ஆர் வத்ஸலா
ஒன்று விட்ட அத்தை பையன்
சிறு வயதில்
அவனுக்கு இணையாக
மரமேறி விழுந்து
பாட்டியிடம் “கடங்காரி” திட்டும்
அம்மாவிடம் அடியும்
மருத்துவர் அப்பாவிடம் மாவு கட்டும்
கிடைத்தன
தாவணி போடுகையில்
சினிமாத்தனமான
ரோஜா நிறக் கனவுகளில் அவனுடன் பேசி இருக்கிறாள்
விழித்தவுடன் பயந்திருக்கிறாள்
அம்மாவை நினைத்து
புடவை உடுத்திய பின்
அவன் வீட்டுக்கு வருகையில்
அம்மா சொல்படி
அவள் கொடுக்கும் காபியை விரல் படாமல்
வாங்கிக் கொள்வான்
அவன்
மணப் பேச்சை அம்மா எடுத்த போது
மறுத்து விட்டார் அப்பா
மூன்று தலைமுறை தாண்டாவிட்டால்
மருத்துவ ரீதியாக தவறென
பேரன் பேத்தி பார்த்து விட்ட இவளுக்கு
இன்றொரு மருத்துவர்
நாள் குறித்து
உறவுகளை அழைக்கச் சொல்லி விட்டார்
வந்தான் அவன்
அதே தெற்றுப் பல்
அடங்காத சுருட்டை முடி
கூடுதலாக
முடியில் காலம் தீட்டிய வெள்ளி சாயத்துடன்
சம்சாரியின் தொப்பையுடன்
விசாரித்து விட்டு போய் விட்டான்
“துபாயில் இருந்து எப்படி?….”
அவள் கண்ணில் தெரிந்த கேள்விக்கு
அவர் பதிலளித்தார்
“கட்டாயம் வரணும்னு ஃபோன் பண்ணினென்”
அவரை கடைசியாக ஒரு முறை பார்த்தாள்
கூடிய காதலுடன்