரபாணியே.                         471

 

[இளைய வாசவன்=தம்பி உபேந்திரன்; ஆகவம்=போர்; தானை=படை; ஏவினன்=கட்டளையிட்டான்; சக்ரபாணி=திருமால்]

 

அங்கே, இந்திரன் அவன் தம்பி குபேரன் இவர்களுக்குத் துணையாகப் போய் போரிடுங்கள் என்று தேவர்களுக்குப் பின்னால் நின்ற தன் படைகளுக்குக் கட்டளையிட்டார் சக்ராயுதத்தைக் கையேலேந்திய திருமால்.

                    

                   சக்ரபாணியுட னேசகத்ரயம்

                        தருதசப்பிதா மக்கள் தம்மொடும்

                  பக்க மாமுனி கணத்தர் தம்மொடும்

                        கூடிநின்றனன் பத்ம யோனியே.                 472  

 

[சக்ரபாணி=திருமால்; சகத்ரயம்=மூவுலகம்; தசம்=பத்து; பிதாமகர்கள்=பிரஜாபதிகள்; கணம்=கூட்டம்; பத்மயோனி=தாமரையில் பிறந்த பிரமன்]

 

சக்ரபாணியான திருமாலுடன் மூவுலகங்களையும் படைக்கும் பிரஜாபதிகளுடனும், முனிவர் கூட்டத்துடனும் பிரமன் வந்தான்.

                 

                

                   உம்பரும் பெரும்படையும் இப்படி

                        உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து

                  எம்பெரும் படைத் தலைவரான கும்

                        போத ராதிகள் இரைத்து மண்டியே.              473

 

[உம்பர்=தேவர்; உடன்று=சினம்கொண்டு; ஊடறுத்து=ஊடுருவி; கும்போதராதிகள்=கும்போதரர் முதலானோர்; [குடோதரர், மகோதரர், விசித்திர கர்ணர், வியாக்ரமுகர், சிங்கமுகர், கசகர்ணர், பட்சபாட்சர்,] இரைத்தல்=சீறிப்பாய்தல்; மண்டுதல்=நெருங்குதல்]

 

தேவர்களும். தேவர்களின் பெரும்படையும் இவ்வாறு போரிட வந்து நிற்க, அவர்களையும், அவர் படையையும் ஊடுருவிக் கொண்டு வீரபத்திரர் கட்டளைப்படி குண்டோதரர் முதலானோர் தாக்கினர்.

                      

             அருக்ககனப் பரப்படையப் புயத்துற விட்டடைந்தே

            உருக்கும் எரிப்பிழம்பொளி புக்குழிப் புகவிட்டு உளைத்தே.       474

 

[அருக்ககனம்=உருவமற்ற வானம்; புயம்=தோள்; உருக்கும்=நீராக்கும்; உளைத்தே முழக்கமிட்டபடி]

 

உருவமற்ற வானம் முழுதும் தம் தோள்களே பரந்து நிற்க, வேறு இடமில்லாது அடைத்துக் கொண்டு வீரபத்திரர் படைகள் அழிக்கும் தீப்பிழம்பு வெளிப்படும் விதமாக முழக்கமிட்டன.

                  

            தனித்துரகத் தடத்தெரியை தழைத்தெரியச் சமைத்தே

            பனிப்பரவைப் பரப்பினிடைக் கடைக்கனலைப் பழித்தே.         475

 

[துரகத் தடத்து எரி= குதிரைமுகம் கொண்ட வடமுகாக்கினி; பரவை=கடல்; கடைக்கனல்=ஊழித்தீ]

 

இந்தப் படைவீர்ர்களால் எழுந்த நெருப்பானது குதிரை முகம் கொண்ட வடமுகாக்கினியையும், குளிர்ந்த கடல்களில் உள்ள ஊழித்தீயையும், பழிக்கும்படி எழுந்து பரவியது.

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி                                   
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *