மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்

This entry is part 35 of 45 in the series 2 அக்டோபர் 2011

காத்திருப்பு

குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும்

சாட்டைகள் விளாசப் படாமலேயே

மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால்

பெருந்தொகை வாங்கிக்கொண்டு

சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும்

விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது ..

நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு

அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது …

ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது

வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள்

உள்ளேப் போவதும், வெளியே வருவதுமாய்

நகர்கிறது ஐந்தாண்டு… காட்டப்படும்

சொத்துக் கணக்குகள்

யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை

உட்பூசல்களும், வெளிப்பூசல்களுமாய்

உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் …பொது மக்கள் சகலரும்

ஒண்டிக் குடித்தனத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்

இலவசமாய் பலதும் கிடைத்தும் ..விலயேற்ற வீரியம்

கொடுங் கைகள் கொண்டுத் தாக்கித் தகர்க்கிறது

மீண்டுமொரு மௌன ஐந்தாண்டுத் தவத்தில்

காத்துக் கிடக்கிறார்கள் எப்பொழுதும் போலவே …..
——-

பிச்சைக் காரர்கள்

வயோதிகக் கூனால் வளைந்த

நடையுடன் பஞ்சடைத்தக் கண்களும்

நடுங்கும் உடலுமாய் … கந்தல் உடையுடன்

கையேந்தி நின்ற அந்தப் பிச்சைக் காரனுக்கு

தேனீர் வாங்கித் தந்து கையில் பத்து ரூபாய்க்

கொடுத்தபோது … நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது…

மின் விசிறியின் கீழே , சுழல் நாற்காலியில்

அமர்தபடி மூன்று முக இணைப்பிற்காய் ரூபாய்

ஐயாயிரம் லஞ்சமாய் வாங்கிய அந்த மின் வாரியப்

பிச்சைக் காரனுக்கு… நானிட்டப் பிச்சையும்

முழுக் குப்பி விஸ்கியும் எத்தனை நினைத்தும்

கனக்கிறது மனதுள் அழியாமலேயே….

===
கோமறத்தாடியின் மறுநாட்க் கவலை

ஓங்கி ஒலிக்கும் ஒற்றை முரசின்

தாளத்தில்த் துள்ளும் கோமறத்தாடியின்

கை இருந்த கமுகம் பூ உதிர்ந்து தெறிக்க

ஆக்ரோஷ ஆட்டத்தில்… பலமாய் வெளிவரும்

அவர் குரலற்ற வேறொன்று… வியர்த்து விறுவிறுக்க

ஆடும் மாடனுக்கு சாராயம் கலந்த

இளநீர்கள் கொடுத்து உக்கிர ஆட்டத்தை

உச்சத்தில் கொண்டு போய், அதிரும் முரசினை

சட்டென்று நிறுத்தி… உருவாகும் அமைதியில்

கோமறத்தாடியின் உருவில் மாடனின் குரல் மட்டும்

சத்தமாய் ஒலிக்கும்…நீட்டப்படும் அவித்த முட்டைகள் தின்று … மீண்டும் சற்றே

சாராயம் குடித்து திருநீறு பூசி குறிசொல்லி முடித்து

சட்டென்று தரையில் மாடன் விலகி, மனிதனாய் சரிய

தண்ணீர்த் தெளித்து புதுத் துணி உடுத்து

கறிச்சோறு தின்னும் பொழுதில் நினைப்பார்

‘ என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்

நாளை முதல் சாப்பாடு ஒருவேளை …

இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள்

நாளை மீண்டும் சொல்வார்கள் ,

” ஏதாவது சோலி மையிருக்குப் போவும் ஓய்….”

Series Navigationவார்த்தைக்குள் அகப்படவில்லை..!!பயனுள்ள பொருள்
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *