வளவ. துரையன்
வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர்
இந்த்ர நீலகிரி மறிவதொத்து
இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ
எரிசினந்திருகி இந்திரனே. 651
[வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின் பிறந்தவன்; விசும்பு=ஆகாயம்; எரிசினம்=மிகுகோபம்; திருகி=பற்றி]
திருமால் மாய்ந்தவுடன் இருபக்கமும் சங்கும், சக்கரமும் தாங்கி திருமாலின் அம்சமாகத் தோன்றிய இந்திரன் தம்பி உபேந்திரன், இந்திர நீலமலை ஆகாயத்திலிருந்து கீழே விழுவது போல விழுந்து இறக்கக்கண்ட இந்திரன் மிகவும் கோபம் கொண்டான்.
மேக வெள்ளநதி வெள்ளம் நூறுக என
உம்பர் நாயகன் விளம்பினான்
மாக வெள்ள நதி கொண்டது ஓர்சடை
வளைத்துக் கொண்டது அவை வற்றவே. 652
[நூறுக=அழிவு செய்க; உம்பர் நாயகன்=தேவர் தலைவன்; விளம்ப=சொல்ல; மாக=ஆகாயம்]
இந்திரன் மேகங்களை நதி வெள்ளம் போல பெருகி மழை பொழிந்து, வீரபத்திரர் படைகளை அழிவு செய்க என்று சொல்ல; மேகங்கள் ஆற்று வெள்ளம் போல மழையைப் பொழிய; அன்று ஆகாய கங்கையை அடக்கிச் சுருட்டிக் கட்டிய சடைமுடியின் ஒரு சடையை சிவபெருமான் அவிழ்த்து விட அது சுற்றி வளைத்து அந்த மழை வெள்ளம் முழுதும் வற்றும்படிச் சுற்றிக் கொண்டது.
மெத்து வேலைகளை வச்ர பாணிவர
விட்டபோது அரி விரிஞ்சரைக்
குத்தும் வேல்கொல்! தலைவெட்டும் வாள்கொல்எயில்
எய்யும் அம்புகொல் குடித்ததே. 653
[மெத்து=மிகுந்த; வேலை=கடல்; வச்சிரபாணி=இந்திரன்; அரி=திருமால்; விரிஞ்சன்=பிரமன்; எயில்=கோட்டை]
வெள்ளம் போல வந்த மழைநீர் முழுதும் சடைமுடிக்குள் புகுந்ததைக் கண்ட, வச்ராயுதத்தைக் கையில் கொண்டிருக்கும் இந்திரன், கடல்களை எல்லாம் பொங்கி எழக் கட்டளையிட்டான். பொங்கி வந்த கடல்களின் நீரை முழுதும் வீரபத்திரரின் ஆயுதமே குடித்துத் தீர்த்தது. அந்த ஆயுதம் திருமாலை, பிரமனைக் குத்திய வேலோ! தலையை வெட்டிய வாளோ! திரிபுரக் கோட்டைகளை எரிக்க எய்த அம்போ!
வளைத்து வந்தன புரந்தரன் குல
விலங்கலப் பணி மதாணியோன்
விளைந்து வந்தன வெறும் பொடித்தனது
கைப்பொடிச் சிறிது வீசவே. 654
[புரந்தரன்=இந்திரன்; விலங்கல்=மலை; பணி=பாம்பு; மதாணி=ஆபரணம்; விளைந்தன=முறைப்படி செய்த; வெறும்பொடி மந்திரம் ஏதுமில்லாத திருநீறு]
இந்திரன் இப்பொழுது ஏவிய மலைக் கூட்டங்கள் பறந்து வந்து தாக்கியபோது நாகங்களை அணிகலங்களாகப் பூண்டுள்ள வீரபத்திரர், தம் கையிலிருந்த திருநீற்றை எடுத்து வீசப் பறந்து வந்த மலைகள் எல்லாம் பொடிப்பொடியாய்ப் போயின.
காடு கொண்ட படைகொண்டு வந்த சுரர்
ஈசன் விட்டதொரு கற்பகக்
கோடு கொண்டு அதனையும் படைப்பையும்
அடக்கி நின்றதொரு கொன்றையே. 655
[கற்பகம்=தேவலோகத்து மரம்; படைப்பை=சுவர்க்கலோகம்; கொன்றை=சிவன் அணியும் மலர்]
இந்திரன் கற்பக மரத்தின் கிளைகளைக் கொண்டு தாக்கினான். அதனையும் மற்றுமுள்ள இந்திரபோகச் செலவத்தையும் வீரபத்திரரின் தலைமீதும் மார்பிலும், தோள்களிலும் அணிந்திருந்த ஒரு கொன்றைப் பூ மாலையே எதிர்த்து நின்று அடக்கியது.
இடிப் பெரும்படை எரிந்து மண்டிவர
விண் தலத்தரசன் ஏவினான்
அடிப்பெருங் கடவுள் ஊழி ஈறுதொறும்
ஆடும் மஞ்சனம் அவித்ததால். 656
[மண்டி=நிறைந்து; விண்தலம்=தேவருலகம்; அடி=முதல்; ஊழிஈறு=யுக முடிவு; மஞ்சனம்=குளியல்]
[தேவேந்திரன் இப்பொழுது இடியை ஏவி எரித்தழிக்க முற்பட்டான். மூல முதல்வனான சிவபெருமான் ஊழி இறுதியில் தாம் ஆடும் திருமஞ்சனம் கொண்டு இந்திரன் ஏவிய இடி நெருப்பை அவித்தார்
வச்சிரப் படையும் இந்திரன் படையில்
வந்த தால்அதனை வல்லவன்
முச்சிரப் படையும் வேறு செய்திலது
நீறு செய்தது எதிர்முட்டியே. 657
[வல்லவன்=வீரபத்திரர்; முச்சிரம்=திரிசூலம்; வேறு=துண்டாகுவது; நீறு=சாம்பல்]
வச்சிராயுதம் இந்திரன் படையில் இருந்ததால், அதை அவன் வீரபத்திரர் மீது இப்பொழுது எய்தான். வீரபத்திரரின் சூலப்படை அதை எதிர்த்துச் சென்று தாக்கவில்லை; எரித்துச் சாம்பலாக்கியது.
நிலத்தை ஏவ நிசிந்தனும் ஓரடித்
தலத்தை ஏவினன் முற்றும் தரவே. 658
[நிசிந்தன்=கவலை இல்லாத மனத்தை உடையவன்; [வீரபத்திரர்]; ஓரடிதலம்=ஒரு காலால்; தகர=தகர்ந்து பொடியாக]
இந்திரன் ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தை ஏவ, அதை வீரபத்திரர் தம் காலால் உதைத்துத் தள்ளினார்.
ஓதம்ஏவ ஒருகுறும் பூதத்தை
நாதன் ஏவினன் நாவை நனைக்கவே. 659
[ஓதம்=கடல்; குறு=சிறிய; நாதன்=வீரபத்திரர்]
இந்திரன் கடலை ஏவினான்; வீரபத்திரர் ஒரு சிறு பூதத்தை ஏவினார். அக்கடல் அதற்கு நாவினை நனைத்துக் கொள்ளவே போதுமானதாக இருந்தது.
தீயை ஏவச் சிரித்தொரு கொள்ளி வாய்ப்
பேயை ஏவினன் எங்கள் பிரானும். 660
[இந்திரன் நெருப்பை அனுப்பினான். சிரித்தபடி வீரபத்திரர் ஒரு கொள்ளிவாய்ப் பேயை அனுப்பி நெருப்பை அடக்கினார்.
காற்றை ஏவ உயிர்ப்பதோர் கட்செவிக்
கூற்றை ஏவினன் ஐய குறளனே. 661
[உயிர்ப்பதோர் இளைப்பாறுதல்; கட்செவி=கண்ணே செவியாக உடைய பாம்பு; ஐய=அழகான; குறளன்=குள்ள உரு உடையவன்]
இந்திரன் காற்றை ஏவினான். வீரபத்திரர் தான் அணிந்திருந்த பாம்பு ஒன்றை அனுப்ப அது அக்காற்றை உண்டு அதற்கு எமனாயிற்று.
வானை ஏவ வயப் புயமாம் பெரும்
சேனை ஏவின்ன் எங்கணும் செம்மலே. 662
[வயம்=வெற்றி; புயம்=தோள்; செம்மல்=சிறப்புடையவன்]
இந்திரன் ஆகாயத்தை ஏவினான். வீரபத்திரர் தம் வெற்றித் தோள்கள் எனும் படை எங்கும் செல்லக் காற்றை அடக்கி அழித்தார்.
அண்டர் யாவரும்ஆழி கடைந்து பண்டு
உண்ட ஆருமு தோடும் ஒருங்கவே. 663
[அண்டர்=தேவர்; ஆழி=பாற்கடல்; பண்டு=முன்னம்; ஆரா=தீராத அமுது; ஒருங்குதல்=ஒன்றாக அம்டிதல்]
தேவர்கள் இவ்வாறு முன்னம் பாற்கடலைக் கடைந்து பெற்று உண்ட அமுதத்தோடு தாமும் மடிந்தனர்.
அமுதின் வந்த அயிரா பதம் அவர்
குமுதவாய் உமிழ் நஞ்சில் குளிப்பவே. 664
[குமுதவாய்=செவ்வாம்பல் மலர் போன்ற வாய்; உமிழ்=வெளிப்பட்ட]
அமிழ்தம் கடையும்போது வந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் மேலும் பல யானைகளும் பூத கணங்கள் வாயிலிருந்து வந்த நஞ்சில் நனைந்து அழிந்தன.
பாற்கடற்படு பாய்மாப் புனல்
காற்கடற்சுழி உள்ளே கரப்பவே. 665
[பாய்மா=பாய்ந்தோடும் குதிரை; கால்=காற்று கடர்சுழி=காற்றாகிய கடல்; கரப்பு=மறைவு]
பாற்கடலிலிருந்து வந்த உச்சிரவஸ் எனும் குதிரையையும் மற்ற குதிரைகளையும், அனுப்ப, அது பூத கணஙகள் எழுப்பிய சூறாவளிக் காற்றாகிய சுழலில் சிக்கி மறைந்தன.
அங்கண் நாயகி அங்கியில் உள்ளன
தங்கள் கால் தம்கை தாம் கண்ட வன்ணமே. 666
[அங்கண்=அவ்விடம்; நாயகி=தேவி; அங்கி=நெருப்புக்குண்டம்; தாம்=பூதகணங்கள்; கண்டவண்ணம்=எண்ணியபடி]
அவ்விடத்தில் இருந்த தேவியின் நெருப்புக் குண்டத்தில் தேவர்களின் கால்கள், கைகள் வெட்டப்பட்டு பூதகணங்கள் எண்ணியபடியே நெருப்பில் வீசப்பட்டன.
வேற்றுக் கோட்டிப் பதினொரு விண்ணவர்
ஏற்றுக் கோட்டின் உயிர்க் கழுவேற்றவே. 667
[வேற்றுக் கோட்டி=வேறு கூட்டம்; ஏறு=காளை; கேட்டி=கொம்பில்]
வேறு தனிக் கூட்டமாக வந்த உருத்திரர் பதினொருவரையும் கொல்லாது, அவர்கள் ஏறி வந்த காளை வாகனங்களின் கொம்புகளில், கழுவில் ஏற்றுவதைப் போலக் குத்தி உயிரோடு துடிக்கச் செய்தனர்
உக்கு நின்றனர் உம்பர் உடம்புதாம்
புக்கு நின்ற நிலைகெடப் போகவே. 668
[உக்கு=கெட்டு; உம்பர்=தேவர்; புக்கு=புகுந்து]
முன்னர் செய்த புண்ணியத்தின் பயனால் தேவ உடல் பெற்ற உயிர்கள் இப்பொழுது நீங்கியதால், அவை பெற்றிருந்த தேவ உடல்கள் கெட்டழிந்தன.
உய்யலாம் என உம்பர் பிதாமகன்
மய்யலால் பின்னும் சேனை வகுக்கவே. 669
[உய்யலாம்=உயிர் பிழைக்கலாம்; பிதாமகன்=பிரமன்; மய்யல்=ஆசை மயக்கம்]
பிரமன் தானாவது உயிர் பிழைக்கலாம் என்னும் ஆசை காரணமாக மேலும் சேனைகளைத் திரட்டிக் கொண்டு போரிட வந்தான்.
வகுத்துச் சேனையை வானவர் கோமகன்
தொகுத்து விட்டமர் மீளத் தொடங்கவே. 670
[வகுத்து=அணிவகுத்து; வானவர்=தேவர்; கோமகன்=அரசன்]
பிரமன் படை அணிவகுத்து வருவதைக் கண்ட தேவேந்திரன், மீண்டும் பட்டைகளைத் திரட்டிக் கொண்டு போரிடத் தொடங்கினான்.
தேர்த்தட்டாய் அன்று உடைந்தது தேர்ந்துகொல்
பார்ப் புத்தேள் பயத்தோடு பறந்த்தே. 671
[பார்=பூமி; புத்தேள்=தெய்வம்]
இந்திரன் நிலத்தை அனுப்பினான். முன்பு சிவபெருமான் திரிபுரத்தை எரிக்கக் கிளம்பிய போது. இந்தப் பூமிதான் தேர்த்தட்டாக இருந்தது. அது அன்று பாரம் தாங்காமல் உடைந்தது. அதனால் அதை நினைத்து அது இப்பொழுது பயந்து பறந்தோடிப் போனது.
===================================================================================
பண்டு மாண்மகன் தன்செயல் பார்த்தவோ
மண்டும் ஆழிகள் என்கொல் மறித்தவே. 672
[பண்டு=முன்பு; மாண்மகன்= பெருமை பெற்ற பிள்ளை; மறித்தவே=பின்னிட்டனவே]
இந்திரன் கடல்தெய்வத்தை அனுப்பினான். முன்னர் சிறு குழந்தை பால் வேண்டி அழுதபோது சிவபெருமான் அக்குழந்தைக்குப் பாற்கடலையே தந்த பழைய கதையை நினைத்து அது பயந்து விட்டது. “பாலனுக்காய் அன்று பாற்கடலை ஈந்து” என்பது திருநாவுக்கரசர் தேவாரம்”
ஊழித் தீஉவந்து ஆடுவதோ ஓர்ந்ததோ
பாழித் தீநடு என்கொல் பனிப்பதே. 673
[ஊழி=யுகமுடிவு; ஓர்ந்து நினைந்து; பாழி=வலிமை; பனித்தல்= பயந்து நடுங்குதல்]
இந்திரன் அடுத்து தீக்கடவுளை அனுப்பினான். ஊழித் தீ நடுவில் சிவபெருமான் திருக்கூத்து நடத்தும் வலிமையை எண்ணி அது பயந்து ஓடிவிட்டது.
உயிர்ப்பு அவர்க்கு நாம் என்பதை உள்ளியோ
செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே. 674
[உயிர்ப்பு=மூச்சு; உன்னி=நினைந்து; செயிர்ப்பு=கோபம்; மாருதம்=காற்று; திரிந்து=திரும்ப]
இந்திரன் காற்றுக் கடவுளை அனுப்பினான். வீரபத்திரரின் மூச்சுக் காற்றாகத் தான் இருக்கையில் அவரை எதிர்த்து எப்படிப் போரிடுவது என்று நினைத்தோ என்னவோ சினந்து அவ்விடம் அகன்று விட்டகன்று போனது.
===============================================================================
தம்மை மாய்க்கும் தற்பிழம்பு என்பதோ
வெம்மை மாறி விசும்பின் மின்மீண்டவே. 675
[தழற்பிழம்பு= நெருப்பின் வடிவம்; விசும்பு=ஆகாயம்]
தீயைத்தொடர்ந்து ஆகாயத்தில் இருந்து இறங்கிய இடியும் மின்னல்களும் அஞ்சித் திரும்பிப் போயின. நெருப்புக் கோளமாக இருக்கும் வீரபத்திரர் திருமேனி தம்மைத் தீய்த்துவிடும் என எண்ணியோ என்னவோ?
=====================================================================================
ஐயர் வேணி அரவம் அங்காப்பவோ!
வெய்ய ஞாயிறும் திங்களும் மீண்டவே.
[ஐயர்=வீரபத்திரர்; வேணி=சடை; அரவு=பாம்பு; அங்காய்த்தல்=வாய் பிளத்தல்]
வீரபத்திரரின் சடைமுடியில் இருந்த பாம்புகள் தங்களைப் பற்றிக் கவர்ந்து கொள்ளுமோ எனப் பயந்தோ என்னவோ, சூரியனும் சந்திரனும் கூடப் போரிட முன்வராது போயினர்.
உழைக்கும் பண்டை உதைநினைந்து உட்கியோ
இழைக்கும் கூற்ரம் எதிராது இரிவதே. 677
.
[உழைக்கும் வருத்தும்= உட்கி=வெட்கப்பட்டு; இழைக்கும்= போரிடும்; கூற்றம் எமன்; இரிவது=தோற்றோடுவது]
முன்னர் சிவபெருமானிடம் பட்ட உதையை நினைத்தோ என்னவோ எமனும் போர் செய்ய இயலாமல் தோற்றோடிப் போனான். மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சென்ற போது எமன் சிவனால் உதைக்கப்பட்டான்.
வெம்பு தானவர் மூவெயில் வேவித்த
அம்புதான் உளது என்றோ! அகன்றதே. 678
[வெம்பு=கோபம்; மூஎயில்=முப்புரம்; வேவித்த=எரித்த]
அசுரர்கள் இவ்வளவும் கண்டு சினம் கொண்டு போரிட வந்தும், போரிடாது திரும்பிச் சென்றனர். முன்னர் திரிபுரம் எரித்த அம்பு இன்னும் இவரிடம் இருக்கும் என எண்ணிப் பயந்தார்களோ?
=============================================================================
அரிய வீழ்ந்த அருஞ்சிறை உள்ளியோ!
திரிய வீழ்ந்தன எல்லாச் சில்மபுமே. 679
[சிறை-சிறகு; உன்னி=நினைத்து; சிலம்பு=மலை]
பறந்து வந்த மலைகள் எல்லாமும் மீண்டு போயின. முன்னம் மலைகளின் சிறகுகளை எல்லாம் இந்திரன் ஒரு சமயம் அறுத்தெறிந்ததை எண்ணியோ… என்னவோ?
அருந்தும் ஆழியில் ஆலம்உண்டார் என்றோ!
பொருந்து மேகங்கள் போர்விடப் போவதே. 680
[அருந்தும்=பருகும்; ஆழி=கடல்; ஆலம்=நஞ்சு; போர்விட=போரிடுவதைக் கைவிட்டு]
மேகங்கள் கடல்நீரைப் பருகும்போது எவரும் கண்டஞ்சும் கடலில் உண்டான ஆலகால நஞ்சை உண்டாரே சிவபெருமான், அந்தச் செயலை எண்ணித்தான் போலும் அவையும் போரிடாது போயின.
=====================================================================================
எட்ட நிற்கின் உரிப்பரென் றெண்ணியோ
விட்ட மாதிர வேழங்கள் மீண்டவே. 681
[எட்ட=கைக்கெட்டும் தொலைவு; விட்ட=போரிட அனுப்பிய; மாதிரம்=திசை; வேழம்=யானை]
திசையானைகள் எட்டும் போரிட வந்தன. கிட்ட நெருங்கினால் தம் தோலை உரித்து விடுவார் எனப் பயந்து போரிடாது திரும்பிப் போயின.சிவபெருமான் முன்பு காயசுரன் உடலைப் பிளந்து அவன் தோலைப் போர்வையாகப் போர்த்திய வரலாறு நினைவு கூரத்தக்கது.
=================================================================================
கூறும் ஏகக் குலிசாயுதன் பட
ஏறும் மேகத்து உருமேறு எறியவே. 682
[கூறும் ஏக=படைபலம் அழிய; குலிசாயுதன்=வச்சிரப் படையை உடைய இந்திரன்]
இந்திரன் தன் வாகனமான மேகத்தின் மீது ஏறி வந்தான். பூதப்படைகள் மேகத்தைத் தாக்கி இடிக்கச் செய்து அந்த இடியாலேயே அவனை வீழ்ந்துபடச் செய்தனர்.
—————————————————————————————————————————————-
காய்ந்து இரண்டு கதுப்பினும் தன்கடாய்
பாய்ந்து பாவகப் பாவி பதைக்கவே. 683
[காய்ந்து=சினந்து; கதுப்பு=கன்னம்; கடாய்=ஆட்டுக் கிடா; பாவகன்=அக்கினி; பதைக்க=துடிக்க]
அக்கினி தன் ஆட்டுக்கிடா வாகனத்தின் மீது ஏறி வந்தான். பூதகணங்கள் அவன் ஏறி வந்த ஆட்டுக்கிடாய்க் கொம்புகளே குத்திக் கன்னம் கிழிபட அழிவடையச் செய்தனர்.
=====================================================================================
சட்டத் தென்னவன் தன்கடா வேந்தனை
வெட்டிக் கூறுஇரண்டாய் விழவீழ்த்தவே. 684
[சட்ட=விரைவு; தென்னவன்=எமன்; கடா=எருமை]
எமன் எருமைக்கடா மீது ஏறி வந்தான். பூத கணங்கள் அவனது எருமைக் கடாவையே அவன் மீது ஏவ, அது அவனைத் தன்னிரு கொம்புகளாலேயே இரண்டு துண்டாக்கி விழச் செய்தது.
=====================================================================================
குருதி ஊற்றிக் குடித்திடு கூளியால்
நிருதி ஊற்றம் இழந்துயிர் நீங்கவே. 685
நிருதி பேய் வாகனத்தின் மீது ஏறி வந்தான். பூத கணங்கள் அந்தப் பேயையே அவன் மீது ஏவ, அப்பேய் அவன் இரத்தத்தைக் குடித்து அவனும் ஆற்றல் இழந்து உயிர் இழந்தான்.
====================================================================================
முகர வாயன் வருணன் முதியவன்
மகர போசனமாய் உடன் மாயவே. 686
முகரவாய்=ஓசையிடும்; வருணன்=கடலரசன்; மகரம்=சுறாமீன்; முதிய=பெரிய]
ஓயாது ஓசை எழுப்பிக் கொண்டே இருக்கும் அலைகளுடைய வருணன் சுறாமீன் வாகனத்தின் மீது ஏறி வர, பூதகணங்கள் சுறாமீனையே அவன் மீது ஏவ அவனும் அதன் வயிற்றுக்கு உணவானான்.
================================================================================
மலை மருப்பொறி மாருத மார்பு அதன்
கலை மருப்பில் கழியக் கிழியவே. 687
[
மலைமருப்பு=மலைச்சிகரம்; மாருதம்=காற்று; கலைமருப்பு=மான்கொம்பு]
மலைச்சிகரங்களைப் பெயர்த்தெறியும் வலிமையோடு, காற்றுக்கு இறைவனான வாயு தேவன் தன் மான் வாகனத்தின் மீது ஏறி வர, பூதகணங்கள் அதையும் அவன் மேல் ஏவ, மான் கொம்புகள் அவனைக் குத்திக் கிழிக்க அவனும் மாண்டான்.
- திருப்பூர் இலக்கிய விருது 2022
- வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 13
- சொற்களின் சண்டை
- மனசு
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….
- சற்று யோசி
- பூ
- PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்
- திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்
- மெலி இணர் நவிரல் ஒள் வீ சிதற
- தெளிந்தது
- நஞ்சு