கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 14 of 17 in the series 19 மார்ச் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

கடற்கரய் [ 1978 ] விருத்தாசலத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். ஹைதர் கான். ‘ குமுதம் ‘ இதழில்
உதவி ஆசிரியரான இவர் மூன்றாவது கவிதைத் தொகுப்பாக ‘ கண்ணாடிக் கிணறு ‘ நூலைத் தந்துள்ளார்.
கருப்பொருட் தேர்வு சில கவிதைகளில் வித்தியாசமாக இருக்கிறது. இத்தொகுப்பு சில கவிதைகளையும்
சில உரைநடைப் பகுதிகளையும் கொண்டது.
வாழ்க்கையின் யதார்த்தத்தை நுணுக்கமாகப் பேசுகிறது ‘ என் கைகள் ‘ என்ற கவிதை.

என் கைகள்
எட்டும் தூரத்தில்
பல பொருட்கள் இருப்பதில்லை
எட்டும் தூரத்தில் இருந்தும் ஏனோ
சில பொருட்கள் கவர்வதில்லை
எட்டும்
எட்டா
தூரத்திற்கும்
இடையில்
எப்போதும் இருக்கிறது
கண்ணுக்குப் புலப்படாத ஒரு
கணிசமான தூரம்
அதைக் கடக்கத்தான்
எனக்குத் தனிக் கால்கள்
தேவை
— அழகான இச்சிறு கவிதை தத்துவப் பார்வை கொண்டது. விடா முயற்சியை அழுத்தமாக வலியுறுத்துகிறது கடைசி இரண்டு வரிகள். வாழ்க்கையின் புதிர்த்தன்மை பதிவாகியுள்ளது.

‘ கண்ணாடிக் கிணறு ‘ என்ற புத்தகத் தலைப்புக் கவிதை சலூன் கடை அனுபவத்தைப் பேசுகிறது.
பாதிவரை அழகாகச் சென்ற கவிதை அதன் பின் தடம் மாறி ஒருவிதக் குழப்பத்தை உருவாக்குகிறது.
எனக்குக் கண்கள் கண்ணாடியில் இருக்கின்றன
கீழே விழுந்து , தரையில் உடையும் கண்ணாடிக் கண்கள்
கூடிக் கூடி மூன்றாம் கண் ஆகிறது
மூக்கின் வரம்பில் ஒரு கண்ணாடி முகம் காட்ட
மறு கண்ணாடி , ஒரு கண்ணாடி புகுந்து
இன்னொரு கண்ணாடிக்குப் போகிறது. வெளிக் கண்ணாடி ,
புகுந்து வெளிக் கண்ணாடிக்குத் திரும்புகிறது
புகுந்து புகுந்து போகிறேன். அங்கே
சலூங்கடை பெரிய கண்ணாடி. எனக்கு அதில்
நான்கு உடல்கள். முகத்தின் முன்னே இரு உடல்கள்
முதுகுக்குப் பின்னே இரண்டு உடல்கள். பிம்பங்கள்
மோதும் ஓர் இடத்தில் ஐந்து இருக்கைகள்.
என் ஐந்து இருக்கையிலிருந்து ஓர் உடலாக
வெளியேறுகிறேன். என் ஓர்
உடலிலிருந்து வெளியேறிய நான்கு உடல்கள்
ஒவ்வொன்றாக இடறிக் கிணற்றில் விழுகின்றன.
மேற்கண்ட பகுதியின் வரியமைப்பில் இடையிடையே முற்றுப்புள்ளிகள் அமைந்திருப்பது கவிதை
வடிவத்தில் ஓர் உரைநடைத் தன்மையை படிய வைத்துவிடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
இதற்குப்பிறகு , கவிதை இப்படித் தொடர்கிறது :
கண்ணாடிக் கிணற்றில் , ‘ ஆண்டாளின் கிணறு ‘ . இதன் பொருள் என்ன ? சலூன் கடையின் பெயர்
ஆண்டாள் என்பதா ?
…………… ஆண்டாள் முகம்
அதன்
இயலைக் கல்சிற்பம் ஒன்று , நூற்றாண்டுக்கு வெளியே
காவல் காக்கிறது.
— மேற்கண்ட வரிகளில் சுட்டப்படும் ஆண்டாள் தனியொரு பெண்னைக் குறிக்கிறதா?
கற்சிலை வெளியே , உள்ளே
என் அவமானங்கள்
என்னைக் கேலிசெய்கின்றன
— மேற்கண்ட வரிகள் கவிதையோடு பொருந்தவில்லை.
கதையின் முடிவு கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது :
வீடு திரும்புகிறேன்
உனக்குக் கண்கள் முகத்தில் இல்லை
அம்மா திட்டுகையில் , தினசரி எனக்கு
எப்போதும் புற முதுகில் கண்கள்
சலூன் கடையில் நாற்காலியில் அமைந்திருக்கும் போது நம் பிம்பங்கள் சிவற்றைக் காண முடியும்.
இதைக் கருவாகக் கொண்டு ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற கவிஞரின் விருப்பம் மட்டும் நமக்குப்புரிகிறது. நல்ல முறையில் உருவாக வேண்டிய ஒரு புதிய கரு , அவ்வாறு அமையாமல் போய்விட்டது. உரிய இடத்தில் இக்கவிதை முடிந்திருக்க வேண்டும்

‘ உடம்பிலிருந்து ‘ என்ற சிறுகவிதை ஒரு சிறிய தகவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
எனக்கு
முப்பது வயதிற்கு மேல்
ஆகிறது. முழுமையாய்
முப்பது ஆண்டுகள்
பாரமாய் அழுத்துகின்றன
ஆனால் நான் முப்பது
துண்டுகளாக இல்லை , ஒரே
உடலாக உள்ளேன்.
முடியும்
காரியமாக இருந்தால்
துயரமான சில வருடங்களை
மட்டும்
என் உடம்பிலிருந்து
தனியே பிரித்தெடுத்துவிடுவேன்
—- வாழ்க்கையில் துயரம் இவரை வருத்தப்படச் செய்திருக்கிறது. அதைத் தவிர்க்க விரும்புகிறார்
என்பதே உட்கருத்து.
‘ கடவுளின் தற்காலப் பிரச்சினை ‘ என்ற நீள் கவிதை நாத்திகப் பார்வையில் அமைந்துள்ளது.
கடவுளின் இப்போதைய தற்காலப் பிரச்சினை
ராங்கால் ஆசாமிகளை
பலான எஸ்.எம்.எஸ் குறும்பர்களை
எப்படி மடக்கிப் பிடிக்கப் போகிறோம் என்பதுதான்

— இது பற்றிக் கடவுள் காவல் துறையில் புகார் செய்கிறார். அதுவும் பயன் அளிக்கவில்லை. இப்புனைவுக் கவிதையில் , கவிதை நயம் என எதைச் சொல்வது ?
அவரவர் அளவில் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தைச் சொல்கிறது ‘ பங்கு ‘ என்ற
கவிதை.
‘ ஒரு சராசரிக் கவிதை ‘ என்றொரு கவிதை , யதார்த்தமாக இருக்கிறது. திருமணமாகாத வாலிபரின்
மனம் பதிவாகியுள்ளது.
என் மனத்தில் உள்ளதை
எழுதி மாட்டத்தான்
எனக்கொரு வீடு இல்லை
— வாடகைக்கு வீடு தேடும் ஒருவரின் கஷ்டங்கள் இக்கவிதையில் பேசப்படுகின்றன.

பொதுவாக , இத்தொகுப்பிலுள்ள சில கவிதைகள் அலுப்பூட்டுகின்றன. கவிதை வெளிப்பாட்டில்
அதிக சுதந்திரப் போக்கு எந்த நல்லுணர்வையும் ஏற்படுத்தவில்லை . கவிதை ஆக்கம் தொடர்பான
ஆழ்ந்த சிந்தனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று கூற விரும்புகிறேன்.

Series Navigationமறையும் மரபுத் தொழில்வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *