புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…

This entry is part 9 of 42 in the series 1 ஜனவரி 2012

சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ
எதுவோ நகரும் இக் கணத்தில்
வரையப்பட்ட மண்டையோட்டின்
சாயலில் காண்கிறேன் என்னை
வளைந்து நெளிந்து செல்லும்
இப் பாதையொரு முடிவிலி

இரு மருங்குப் புதர்களிலிருந்தும்
வெளிப்பட்டிருக்கும்
புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்
புதையுண்ட மனித உயிர்கள்
காலக் கண்ணாடியை விட்டும்
இரசம் உருள்கிறது
அதில் தென்பட்ட விம்பங்கள்தான்
புதையுண்டு போயினவோ

வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்
விதியெழுதும் பேனா
எக் கணத்தில் முறிந்திடுமோ
காத்திருக்கலாம்
இங்கு பூதம் காத்த விளக்காய் நான்

கால்களை விரித்தாடும்
எனது நிழல்களில்
ஒரு குழந்தை
ஒரு கொடூர விலங்கு
இணைந்திரண்டும்
ஒரு கணமேனும் விடாது அசைகின்றன
பார்வைக்குத் தெரியாத இழையொன்றால்
பிணைக்கப்பட்டிருக்கிறேனா
தெரியவில்லை

கடந்த காலத்தைக் காட்டிட
பறவைகளிடமில்லை
என்னிடமிருக்கின்றன
தேய்ந்தழியக் காத்திருக்கும் எனதேயான
பாதத் தடங்கள்

சுற்றிவரச் சட்டமிட்ட கூண்டுக்குள்
வளரும் தளிர் நானா
எவ்வாறாயினும் என்னில் வரையும்
எந்த வண்டிலுமில்லை
உணர்கொம்பில் ஒட்டிய தேன்
மண்டையோட்டிலுமில்லை
குருதியின் ஈரலிப்பு

பிறகும்
என் முகம் எதிலும் இல்லை
இருக்கக் கூடும்
இவ் வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்
நானாகவே

– எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – (81)வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *