சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் !

author
0 minutes, 51 seconds Read
This entry is part 4 of 10 in the series 14 ஜுலை 2024

முதல் சந்திப்பு :

எங்கிருந்தாலும்  சோர்ந்துவிடாமல் அயராமல் இயங்கும்  சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் !

கற்றதையும் பெற்றதையும் சிந்தனை வடிவில் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் ! !

                                                                      முருகபூபதி

 “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்  “    என்ற சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது.

1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல  நாடுகளில் எனக்கு  நண்பர்கள் உருவானார்கள்.

அவ்வாறு 1975 இல் எனக்கு அறிமுகமானவர்தான் தற்போது கனடாவில் வதியும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்.

தமிழ், கலை இலக்கியப்பரப்பில் பல பத்மநாதன்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்பவரைப்பற்றிச் சொன்னால்,  இவர்தான் கனடாவில் வாழ்ந்தவாறு சிந்தனைப்பூக்கள் என்ற தலைப்பில் தொடர்ந்தும் எழுதிவரும் எழுத்தாளர் என்பது தெரியவரும்.

யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை இதழ் வெளியாகிக்கொண்டிருந்த காலப்பகுதியில்,  ஒவ்வொரு மாதமும் மல்லிகை அச்சாகியதும்,  அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா,  எனக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்புவார்.

 “ மல்லிகை பிரதிகள் கொழும்பு பழைய சோனகத்தெருவில் அமைந்துள்ள விற்பனை – விநியோக நிலையத்திற்கு லொறியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்று பெற்றுக்கொண்டு, கொழும்பிலும், நீர்கொழும்பிலும் விநியோகிக்கவும் .  “ என்ற தகவல் அந்த அஞ்சலட்டையில் எழுதப்பட்டிருக்கும்.

கொழும்பு சென்று மல்லிகை பிரதிகளை பெற்றுக்கொண்டு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  அமைந்திருந்த ராஜேஸ்வரி பவன், ஆனந்த பவன், லக்ஷ்மி பவன், மற்றும் வெள்ளவத்தையிலிருக்கும் சில புத்தக கடைகளுக்கும் விநியோகிப்பேன்.

ஜீவா சில நாட்களில் ரயில் ஏறி கொழும்புக்கு வந்துவிடுவார்.

இங்கு ஜீவா தங்குவதற்கென சில இடங்கள் இருக்கும்.  ஜீவாவை பார்க்கச்சென்ற சந்தர்ப்பங்களில் எனக்கு அறிமுகமானவர்கள்தான் தம்பையா அண்ணர், செல்வம் மற்றும் மணியண்ணன்,  மேமன் கவி உட்பட பலர்.  இவர்களில் தம்பையா அண்ணர்,  பின்னாளில் ஜீவாவின் சம்பந்தியானார்.

இவர்களில் செல்வம் அண்ணரின் சகோதரர்தான் பத்மநாதன்.

பகுத்தறிவுச்சிந்தனையுடன் பத்மநாதன் அக்காலப்பகுதியில் என்னோடு பல விடயங்களை பேசியிருக்கிறார்.

நான் இவரை முதல் முதலில் சந்தித்த காலப்பகுதியில், இவர் கொழும்பு  பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பயிற்சி நெறிக்கு வந்திருந்தார்.

பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, இன்றும் பல துயரச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும் சமகாலத்தில், அன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னோடு பகுத்தறிவுச் சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட  இனிய நண்பர் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் பற்றி இந்த முதல் சந்திப்பு தொடரில் சொல்ல முன்வந்துள்ளேன்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வருவதற்கு முன்பே இவர் 1985 இல் கனடாவுக்குச் சென்றுவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர், இவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா சென்றிருந்தவேளையில் ஸ்காபரோவில் சந்தித்தேன். அதன்பின்னர், கொவிட் பெருந்தொற்று வழங்கிய வரப்பிரசாதத்தினால், அடிக்கடி மெய்நிகர் நிகழ்ச்சிகளில் பார்த்துப் பேசிவந்தேன்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் விருது விழாவுக்குச்சென்றவேளையில் மீண்டும் சந்தித்தேன்.

அவ்வேளையில் இவருக்கு ஒரு சத்திர சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.  அதற்குச்சென்றால், என்னைப்பார்க்க முடியாது போய்விடுமே … ? ! என்பதற்காக, அந்த நாளை பிறிதொரு திகதிக்கு மாற்றிவிட்டு, என்னைப்பார்க்க அந்த விழாவுக்கு வந்தவர்தான் இந்த இனிய நண்பர்.

இவ்வாறு என்னை நெகிழ வைத்த நண்பர்கள் பலரை எனது வாழ்நாளில் பெற்றுக்கொண்ட பாக்கிசாலிதான் நான்.

பத்மநாதன், இலங்கை வடபுலத்தில்,  உரும்பராய் வடக்கில்  1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி பிறந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை உரும்பராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலும், அதன்பின்னர் உரும்பராய் இந்துக்கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் படித்துவிட்டு,  1964 இல் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்து .  அங்கிருந்து  1968 இல்             பி. ஏ. ( சிறப்பு ) பட்டதாரியாக வெளியேறுகிறார்.

சிறிது காலம் கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிவிட்டு, தான் பட்டம் பெற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கே  புவியியல் துறையில் துணை விரிவுரையாளர் பணியை ஏற்கிறார்.

அங்கிருந்து மலையகத்தில் நுவரேலியா பரிசுத்த திரித்துவக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றச் செல்கிறார்.  அங்கிருந்து நுவரேலியா – பதுளை மாவட்டங்களில் சேவைக்கால கல்வி ஆலோசகர் பணிக்குச் செல்கிறார்.

அதன்பிறகு கொழும்பு பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா                      ( Diploma in Education ) பட்டத்தை பெற்றுக்கொண்டு, யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியப்பணிக்குச் செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சமூகக்கல்வி விரிவுரையாளராகச் செல்கிறார்

அத்துடன் நிற்கவில்லை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விப்பீடத்தில் இணந்து, முதுமாணிப் பட்டம்  ( M .  A ) பெறுகிறார்.

இதற்கும்மேல், இனிமேல் தான் பிறந்த தாய்நாட்டில் படிப்பதற்கு என்ன இருக்கிறது..? என நினைத்தாரோ தெரியவில்லை,  உரும்பராய்,  சுன்னாகம், பேராதனை, கொக்குவில், நுவரேலியா – பதுளை , கொழும்பு ,  யாழ்ப்பாணம், கோப்பாய் என  ஊர் ஊராக அலைந்துழன்றுவிட்டு, 1985 ஆம்  ஆண்டு தொடக்கத்தில் கனடா – ஸ்காபரோவுக்கு புலம்பெயர்ந்து சென்றுவிடுகிறார்.

 “ தொடர்ந்து பாடிய வாயும், ஆடின காலும் எங்கே சென்றாலும் சும்மா இருக்காது!  “ என்பார்கள். 

இந்த வாக்கு எங்கள் சிந்தனைப்பூக்கள் பத்மநாதனுக்கும் பொருந்தும்.

எப்பொழுதும் புன்னகை  முகத்துடன் கலகலப்பாக பேசிவரும் இந்த அருமை நண்பரும் எனது இலக்கியப் பயணத்தில்  இணைந்திருக்கிறார்.

மல்லிகை இதழில் சிறுகதைப் படைப்பாளியாக அறிமுகமாகியிருக்கும் பத்மநாதன், இலங்கை தமிழ்ப் புதினப்பத்திரிகைகளில், கல்வி, புவியியல் தொடர்பான ஆக்கங்கள் பலவற்றையும் எழுதியவர்.  இலங்கை வானொலி கல்விச்சேவையில் அறிவியல் அரங்கம் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்.

தனது எழுத்துப்பணிகளுடன் சமூக ஆர்வலராகவும் இயங்கி வந்திருக்கும் பத்மநாதன்,  கனடா – மென்றீயலில் தமிழர் ஒளி நிறுவனத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கியவர்.

நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் கனடாவில் வாழ்கிறார்கள்.  அதனால், இங்கிருந்து சில சமூக வானொலிகளும் இயங்குகின்றன. அத்துடன் சில பத்திரிகைகள், இதழ்களும் வெளிவருகின்றன.

இவற்றிலும் பத்மநாதன் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.

கற்பதற்கு வயது எல்லை இல்லை என்பதற்கு எம்மத்தியிலிருக்கும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதனும் மிகச்சிறந்த உதாரணம்.

ரொறன்ரோ வர்த்தக கல்லூரியில் இணைந்து படித்து, பிரயாணமும் உல்லாசப் பிரயாணமும் என்ற துறையில் டிப்ளோமா பட்டமும் ( Diploma in Travel and Tourism  )  பெற்றிருக்கிறார்.

தனது வாழ்க்கையில் கற்றதையும் பெற்றதையும்  ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் பத்மநாதன் அவர்கள், அதற்கு சிந்தனைப்பூக்கள் என்ற பெயரைச்சூட்டியிருக்கிறார்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்றார் தோழர் மா ஓ சேதுங்.  அதன் உறைபொருள் ஆயிரம் சிந்தனைகள் மலரட்டும் என்பதுதான்.

பாரதியாரின் எழுத்துக்களிலும் மானுட சிந்தனைகள்தான் மேலோங்கியிருந்தன.

நம்காலத்து ஜெயகாந்தனும் சிந்தையில் ஆயிரம் என்ற தலைப்பில் எழுதியவர்தான்.  அந்த எழுத்துக்கள்  எமக்கு இரண்டு பாகங்களில் கிடைத்திருக்கின்றன.

பத்மநாதன் இதுவரையில் தனது சிந்தனைகளை ஐந்து பாகங்களாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 

அதனால் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என பரவலாக அறியப்படுகிறார்.

 “ சிந்தனையை தூண்டுவதும் கூர்மைப்படுத்துவதும் செயற்பட வைப்பதுவும் உலகியல் அனுபவமாகும். அனுபவத்தை பகுத்தறிய வைப்பது சிந்தனையாகும். உலகியல் அனுபவமும் உள்ளத்துச் சிந்தனையும் சேர்ந்து பல்வேறு சமூக ஆய்வுகளுக்குத் துணை செய்கின்றன.  “ எனக்கூறிவரும்  பத்மநாதன்,  கனடாவில் சமூக நலச்சேவைக்கான விருதுகள் சிலவற்றையும், கனடா உதயன் பத்திரிகை, மற்றும் தமிழர் தகவல் இதழ் ஆகியனவற்றின் விருதுகளையும் பெற்றவர்.

 சிந்தனைப்பூக்கள் பத்மநாதனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எண்பது வயது பிறந்ததையடுத்து இவர் காப்பாளராகவிருக்கும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் இவரைப் பாராட்டி கௌரவித்தது.

தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை  இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து  ஏனையோர்க்கு  முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில்  பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும்   வென்மேரி அறக்கட்டளை நிறுவனம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கனடாவில் பல ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவிருக்கிறது.

அந்த ஆளுமைகளில் எமது இனிய நண்பர் சிந்தனைப்பூக்கள் பத்மநாதனும்  ஒருவர்.

தொலைவிலிருந்து இவரை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

—-0—

letchumananm@gmail.com

Series Navigationகனடா பீல் பிரதேச சொப்கா மன்றத்தின் 15வது ஆண்டுவிழாஅன்பின் கரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *