முன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்

Spread the love

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

எட்வர்ட் திரிஃபீல்ட் இரவில் தான் எழுதுவார். ரோசிக்கு ஆகவே ராத்திரியில் சோலி கீலி எதுவுங் கிடையாது. ராத்திரியானால் அவள் யாராவது சிநேகிதர்களுடன் ஹாயாக வெளியே கிளம்ப சௌகர்யமாய் இருந்தது. வசதியாய் வாழ அவளுக்கு இஷ்டம். குவன்டின் ஃபோர்டின் கையில் துட்டுச் சக்கரம் தாராளமாய்ப் புழங்கியது. அவன் வாடகைக்காரை வரவழைத்து, இராத்திரி விருந்துக்கு என்று கேட்னருக்கோ சவாய்க்கோ அவளை அழைத்துப் போவான். அவளும் இருந்ததில் படாடோபமான உடையை அணிந்து அவனுடன் கிளம்பினாள்.

அந்த ஹாரி ரெட்ஃபோர்ட், கையில் சல்லி கிடையாது அவனிடம், என்றாலும் வாய்ச் சவடால், குபேரனுக்கு கொழுந்தனாட்டம். அவன் தரத்துக்கு ஜட்கா பிடித்து ரொமனோ அல்லது அதைப்போன்ற சின்ன உணவகங்களுக்கு அவளை அழைத்துப் போய்வந்தான். சோகோ பகுதியில் அப்படி சின்ன விடுதிகள் நவீன அடையாளங்களுடன் பிரபலமாகி வந்தன. (சோகோ – கலைப் பிரசித்தியான கலைஞர்கள் நடமாடும் ஹுஸ்டனுக்குத் தெற்கான பிரதேசம்.) நல்ல நடிகன் அவன். புத்திசாலியும் கூட. சிக்கல் அதுவேதான், அவனால் எங்கும் ஒத்துப்போக முடியாமல், அடிக்கடி வேலையில்லாமல் திரிய வேண்டியதாகி விடும் அவனுக்கு. வயசு 30. அசிங்கமான ஆனால் பார்க்க சகிக்கிற முகம். வாய்க்குள்ளேயே பேசுவான், கேட்க வேடிக்கையாய் இருக்கும் அது.

அச்சம் என்பது மடமையடா என்கிற அவனது பாவனை ரோசிக்குப் பிடிக்கும். துடிப்பான நடையும், லண்டனின் பிரசித்தி பெற்ற தையல்காரனிடம் காசு தராமல் டபாய்த்துவிட்டு வாங்கிவந்த உடைகளும்… கையில் தம்பிடிக்கு வக்கு இல்லை என்றாலும், வாயால் எதாவது குதிரையில் பணங் கட்டுவான். அதிர்ஷ்டக் காற்று திசைமாறி அவன்பக்கம் வீசி எதும் துட்டு ஜெயித்தால் அதை வாரிவீசிச் செலவழிப்பான். உற்சாகமும் துடிப்புமான வெட்டி. சும்மாவாச்சும் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு அலைதல். வாழ்க்கை சார்ந்து அவனுக்கு ஒரு கணிப்பும் கிடையாது.

ரோசியே என்னிடம் சொல்லியிருக்கிறாள். ஒருதடவை கைக்கடிகாரத்தை அடகு வைத்து அவளை சாப்பிட அழைத்துப் போயிருக்கிறான் அவன். நடிகரும் நாடகநிர்வாகியுமான ஒருவர் அவர்கள் இருவருக்கும் நாடகம் பார்க்க பாஸ் அளித்தார். அவரிடமே நாடகம் முடிந்ததும் ரெண்டு பவுண்டு கைமாத்து கேட்டு வாங்கி, இரவுச் சாப்பாட்டுக்கு அவரையும் அவர்களோடு அழைத்துப் போனான் அவன்!

லயோனல் ஹிலியரின் ஓவியக் கூடத்துக்குப் போவதிலும் அவளுக்கு ஆட்சேபணை கிடையாது. அவனும் அவளுமாய் எதும் துண்டு துக்கடாவாய் சமைத்துச் சாப்பிடுவார்கள். அந்த மாலை அரட்டையில் கழியும். என்னோடு அவள் சாப்பிட்டது என்பதே ரொம்ப அபூர்வமான ஒன்றுதான். வின்சன்ட் சதுக்கத்தில் ராவுணவு உண்ட பின்னர்தான் நான் அவளை வெளியே அழைத்துப் போவேன். அவளும் என்னுடன் கிளம்புமுன் திரிஃபீல்டுடன் வீட்டில் சாப்பிட்டுவிடுவாள். நாங்கள் பேருந்து பிடித்து எதுவும் இசையரங்கத்துக்குப் போய்வருவோம். இங்கே என்று குறிப்பாய்க் கிளம்புகிறது இல்லை. கால்போன போக்கு. பெவிலியன். திவோலி. சில சமயம் எதும் புது நாடகம் நான் பார்க்கணும் என்று பட்டால், மெட்ரோபாலிடன்… இப்படித் திரிந்திருக்கிறோம். ஆனால் எங்கள் இருவருக்குமே கான்டர்பரி போகத்தான் இஷ்டம். மலிவு. இடமும் நன்றாக இருக்கும். ஒன்றிரண்டு பீர் வரவழைப்போம். நான் புகைக்குழாயைப் பற்ற வைத்துக் கொள்வேன். மொத்த விடுதியுமே புகையாய் இருண்டு கிடப்பதை ரோசி விழிவிரிய ரசித்துக் கொண்டிருப்பாள். தெற்கு லண்டன் வந்தேறிகளின் வாசஸ்தலம் அந்த விடுதி…

”கான்டர்பரி எனக்குப் பிடிச்சிருக்கு” என்றாள் அவள். ”ஒரு வீடு போல இதமா இருக்கு.”

அவள் நிறைய வாசிப்பாள் என நான் அறிந்துகொண்டேன். சரித்திரம் அவளுக்குப் பிடித்தது. ஆனால் சரித்திரத்தில் அவள் ருசி தனியானது… ராணிகளின் எஜமானிகளின் படாடோப வாழ்க்கையை அவள் விரும்பி வாசித்தாள். எப்படியெல்லாம் வாழ்ந்திருக்காங்கப்பா… என ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் என்னிடம் சொல்வாள்.

எட்டாம் ஹென்ரியின் ஆறு ஆசைநாயகிகள் பற்றி அவளுக்கு நிறையத் தெரிந்திருந்தது. ஹாமில்டனின் மனைவி பற்றியும், திருமதி ஃபிட்சர்பெர்த் பற்றியும் அவளுக்கு எல்லாமே விரல்நுனி விவரங்கள். ராஜ வாழ்க்கை பற்றி அறிய அவளுக்கு அலாதிப் பசி. தகவல் கருவூலம் அவள். லுக்ரிசியா போர்ஜியா முதல் ஸ்பெயினின் ஃபிலிப், அவனது பட்டமகிஷிகள் வரை… அடுத்து பிரஞ்சு எஜமானிகளின் பெரிய பட்டியல் அவளிடம் இருந்தது. எல்லாரையும் அவள் அறிவாள். அவர்கள் பற்றி எல்லாமும் அறிவாள்… அக்னஸ் சோரல் பற்றி வேண்டுமா? து பரி சீமாட்டி பற்றி வேண்டுமா? கடகடவென்று விவரங்கள் கொட்டுவாள்.

”வாசிக்கணும்னா நிஜ வாழ்க்கை பற்றி வாசிக்கணும்டா” என்பாள். ”நாவல்கள்… ச், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அவை கற்பனைகள் தானே?”

பிளாக்ஸ்டேபிள் பற்றி அரட்டையடிக்கப் பிடிக்கும் அவளுக்கு. நான் அந்தப் பகுதி ஆசாமி என்பதால்தான் என்னுடன் வெளியே கிளம்பி வருகிறாள் என்றுகூட நான் நினைக்கிறேன். இப்ப கூட அங்கே என்ன நடக்கிறது, அவளுக்குத் தெரிந்தது!

