திருநறையூர் நம்பி

This entry is part 1 of 17 in the series 11 அக்டோபர் 2020

                                                  

                               பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான

திருமங்கை ஆழ்வார் பல திவ்யதேசங்களுக்கும் சென்றவர். வடக்கே பதரியிலிருந்து தெற்கே திருப்புல்லாணி வரை சென்று அங்கங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் பாடிப் பரவி

யிருக்கிறார். திருநறையூர் என்ற தலத்திற்கும் செல்கிறார்.அங்கே பெருமான் வீற்றிருக்கும் கட்டுமலைக்கு “சுகந்தகிரி” என்று பெயர்.

கோச்செங்கணான்

                             கோச்செங்கணான் என்ற சோழமன்னன் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்திருந்தான். திருவானைக் காவில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்குத் தன் நூலால் மேல் விதானம்  அமைத்து வந்தது அச்சிலந்தி. அப்பெருமானை ஒரு யானையும் வழிபட்டு வந்தது. சிலந்தி அமைத்த மேல் விதா னத்தைத் தன் வழிபாட்டுக்கு இடையூறாக நினைத்த யானை அதை அழித்தது. இது பொறுக்காத சிலந்தி யானையின் துதிக்கையில் நுழைய யானையும் சிலந்தியும் இறந்துபடுகின்றன.

                                            முற்பிறவியின் நினைவால் கோச்செங்கணான் யானை நுழைய முடியாதபடி சிவபெருமானுக் குப் பல மாடக் கோயில்கள் கட்டி வழிபட்டான். 63 நாயன்மார் களில் ஒருவனாகவும் இடம் பெற்றான்! திருஞானசம்பந்தர் இவ னைப் போற்றிப் பாடியுள்ளார். இம்மன்னன் கழுமலம், திருப்பேர் என்ற போர்க்களங்களில் சேரமன்னன் கணைக்கால் இரும் பொறை யோடுபோர்செய்து அவனைச்சிறையெடுத்தான். இந்த வெற்றியைப் பொய்கையார் என்ற புலவர் ”களவழி நாற்பது” என்ற நூலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

எழுபது மாடக்கோயில்

                            இம்மன்னன் சிவபெருமானுக்கு எழுபது

மாடக் கோயில் கட்டி வழிபட்டதை,

                   இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசற்கு

                         எழில்மாடம் எழுபது செய்து உலகாண்ட

                   திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்

                          திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

              [பெரியதிருமொழி] 6ம்பத்து,6ம்திருமொழி 8] 1505

என்று போற்றுகிறார் திருமங்கை ஆழ்வார்.

பிற வெற்றிகள்

                         மலை போன்ற பெரிய பெரிய யானைகள் கொண்ட யானைப்படை, வெண்ணி என்னும் இடத்தில் எதித்து வந்தபோது திருநறையூர்நம்பியிடம் வாள்பெற்றுப் போரிலே வென்றவன் கோச்செங்கணான். இதை,

              “கவ்வை மாகளிறுந்தி வெண்ணியேற்ற

                   கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேற

              தெய்வவாள் வலங்கொண்ட சோழன்

                         [6ம்பத்து, 6ம்திருமொழி 3] 1500

என்றும்

                 வெங்கண் மாகளிருந்தி விண்ணிலேற்ற

                         விறல் மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த

        செங்கணான் கோச்சோழன்

                              [6ம்பத்து6ம்திருமொழி4] 1501

என்றும் பாராட்டுகிறார்

நாட்டுவளம்

                      காவிரியாறு மலைகளை உடைத்துக் கொண்டு வந்து பொன்னையும், இரத்தினங்களையும் திரட்டிக் கொண்டு வந்து கரைகளில் சேர்க்கும் வளமுடையது. இதை

                           மேலெழுந்து விலங்கல் பாய்ந்து

          பொன்சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்

                   புலம் பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடு

                          [6ம்பத்து,6ம்திருமொழி5] 1502

என்பதாலும்

               மலைத்தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய

                   வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடு

                         [6ம்பத்து,6ம்திருமொழி 7] 1504

என்பதாலும் அந்நாட்டின் வளத்தை அறிகிறோம்.

இயற்கைவளம்

                      நறையூர் இயற்கை வளம் நிரம்பப் பெற்று விளங்கியது. அங்குள்ள வயல்களில் பெரிய மீன்களைப் பிடிக்க

உழவர்கள் முயலும் போது அவை அவர்களை உதறித்தள்ளி விட்டு பிடிபடாமல் ஓடிவிடும்! வயல்களில் மஞ்சள் பயிர் செழித்து

வளர்ந்திருக்கும்

                  வீழ்ந்தெழும் மள்ளர்க்கு அலமந்து மீனைத்தழுவி

                   நானப்புதரில் ஆமையொளிக்கும் நறையூர்

                               [6ம்பத்து,5ம்திருமொழி 3] 1490

                   நெகுவாய் நெய்தற்பூமது மாந்திக் கமலத்தின்

                   நகுவாய் மலர்மேல் அன்னமுறங்கும் நறையூரே

                               [6ம்பத்து,5ம்திருமொழி6] 1493

என்பதிலிருந்து அவ்வூரின் இயற்கை வளத்தை உணர்கிறோம்.

ஊரின் சிறப்பு

                             நறையூரில் ஆடவர்கள் மன்மதனையும் முருகனையும் ஒத்த அழகுடையவர்கள். வேல்போன்ற கண்களை

யுடைய பெண்கள் வசித்த அவ்வூர் எப்பொழுதும் உற்சவ ஆர வாரங்கள் நிரைந்ததாய் இருந்ததை

            வேளும் சேயும் அனையாரும் வேற்கணாரும்

                                          பயில்வீதி

            நாளும் விழவினொலி ஓவா நறையூர்

                     [6ம்பத்து,7ம்திருமொழி,1] 1508                                                       என்பதால் அறிகிறோம். மேலும் அவ்வூரில் வேதங்களை முறைப்படி ஓதி சோமயாகம் முதலிய யாகங்களை நடத்து வதைத் தொழிலாகக் கொண்ட நல்லபல வைதிகர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை

                       சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச்

                               செய்யும் தொழிலினோர்

                       நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர்

                              [6ம்பத்து,7ம்திருமொழி5] 1512

                   வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கமாறு

                                                இசையேழ்

                   நடையா வல் அந்தணர் வாழ் நறையூர்

                              [6ம்பத்து,7ம்திருமொழி 7] 1514

என்பவற்றால் அறியமுடிகிறது. இதோடு கூட,அவ்வூரில் பிரமனை யும் சிவனையும் ஒத்த பெருமை வாய்ந்தவர்களும் வள்ளல் தன்மை உடையவர்களும் வாழ்ந்தனர்.

            செந்தாமரைமேல் அயனோடு சிவனும் அனைய

                                             பெருமையோர்

            நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர்

                     [6ம்பத்து,7ம்திருமொழி,8] 1515

என்கிறார் ஆழ்வார்.

நெஞ்சுக்கு அறிவுறுத்தல்

                                   இவ்வளவு சீரும் சிறப்பும் பெற்ற

“நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூர்” சென்று

தொழுவோம் என்று தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார்.

     “விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்

      நன்ணும் நறையூர் நாம் தொழும் எழு நெஞ்சமே!

                  [6ம்பத்து,4ம்திருமொழி1] 1478

      சொல்லார் மறை நன்கோதி உலகில் நிலாயவர்

      நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!

                         [6ம்பத்து,4ம்திருமொழி 7] 1484

        ”வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாதவூர்

         நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே!

                   [6ம்பத்து,4ம்திருமொழி 8] 1485

        மன்றாரக்குடமாடி வரையெடுத்து மழைதடுத்த

        குன்றாரும் திரள்தோளன் குரைகழலே அடை

                  நெஞ்சே [6ம்பத்து,9ம்திருமொழி,4] 1531

அன்று மலையெடுத்து ஆயர்களையும் பசுக்கூட்டங்களையும் காத்தபிரான் நம்மையும் காப்பான்.அவன்

     பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த    

     இறையாகி நின்றவன்,

                           [6ம்பத்து,9ம் திருமொழி 9] 1536        

                             அதுமட்டுமல்ல பாரதப்போரில் சூரிய னையே தன் சக்கரத்தால் மறைத்தவன். பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றினுள்ளேவைத்துக் காத்துப்பின் உமிழ்ந்தவன் அவன் நமக்கும் வழி காட்டுவான் அவன்தன் இணையடியே அடை நெஞ்சே!ஏனென்றால் அது

               நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் ஊர்!   

                     [6ம்பத்து,5ம்திருமொழி1] 1488

பல திவ்ய தேசங்கள்

                         நறையூர் சென்ற திருமங்கையாழ்வாருக்கு நறையூர் நின்ற நம்பி பல திவ்ய தேசமூர்த்திகளாகக் காட்சி யளிக்கிறார்.

1]திருவேங்கடம்

                  தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை

                  நான் சென்று நாடி நறையூர் கண்டேனே

                         [6ம்பத்து,8ம்திருமொழி1] 1518

2] தென்னாலி

                   தென்னாலி மேய திருமாலை எம்மானை

                   நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே

                              [8ம்திருமொழி2] 1519

3] திருநாவாய்

                   தேவாதி தேவனைச் செங்கமலக்கண்ணனை

                   நாவாயுளானை நறையூரில் கண்டேனே [1520]

4] திருநீர்மலை

                   சேடார் பொழில் சூழ் திருநீர்மலையானை

                   வாடாமலர்த் துழாய் மாலை முடியானை

                   நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே [1521]

5] இராமனாக

                                    செல்வ விபீடணற்கு வேறாக

                   நல்லானை நாடி நறையூரில் கண்டேனே[1522]

6] கண்ணனாக

                   அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை

                   நம்பனை நாடி நறையூரில் கண்டேனே. [1523]

7] பார்த்தசாரதி

                   மண்ணின் மீபாரம் கெடுப்பான் மறமன்னர்

                   பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து

                   விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை

                   நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே [1525]

                                      இப்படி பல திவ்யதேசங்களில் வீற்றிருக்கும் பெருமானாக, இராமனாக, கண்ணனாகத் தனக்குக் காட்சி தந்ததைப் பதிவு செய்கிறார் ஆழ்வார், மேலும் குடந்தைக் கிடந்த பெருமானாகவும் கண்டு கொண்டேன் என்று ஒரு திவ்ய தேசத்திலேயே பல மூர்த்திகளைக் கண்டு அனுபவிகத்ததைத் தெரிவிக்கிறார்!

திரு இலச்சினையும்

நாமப்பெருமையும்

                      திருநறையூர் நம்பியிடம் திரு இலச்சினை யாகிய சங்கு சக்கரம் பெறும் பேறு பெறுகிறார் ஆழ்வார். திரு இலச்சினை பெற்ற ஆழ்வார் பெருமானின் நாமப் பெருமையைப் பேசுகிறார். வராக, வாமன, கிருஷ்ணாவதாரப் பெருமைகளை

      விடந்தானுடய அரவம் வெருவச் செருவில் முனநாள்

      தடந்தாமரை நீர்ப்பொய்கை புக்கு மிக்க தாளாளன்

      இடந்தன் வையம் கேழலாகி, உலகம் ஈரடியால்

      நடந்தானுடய நாமம் சொல்லில் நமோநாராயணமே

                         [6ம்பத்து,10ம்திருமொழி],1539

                                               இலங்கைக்கோன்

      வல்லாள் ஆகம்வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு

      நல்லானுடய நாமம் சொல்லில் நமோ நாராயணமே]1541]

                                   நங்கள் வினைகள் தீர உரைமின்

   நமோ நாராயணமே  என்று நாம மகிமையைப் பேசுகிறார்.

கறவா மடநாகும் கன்றும்

                                நாமப் பெருமையைப் போற்றிய ஆழ் வார், நறையூர் நம்பியிடம் தம் விண்ணப்பத்தைத் தெரிவிக்கிறார். பெருமானே! பால் சுரக்காத பசுவை அதன் கன்று நினைத்துக் கத்துவதுபோல் நானும் உன்னை வாய் ஓயாமல் அழைக்கின் றேனே அதை நீ அறியவில்லையா?

            கறவா மடநாகு தன் கன்று உள்ளினாற்போல்

            மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்

            நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீ!

            பிறவாமை எனைப்பணி எந்தை பிரானே [1548]

[கறவாமடநாகு=பால்சுரக்காதபசு=அருள்புரியாத எம்பெருமான் கத்துகின்ற கன்று=திருமங்கை ஆழ்வார்]

             தாரேன் பிறர்க்கு, உன்னருள் என்னிடை வைத்தாய்

             ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன். [1550]

              நல்லாய்! நாராயணனே! எங்கள் நம்பீ!

              சொல்லாய் உன்னையான் வணங்கித் தொழுமாறே

                           [7ம்பத்து,1ம்திருமொழி,5] 1552

             வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?[1551]

             வித்தே! உன்னை எங்ஙனம் நான் விடுகேனே? [1555]

என்றெல்லாம் பாடிப்பரவித்தொழுகிறார். நறையூர் நம்பியைக் காணக்காண ஆழ்வார் உள்ளம் நெக்கு நெக்கு உருகுகிறது அதன் வெளிப்பாடாக

                    உள்ளே நின்றுருகி நெஞ்சம் உள்ளியக்கால்

                     நள்ளேன் உன்னையல்லால் நறையூர் நின்ற

                            நம்பீயோ! [1558]

              எம்மானும் எம் அன்னையும்என்னைப்

                                           பெற்றொழிந்த பின்

              அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற

                                           நம்பீ! உன்

              மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்து ஏத்த

                       மாட்டேன்

                           [7ம்பத்து,2ம்திருமொழி,3] 1560

            இப்போது என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப்

                                     பொகலொட்டேன்

            என்மனம் புகுந்த தேனே! வளைத்து வைத்தேன்

                         [7ம்பத்து,2ம்திருமொழி,8] 1565

            என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன்

                   நறையூர் நின்ற நம்பீயோ!

                        [7ம்பத்து,2ம்திருமொழி 9] 1565

            என்று தன் பேற்றை எண்ணி வியக்கிறார்

களித்த கண்கள்

                         நானே எய்தப்பெற்றேன் என்று பெருமிதம் கொண்டவர் கண் படைத்த பயனை,

            நனவில் சென்றார்க்கும் நண்ணற்கரியானை

                  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்

            கனவிற் கண்டேன், இன்று கண்டமையால் என்

                  கண்ணினை களிப்பக் களித்தேன்

                   [7ம்பத்து,3ம்திருமொழி,1] 1568

           கனவில் கண்டவனை கண் களிக்கக் கண்டதால்

         திருநறையூர் நின்ற நம்பி தன்னையே நினைக்கச்

                              செய்து,

          தான் எனக்காய் நினைந்தருள் செய்த [1569]

கருணையைப் போற்றுகிறார். அதனால் என் அன்பனையன்றி ஆதரியேன் என்று உறுதியாகக் கூறுகிறார்.

நரையூர் நம்பி

                  வந்தநாள் வந்து என் நெஞ்சிடம் கொண்டான்.

                  (அவன்) மற்றோர் நெஞ்சறியான்.

                 தென்புலத்தார்க்கு என்னைச் சேர் கொடான். [1570]

இந்தப்பேறு யாருக்குக் கிட்டும்? அதனால்

                எந்தையை எந்தை தந்தை தம்மானை

                 எம்பிரானை எத்தால் மறக்கேன்? [1570]

என்று வினா எழுப்புகிறார். தாமரைக் கண்ணனுக்கன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே

                                   மறைநான்கும் முன்னோதிய

            பட்டனை பரவைத் துயிலேற்ற என்

            பண்பனையன்றி பாடல் செய்யேனே

            எம் அண்ணல் வண்ணமேயன்றி வாயுரையாதே

                              [1573,1574]

என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார்

              தொண்டர்களே! நறையூர் நின்ற நம்பி பாடல்களைப்

               பாட நும்மிடைப் பாவம் நில்லாவே [1577]

என்று உறுதியளிக்கிறார். நாமும் நறையூர் நம்பியைக் கண்டு களித்து அவன் புகழைப் பாடிப்பரவுவோம்

=======================================================================

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *