ஆனந்தக் கூத்து

author
0 minutes, 0 seconds Read
This entry is part 34 of 48 in the series 11 டிசம்பர் 2011

நிர்மல்

நான் கண்விழித்தபோது முதலில் என் பார்வையில் விழுந்தது அந்தக் குடிலின் கூரையுடைய அடிப்பகுதி தான். மிகவும் எளிமையாக நடுவில் ஒரு உச்சிப் பகுதியும், அதிலிருந்து கூம்பாகச் சாய்த்து வரிசையாக வேயப்பட்ட ஓலைகளும் எனக்கு ஒரு வண்டிச் சக்கரத்தை நினைவூட்டின. என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்தனர். நான் கண்விழித்ததைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்துடன் முணுமுணுத்துக் கொண்டனர். என் கால்கள் இருந்த திசையிலிருந்து சூரிய ஒளி குடிலுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. குடில் முழுக்கப் பனிப்புகை சூழ்ந்திருந்தது. எனக்கு வலது மற்றும் இடது புறங்களில் இரண்டு சன்னல்கள் இருந்தன. வலது புறமிருந்த சன்னலைக் கவனித்த போதுதான் என் தலைக்கருகே அமர்ந்திருந்த அந்தப் பெரியவரைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, என்னைப் பற்றியும், நான் எப்படி அவ்வளவு பெரிய காட்டினுள் வந்து சிக்கிக் கொண்டேன் எனவும் விசாரிக்க முயன்றார். நான் கண்கள் பாதி மட்டுமே திறக்க முடிந்த நிலையில், மெதுவாக, முனகும் குரலில் கேட்டேன். “எனக்குப் பறக்கக் கற்றுக் கொடுப்பீர்களா?”. அதைக்கேட்ட அவர் என்னையும் அங்கிருந்த மற்றவர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்; அவர்கள் எல்லாரும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.

சில நாட்கள் சென்றன. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் காடு பழக ஆரம்பித்தது. இரண்டு மூன்று முறை தயங்கித் தயங்கி அந்தப் பெரியவரிடம், நான் முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுப் பார்த்தேன். அவர் வழக்கமான தம்முடைய சிரிப்பையே பதிலாகத் தந்துகொண்டிருந்தார். அதனால் நானும் அதைப் பற்றிக் கேட்பதை விட்டிருந்தேன். நான் பெரும்பாலும் அங்கு யாருடனும் அதிகம் பேசுவதில்லை. அவர்கள் என் முதுகிற்குப் பின்னால் என்னைப் பற்றி ஆச்சரியத்துடன் பேசிக் கொள்வதாகத் தோன்றிற்று. அங்கிருந்த சிறுவர்கள் சிலர் எனக்கு நீச்சல் பயிற்றுவித்தனர். நான் மிகவும் சீக்கிரமே கற்றுக் கொண்டுவிட்டேன். ஏனெனில், நான் நீந்துவதை, பறப்பதாகவே கற்பனை செய்துகொண்டேன். மணிக்கணக்கில் அங்கிருந்த சிறிய ஓடையிலேயே நீந்திக் கொண்டிருப்பேன். சுற்றிலும் சிறு சிறு கற்களும் பாறைகளும் சூழ்ந்து, குளிர்ந்த நீருடன் இருந்தது அந்த ஓடை. அதன் ஒரு புறத்தில், வெகு உயரத்தில்லிருந்து தண்ணீர் விழுந்துகொண்டிருந்தது. அந்தக் காட்டில் எந்நேரமும் மழை தூறிக் கொண்டிருந்தது. சில நாட்களில், காலை முதல் இருட்டும் வரை மற்றெல்லாவற்றையும் மறந்து நீந்திக் கொண்டிருப்பேன் நான். அப்போது மனதில் எந்த நினைவும் இருக்காது. இன்னும் இன்னும் என மனது நீந்துவதிலேயே கவனமாயிருக்கும். சமயங்களில், எனக்கு நினைவு திரும்பும்போது மீன்கள் என்னை மொய்த்துக் கொண்டிருக்கும். அந்த மீன்களுடன் சேர்ந்து வளைந்து வளைந்து தண்ணீருக்குள்ளேயே நீந்திக் கொண்டிருப்பேன். நீருக்கு மேலே வரும்போது அங்கே பெரியவரின் பேத்தி என்னை அழைத்துப் போவதற்காக நின்றுகொண்டிருப்பாள். நான் எதுவும் பேசாமல் அவளுடன் செல்வேன்.

ஓர் இரவு நான் சாப்பிட்டு முடித்து விட்டு பெரியவருடைய குடிலின் முன் அமர்ந்திருந்தேன். பெரியவர் வந்து முன்னே அமர்ந்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தார். நான் செய்வதறியாமல் அவர் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களிலிருந்தது புன்னகைதானா எனச் சரியாக ஊகிக்க முடியவில்லை. நேரம் போகப் போக நான் நெளியத் தொடங்கினேன். பின் என்ன நினைத்தாரோ, சட்டெனத் திரும்பிப் போய்விட்டார். நான் குடிலின் உள்ளே சென்று கண்களை மூடினேன். கொஞ்ச நாட்களாக, தினமும் இரவில் நான் கண்டுகொண்டிருந்த அதே கனவு அன்றும் வந்தது. அந்தக் கனவில் என் உள்ளங்கையின் அளவிருந்த ஒரு மீன் நீருக்குள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கைகளால் பிடிக்க முயன்றேன். அது அகப்படாமல் வளைந்து வளைந்து சற்றுத் தள்ளிச் சென்றது. நான் விடாமல் துரத்தியபடி நீந்திச் சென்றேன். அந்த மீன் வேகமாக நீந்தத் தொடங்கியது. நானும் வேகத்தை அதிகரிக்க, முடிவில்லாமல் இந்தத் துரத்தல் தொடர்ந்தது. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது எப்போதுமே எனக்கு நினைவில் இருந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு இரவும் இதே கனவை நான் கண்டுகொண்டிருந்தேன்.

அன்று நீந்திக் கொண்டிருக்கையில், வழக்கத்திற்கு மாறாக மனத்தில் ஏதேதோ நினைவுகள் ஈசல்கள் போலச் சுற்றிக் கொண்டிருந்தன. அத்தனை நாட்களில் அன்றுதான் முதல் முதலாக நான் நீந்துவதை சற்று நேரத்திற்கெல்லாம் முடித்துக் கொண்டேன். நினைவுகளில் அரவிந்தன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். “என்னைத் தனியே விட்டுச் சென்று விட்டாயே நண்பா, திரும்ப வந்துவிடடா”, எனக் கெஞ்சினான். அன்றிரவு என் கனவில் அந்த மீன் வரவில்லை. அவன் தான் வந்தான். மிகவும் பதற்றமாக இருந்தான். தனக்கு ஒரு அரிய இடத்தைப் பற்றித் தெரியுமென்றும் அங்கே, மனிதர்கள் வானில் மிதக்கப் பயிற்சியளிக்கப் படுவதாகவும் என் காதில் கிசுகிசுத்தான். நான் அதை லட்சியம் செய்யவில்லை. இருந்தாலும் தொடர்ந்து எல்லாரிடமும் தன் கண்டுபிடிப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். தனக்குத் தெரியும் என்று சொன்னானேயொழிய எப்படி அதைக் கண்டடைந்தான் என்பதைச் சொல்லத் தெரியவில்லை. அந்த இடம் எங்கிருக்கிறது என்றும் சொல்லத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் அவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது எனக் கூறிப் பரிகாசம் செய்யத் தொடங்கினர். மறுநாள் அவன் என்னைச் சந்திக்கவில்லை. அதற்கடுத்த நாளும். என் மனதில் அவனுக்கென்ன பிரச்சினையோ என்ற கவலை சூழ்ந்து கொண்டது. பின் திடீரென நடுஇரவில் என்னைச் சந்தித்தவன், அடுத்த நாள் தான் செல்லவிருக்கிற இடத்திற்குத் துணையாக வரும்படி வற்புறுத்தினான். நான் யோசித்துச் சொல்வதாகச் சொன்னேன்.

ஆறு நாட்கள் பயணத்திற்குப் பிறகு அந்தக் காட்டை அடைந்தோம். ஆனால் அதன் அருகே வந்ததும் அரவிந்தன் அதனுள் புக மறுத்து விட்டான். ஆனால், இந்த ஆறு நாட்களில் அவனுள்ளிருந்த தீ எனக்குத் தொற்றிக் கொண்டிருந்தது. எனவே நான் காட்டுக்குள் தனியே செல்வதென முடிவு செய்தேன். அரைநாள் காட்டுவழிப் பயணத்திற்குப் பின், இருள் கவியக் கவிய, என்னைப் பயம் தொற்றிக் கொண்டது. திரும்பி நடக்க எத்தனிக்கும் போது தான் கவனித்தேன். வரும்போது இருந்த மன உளைச்சலில் பாதையைக் குறிக்க எந்த அடையாளமும் வைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. இரவு முழுக்க அச்சத்தைக் கிளப்பும் விதவிதமான சத்தங்களோடும் கற்பனை உருவங்களோடும் போராடிக் கொண்டிருந்தேன். பொழுது விடிந்தது. குடிலில் வெளிச்சம் பரவத் தொடங்கியது.

காலையிலேயே குடிலை விட்டு வெளியேறியவன் காடு முழுக்க வெறி பிடித்த விலங்கைப் போல ஓடினேன். எப்படியாவது தொலைந்து போய்விட வேண்டுமென்று நினைத்தேன். மனம் முழுக்க ஒரே கொந்தளிப்பாக இருந்தது. இரவு வந்தது. தொடர்ந்து பகலும் வந்தது. ஒரு வழியாகக் கால்கள் சோர்ந்து போய், ஓரிடத்தில் விழுந்தேன். தட்டுத் தடுமாறி எழுந்து சிறிது தூரம் வந்தேன். வழக்கமாக நான் வருகிற அதே ஓடைக்குத் தான் வந்திருந்தேன். அருவியைப் பார்த்ததும் தான் தாகத்தின் நினைவு வந்தது. அருகே சென்று இரு கைகளாலும் தண்ணீரை அள்ளினேன். ஒரு மீன் கையைச் சுற்றிச் சுற்றி வந்தது. கையை எட்டி அந்த மீனைத் தொடப் பார்த்தேன். சட்டெனத் தள்ளிப் போனது அது. சத்தமாகச் சிரித்துக் கொண்டே நீரில் பாய்ந்தேன்.

மறுநாள் காலை நான் விழிக்கும்போதே பெரியவர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். என்னை அவருடன் எங்கோ அழைத்துச் சென்றார். நான் ஆர்வமேயில்லாமல் அவருடன் சென்றேன். கொஞ்ச தூரம் சென்றதும் நான் கண்ட காட்சியில் உறைந்து போய் நின்றேன். அந்த இடம் முழுக்க வானுயர மரங்கள் பரவியிருந்தன. மேலும் உள்ளே சென்றதும், அங்கு ஒரு மரத்தின் உச்சியில் குடிலோன்று அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டேன். அந்த மரத்தின் அடிமரம் தவிர வேறு கிளைகள் ஏதும் இல்லை. கணுக்கள் ஏதுமின்றி நேர்க்கோட்டில் செங்குத்தாக நின்றிருந்தது. அருகில் செல்லச் செல்லத்தான் அதன் மீதிருந்த குடிலின் வாயிலில் ஆட்கள் சிலர் நிற்பது தெரிந்தது. நான் அங்கேயே நின்றுவிட்டேன். “குதிக்கப் போகிறார்களா என்ன?”. பெரியவர் ஏறக்குறைய என்னைத் தரதரவென இழுத்துப் போனார். அருகில் செல்லச் செல்லத் தான் கீழே குழுமியிருந்த சிறு மனிதக் கூட்டத்தைக் கவனித்தேன். அதில் பெரியவரின் பேத்தியும் இருந்தாள். நான் அருகில் சென்றதும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. நிலம் முழுக்கச் சிவந்து போய் ஈரமாக இருந்தது. எல்லா மரங்களும் செடிகொடிகளும் நீரில் குளித்திருந்தன. மேலே குடிலின் முகப்பில் நின்று கொண்டிருந்தவன் குதித்தான். பாதி விழுந்து கொண்டிருக்கையில், அவன் தன் பாதங்களை விறைப்பது போலிருந்தது. நம் எல்லாருக்கும் எடை குவியும் ஒரு புள்ளி இருக்கும். இந்தப் புள்ளியில் தான் நம்மை நிலத்தை நோக்கி இழுக்கும் விசை செயல்படுகிறது. ஆனால் இங்கு அவன் கால்களை விறைக்கும்போது, அதே புள்ளியில் மேல்நோக்கிய விசை ஒன்று செயல்படுவதாக எனக்குத் தோன்றிற்று. எனவே அவன் கீழே விழும் வேகம் படுப்படியாகக் குறைய ஆரம்பித்தது. நிலத்தைத் தொட ஏறக்குறைய இடுப்புயரம் இருக்கையில் சட்டென அந்தரத்தில் நின்றான் அவன். நிலை கொள்ளாமல் சற்றே தடுமாறியவன் முன் நோக்கி காற்றில் நீந்தினான். கொஞ்ச தூரம் சென்றதும் தரையில் குதித்தான். அங்கிருந்த எல்லாரும் ஆரவாரம் செய்தனர். பெரியவர் என்னைப் பார்த்துப் புன்னகை மறையாமல் சொன்னார். “செல்!”.

கண்கள் அகல விரிய அவரைப் பார்த்தேன். “நானா?”. என் மனதின் குரல் அவருக்கு எட்டியிருக்க வேண்டும். “உன்னால் முடியும். செல்.”, என்று என் தோள்களைப் பிடித்துத் தள்ளினார். அவரின் பேத்தி என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். நான் மலங்க மலங்க விழித்தபடி அவள் பின்னால் சென்றேன். அந்த மரத்தை ஒட்டி ஒரு நார்க்கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதன் அருகே சென்ற பின் திரும்பி அவளைப் பார்த்தேன். இதயம் வேகமாகத் துடிப்பதைப் போல இருந்தது. நெஞ்சு இலேசாக வலித்தது. நா வறண்டது. தொண்டையினுள்ளே ஏதோ ஒன்று கவ்விக் கொண்டிருந்ததைப் போல அடைத்தது. உடல் முழுவதும் வியர்த்து வழிந்தது. “நேற்றிரவும் உன் கனவில் அந்த மீனைத் துரத்தினாய் அல்லவா?”, என்று கூறிச் சிரித்தாள் அந்தப் பெண். நான் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து நின்றுகொண்டிருக்க, அவள் கயிற்றை என் கையில் திணித்தாள். “கூட்டிலிருந்து வெளியேறப் போகும் பறவை நீ! அச்சப் படாமல் செல்”, என்று என் கண்களைப் பார்த்துச் சொன்னாள். பின், கயிற்றுடன் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு, மரத்தின் மேலிருந்த குடிலுக்குள் சென்றேன்.

சட்டென மனம் குழம்பத் தொடங்கினேன். “என்ன இடம் இது? இங்கு இந்த நிமிடத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் யாவும் உண்மையா? அல்லது என் ஆழ்மனதின் கற்பனையா? இதே நிமிடத்தில் நான் வேறெங்காவது பித்துப் பிடித்துப் போய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறேனா? இல்லை, என் ஆசைகளின், ஏக்கங்களின் நீட்சியோ இப்போது நான் காண்பவை? இல்லை ஓர் ஆழ்ந்த கனவா?”

“இங்கு நான் காண்பவை உண்மை இல்லையென்றாலும், அவைகளால் என் மனதில் ஏற்படும் விளைவுகள் உண்மையல்லவா? என்னுடைய அனுபவம் பொய்யாகாதல்லவா? நாம் ஒவ்வொருவர் பிறக்கையிலும் இந்த நிலம் பிறக்கிறது. வானம் பிறக்கிறது. சூரியன், நிலவு,கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், மலைகள், மரங்கள், செடிகொடிகள், ஓடைகள், அம்மா, அப்பா, சக மனிதர்கள் எல்லாமும் தான். நாம் போகையில் இவையாவும் நம்முடனே அழிந்து போகிறதோ?”. ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொண்டேன். ஒரு முறை கீழே பார்த்தேன். நிறங்கள் சரியாக மனதில் பதியாததைப் போலத் தோன்றியது. இலேசாக கண்கள் இருட்டத் தொடங்கின. ஒருவேளை கண்களிலிருந்த நரம்புகளில் இரத்தம் ஏறி, கண்கள் சிவந்து போயிருந்ததால் அவ்வாறு தோன்றியிருக்கலாம். பதற்ற மிகுதியால் கால்களிலிருந்த சத்தெல்லாம் வற்றிப் போய் மிகவும் தளர்வாக உணர்ந்தேன். என்ன ஆனாலும், ஒரு முயற்சியாவது செய்து பார்த்து விட வேண்டுமென நினைத்துக் கொண்டேன். மெதுவாகக் குதித்தேன். குதித்தவுடன் தண்ணீருக்குள் கைகளை வீசி நீரைப் பின்னிழுப்பதைப் போல, கால்களை விரித்து அழுத்தினேன். கால்கள் மேல்நோக்கி இழுக்கப் பட, சாய்ந்த வாக்கில் விழுந்து கொண்டிருந்தேன். உயிர் பயத்தில், கால்களை வேகவேகமாக மறுபடியும் கீழே, நிலத்தைப் பார்க்கும் படி இழுத்து நிறுத்தினேன். மறுபடியும் பலம் கொண்டமட்டும் கால்களுக்குச் சக்தியைப் பாய்ச்சினேன். மகிழ்ச்சி வெடித்துப் பொங்க, தரையை நோக்கிய என்னுடைய வேகம் குறைந்தது. மறுபடியும் கால்களை இறுக்கினேன். அப்படியே காற்றில் நின்றேன் இப்போது. ஆஆவென ஆனந்தக் கூச்சலிட்டபடி மெதுவாக முன்னே சாய்ந்தேன். முன் பக்கம் நகர்ந்த உடல் நிலத்தை அடையும் முன் கால்களைக் கீழ் நோக்கி நீட்டி, இறுக்கினேன். ஓரளவு உடம்பு முன்பக்கம் சாய்ந்த நிலையில் மேல் நோக்கிச் செல்லத் தொடங்கினேன். உடல் முழுக்க, மனம்கொள்ளா மகிழ்ச்சியில் நடுங்கியது. கீழேயிருந்தவர்கள் மறுபடியும் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னே சென்றுகொண்டிருந்தேன். மேகத்தைப் போல வானில் மிதந்து கொண்டிருந்தேன். பரவசத்தில் நரம்பெல்லாம் முறுக்கேறியிருந்தது; பற்கள் கூசின. என்னையுமறியாமல் ஆனந்தத்தில் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். காற்றிலலையும் இறகைப் போல என்னுடல் இலேசாக இருப்பதாய் உணர்ந்தேன். மனதிற்கு நெருக்கமான யாரையாவது கட்டிப் பிடித்துக் கதறியழவேண்டும் போல இருந்தது. கண்களில் நீ வழிந்து கொண்டிருந்தது. உடம்பெல்லாம் சதையாலும் குருதியாலும் இன்றி ஆனந்தத்தால் நிரம்பியிருந்தது; அந்த மகிழ்ச்சி என்னுள்ளிருந்த மாசுகளையெல்லாம் கழுவிவிட்டதைப் போல உணர்ந்தேன். கள்வெறியிலிருந்தவனைப் போல வானில் சுழன்று நடனமாடினேன்.

தூரத்தில் வெண்ணிறப் பறவைக் கூட்டம் சென்றது. என்னைப் பார்த்ததும் அந்தப் பறவைகள் என்னுடன் சேர்ந்துகொண்டன. நான் அவைகளைத் துரத்தி விளையாடியபடி, மேலே மேலேயெனத் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தேன்.

Series Navigationவெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்விருப்பங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *