திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1

This entry is part 37 of 46 in the series 5 ஜூன் 2011

(A discourse on strategy and organization) – Part 1

(கட்டுரை தொடங்குமுன் ஒரு முன்னுரை:  இந்த இருபது வருடங்களில் இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள் சென்னை உட்பட கண்ட மக்கள்தொகை மற்றும் தொழில் வளர்ச்சி அபரிதமானது. இங்கு எழும்பி நிற்க்கும் சில கட்டிடங்களும், தொழில் நிறுவனங்களும் உலகதரம் வாய்ந்தவை. ஆனால், இந்த நகரங்களில் உள்ள சாலை, குடி நீர், மற்றும் பொது வளங்களோ (கல்வி சாலைகள் உட்பட) வெறும் குப்பை கழிவுகள் என்று சொன்னால் மிகையாகாது. அதாவது, தனியார் வளங்கள், தன் குடும்பம், நிர்வாகம் எல்லாம் எந்தவிதத்திலும் பாதுகாக்கபடவேண்டும்; ஆனால், பொதுவளங்கள், சகமனிதர்கள், சமுதாயம் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை! ஆதங்கபட்டு என்ன பயன்? பொதுவளங்கள் குறித்து தனியார்துறைகளின் பங்களிப்பு என்ன? அதாவது, ஒவ்வொருவரும் தன் வீட்டில் பெருக்கிய குப்பைகளை தன் வீட்டு முன் உள்ள சாலையில் எறிவது போல; முடிவு! குப்பைகள் நகரம் என்ற பெரிய நாகரீகத்தின் குப்பை மேட்டின் உச்சியில் நமது அரசியல் தலைவர்களும், திட்டகுழு உறுப்பினர்களும், பொருளாதார, தொழில் நுட்ப மேதைகளும்!!!.)


நில ஆக்கிரமிப்பை, நில வளங்களின் பொருளாதாரத்தை மைய  சக்திகளாக கொண்ட நிலபிரபுத்துவ மற்றும் காலணிய நாட்கள் முதல் தற்போதைய தொழில் வளர்ச்சி மற்றும் அணு ஆயுத போட்டியை மைய விசைகளாக கொண்ட சர்வதேச அரசியல் காலம் வரையிலும், பழங்கால பண்டமாற்று வணிக காலம் தொடங்கி, தற்கால உலகளாவிய வர்த்தகம் மற்றும் வியாபார நிறுவனங்களின் காலம் வரையிலும், திட்டமிடல் குறித்தும், திட்ட நோக்கங்கள் செயல்படுத்துவதற்க்கான அமைப்புகளை (political, social, economic, cultural, business organizations and institutions) உருவாக்குவது குறித்தும் பல சிந்தனையாளர்கள் தங்கள் கருத்தாக்கங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சிந்தனைகள், ஆய்வுகள், பல்வேறு தளங்களிலும், கருத்தியல் சாதனங்களின் துணையுடனும், பொருளாதார, சமூக, மானுட-மேம்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் வழங்கபட்டிருக்கின்றன. இருப்பினும், திட்டத்தின் தொடக்கம் எது? திட்டமிடல் என்ற வினையின் மூலகாரணம் எது? தனிமனித அகமா? ஆளுமையா? அல்லது ஒரு சமூக அமைப்பியல் காரணமாக எழும் விளைவா? படிமமா? ஒரு சமூகத்தில், அல்லது குழுவில், அல்லது நிர்வாக அமைப்பில் திட்டமிடல் என்ற வினை தனி மனித ஆளுமையினாலோ அல்லது அமைப்பியல் காரணமான விளைவாகவோ, அல்லது தனிமனித விருப்பமும் அமைப்பியல் கோட்பாடுகளும் இணைந்து எழும் காரியமாகவும் அமையலாம்.


இந்த திட்டமிடல் குறித்த உரையாடலை தொடரும் முன் உள்ள ஒரு சில கேள்விகள்?  இயற்க்கையாகவே சில சமூகங்களில் திட்டமிடலும், திட்டங்களை செயல் ஆற்றுவதற்க்கும் ஆன ஆளுமையும், சமூக கட்டமைப்பும் அமைந்துள்ளதா? மனித சமூகங்களை போலவே மற்ற விலங்கு இனங்களிலும் திட்டமிடல் நிகழ்கிறதா?  சமூக அறிஞர்களால் வெகுவாக மேற்கோள் காட்டபடும் “தேனீக்கள், கரையான்கள், எறும்புகள்” போன்ற விலங்கினங்களில் நிகழும் திட்டங்களும், திட்ட நிகழ்வுகளும், தன்னிச்சையாகவே (அனிச்சை செயல் – instinctual-preprogrammed) நிகழும் காரியங்கள். இத்தகைய விலங்கினங்களின் குழுக்களிலும், அமைப்புகளிலும்  நிகழும் ஒழுங்கமைவுகளை, கட்டுக்கோப்பினை, உற்பத்தி-சேமிப்பு முறையை உதாரணமாக கொண்டு மனித சமூகங்களும், குழுக்களும் பாடம் கற்று கொள்ள முடியுமா என்ன? இத்தகைய விலங்கினங்களில் நிகழும் கட்டமைப்புகள் – பரிணாம வளர்ச்சியினால் (evolutionary selection/adaptation) ஏற்பட்டவை என ஏற்றுகொள்வோமாயின், அத்தகைய கட்டமைப்புகளை மனித இன அமைப்புகளுக்கு உதாரணமாக கொள்வதில் உள்ள சிக்கல்கள் என்ன?


உதாரணமாக, சொல்லபட்ட இவ்வினங்களில் காணப்படும் சுய-உள்- கட்டுப்பாடு (internal-self-regulation), உழைப்பை பகுத்தல் என்ற அணுகு முறைகள் நமக்கு உணர்த்தும் நல்ல பாடங்கள் எனலாம். ஆனாலும், இவ்வினங்களில் உள்ள கட்டமைப்புகளில் உள்ள சரிவான தட்டடுக்குமுறைகள் (steep hierarchies), மேல்-கீழ் அடுக்கு மட்டுமல்லாது அடிமைக்குழுக்களையும் அடிப்படையாக அமைந்த கட்டுகோப்புகள் (disciplines), மனித அமைப்புகளுக்கு ஒவ்வாத, ஏற்றுகொள்ள முடியாத கோட்பாடுகள். ஒரு கூட்டுமுயற்சியினால் ஆன கட்டமைப்புக்கு உழைப்பை-பகுத்து அதில் தனிமனிதர்கள் தேர்ச்சி (specialization and division of labor) பெறுதல் மிகவும் அடிப்படையான ஒன்றுதான். ஆனால், அது அடிமைத்தனத்திற்க்கும், மேல்-கீழ் கோட்பாட்டின் படி அமைந்த தட்டடுக்குமுறைகளையும் கொண்ட அமைப்புகளை எழுப்புமாயின், அது மனித இனத்துக்கு எந்த விதத்திலும் ஒவ்வாததாகும். மனிதன் இயற்க்கையிலேயே விடுதலையை வேட்கையாக கொண்டவன். இது எந்த ஒரு இன, சாதி, நிற, மொழி, தேசியத்தை சார்ந்த மனிதனுக்கும் பொருந்தும்.


விடுதலையை வேட்கையாக, ஞானமார்க்கமாக கொண்டு பரிணாமத்தால் வளர்ந்துள்ள மனிதனை எந்த ஒரு பொருளாதார, வியாபார நலன்களை கருத்தில் கொண்டு அமைக்கபட்ட கட்டமைப்பும் விலங்கிட முடியாது, கூடாது. அத்தகைய கட்டமைப்பை (சந்தையென்று சொன்னாலும்) எந்த ஒரு மனித அற நெறிக்கோட்பாடுகளினாலும் நியாயபடுத்த முடியாது. ஆனால், விதி? மனிதன் தான் உருவாக்கிய பெரும்பாலான வணிக, பொருளாதார, அரசியல் அமைப்புகளினால் (சந்தை பொருளாதாரமாயினும் சரி, ஏதேச்சதிகார உழைக்கும் மக்களின் அரசாகினாலும் சரி, மதத்தலைமையை மையமாக கொண்ட அரசாகினாலும் சரி-இதே நிலைதான்) தனக்கு விலங்கிட்டு கொண்டதோடு, மற்ற  எல்லா சகமனிதர்களுக்கும் விலங்கிட்டு விட்டான் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. மொழியை அடிப்படையாக கொண்டு இயற்க்கையாக எழும் சமூக கட்டமைப்பை ஏற்று கொண்டாலும், அத்தகைய அமைப்பு ஒரு சிலரின், அல்லது ஒரு சில வர்க்க நலன்களை காப்பத்ற்க்கு உதவும் கருவியாக செயல்படுதலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.


