இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’

This entry is part 36 of 42 in the series 22 மே 2011

முன்றில்

(சிற்றிதழ்களின் தொகுப்பு)

பேரா.காவ்யா சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா

விலை: ரூ 550

முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து நல்லதோர் தமிழ் முற்றமாக விளங்கியது முன்றில். ”இதற்கு தமிழின் தனித்துவம் மிக்க படைப்பாளிகளான மா.அரங்கநாதன், அசோகமித்திரன், க.நா.சு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது” என்று தொகுப்பின் பின்னட்டையில் ‘காவ்யா சண்முகசுந்தரம் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் க.நா.சு வை ஆசிரியராகக் கொண்டும் அவர் மறைவுக்குப் பிறகு அசோகமித்திரன், மா.அரங்கநாதன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டும் வெளியாகிவந்த முன்றில் சிற்றிதழ்களின் செறிவுக்கு மா.அரங்கநாதனின் மகன் மகாதேவனின் பங்களிப்பும் கணிசமானது.

முன்றில் இதழைத் தவிர முன்றில் வெளியீடு என்ற வழியில் குறிப்பிடத்தக்க நூல்களையும் குன்றில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக மறைந்த கோபிகிருஷ்ணனின் நாவல் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’( மனநோயாளிகள் குறித்த ஆக்கம்), சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ என்ற சமூகப்பணியாளர்களுக்கான சிரந்த கையேடாக விளங்கத்தக்க சிறுநூல், க.நா.சு வின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ’கலைநுட்பங்கள்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

முன்றில் இதழ்களில் வெளிவந்த கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள், தலையங்கங்கள் போன்றவை இந்தத் தொகுப்பில் தனித்தனிப் பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.

முன்றிலின் தொடக்கம், நோக்கம், போக்கு, இலக்கு, இலக்கியப் பங்களிப்பு என பலவற்றையும் குறித்து ‘முன்றில் இதழ் ஆசிரியரும், பதிப்பாளரும், தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளருமான மா.அரங்கநாதன் (நடப்புவாழ்க்கையின் நெரிசல்களும், அவசங்களும் சிறு நகைச்சுவையுணர்வோடும், தத்துவார்த்தப் பார்வையோடும் முத்துக்கருப்பன் என்ற ‘நாம் எல்லோரு’மாகிய முத்துக்கருப்பன் கதாபாத்திரத்தினூடாய் முன்வைக்கப்படும், பிரதிபலிக்கப்படும் இவருடைய சிறுகதைகள் படிக்கப்படிக்கப் புதிதுபுதான அர்த்தங்களையும், வாசிப்பனுபவத்தையும் தருபவை!) ஆகிய தனக்கேயுரிய மென்தொனியில் தொகுப்பின் முன்னுரையில் விவரித்துள்ளார்.

இறுதி இதழில் மாரிமுத்துவின் ஓவியம் இருக்கும்வரை ‘முன்றில்’ விசாலமாகவே இருந்தது என்ற காவ்யா சண்முகசுந்தரத்தின் கூற்று மிக உண்மையானது. முன்றில் அலுவலகம் இயங்கிவந்த சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு சாந்தி காம்ப்ளெக்ஸ் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்றுகூடி ஒத்திசைவோடும், முரண்பட்டும் விரிவாகக் கலந்துரையாடி நிறைவுணரும் இடமாக விளங்கிய பாங்கு என்றும் நினைவில் நிற்பது.

முன்றில் இதழ்களில் வெளிவந்த 108 கவிதைகள், 21 மொழிபெயர்ப்புக் கவிதைகள், 32 சிறுகதைகள், 74 விமர்சனக் கட்டுரைகள், 3 பேட்டிகள், 12 தலையங்கங்கள், 13 சிறு செய்திகள், 44 மதிப்புரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அடர்செறிவான கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளுமாக இந்தத் தொகுப்பு நவீன தமிழிலக்கியப் போக்குகளைச் சுட்டும் சிறந்ததொரு ஆவணமாக விளங்குகிறது. க.நா.சு, நகுலன்,

பெருந்தேவி, பா.வெங்கடேசன், ரா.சீனிவாசன், என சமகால தரமான எழுத்தாளர்கள் பலரை இதில் ஒருசேர வாசிக்கக் கிடைப்பது நிரைவான அனுபவம்.

கவிஞர் பிரம்மராஜனின் உலோகத் தாலாட்டு, தூராதி தூரம் முதலிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வாசிக்கும்போது அவற்றின்

அடர்செறிவான மொழியும், நடையும், அர்த்தவெளியும் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே இருப்பது தெளிவாகப் புலப்படுகிறது. க.நா.சு வின் உயில் கவிதையும், ஈகாலஜி கவிதையும் எந்நாளும் உயிர்ப்புமிக்கவை.

 

 

Series Navigationகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *