In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)
This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஷைன்சன்

inthemoodforloveஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதைப் போன்று திரைப்படம் காட்சியில் சலனங்கள் மூலமாகவும், பின்னணியில் தவழும் இசையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும் தனது கலைத்தன்மையை வெளிப்படுத்திக் கொள்கிறது.

 

திரைக்கலையில் முழு வெளிப்பாடுகளில் In the mood for love திரைப்படமும் ஒன்று. அனைத்துத் திரைக்கலைத் தன்மைகளையும் சரியான முறையில் கலந்து கொடுத்ததை இயக்குநர் வொங்-கர்-வாயின் மாபெரும் வெற்றி எனலாம்.

 

“அது அமைதியற்ற நேரம். அவன் அருகில் வர ஒரு வாய்ப்பளிப்பதற்காக அவன் தலை கவிழ்த்து நின்றாள். அவனுக்கோ அதற்குத் துணிவில்லை. அவள் திரும்பி, விலகி நடக்கிறாள்”, திரையில் இவ்வார்த்தைகளுடன் அத்திரைப்படம் துவங்குகிறது.

 

1960களின் ஹாங்காங் குடியிருப்பு ஒன்றை நாம் பார்க்கிறோம். இரு குடும்பங்கள் அக்குடியிருப்பில் புதிதாகக் குடியேறுகின்றன. இரு குடும்பங்களுமே இளம் தம்பதிகள் மட்டும் தான். அவர்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை.  திரு. சாவ்வை மட்டுமே நாம் திரையில் பார்க்கிறோம். திருமதி. சாவ்வைக் காணோம். திருமதி.சான் மட்டுமே திரையில் வருகிறார். திரு.சானை நாம் பார்க்கவில்லை. இதற்கான காரணம் நமக்கு விரைவில் தெரிகிறது. அவ்விருவரும் காட்சிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதும் தெரிகிறது.

 

சான் அடிக்கடி வெளிநாட்டுக்குச் சென்று விடுகிறார். திருமதி.சாவ்வும் அடிக்கடி வெளியூருக்குப் போகிறாள். திருமதி.சானும், திரு.சாவ்வும் தனியாக விடப்படுகிறார்கள். அவர்களது தனிமையைத் தொடர்ந்து சில காட்சிகளில் நிறுவுகிறார் இயக்குநர். திருமதி.சான் தனியாக நூடுல்ஸ் வாங்கப் போகிறார். சாவ் தனியாகக் கடையில் உணவருந்துகிறார். பின்னணியில் இசை ஒலிக்கிறது. (இசையைத் திரையில் பயன்படுத்துவதில் இப்படத்தை விஞ்சுவது மிகக் கடினம்). ஷிகேரு உமேபயாஷியின் Yumeji’s Theme தனிமையையும், ஏக்கத்தையும் இசை மொழியால் நமக்கு உணர்த்துகிறது. இத்திரைப்படத்தில் எட்டு இடங்களில் இவ்விசை உபயோகப்படுத்தப்படுகிறது. அனைத்துக் காட்சிகளுமே ஏக்கத்தையும், தனிமையையும், நிராசையையும் உணர்த்தி நிற்கின்றன.

 

அடுத்ததாக இவ்விசை வரும்போது அவர்களிருவரும் நேருக்கு நேர் வந்து ஒரு தலையசைப்புடன் விலகிப் போகிறார்கள். இக்காட்சியில் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் டாய்லின் கேமரா ஒரு மின்விளக்கொளியில் மழை பெய்வதை ஒரு கவிதையாகப் பதிவு செய்கிறது. அவர்களிருவரும் ஒரு உணவகத்தில் சந்திக்கிறார்கள். தங்களது துணைவர்கள் திருமணங்கடந்த உறவில் ஈடுபட்டிருப்பதை அச்சந்திப்பில் இருவரும் அறிந்து கொள்கிறார்கள்.

 

தொடர்ந்து தங்களின் துணைவர்கள் எப்படி சந்தித்து, காதலிக்கத் தொடங்கினார்கள் என்பதை யோசிக்கும் அவர்கள், அதனைத் தாங்களே உணர வேண்டுமென்று அவர்களைப் போலவே நடிக்க முயல்கிறார்கள். தாங்களிருவரும் அவர்களைப் போல் மாறப் போவதில்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களிருவருக்குள்ளும் ஒரு உறவு ஏற்படுகிறது. அவர்கள் பிரிகிறார்கள். அப்பொழுதுதான் தங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் உறவின் அழுத்தம் அவர்களுக்குப் புரிகிறது. ஆனாலும் பிரிந்தே போகிறார்கள்.

 

திரு.சாவ் வேலைக்காக சிங்கப்பூருக்குப் போகிறார். சான் குடும்பமும் அக்குடியிருப்பை விட்டு வெளியேறுகிறது. சில வருடங்கள் கழித்து வெவ்று நாட்களில் சாவ்வும், திருமதி. சானும் அக்குடியிருப்புக்கு வருகிறார்கள். இருவருமே மீண்டும் சந்திக்க நினைக்கிறார்கள். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலுக்குச் செல்லும் சாவ் அக்கோவில் சுவரில் இருக்கும் ஒரு துளையில் தன் இரகசியத்தைச் சொல்லி அத்துளையை மண் கொண்டு மூடித் திரும்புவதோடு திரைப்படம் முடிகிறது.

 

இசையும், காட்சியமைப்பும், ஒளிப்பதிவும் சேர்ந்து இத்திரைப்படத்தை ஒரு திரைக்கவிதையாக மாற்றுகின்றன. குறிப்பாக Yumeji’s Theme இசையும், கியூப பாடகரொருவரின் Quizas, quizas, quizas (இருக்கலாம், இருக்கலாம், இருக்கலாம்) பாடலும் இத்திரைப்படத்தை முற்றாக வேறொரு புதிய பரிணாமத்துக்கு எடுத்துச் செல்கின்றன. மொத்தத்தில் In the mood for love திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு திரைக்கவிதை.

 

 

 

_

Series Navigation

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *