இப்போ மழை
– பா.சத்தியமோகன்
குரல் செருமிக் கொண்டு
ஈரம் ஏந்திச் சுழன்ற
சற்று நேரத்தில்
நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்
கூடுகிறது மழை
சில்லிடல் காட்டியும்
விளக்க முடியாத பலவற்றைப் போலவே
மழையும் நிறைய சொல்லிச் செல்கிறது
தரை நோக்கி வடிந்து விடும் மனிதர் யாரும்
அன்பினால் கைகளில் ஏந்த ஆளற்று
நீர்த்துளிகளை
தோட்டச் செடிகளின் இலைகள் வாட்டமாக ஏந்தும்
கீற்றுக் கொட்டகை நுனிக் காம்புகள் ஆதரவளிக்கும்
மழை விட்ட பின்னும் குடிசைக் கீற்றுகள்
சொட்டிக் கொள்ளும் குனிந்து
ஈரமும் மண்வாசமும் சுழலும்
இன்னும் ஆழ நனையும் போது
வெயிலை வெறுத்தது தவறு என ஞாபகம் வரும்
மழைக் குளிருக்குள் வெய்யில் அது அமுங்கும்
ஓசையின்றி விடியும்போது பூமி தாகம் அதிகரிக்கும்
மீண்டும் மீண்டும் வான் பூமி காதல்
பருவம்தோறும் நிலைக்கும்.
***