இங்கு, ஜெப்ஃபர்சன் சொன்னதை சிறிது மாற்றி சொல்லலாம். ஜெப்ஃபர்சன் சொன்னது: “It is self-evident truth that all men are created equal”. என் கருத்து: “May be it is true that men are born different in terms of physical and psychological attributes, but it is self-evident truth that all men are born free and equal”.  இந்த அடிப்படையில், நவீன யுகத்தில்,  ஒரு நிறுவனத்தையோ, கட்டமைப்பையோ, ஒரு அரசியல் அமைப்பையோ கட்டி எழுப்புவதற்க்கான மைய இழைகள் (strings), கோட்பாடுகள் (principles) எவையாக இருக்க முடியும்? அது ஆயுத பலம் ஆக இருக்க வாய்ப்பில்லை. மூலதனமாகவும் இருக்க முடியாது, கூடாது. ஏனெனில், இந்த நூற்றாண்டு வரையிலான வரலாற்று அடிப்படையில், மூலதனம் உழைப்பின் மீது ஏற்றி வைக்கபட்ட சுமையாக ஆகிவிட்டது. உதாரணமாக, பெரும்பாலான சந்தை-பொருளாதார கோட்பாடுகளை அடித்தளமாக கொண்ட வியாபார (ஏன் அரசியல் கூட) நிறுவனங்களின் அதிகார மையம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் வசம் உள்ளது. ஆனால், இத்தகைய அமைப்புகளில் மாற்றம் தெரிகிறது, தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக, இது மாறித்தான் ஆக வேண்டும் எனலாம். நவீன யுகத்தில், வியாபார தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான 1) பண மூலதனம், பெரும்பாலான உழைக்கும் மக்களின் சேமிப்பால் ஆனது; 2) தொழில்நுட்ப மூலதனம், உழைப்பவர்களின் அறிவாற்றலால் ஆனது.


மேற்சொன்ன விவாதங்களின் அடிப்படையில், நவீன அரசியல், பொருளாதார, வியாபார அமைப்புகளை உருவாக்குவதற்க்கான மைய இழைகள், கோட்பாடுகள் என நான் கருதுவது: 1) அறம் (principles of justice), 2) பரவலாக்கபட்ட சம-அதிகாரம் (balanced power structure), 3) பிரதிநிதித்துவம் (representativeness), 4) மனித கண்ணியம் (human dignity) 5) பாதுகாப்பு வலை (safety net), 6) சமூக மற்றும் இயற்க்கை நலன்.


இந்த பிண்ணணியில், திட்டம் குறித்தும், திட்டமிடல் குறித்தும் ஆன உரையாடலை தொடர்வோம். என் கருத்தில், “A good strategist is a non-conformist” or ” A good strategy is naturally a non-conforming one”. இந்த கருத்து தனிமனித ஆளுமையை (விருப்பு/வெறுப்புகளை) கருத்தில் கொண்டு சொன்னது அல்ல; ஒரு கட்டமைப்பை, ஒரு கூட்டுமுயற்சியிலான அமைப்பை, ஒரு நிறுவனத்தை உருவாக்கி நிர்வகிப்பதற்க்கான தனிமனித அல்லது குழு முயற்ச்சியினை, திறனை, திட்டத்தை குறிக்கும் பொருட்டு சொல்லபட்டதாகும். இந்த விளக்கம் முக்கியமானது என நினைக்கிறேன்; அப்படி இல்லாவிடில், எல்லாவித சுய லாபத்தை அடிப்படையாக கொண்ட தன்முனைப்புகளும் (all kinds of entrepreneurial actions, including stealing…!!!), “நல்ல திட்டம்” என்ற தகுதியை அடைந்துவிடும்.


திட்டம் உருவாக அடிப்படை மூல-காரணங்களாக நான் கருதுவது: “தனிமனித மற்றும் சமூக அழகியலும், ஒரு சமூக மற்றும் தனிமனித தளத்தில் நிலவும் நிறைவின்மை, குழப்பங்களில் இருந்து மீண்டு நிறைவையும், புதிய சமன் நிலையையும் அடைய மேற்கொள்ளபடும் முயற்சிகளும்தான் (dissatisfaction with status-quo)”.  அழகியல்-உணர்வு ஒரு சமூகத்தின் அகவளர்ச்சியை சார்ந்ததினாலும், ஆளுமையை மையமாககொண்டதினாலும், திட்டமிடல் என்பது ஒரு குழுவோ, சமூகமோ தனது எதிர்காலத்தை விரும்பியபடி அமைத்துகொள்வதற்க்கான மரபியல் தன்மை எனலாம் (organizational DNA). மனித குழுக்களை/சமூகத்தை பொருத்த மட்டில், “திட்டமிடல்” என்பது, இயற்க்கையோடு உறவு/பரிமாற்றம் கொண்டு ஒரு புதிய உலகத்தை அமைத்து தன்னை சூழ்ந்திருக்கும் தளைகளில் இருந்து விடுதலையடைந்து ஒரு அர்த்தமுள்ள வாழ்வை (meaning seeking) உருவாக்க விழையும் மரபியல் கூறு என்றால் மிகையாகாது.


இந்த அடிப்படை காரணங்கள் தவிர, திட்டமிடல் என்ற வினை நேர்வதற்க்கான தூண்டுகோள், ஊக்க காரணங்கள் என வேறுசில காரணங்களும் உண்டு. ஒரு பெரிய சமூக தளத்தில் மேற்கொள்ளபடும் திட்டங்கள், திட்டமிடல் நிகழ்வுகள் அனேகமாக, பொருளாதார பயன்பாட்டுக் கொள்கையினால் (economic/materialistic utilitarianism) விளைவதாகும். அதாவது “பெரும்பாலான மக்களுக்கு, பெரும்பாலான வளங்களை, வாழ்வியல் ஆதாரங்களை வழங்குவதற்க்கான” அமைப்பை ஏற்படுத்த விழையும் திட்டங்கள். மக்களாட்சி,  சமத்துவம், கம்யுனிசம் போன்ற தத்துவம் சார்ந்த அரசியல் அமைப்புகளை, தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் இந்த பயன்பாட்டுக்கொள்கையின் அடிப்படையில் அமைந்தது எனலாம். பொது நலன்களுக்கு இட்டு செல்லும் திட்டங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி நிர்வகித்தல்.  இந்த நோக்கில் திட்டமிடல் என்பது ஒரு பொருளாதார செயல்பாடு (economic action for more public goods). அதாவது, பொருள், உற்பத்திமுறை, நிர்வாக அமைப்பு, முதலீடு மற்றும் உபரியை பங்கீடு செய்யும் முறை, உபயோகிப்பாளரின் பலன்கள், தரம், விலை, இயற்க்கை வளங்களின் மீதான தாக்கம் எல்லாம் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் அமைவதே.


இதற்க்கு நேர்மாறாக, தனிமனித சொத்துரிமை (property rights) என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு, சுயவளர்ச்சி, சுயலாபம் மற்றும் பொருள் ஈட்டுவதற்க்கான நோக்கில் அதற்க்கான அதிகாரத்தையும், வளங்களையும் தன்வயபடுத்தும் பொருட்டு அமைப்புகளை உருவாக்கவும் திட்டமிடல் தொடங்குகிறது எனலாம். இந்த நோக்கில், திட்டமிடல் என்பது ஒரு வியாபார/வணிக செயல்பாடு (business action). இங்கு, ஒன்றை நினைவில் கொள்வோம்: ஒரு சமுதாய அமைப்பில், பொது நலன்கள் இன்றி, தனி-சொத்துரிமை இயங்க முடியாது என்பதை. That is, “without public goods, private capital/goods cannot survive” “without a public street, there is no scope for private shops”. இந்த நோக்கில், தனி-சொத்துரிமையும், பொது நலன்களை நோக்கியே செயல்பட வேண்டும்.


இந்த இரண்டிலும் சாராத வகையில், தொழில்னுட்பம்/ அறிவுசார் நிறுவனங்களை ஏற்படுத்தி தனது சுய தொழினுட்ப திறன் சார்ந்த அடையாளங்களை சமூகத்தில் பதிக்க விழையும் தன்முனைவாளர்களின் திட்டங்கள் (Technocratic/knowledge action). இதைப்போலவே, சமூக/இயற்க்கை நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்த விழையும் நிறுவன அமைப்பாளர்கள், அரசியல் விழிப்புணர்வாளர்கள்  (institutional entrepreneurs).

 

Series Navigationதண்டனை !பிஞ்சுத் தூரிகை!
author

செந்தில்

Similar Posts