”வாராவாரமோ ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவையோ அங்க போயி நான் எங்கம்மாவைப் பார்த்திட்டு வரேன்” என்றாள். ”ராத்திரிகளில்…”

”எங்க? பிளாக்ஸ்டேபிளுக்கா?” எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

”ச், பிளாக்ஸ்டேபிளுக்கு இல்லடா.” அவள் புன்னகைத்தாள். ”அங்க நான் போற அளவில் நிலைமை சரியாகல்ல எங்களுக்கு. நான் ஹாவர்ஷாம் வரை போவேன். அம்மா என்னைப் பார்க்க அங்க வந்திருவா. நான் வேலை செஞ்சேன்லியா அந்த விடுதிலயே நான் போய்த் தங்குவேன்…”

வளவளவென்று அவள் பேசமாட்டாள். பொதுவாக இராத்திரி நன்றாக அமைந்தால் நாங்கள் இசை அரங்கத்தில் இருந்து வீடுவரை நடந்து திரும்புவோம். அவள் அப்போதெல்லாம் வாயே திறக்காமல் மௌனமாகவே நடந்து வருவாள். என்றாலும் அந்த அமைதி உளப்பூர்வமான நெருக்கத்துடன் இருந்தது. உன்னோடு சேர்த்து ஒரே போர்வைக்குள் போல அது பொதிந்துகொண்டது.

ஒருதடவை லியோனல் ஹிலியருடன் இவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். புதுப்பெண்ணாய் நான் முதலில் அவளை பிளாக்ஸ்டேபிளில் பார்த்தேன்… இப்போது எப்படி அவள், என்ன ரசவாதத்தில் இப்படி எல்லாருக்குமே பிடித்த நளின வசிகர மங்கையாக உருமாறினாள், என நினைக்கவே விநோதமாய் இருக்கிறது, என்றேன்.

இதுபற்றி சிலர் ஒட்டியும் ஒட்டாமலுமே பேசியிருக்கிறார்கள் என்னிடம். ”ம். அவள் உருவமே அழகு தான்…” என்பார்கள். ”ஆனால் எனக்கு என்னமோ அந்த அழகு பிரமிக்கிறாப் போல இல்லையப்பா”. வேறு சாரார், ”ஆமாமா, மகா அழகு அவள். என்றாலும்  அவளுக்கு இன்னும் மவுசு கிடைச்சிருக்கணும். ஏனோ கிடைக்கல்ல” என்பார்கள்.

”அட கண் சிமிட்டற நேரத்தில் அதை விளக்கிறலாம்” என்றான் லயோனல் ஹிலியர். ”நீ அவளை முதலில் பார்த்தபோது அந்த பாலூட்டாத பெரிய முலைகள் உனக்கு உள்ளே பதிவானது. ஆ அவளை நான் என் தூரிகையால் உனக்கு அழகாக்கிக் காட்டிவிட்டேன்.”

அதுக்கு நான் என்ன பதில் சொன்னேன் ஞாபகம் இல்லை. ஆனால் அது ரொம்ப அல்டாப்பு, என்று தெரிந்தது.

”சரி, இதுனால என்ன தெரியுது, உனக்கு அழகைப் பத்தி லவவேசமுந் தெரியாதுன்னு தெரியுது. ஏய் முதன் முதலில் நான்தான் அவளை ஒரு வெள்ளி ஜ்வலிப்பாய்ப் பார்த்தேன்… வேற எவன் பார்த்தான் சொல்லு? அட அந்தக் கூந்தலை நான் வரையுமுன்னாடி இந்த லோகத்திலேயே அழகான கூந்தல் அவளுடையதுன்னு எவன் சொன்னான்?”

”அட நீயா அந்தக் கழுத்தையும், மார்பையும், தேகத்தையும், எலும்பையும் செஞ்சே,” என்று கேட்டேன் நான்.

”அட முட்டாளே, அது பக்கா நிஜம். அவளை அந்தப்படி ஆக்கியதே நானே…”

அவன் ரோசியைப் பத்தி அவள்முன்னாலேயே பேசுவான். அதையெல்லாம் மென்னகையுடன் அவனையே பார்த்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள் அவள். அந்த வெளிறிய கன்னங்கள் லேசா ரோசா வண்ணங் கொடுக்கும். அவன் முதலில் அவளது அழகைக் கொண்டாடியபோது, இவன் நம்மைப் பகிடியடிக்கிறானோ என அவள் யோசித்திருக்கக் கூடும். அப்புறம் அவன் நிசமாகவே அவளை ஆராதிக்கிறான் என்று தெரிந்தது. அத்தோடு அவளை பொன்வெள்ளியுருக்கில் ஓவியமாகவும் வரைந்து காட்டிவிட்டான்.

ஆனால் இந்நிலையில் அவனது பசப்பல்கள் அவளுக்குப் பழகிப்போய் விட்டது. ஒரு மாதிரி வேடிக்கையான விஷயமாய்க் கூட அது ஆகிப்போனது. அவன் பேசுவதைக் கேட்பதில் ஒரு சுகம். ஒரு வியப்பான புருவந் தூக்கல்… என்றாலும் அவள் அதில் கிறுகிறுத்துவிடவில்லை. அட இவனுக்கு என்னவோ ஆயிட்டது என்கிறாப்போல அவளில் யோசனை.

அவர்களுக்கிடையே எதும் உறவு என்கிறாப்போல உண்டா என்பதே என்னால் யூகிக்க முடியாதிருந்தது. ஆனால் பிளாக்ஸ்டேபிளில் ரோசி பற்றி கொள்ளையாய்க் கதைகள். ஆ, அந்த விகாரேஜ் தோட்டத்தில் நானேதான் பார்த்துத் தொலைத்தேனே… தனியே யாராவது படம் வரைந்து பாகங்களைக் குறிக்கணுமா என்ன?

அந்த குவின்டின்… அவன் கதை என்ன தெரியவில்லை. ஹாரி ரெட்ஃபோர்டு ஒருத்தன் வேறு இருக்கிறான். அவளோடு அவர்களை நான் உன்னித்துப் பார்க்கவே செய்கிறேன். அப்படி அவர்கள் யாரோடும் அத்தனையாய் அவள் ஊடாடுகிறாப் போலத் தெரியவில்லை. அவள் கொண்டது ஒரு ‘தோழர்’ உறவு போலிருந்தது. எல்லார் முன்னிலையிலும் தான் அவர்களோடு அவள் சகஜமாய் வெளியே கிளம்பிப் போய்வந்தாள். அவர்களை அவள் பார்க்கிற பார்வைக் குறிப்பிலுங் கூட அந்த குறும்பான குழந்தைப் பார்வை, அதுவே காணக் கிடைத்தது. அதுவே அவளது வசிகர ரகசியமுங் கூட, என்று எனக்குப் புரிந்தது.

சிலபோது நானும் அவளும் அருகருகில் கச்சேரி அரங்கில் உட்கார்ந்திருப்போம். அவள் முகத்தை நான் கூர்ந்து பார்ப்பேன். எனக்கு அவளிடம் காதல் எதுவும் இருக்கிறதாய் நான் நினைக்கவில்லை. அவள் பக்கத்தில் பேசாமல் கொள்ளாமல் வெறுமனே உட்கார்ந்திருக்கிறதே அம்சமாய் இருந்தது. எனக்கு அதுவே பிடிக்கிறது. பொன்மயக்கந் தரும் அந்தக் கூந்தலைப் பார்த்தபடியே இருந்து விடலாம்.

அட அந்த லயோனல்  ஹிலியர் சொன்னது சரி. அந்தக் கூந்தலின், தேகத்தின் தகதக ஒருமாதிரி நிலவொளியை ஞாபகப் படுத்துகிறது. ஒரு கோடைகால மாலையின் இனிமை அவளிடம் கிடைக்கிறது. நிர்மலமான வானத்தில் இருந்து ஒளி விடையெற்ற கணத்தின் ஆசுவாசம். அவளிடம் நமக்கு ஒரு மகா அமைதி கிடைக்க நாம் அதில் ஒடுங்கிக் கிடக்கிறோம். ஆகஸ்டு சூரிய ஒளியில் கென்ட் பகுதி கடற்கரை வெளியில் உலா போகிற ஏகாந்தம். ஒரு இத்தாலிய இசைக்கலைஞனின் லம்பாடிப்பாடல் மெட்டு ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதில் ஒரு உல்லாச த்வனி இருந்தாலும் ஓரத்தில் துளி ஏக்கம். சிறு உப்பு சேர்த்த இனிப்பு. சில சமயம் நான் அவளைப் பார்க்கிற குறுகுறுப்பு தாளாமல் தானே என்பக்கமாய் திரும்புவாள். ஓரிரு கணங்கள் அவளும் என்னையே, என் முகத்தையே இமை கொட்டாமல் பார்ப்பாள். எதுவும் சொல்ல மாட்டாள். அவள் என்ன நினைப்பாள் அப்போது, நான் அறியேன்.

ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. ஒருநாள் அவளை வெளியே அழைத்துப் போக என்று லிம்பஸ் தெரு போனேன்.. வேலையாள் ரோசி இன்னும் கிளம்பத் தயாராகவில்லை என்று சொல்லி என்னை வெளி நடையில் உட்காரச் சொன்னாள். ரோசி வந்தாள். கரு வெல்வெட் உடை. வான்கோழி இறகு குத்திய ஓவியம் தீட்டிய தொப்பி. பெவிலியன் போகிறதற்கான உடை என்று அணிந்திருந்தாள்…

ஹா, என ஒரு கணம் திகைக்க வைக்கிற அழகு. திக்குமுக்காட வைக்கிற அழகு. அந்த உடையில் அவளது பதவிசு தெரிகிறது. அந்த வாளிப்பின் பரிசுத்தத்தின் அபாரம் காண அல்ல பருக வைத்தது. சில சமயம் அவளைப் பார்த்தால் நேபிள்ஸ் பழங்கலைக் கூடத்தின் ஒரு நேர்த்தியான விக்கிரகமாய்க் கூட பிரமிக்க வைத்தாள். ஆனால் அந்த உடை… தற்கால உடை! ஓர் அபூர்வமான ஆளுமை அவளிடம் இருக்கிறது. விழியடியில் அவள் சருமம் ஒரு வெளிர் நீலம். பனி சிதறினாப் போல. இது இயற்கையான அம்சமாகக் கூட சில சமயம் எனக்குத் தோன்றவில்லை. ஏய், கண் பக்கம் வாசலைன் பூசினாயோ, என்று கூட அவளைக் கேட்டிருக்கிறேன்… அப்படியொரு பரிமளிப்பை அது தந்தது. அவளோ புன்னகைத்தாள். ஒரு கைக்குட்டையை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

”அட நீயே துடைச்சிவிட்டுப் பாரேன்!” என்றாள்.

இன்னொரு இரவில்… கான்டன்பரியில் இருந்து நாங்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அவள் வீட்டில் அவளை விட்டேன். விடைபெறு முகமாக நான் கையை நீட்டினேன். க்ளுக் என்ற சின்னத் தளும்பல். என்முன் குனிந்தாள்.

”ஏய் பெரிய மனுசா…” என்றாள்.

என் வாயில் முத்தங் கொடுத்தாள். ஒரு அவசர அள்ளித் தெளிப்பு அல்ல. ஒரு காதலின் வெடிப்பும் அல்ல. அந்த அதரங்கள். முழுசான சிவந்த அதரங்கள், என் அதரங்களில் பதிந்தன. அந்த அதரங்களை முழுமையாக என் உதடுகள் உணர்ந்தன. அந்தக் கதகதப்பு, மென்மையை நான் உணர்ந்தேன். பிறகு அவள் மெல்ல அவற்றை அமைதியாய்ப் பிரித்துக்கொண்டாள். கதவைத் திறந்தாள். சட்டென உள்ளே மறைந்து போனாள்.

திடுதிப்பென்று நான் தனியே விடப்பட்டேன். குப்பென்று என் வாய்க்குள் எதோ அடைத்தாப் போலிருந்தது. நான் பேசுந்திறனை இழந்து விட்டேனா. அவள்பாட்டுக்கு முத்தமிட்டாள். நான்பாட்டுக்கு காட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்… அத்தனைக்கு நான் அங்கே டம்மியாகி விட்டேன். திரும்பி என் விடுதி பார்க்க நடக்க ஆரம்பித்தேன். என் காதுகளில் இன்னும் ரோசியின் க்ளுக் தளும்புகிறது. கேலியடிக்கிறாப் போலவோ, காயப்படுத்துகிறாப் போலவோ அது இல்லை. வெளிப்படையான நேசம் அது. என்ன சிரிப்பு அது… அடேய், ஆஷந்தா, என் பிரியத்துக்குரியவனே… என அளித்த கொடை அது.

 

தொடரும்

storysankar@gmail.com

Series Navigation