தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 5 of 16 in the series 6 மார்ச் 2016

thangam_moorthy

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் ,

” இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் ” என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை

வித்தியாசமாகப் பேசுகிறது.

‘ கொலுசுச் சத்தத்தில் ‘ என்று தொடங்கும் கவிதை !

கொலுசுச் சத்தத்தில்

முதுகுப் பக்கத்தில்

உள்ளங்கை ஈரத்தில்

உதடுகளின் ஓரத்தில்

கன்னத்து மச்சத்தில்

கருவிழியின் ஆழத்தில்

எங்கேனும்

கிடைத்தேனா

நான் !

— அவன் இருக்கும் இடங்கள் சுட்டப்படுகின்றன். சுட்டப்படும் எல்லா இடங்களிலும் அவன் இருக்கிறான் என்பது தொனிப் பொருளாக உள்ளது. வினாவோடு முடியும் இக்கவிதை வித்தியாசமானது;

புதிய பார்வை கொண்டது.

‘ நீ ‘ என்று தொடங்கும் கவிதை , கற்பனை அழகைக் காட்டுகிறது.

நீ

ஊரிலில்லாத

நாளன்று

பெய்து கொண்டிருந்த

மழையை

நீயென நினைத்தே

நனைந்தேன் !

—- குளிர்ச்சி , இனிமை , சிலிர்ப்பு ஆகியவை காதலுக்கும் மழைக்கும் பொருந்தி வரும் இயல்புகளாகக்

காட்டப்படுகின்றன.

புதிய நோக்கில் ‘ கண்ணாடி ‘ என்று தொடங்குகிறது ஒரு கவிதை.

கண்ணாடித் தண்ணீரில்

நீந்தித் திரியும்

வண்ண மீன்களின்

கனவுகளிலெல்லாம்

கடல்

—- கூடு விட்டுக் கூடு பாயும் உத்தியில் இவர் கவிமனம் மீனுக்குள் சென்று தண்ணீர்த் தொட்டியைக்

கடலாகக் கண்டு கவிதரிசனம் கொள்கிறது.

‘ என் மகிழ்ச்சிகளால் ‘ என்று தொடங்குகிறது ஒரு தொடர் படிமக் கவிதை. விரக்தி இதில் முழு வீச்சுடன் பதிவாகியுள்ளது. புதிய சிந்தனைகள் சீறிப் பாய்கின்றன. காதலியின் கோபம் , பாராமுகத்துடன்

விரவி நிற்கிறது.

என்

மகிழ்ச்சிகளால்

ஒரு

மாலை செய்தேன்

—- என்பது தொடக்கம்.

என்

கனவுகளால்

ஒரு மாளிகை கட்டினேன்

உன் சந்தேகங்களால்

அதை

இடித்துப் போட்டாய்

—- எனத் தொடர்கிறது இந்த நீள் கவிதை.

என்

விழிகளைத் திரியாக்கி

ஒரு

விளக்கை ஏற்றினேன்

உன்

வார்த்தைகளால்

அதை

ஊதி அணைத்தாய்

— என்ற வரிகள் ஊடலை அழகான சிந்தனைகளால் தமிழ் மணம் ஊட்டுகின்றன. கருத்துகள் சரளமாக

வந்து விழுகின்றன.

புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ !

தனித்தனி

கூடுகளிலிருப்பவர்கள்

தாய்க் கூட்டிற்கு

வருவதை எதிர்பார்த்து

வாஞ்சையோடு

வாசலில் நிற்பார்

— என்ற வரிகள் பாசத்தின் பசுமையைப் பிறருக்கு எடுத்துக் காட்டாக முன் வைக்கின்றன.

குடும்ப மாநாட்டுத்

தலைமையேற்று

குழந்தையைப் போல்

துள்ளுவார்

—- என்பது ஒரு குடும்பத் தலைவனின் மேன்மையைத் தெளிவாக்குகிறது. இதையும் தாண்டிச் சிந்திக்கிறார் தங்கம் மூர்த்தி !

இந்த நாள்

நீளாதா என்று ஏங்குவார்

—- தந்தையின் பெருமையைச் சொல்லும் ஒரு சில கவிதைகளுள் இது நல்லிடம் பெறுகிறது.

தாத்தாவின் சிறப்பையும் ஒரு கவிதை பதிவு செய்துள்ளது.

அதிரும் பறை ஒலியும்

அதிர் வேட்டுச் சத்தங்களும்

அருகிருப்போர் புகழுரையும் கேட்டு

சரித்துக் கொண்டார்

செத்துக் கிடந்த

தாத்தா !

காதலின் ஆழத்தை ஒரு கவிதை புதுமையுடன் பேசுகிறது.

நீ இல்லாத

என் இரவு

உன்

கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

—- என்ற வரிகள் அந்தப் பெண்ணின் ஆளுகையை அழகாகப் பதிவு செய்துள்ளது.

கடந்து போன

எல்லாப் பறவைகளிடமும்

உன்

சாயலைக் கண்டேன்

— என்ற வரிகளில் காதல் , உச்சம் தொடுகிறது.

மேகத்தைப் போல்

தூரத்தில்

மிதந்து செல்கிறாய்

—- என்ற வரிகள் வியக்க வைக்கின்றன. தங்கம் மூர்த்தி கவிதைகள் எளிமை , புதிய சிந்தனை ,

வாசகனை ஈர்த்தல் ஆகிய இயல்புகளுடன் நிமிர்ந்து நிற்கின்றன.

 

Series Navigationஆறாது சினம்அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *