நரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்

Spread the love

ஒன்று

இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து இந்திய ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய சிறுபான்மை மதத்தவர்களின் அடிமைகளைப் போலவே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பெரும்பான்மையினரான ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளைக் கூடச் செய்யவிடாமல் தடுக்கப்படுவது அவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம்.

இதுவரை இந்தியாவை ஆண்ட அத்தனை அரசியல்கட்சிகளும் ‘வாக்குவங்கி’ அரசியலை மட்டுமே நடத்தியிருக்கின்றன. சிறுபான்மையினரைப் போல மத அடிப்படையில் அல்லது தங்களுக்குச் சாதகமான கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டுப்போடும் மனப்பான்வையற்ற பெரும்பான்மையினரை அந்த அரசியல் கட்சிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை என்பதோடு அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளையும் பறித்துக் கொண்டார்கள். உலகில் எங்குமே இதுபோன்றதொரு கேவலம் நிகழ்ந்ததில்லை.

பெரும்பான்மையினரை அடக்கி ஆண்ட அல்லது ஆள நினைக்கும் சிறுபான்மையினருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சிங்களர்களால் இலங்கைப் பிரச்சினை உண்டாகியது வரலாறு. தென் வியட்நாமில் நிகழ்ந்ததுவும் அதுவே. தமிழகத்தில் அரசு இயந்திரத்தில் ஊடுறுவியிருக்கும் சிறுபான்மையினரான இவாஞ்சலிச கிறிஸ்தவ அயோக்கியர்கள் தமிழக ஹிந்துக்கள் காலம் காலமாகக் கொண்டாடி வந்த தங்களின் பண்டிகைகளை, திருவிழாக்களை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்த முயன்று கொண்டே இருக்கிறார்கள். அது எத்தனை பெரிய பேராபத்தை தங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிற உணர்வே இல்லாமல்.

இன்றுவரை எந்த தமிழக அல்லது இந்திய ஹிந்து இயக்கமாவது கிறிஸ்தவ, இஸ்லாமியப் பண்டிகைகளைக் கொண்டாட ஏதேனும் இடையூறுகள் செய்திருக்கிறதா? உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். ஆனால் சிறுபான்மையினரான நீங்கள் எதற்காக பெரும்பான்மையினரின் பண்டிகைகளைத் தடைசெய்ய முயல்கிறீர்கள்? அந்தப் பெரும்பான்மையினர் பொங்கியெழுந்தால் உங்கள் நிலைமை என்ன?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அங்கு வாழும் “எல்லா இன, மத” மக்களுக்கும் அவர்களின் பண்டிகைகளை, மதச்சடங்குகளை எந்த இடையூருமின்றிக் கொண்டாடும் உரிமை இருக்கிறது என இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனை யார் குலைக்க முயன்றாலும் ஏற்படும் பின்விளைவுகள் அதிபயங்கரமானவையாகவே இருக்கும்.

இந்தியா எல்லோருக்குமானது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என எல்லோருக்கும் சொந்தமானது. அவரவர் மதப் பண்டிகையை அவரவர் கொண்டாடுவோம். ஒருவொருக்கொருவர் மனமுவந்து வாழ்த்துவோம். அப்படித்தான் இன்றுவரை இந்தியா இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் குறுகிய மனப்பான்மையுடனும், மதவெறியுடனும் அனாவசியமாக குளவிக் கூட்டில் குச்சியை விட்டு ஆட்டினால் நஷ்டம் அனைவருக்கும்தான்.

—–
இரண்டு

ஆலயங்களில் நிர்மாணிக்கப்படும் சிலைகளை மனம்போன போக்கில் வடித்து நிர்மாணிக்க இயலாது. அதற்கென உருவாக்கப்பட்ட கடினமான அளவுகோள்களும், முறைகளும் இருக்கின்றன. பரம்பரைத் தொழில் செய்கின்ற சிற்பிகளுக்கு அது மனப்பாடமாகத் தெரியும் என்றாலும் துரதிருஷ்டவசமாக அதனை எவரும் ஆவணப்படுத்தி வைக்க நினைப்பதில்லை.

இன்றைக்கு அழிந்துவரும் கலைகளில் ஒன்றாக சிற்பக்கலையும் மாறியிருக்கிறது என்பது வருத்தம்தரக் கூடியதொரு விஷயம். சிற்பிகளை ஆதரிப்பாரும் குறைந்துவருகிறார்கள். இன்றைக்கு அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழக ஆலயங்களை புனர் நிர்மாணம் செய்து காக்கவல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள் தமிழக ஸ்தபதிகளும், சிற்பிகளும் மட்டும்தான். ஆனால் அரசோ அல்லது அற(மற்ற)நிலையத் துறையோ அவர்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் கேட்காமல் மனம்போனபடி புனர் நிர்மாணம் என்கிற பெயரில் நமது பேராலயங்களைச் சிதைத்து வருகிறார்கள்.

இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுமட்டுமல்லாமல், எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு செயல் என்பதில் சந்தேகமில்லை. கற்களால் கட்டப்பட்ட தமிழக ஆலயங்கள் கோடையின் வெப்பத்தில் விரிந்தும், குளிர்காலத்தில் சுருங்கும் தன்மையும் கொண்டவை. அதனை மனதில் வைத்தே தமிழக ஆலய கோபுரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால் தமிழக அற(மற்ற)நிலையத் துறை மூடர்கள் புனர் நிர்மாணம் என்கிற பெயரில் விரிந்து, சுருங்கும் தன்மையற்ற கான்க்ரீட்டை உபயோகித்து வருகிறார்கள். இப்படிச் செய்வதால் ஆலய கோபுரங்கள் மெல்ல வலுவிழக்கும். பின்னர் இடிந்துவிழும். தமிழக ஆலயங்களின் சிறப்பை அறியாத திராவிடப் புண்ணாக்கர்களின் கையிலும், நமது ஆலயங்களை சாத்தான்களின் இருப்பிடம் எனக் கூறி வெறுப்பைக் கக்கும் அன்னிய மதத்தவர்களின் கையிலும் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டு வருகின்றன என்பது நிதர்சனமான உண்மை.

இந்த நிலை மாற வேண்டும். எத்தனை விரைவாக தமிழக ஆலயங்கள் அரசின் பிடியிலிருந்து விடுபடுகின்றனவோ அத்தனைக்கத்தனை நல்லது. இல்லாவிட்டால் இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழக பேராலயங்கள் அழிவுண்டு அந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். இனிமேலும் புனர் நிர்மாணங்கள் ஆலயங்களைக் குறித்த அறிவுடைய ஸ்தபதிகளாலும், சிற்பிகளாலும் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இதற்கென பொது நல வழக்குகள் போடப்பட வேண்டும்.

இன்றைக்கு புனர் நிர்மாணம் என்கிற பெயரில் ஆலயங்களை அழியச் செய்பவர்களின் பின்னனிகள் ஆராயப்பட வேண்டும். அதற்கான நேரம் இன்றைக்கு வந்திருக்கிறது. ஆலயங்களை அரசின் பிடியிலிருந்து மீட்டே ஆகவேண்டிய கட்டாயமும் இன்றைக்குப் பெரும்பாலோரால் உணரப்பட்டிருக்கிறது. இதனை முன்னெடுத்துச் சென்றே ஆகவேண்டும். வேறு வழியேயில்லை.

“சிற்ப சாஸ்திரம்” குறித்து எழுதப்பட்ட தமிழ் நூல்கள் அழிந்துவிட்டன என்றாலும் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூல்கள் இன்றைக்கும் இருக்கின்றன. அவை மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கப்படுதல் வேண்டும். ஆனால் எவருக்கும் அதில் ஆர்வம் இருப்பது போலத் தெரியவில்லை. கீழே இருக்கும் இணைப்பு சிற்ப சாஸ்திரம் குறித்தானதொரு ஆங்கில மொழிபெயர்ப்பு. சமீப காலங்களில் சிற்பிகள் என்னுடைய நட்பு வட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்காக இது.

தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் இருந்தால் தயங்காமல் பகிர வேண்டுகோள் விடுக்கிறேன்.

இணைப்பு


மூன்று

ஜனங்களை மகிழ்விக்கப் பிறந்தவர்கள் அகால மரணமடைவது ஒரு துயரமென்றால் விபத்தில் அடிபட்டு முடங்கிப் போவது அதனையும் விடத் துயரமானது. முதலாவதற்கு திரைப்பட பின்னனிப்பாடகி ஸ்வர்ணலதாவையும், மாண்டலின் ஸ்ரீனிவாசையும் சொல்லலாம். இரண்டுபேர்களுக்கும் இறக்கிற வயதில்லை. விதி அவர்களிருவரையும் இளமையிலேயே இறக்கச் செய்துவிட்டது. கார் விபத்தில் அடிபட்டு ஏறக்குறைய வெஜிடபிள் நிலையில் இருக்கிற, எனக்கு மிகவும் பிரியமான மலையாள ஹாஸ்ய நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். இனிமேல் அவரால் ஒருத்தரையும் சிரிக்க வைக்க முடியாது.

பிரபல வயலின் கலைஞர் பாலபாஸ்கரும் அவரது மனைவியும் நேற்றைக்கு திருவனந்தபுரத்திற்கு அருகில் நிகழ்ந்த சாலைவிபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஒரு ஸ்ட்டேட்டஸ் படித்தேன். மிகவும் துயரமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடன் பயணித்த அவர்களது இரண்டு வயது மகள் விபத்தில் இறந்துவிட்டதாகவும் தெரிகிறது. பதினெட்டாண்டுகள் காத்திருந்து பெற்ற மகள் ஒரே ஒரு நொடியில் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

விதிமுறைகள் பின்பற்றப்படாத, பாதுகாப்பற்ற இந்தியச் சாலைகள் குறித்து நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. இந்தச் சாலைகளில் காரோட்டுவதே ஒரு சாகசம்தான். விபத்தில்லாமல் வீடு வந்து சேர்ந்தவர்கள் பாக்கியவான்கள்.

எனக்கென்னவோ பாலபாஸ்கரும் அவரது மனைவியும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்திருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது. சீட் பெல்ட் அணிந்தவர்கள் அப்பளமாக நொறுங்கிய காரிலிருந்து சிறு, சிறு காயங்களுடன் தப்பிய விபத்தொன்றை நான் பார்த்திருக்கிறேன். பாதுகாப்பிற்கு அவசியமான காரியங்களை உதாசீனப்படுத்தும் இந்தியர்கள் என்னை கோபமுறச் செய்கிறார்கள் என்றாலும் என்னால் என்ன செய்ய முடியும்? அவனவனுக்கு அந்த அறிவும், அக்கறையும் வேண்டும். அடுத்தவான் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?

பாலபாஸ்கரின் மகள் அனேகமாக அம்மாவின் மடியில் உறங்கிக் கொண்டு வந்திருக்கலாம். ஒரு யூகத்தில் சொல்கிறேன். மேற்கத்திய நாடுகளில் ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அவர்களுக்கான சீட்டில் அமர்ந்து, சீட் பெல்ட் போட்டுக் கொண்டு காரின் பின் சீட்டில் “மட்டுமே” பயணம் செய்ய வேண்டும் எனச் சட்டங்கள் இருக்கின்றன. மீறினால் அபராதம் போட்டுத் தீட்டி விடுவார்கள். சில சமயங்களில் பெற்றோர்கள் ஜெயிலுக்குக் கூடப் போக நேரிடும். இந்தியாவில் அதுமாதிரியான கட்டுப்பாடுகள், சட்டங்கள் எதுவுமில்லை என்றாலும் அதனைச் செய்ய வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு.

வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கரும் அவரது மனைவியும் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கீழே, பெங்களூர் வினாயக சதுர்த்தி விழாவில் மாண்டலின் ஸ்ரீனிவாசும், பாலபாஸ்கரும் அளித்த ஒரு பழைய நிகழ்ச்சி.

Series Navigationஉன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்