பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி

This entry is part 9 of 29 in the series 25 டிசம்பர் 2011

கோசல ராஜ்யத்தில் அயோத்தி என்ற நகரம் இருக்கிறது. அதை சுரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். பல சிற்றரசர்கள் வந்து அவனுக்குத் தலைவணங்கி மரியாதை செய்யும்போது அவர்களின் மணி மகுடங்கள் வீசும் ஒளியிலே சுரதனின் பாதங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் காடுகளைக் காவல் செய்பவன் அரசனிடம் வந்தான். ‘’அரசே! காட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் கொந்தளித்துக் கலகம் செய்யும் நிலைமையில் இருக்கின்றனர். அவர்களிடையே விந்தியகன் என்ற தலைமை அதிகாரிக்கு அரசர்தான் மரியாதையாக நடக்கப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தான்.

இதைக்கேட்ட அரசன் பலபத்திரன் என்ற மந்திரியை அழைத்து அவர்களை அடக்கி வரும்படி அனுப்பி வைத்தான். மந்திரி போய்விட்டான்.

கோடை காலம் சென்றதும் ஒரு நிர்வாண சந்நியாசி அந்த நகரத்தில் புகுந்தான். கேள்வி, இலக்கணம், ஜோதிடம், சகுனம், லக்னம்; வான சாஸ்திரத்தின் ஒன்பது, பன்னிரண்டு, முப்பது பாகங்கள்; நிழலைப் பார்த்து நேரம் சொல்லுதல், கிரஹணங்கள், நஷ்டம், லாபம், கிரஹநிலை, ஆயுள், மனதிலுள்ள எண்ணங்கள், சுலுஹம்; முதலிய ஜோதிட சாஸ்திரத்தின் விவரங்களைக் கொண்டு அந்த நகர ஜனங்கள் எல்லோரையும் ஒருசில நாட்களிலேயே விலைக்கு வாங்கினதுபோல் சந்தியாசி தன்வசப்படுத்தி விட்டான். கடைசியில் அவனது ரூபத்தையும் குணத்தையும் பற்றி ஜனங்கள் மூலமாக அரசன் கேள்விப்பட்டான். அரசனுக்கும் ஆவல் பிறந்து அரண்மனைக்குச் சந்நியாசியை வரவழைத்தான். அவனுக்கு ஆசன மளித்துவிட்டு, ”பண்டிதரே, பிறர் எண்ணங்களை நீர் அறிவீர் என்பது உண்மைதானா?’’ என்று கேட்டான்.

அதற்குச் சந்தியாசி, ”விளைவைக் கொண்டு அதை அறிவீர்கள்’’ என்று பதிலளித்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி, அரசனை கட்டுக்கடங்காத ஆவல் கொள்ளும்படி செய்தான்.

ஒருநாள் சந்நியாசி வழக்கமாய் வரும் நேரத்தில் வரவில்லை. மறுநாள் அரண்மனைக்குள் புகுந்து, ”அரசே, உமக்கு நல்ல செய்திகள் சொல்லப் போகிறேன். இன்று, ”காலை மடாலயத்திற்குள்ளே நான் என் உடலைவிட்டு நீங்கி தேவலோகத்திற்குச் செல்வதற்குத் தகுந்த மற்றொரு சரீரம் பெற்றேன். தேவர்கள் எல்லோரும் என்னைப்பற்றி நினைத்தபடியே இருக்கிறார்கள். ஆதலால் சுவர்க்கலோகத்துக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். அங்கே ‘அரசனின் சௌக்கியத்தை நாங்கள் விசாரித்தாகச் சொல்லுங்கள்’ என்று தேவர்கள் என்னிடம் சொன்னார்கள்’’ என்றான்.

இதைக் கேட்ட அரசனுக்கு ஆவலும் ஆச்சரியமும் ஏற்பட்ட விட்டது. ”என்ன! சுவர்க்கத்துக்குக் கூடவா நீர் போகிறீர்?’’ என்று கேட்டான்.
”மகாராஜா, ஒவ்வொரு நாளும் நான் சுவர்க்கத்திற்குப் போய் வந்து கொண்டிருக்கிறேன்’’ என்றான் சந்நியாசி. அந்த முட்டாள் அரசன் அதை நம்பி விட்டான். ராஜ்ய அலுவல்களையும் அந்தப்புர ஸ்திரீகளையும் புறக்கணித்துவிட்டு சந்நியாசியிடமே ஈடுபட்டவாறு இருந்து விட்டான்.

நிற்க.பலபத்திரன் காட்டு ராஜ்யத்திலுள்ள கொந்தளிப்புகளை யெல்லாம் அடக்கிவிட்டு அரசனிடம் திரும்பி வந்தான். மந்திரி பிரதானிகளை அவரவர்கள் போக்கில் போக விட்டுவிட்டு, அரசன் அந்த நிர்வாண சந்நியாசியுடன் தனித்திருந்து, தாமரைபோல் மலர்ந்த முகத்துடன் ஏதோ அதிசயமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைப் பலபத்திரன் கண்டான். விஷயத்தைப் புரிந்துகொண்டான். அரசனை வணங்கிவிட்டு, ”அரசருக்கு வெற்றி உண்டாகட்டும்! தேவர்கள் பிரியமானதை வழங்கட்டும்!’’ என்று வாழ்த்தினான்.

திரியின் §க்ஷமத்தை அரசன் விசாரித்துவிட்டு, ”நீர் இந்த ஆச்சாரியாரை அறிவீரா?’’ என்று கேட்டான்.

”அநேக ஆச்சாரியார்களுக்குக் குருவாகவும், பிரம்மாவைப் போல் அநேக ஆச்சாரியார்களைச் சிருஷ்டிப்பவருமான இவரை எப்படி அறியாமலிருக்க முடியம்? மேலும், இந்த ஆச்சாரியாருடைய சுவர்க்கலோக யாத்திரைகளைப் பற்றியும் கேள்விப்பட்டேன். இது உண்மைதானா?’’ என்று மந்திரி கேட்டான்.

”நீர் கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதான்’’ என்றான் அரசன்.

”மந்திரிக்கு ஆவல் இருந்தால் அவரே அதைப் பார்க்கட்டும்’’ என்றான் சந்நியாசி.

பிறகு சந்நியாசி மடாலயத்திற்குள் சென்று நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நின்றான். ஒரு முகூர்த்த நேரம் ஆயிற்றோ இல்லையோ, மந்திரி அரசனைப் பார்த்து, ”அரசே, அவன் எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவான்?’’ என்று கேட்டான்.

”ஏன் இப்படி அவசரப் படுத்துகிறாய்? அவன் தன் சரீரத்தை மடாலயத்திற்குள்ளேயே விட்டுவிட்டு தெய்வ சரீரத்துடன் போய்த் திரும்புவான்’’ என்றான் அரசன்.

”அது உண்மையானால் விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்வோம். அவற்றைக் கொண்டு இந்த மடாலயத்தைக் கொளுத்துகிறேன்.’’

”எதற்காக?’’

”அரசே, அவன் உடலை எரித்து விட்டால் அவன் தேவலோகத்துக்குச் சென்று திரும்பும் தெய்வ சரீரத்துடன் உங்கள் அருகில் இருந்து வருவான் அல்லவா? இந்தக் கதையைக் கேளுங்கள்:

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)வருங்காலம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *