பா.சத்தியமோகன்
கடும் கோடை என்ற எழுதுகோலால் வருந்தி
பெரும் மழை என்ற விண்ணப்பம் ஒன்று
உலக சுபிட்சம் நாடி
எழுதத் தொடங்கினேன்
பயிர்கள் நனைந்து மண் குளிர்ந்து
பறவைகள் சிலிர்க்க மரங்கள் கூத்தாட
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
எட்டுதிக்கும் அவள் வண்ணமடா
இதயமாவது ஒண்ணாவது
பிரபஞ்ச சக்தி அறிவாள் அனைத்தும்
வெறும் தூசு நம்மை மூடும் நம் கவலைகள் இப்போது
மழை வேண்டிய மானுடமேநீ
குடை பிடித்து கருப்புகொடி காட்டாதே
முடிந்தால் மழைக்கு முன்பே
பிரபஞ்ச வாசலில்
புள்ளியற்ற கோலம் ஒன்றை வரைந்திடுக
மழைதூறல்களின் புள்ளி அதோ
வான் விட்டு வரத்துவங்கின
வங்கக் கடலின் தூறல்கள் அங்கம் ஆவோம்
புன்னகைதத்துச் சில்லிடுக ஒவ்வொரு மழைக்கும்
வான் ஆசிகள் தான் நம்மைச் சுற்றி இம் மழை.
களிப்பாய் நீ நன்னெஞ்சே.
***