முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு

This entry is part 13 of 30 in the series 15 ஜனவரி 2012

ஹெச்.ஜி.ரசூல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறையும் கீற்று வெளியீட்டகமும் இணைந்து சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த இலக்கிய உயராய்வுபன்னாட்டு இருநாள் ஆய்வரங்கைநெல்லை பல்கலைக்கழக அரங்கில் 2012 ஜனவரி 9 – 10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது.

துவக்கவிழாவிற்கு தமிழியல்துறைத்தலைவர் பேரா.முனைவர் சு. அழகேசன் தலைமைஏற்றார். பேரா. முனைவர் பே.நடராசன் வரவேற்பு சொல்லிட பண்பாடு ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் தமிழ்மண்ணில் சூபிய வரலாறு சார்ந்த கருத்தரங்க மைய உரையை நிகழ்த்தினார்.

முதல் அமர்வுக்கு சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேரா.கா.முகமது பாரூக் நெறியாளராக செயல்பட்டார்.மூத்த இஸ்லாமிய அறிஞரான இவர் பீரப்பாவின் பாட்ல்கள் தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வறிஞர்களிடம் பெற்று ஆய்வுக்கோவையாக முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர்.

இந்த அமர்வில் சிங்கப்பூர் ஜாமியா அறநிறுவனம் துணைத் தலைவர் முனைவர் எச்.முகமது சலீம் பீரப்பா எழுதிய நூல்களும் பீரப்பாவை எழுதிய நூல்களும் என்ற ஆய்வுரையை மிக விரிவான அளவில் ஞான்ப் புகழ்ச்சி,ஞானப்பூடு,ஞானப்பால், பிஸ்மில்குறம்,திருநெறிநீதம்,ஞான ரத்தினக் குறவஞ்சி உள்ளிட்ட பீரப்பாவின் அனைத்துப் படைப்புகளின் உருவம்,உள்ளடக்கம் பற்றியும் பேசினார்.

ஹதீஸ்கள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற பேரா. கே.பீர்முகம்மது தாரிக் பீரப்பா எழுதிய ஹதீஸ்கள் என்ற தலைப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான ஆய்வுரையை வாசித்தார்.

இரண்டாம் அமர்வு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்புலத்தலைவர் பேரா. முனைவர் பாண்டி நெறிப்படுத்துகையில் நடைபெற்றது.திருவனந்தபுரம் பல்கலைக்கழக துணைப்பேராசிரியர் முனைவர் எஸ். ஹஸீனா பீரப்பாவின் ஞானமணிமாலையின் மொழிநடை என்ற ஆய்வுரையை நிகழ்த்தினார். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி பேராசிரியர் மேரா. ஆர் முகமது ரபீக் பீரப்பாவின் பாடல்களில் பெண்மையின் குறியீட்டாக்கங்கள் என்ற ஆய்வுரையை வாசித்தார்.

மூன்றாவது அமர்வுக்கு பேரா.மு.அப்துல்சமது தலைமைதாங்கினார்.மதுரா கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் முனைவர் மு.அ. ஷாகுல் ஹமீது பீரப்பா இலக்கியங்களில் சூபிமரபு என்ற தலைப்பின் கீழ் உலக வரலாற்றோடு இணைத்து தமிழ்சூபிமரபின் பீரப்பாவை அறிமுகப்படுத்தினார்.

ஜனவரி 10 இரண்டாம் நாள் அமர்வினை தேவதைகளின் சொந்தக்குழந்தைகள் கதைத்தொகுதி, தேவதூதர்களின் கவிதைகள் நாவல் உள்ளிட்டு இஸ்லாமிய அறிவுப்பரப்பில் இயங்கிவரும் ஐக்கிய அமீரகம் ஆய்வாளர் எச்.முஜீப்ரகுமான் நெறப்படுத்தினார்.

ஹெச்.ஜி.ரசூல் பீரப்பாவின் கவிதை உரையாடல்- சொற்பொருளும் மறைபொருளும் என்ற தலைப்பில் ஆய்வுரையை வழங்கினார்.இயல்கடந்த கவிதை() மறைஞான கவிதை(மிஸ்டிக் பொயட்ரி) சார்ந்து பீரப்பாவில் கவிதைகளில் இஸ்லாமிய இறையியல்,வகாபிய வாசிப்புக்கு மாற்றான பன்மை வாசிப்பு முறையியல்கள் சார்ந்து தனது கட்டுரையை முன்வைத்தார்.பீரப்பாவின் பாடல்களுகான உரைமரபு குறித்து பன்னூலாசிரியர் தக்கலை எம்.எஸ்.பஷீர் மிக ஆழ்ந்த நோக்கிலான ஆய்வுரையை வாசித்தார்.

ஐந்தாவதுஅமர்வில் இசையறிஞர் ந.மம்மது நெறிப்படுத்தி தமிழிசைமரபில் பீரப்பாவின் பாடல்கள் குறித்து பாடிக்காட்டினார்.பேரா.ஹாமீம் முஸ்தபா ஞானப்புகழ்ச்சி பிரதியும் பாட்டுமரபும் என்ற பொருளிலும் பேரா.நட சிவகுமார் பீரப்பா பாடல்களில் யோகதத்துவ மரபுகள் என்ற பொருளிலும் ஆய்வுரைகள் வாசித்தனர்.

ஆறாவது அமர்வுக்கு கவி தக்கலை ஹலீமா தலைமை தாங்கினார் சென்னை புதுக்கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் மு.அப்துரசாக் பீரப்பாவின் பாடல்களில் மனிதம் என்ற ஆய்வுரையை வாசித்தார்.

நிறைவு விழாவிற்கு பல்கலைக்கழக ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.ஸ்டீபன் தலைமைதாங்கினார். பீரப்பாகல்வி கலாச்சார அறக்கட்டளை தலைவர் ஏ.முகமதுசலீம் வாழ்த்துரை வழங்கினார்.மதுரைகாமராசர் பல்கலை.நாட்டுப்புறவியல் பேரா. முனைவர் டி.தர்மராஜன் நிறைவுரை வழங்கினார்.நன்றி உரையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள்ர் பேரா.ஹாமீம் முஸ்தபா கூறினார்.

இருநாள் நிகழ்ச்சியின்போதும் இடையிடையே தக்கலை தாஹிர் பீரப்பா பாடல்களைப் பாடினார்.ஒதிஎறியப்படாத முட்டைகள் நாவலாசிரியரும் தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவருமான எழுத்தாளர் மீரான்மைதீன் இருநாள் நிகழச்சியையும் தொகுத்தளித்தார்.

மெளலானாரூமி, இமாம் சாஅதி,பெண்சூபி ராபியத்துல்பஸ்ரிய்யா உள்ளிட்ட சூபிகளின் படைப்பு அனுபவங்களோடு அவர் உரையாடலை நிகழ்த்தியது. ஆய்வரங்கிற்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வியல் மாணவ மாணவிகளும் நிகழ்ச்சியல் பங்கேற்று கலந்துரையாடியது சூபி ஞானி பீர்முகமது அப்பாவின் இஸ்லாமிய இறையியல் தரிசனத்துக்கும், தமிழ் இலக்கிய மரபுக்கும் உரம் ஊட்டுவதாக அமைந்தது.இந்த இலக்கியப் பனுவல்கள் குறித்த வாசிப்பும் மறுவாசிப்பும் நம்மை பண்பாட்டுரீதியாக சூபிமரபின் ஆழ அகலமிக்க சமுத்திரத்தின் ஒரு துளியாக்கிவிடுகிறது.

Series Navigationகிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”நான் குருடனான கதை
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *