பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்

This entry is part 5 of 23 in the series 18 ஜனவரி 2015

valavaduraiவளவ. துரையன்
[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ]

”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன்
புதல்வர் இந்நினைவகற்றாதீர் “

என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன.

முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். பண்டைக் காலத்தில் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் பலர் தங்கள் நாட்டின் வணிகத்தின் பொருட்டு பல நாணயங்களை உருவாக்கி உள்ளனர் தமிழ்நாட்டை ஆண்ட சேர,சோழ,பாண்டியர் எனும் மூவேந்தர்களின் நாணயங்கள் பல அகழாய்வில் கிடைத்துள்ளன. சோழர்களின் முக்கியத் துறைமுகமான காவிரிப் பூம்பட்டினத்தில் சோழர்கால நாணயங்கள் பல கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு பக்கம் புலியும் மறுபக்கம் யானையும் பொறிக்கப்பட்டுள்ளன.

புறநானூறு புலி ஒன்றைக் குறிப்பிடுகையில் “பேழ்வாய் உழுவை” என்று காட்டுகிறது. இது சினத்தோடு பாய்கின்ற புலியைக் காட்டும். சோழர் கால நாணயத்தின் ஒரு பக்கம் காணப்படும் புலியும் தனது வலது காலைத் தூக்கி, வாய் பிளந்து, தலை நிமிர்த்தி, வாலைச் சுழற்றி உயர்த்திக் காணப்படுகிறது. இது புற நானூற்றுப் புலியை ஒத்திருக்கிறது. மறு பக்கத்தில் யானை, தேர், குதிரை வேலியிட்ட மரம், குடை, வேல் போன்ற சின்னங்களும் காணப்படுகின்றன.

ஆனால் கிடைத்த இந்த நாண்யங்களில் எந்த விதமான எழுத்தோ, பெயரோ காணப்பட வில்லை. ஒரு நாணயத்தில் எழுத்தோ அல்லது ஏதேனும் பெயரோ இருந்தால் அது எந்தக் கால நாணயம் என்று எளிதாகக் கணக்கிடலாம். இல்லையேல் அதில் இருக்கும் லச்சினையை வைத்துக் காலத்தைக் கணக்கிடலாம். பொதுவாக வேலியிட்ட மரம் எல்லா நாணயங்களிலும் காணப்படுகிறது. பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், மாநிலங்களில் கண்டெடுக்கப் பட்ட நாணயங்களில் வேலியிட்ட மரம் காணப்படுகிறது.

சேரர் கால நாணயங்களில் பெரும்பாலும் எல்லா நாணயங்களிலும் வில் மற்றும் அம்பு காணப்படுகிறது. அவற்றின் மறு பக்கத்தில் யானை,மற்றும் யானை மேல் கொடியும் காணப்படுகின்றன. இவை எல்லாம் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கண்டுபிடிப்பாகும். ஆனால் அறிஞர் நாகசாமி அவர்கள் பெயர் பொறிப்பு இல்லாமல் அவற்றை ஏற்க முடியாது என்று சொல்லி விட்டார். பிறகு அந்த நாணயங்களை ரசாயனச் சுத்தம் செய்து பார்த்ததில் அவற்றில் ‘கொல்லிப்புரை’ எனும் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவை ஏற்கப்பட்டன.
நம்முடைய பண்பாட்டை அறிய சாஸனங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. இந்தச் சாஸங்களைப் பொறிக்க ஓலைகள், செப்பேடுகள் செங்கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் எல்லாச்சாஸங்களும் கற்களில்தான் பொறிக்கப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக அறியப் படும் ஒரு செப்பேட்டில் தொடக்க வரி மட்டும் பொறிக்கப்பட்டு, மற்ற வரிகளெல்லாம் ஒருவித மசியினால் எழுதப்பட்டுள்ளன. ஒருக்கால் கற்களின் மேல் முதலில் மசியினால் எழுதப்பட்டு பின் அதன் மேல் உளியால் பொறிக்கப்பட்டிருக்கலாம்.
அசோகர் காலத்து சாஸனங்களும் சமுத்திர குப்தரின் அலகாபாத் சாஸனமும் அக்காலத்த்கு மக்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிவிப்பதோடு அந்தக் கால மன்னரின் மன நிலைகளையும் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது ’ஹாதிகும்பா’ சாஸனமாகும். இது கலிங்க மன்ன்ன்னின் சாஸனாமாகும். இதில் அந்த மன்ன்னின் பெயர் காரவேலன் என்று காணப்படுகிறது. மேலும் அம்மன்னனின் வீரம் அதில் விளக்கப்பட்டுள்ளது. அமராவதி, பார்குத் போன்ற இடங்களில் கிடைத்த சாஸனங்களில் கொடையளித்த வள்ளல்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சில சிற்பங்களின் கீழ் அக்கடவுள்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் யக்ஷவழிபாடு இருந்ததை அறிய முடிகிறது.
மண்டகப்பட்டு சாஸனம் மகேந்திரவர்மனின் பெருமையைப் பேசுகிறது. அதில் தான் செங்கல், மரம், உலோகம் எனும் இவை ஏதும் இல்லாமல் கோயில் எழுப்புவதாக அவன் பெருமை கொள்வது தெரிய வருகிறது. வாதாபியில் கிடைத்த கல்வெட்டுகள் நரசிம்ம பல்லவன் இரண்டாம் புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று, வாதாபியை வெற்றி கொண்டதைக் கூறுகிறது. காஞ்சி கைலாசநாத கோயிலைக் கட்டியவன் ராஜசிம்ம பல்லவன் என்று அக்கோயிலில் உள்ள சாஸனம் கூறுகிறது. மேலும் அதில் அப்பல்லவ மன்னனின் மனைவியின் பெயர் ரங்கபதாகை என்று கூறப்பட்டுள்ளது. அப்பெருமாட்டி மகளிர் குலத்துக்கே குலக்கொடி போன்றவர் என்றும் மிக்க அழகு உடையவர் என்றும் அது தெரிவிக்கிறது. பல்லவர் காலத்தில் இசை எந்த அளவுக்குச் சிறப்பு பெற்றிருந்தது என்பதைத் திருமயம் மற்றும் குடுமியாமலை சாஸனங்கள் கூறுகின்றன. அவற்றின் மூலம் பரிதிவாணி எனும் ஓர் வீணை 10-ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்ததை அறிய முடிகிறது.
திருவேலங்காட்டுச் சாஸனம் சோழர் காலத்தின் வரலாற்றை அறிய உதவும் ஒரு முக்கிய சாஸனமாகும். மக்கள் தன்னைத் தேர்ந்தெடுத்த பின்னரும் தன்னைவிடப் பெரியோராகிய உத்தம சோழர் அரியணை ஏறிய பின்புதான் தான் அரசனாவேன் என்று ராஜராஜசோழன் கூறியதை அதன் மூலம் அறிகிறோம். அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செலவன்’ எனும் வரலாற்றுப் புதினத்தில் இதை விரிவாகக் காணலாம். மேலும் செம்பியன் மாதேவி பல கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள், சோழர்கள் இலங்கை, கடாரம், கங்கை வரை சென்று பெற்ற வெற்றிகள் முதலியவை பற்றியும் சோழர் காலச்சாஸனங்கள்தாம் தெரிவிக்கின்றன.
பண்டைக்கால மக்களாட்சி முறையை விளக்கும் ஒரு சாஸனம் உத்திரமேரூர் சாஸனமாகும். இதில்தான் குடவோலை முறை கூறப்பட்டுள்ளது. தேர்தலில் நிற்கத் தகுதி உள்ளவர்களின் பெயர்களை எல்லாம் ஓலையில் எழுதி அவற்றை ஒரு குடத்தில் போட்டுப் பின் ஒரு சிறிய குழந்தையைவிட்டு அதில் உள்ள ஒரு ஓலையை எடுக்கச் சொல்வர். அதில் யார் பெயர் வருகிறதோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இம்முறையைத் தெரிவிக்கும் உத்திரமேரூர் சாஸனம் யார் யார் தேர்தலில் நிற்கக்கூடிய தகுதி, மற்றும் தகுதியின்மை பற்றியும் கூறுகிறது. மேலும் சோழர் காலத்தில் குளங்கள், கோயில், வணிகம் போன்றவற்றை நிர்வகிக்கத் தனிதனிக் குழுக்கள் இருந்தது தெரிய வருகிறது. காஞ்சி சாஸனம் ஒன்றில் வடமொழிப் புலவனான மயூரன் என்பவர் எழுதிய சூரியசதகம் எனும் கவிதை காணப்படுவது ஒரு வியப்பான செய்தியாகும். அக்கால மன்னர்கள் கோயில்களுக்குப் பல நன்கொடைகளை வழங்கினார்கள். அவர்கள் பொன். ஆடு, மாடுகள், நிலங்கள் முதலியவற்றை வழங்கியதோடு அவற்றைத் தங்கள் சாஸனங்களில் பொறித்து வைத்தார்கள். மேலும் அவற்றை செப்பேடுகளில் பதிவுசெய்து அச்செப்பேடுகளை ஒரு வளையத்தில் கோர்த்து அதில் மன்னர்களின் பெயரைப் பொறித்து வைத்தார்கள். கோயில்களை இட்த்துப் புதுப்பிக்க்கும்போது அக்கோயிலிலில் உள்ள கல்வெட்டுகளைப் பிரதி எடுத்துக் கொண்டு பின் கோயில்கட்டி முடித்த பின்பு அக்கல்வெட்டுகளை மீண்டும் பொறித்தனர்.

கல்வெட்டுகளில் இன்று காணப்படும் எழுத்துகள் காலம்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளன. அசோக மன்னரின் காலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் இருவகை எழுத்துகள் காணப்படுகின்றன. அவை பிராமி, கரோஷ்டி என்ற பெயர்களால் வழங்கப்பட்டன. இவற்றில் கரோஷ்டி எனும் எழுத்து வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்படும் ஒருவகை எழுத்தாகும். ஆனால் 4-ஆம் நூற்றாண்டுக்குப்பின் இது காணப்படவில்லை. நம்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலும் பிராமி எழுத்து வகையே காணப்படுகிறது. குப்தர்கள், வாகாடர்கள் பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளில் காணப்படுபவை எல்லாம் மருவிய பிராமி எழுத்துகளாகும். இந்த எழுத்துகள்தாம் பிற்கலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், கிரந்தம் நாகரம் என மாறிவிட்டன. பாண்டியர்கள் தமிழ் மொழியை வட்டெழுத்துகளில் பொறித்தனர். இந்தக் கல்வெட்டுகள் எல்லாமே பெரும்பாலும் மங்கள வாகியங்களுடன் தொடங்குகின்றன. அவற்றில் மன்னர்களின் வெற்றி வாழ்க்கை முறை ஆகியவை காணப்படுவதால் அக்கால வரலாற்றை நாம் நன்கு அறிய முடிகிறது.

பழங்காலத்தில் இருந்த நினைவுச் சின்னங்கள் மூலம் நாம் நிறைய செய்திகளை அறிய முடிகிறது. நினைவுச் சின்னங்களை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளளலாம். முதலில் வீரக்கல். ஊருக்கோ, நாட்டுக்கோ தம் உயிரைத் தியாகம் செய்த வீரனைப் பாராட்டி அவனுக்குச் சிலை எடுத்து அதில் அவன் செயலையும் பெயரையும் பொறித்திருப்பதே வீரக்கல்லாகும். அவனை வாளுடனோ அல்லது வில் மற்றும் அம்புகளுடனோ அல்லது யானை குதிரைகளுடனோ சித்தரிப்பது வழக்கம். போரில் வீர மரணம் எய்தியவனை விண்ணக மகளிர்கள் எதிர்கொண்டு வரவேற்பார்கள் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்தது. இந்த நடுகல் சில இடங்களில் மூண்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் அந்த வீரன் போர் செய்வதையும், நடுப்பகுதியில் விண்ணக மகளிர் வரவேற்பதையும் மேல் பகுதியில் அந்த வீரன் கடவுளை வணங்குவதையும் காணமுடிகிறது.

அடுத்து சதிக்கல். தம் கணவன் மாண்டபோது அக்கணவனுடன் தானும் தீக்குளித்து உயிர் விட்ட மனைவியர் நினைவாக நடுவதே சதிக்கல்லாகும். இந்த வழக்கம் பெரும்பாலும் ரஜபுத்திரர்களிடையேதான் நிலவி வந்தது. அக்கல்லில் ஒருவளைக்கை பொறிக்கப்பட்டிருக்கும். தன் கணவருடன் அப்பெண் என்றென்றும் சேர்ந்து வாழ்வதை அது குறிக்கிறது.
மைசூருக்குப் பக்கத்தில் அதுக்கூர் என்ற இடத்தில் காணப்பட்ட ஒரு நினைவுக்கல் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றபோது உயிர்விட்ட வீரனுக்கும் அவனுடன் உயிர்விட்ட வேட்டை நாய்க்கும் சேர்த்து எழுப்பப்பட்டதாக இருக்கிறது.
மூன்றாவதாக நாகக்கல். திருமணம் முடித்துப் பல ஆண்டுகளாகியும் மகப்பேறு இல்லாத மகளிர் அமைத்து வழிபடும் கல் இதுவாகும். அவர்கள் தங்களின் இப்பிறவியிலோ அல்லது கடந்த பிறவியிலோ ஏதேனும் நாகத்தைக் கொன்றதுதான் காரணம் எனக் கருதி இக்கல்லை அமைப்பார்கள். அக்கல்லில் ஒரு நாகமோ அல்லது இரண்டு நாகங்கள் பிணைந்த நிலையிலோ அமைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் மனிதத் தலையும், பாம்பின் உடலும் கொண்ட உருவமும் கூட காண முடிகிறது. சிலவற்றில் கண்ணன் அல்லது சிவலிங்கம் உருவங்களும் பொறிக்கப்படுவதும் உண்டு.
சிந்துவெளி நாகரிக காலத்து மக்களின் வழிபாட்டு முறை பற்றி இன்னும் சரியாகத்தெரியவில்லை. ஆதலால் அவர்கள் காலத்துக் கோயில்களைப்பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. அவர்கள் பொருளீட்டலையும் தம் வாழ்வில் இன்பம் அடைவதையும் பெரிதும் கொண்டிருந்தனர். எனவே அக்காலத்தில் கோயில்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர்கள் காலத்துக் கட்ட்டங்கள் மிக முக்கியமானவை. அவை சுட்ட செங்கற்களாலானவை. அக்கற்களும் மிகப் பெரிய அளவில் இருந்துள்ளன. மேற்கூரைகள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒருகால் வழிபாட்டுக்கான மிகப்பெரிய அறைகளை அவர்கள் பயன்படுத்திருக்கலாம்.
ஆரியர்களின் வருகைக்குப் பின்புதான் வட்டவடிவக் குடிசைகள் ஏற்பட்டன. அவைமூங்கில்களால் கட்டப்பட்டன. மேற்கூரைகள் இலைகளால் அமைக்கப்பட்டன. போகப்போக இவை வட்ட வடிவங்க்ளாக ஆரம்பித்தன. இதனால் வளைந்த மாடிகளும் சிகரங்களும் தோன்றின எனலாம். நமது நாட்டின் வரலாறே மௌரியர் காலத்திலிருந்துதான் சற்றுத் தெளிவாகத்தெரிகிறது எனலாம். குறிப்பாக அசோகன் புத்த மதப் பொன்மொழிகளைஎல்லாம் பாறைகளில் பொறித்தான். மேலும் குகைகளைக் குடைந்து அஜிவகர்கள் எனும் பௌத்தத் துறவிகள் வசிக்க வழி வகுத்தான். மகத நாட்டின் தலைநகரான ராஜகிருஹத்தில் ஒரு பெரிய மாளிகையை அசோகன் அமைத்தான். சீன யாத்திரிகரான யுவான்சுவாங் இதைப் பற்றித் தம் குறிப்புகளில் எழுதி உள்ளார். இன்றும் அந்த மாளிகையின் சில பகுதிகள் அங்கே உள்ளன.
கோயில்கள் வருவதற்கு முன்னர் ஸ்தூபங்கள் என்பவை ஏற்பட்டன. இவை வழிபடக் கூடியனவாக இருந்தன. இறந்தோரை அவர்களின் உடலைப் பூமியில் புதைத்து அவ்விடத்தில் கட்டும் கல்லறையை வழிபாடுதலே பிற்காலத்தில் ஸ்தூப வழிபாடாக மாறியது எனலாம். இத்தகைய ஸ்தூபங்களிலிருந்து புனித எலும்புகளைக் கொண்ட பேழைகள் கிடைத்துள்ளன. இந்த ஸ்தூபங்கள் முதலில் செங்கற்களால் கட்டப்பட்டுப் பிற்காலங்களில் பாறைகளைக் குடைந்து கட்டப்பட்டன.
ஸ்தூபமானது வட்டம் அல்லது சதுரமான அடிப்பகுதி மேலே அமைக்கப்பட்டது. அதன் உள்ளே மேலே ஏறப் படிகள் இருந்தன. ஸ்தூபங்களின் மத்தியில் ஒரு கம்பம் அமைக்கப்பட்டு அதன் மேலே சிகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மௌரியர் காலத்து ஸ்தூபங்கள் எல்லாம் சுட்ட செங்கற்களால் ஆனவை. சாஞ்சியில் உள்ள ஸ்தூபம் இதற்குச் சான்றாகும். சில ஸ்தூபங்கள் பெரிய கற்களால் மூடப்பட்டு பெரிதாக்கப்பட்டன. புத்தரின் எலும்புகள் எட்டுத்திசைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்தூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அசோகர் ஏறக்குறைய 80000 ஸ்தூபங்கள் அமைத்ததாகக் கூறப்படுகிறது. பெஷாவரில்தான் மிகப்பெரிய ஸ்தூபம் உள்ளது. அதன் அடிப்பாகம் 5 அடுக்குகளாலானது. மேலே 15 மாடிகள் உள்ளன. அது 638 அடி உயரமும் 286 அடி குற்றுக்களவும் கொண்டதாகும். இந்த ஸ்தூபங்களெல்லாம் பிற்காலத்தில் மறந்து போய் விட்டன. அவற்றின் அடியில் புதையல் இருக்கிறதென்று நம்பி அவை சிதைக்கப்பட்டன.
பிறகுதான் சைத்ய அறைகள் தோன்றின. துறவிகள் மக்களுக்காக ஸ்தூபங்களை அமைத்தனர். அவர்கள் மனிதர்கள் வராத மலைக்குகைகளில் தங்கினர். அங்கேயும் ஸ்தூபங்க ளை அமைத்துத் தாம் வழிபட ஓர் அறையையும் அமைத்தனர்.இந்த அறைகளே சைதன்ய அறைகள் வழங்கப்பட்டன. இவை மரங்களால் அமைக்கப்பட்டு சூரிய வெளிச்சம் உள்ளே வர சாளரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பராபர் மலைக் குகையில் உள்ள சோமஸ் ரிஷிக் குகையும், சுதாமர் குகையையும் இந்த அமைப்பின் கீழ் வருகின்றன. இந்த சைதன்ய அறையானது முதன்முதல் லோமஸ்ரீஷியில்தான் காணப்படுகிறது. இவைஎல்லாம் மௌரியர் காலத்தைச் சார்ந்தவையாகும். நாசிக்கிலும் அஜந்தாவிலும் உள்ள சைதன்யக் குகைகள் கி.மு 150 –ஐச் சார்ந்ததாக இருக்கலாம்.
கார்லி எனும் இடத்தில் உள்ள சைதன்யக் குகை இகப் பெரியதாகும். 125 அடி நீளமும், 25 அடி அகலமும், 25 அடிஉயரமும் கொண்டது அது. இது முதல் நூற்றாண்டை சார்ந்தது. இங்கு அப்போது வைக்கப்பட்ட மரக்குடை இன்றும் உள்ளது. அஜந்தா குகைத் தொடரில் 19, மற்றும் 29 ஆம் குகைகள் சைதன்யக் குகைகளாகும். எல்லோரா குகையில் உள்ள விஸ்வகர்மா குகை சைதன்யா குகையாகும். இங்கெல்லாம் புத்தர் பல நிலைகளிலே படைக்கப்பட்டார். பிற்காலங்களில் சிலை வழிபாடு அதிகமாக சைதன்ய அறை வழிபாடு மறந்துபோனது.
அடுத்துத் தோன்றியவை விஹாரங்களாகும். இவ்வகையைசார்ந்தவையாக அஜ்ந்தாவின் சில குகைகள் உள்ளன. விஹரங்களில் பின் சுவரில் ஓர் அறை குடைந்து அதில் புத்தர் சிலையை வைத்தார்கள். அஜந்தாவின் 11- ஆவது குகையில் முதன் முதல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 16, மற்றும் 17- ஆவது குகைகளில்தான் புகழ்பெற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. இபை வாகாடக அரசன் ஹரிசேனன் காலத்தவை. இதில் கூட 24- ஆம் குகை முற்றுப் பெற வில்லை ஆனால் அது மிக அழகோடும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மவர்ம பல்லவனால் போரில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு மாண்டதால் இக்கலை அழிந்துபோனது.
இதே காலக் கட்டத்தில்தான் சைதன்யக்குகைகள்யும் விஹாரங்களையும் போன்று இந்துக்களின் குகைக் கோயில்கள் தோன்றின எனலாம். புத்த மதத்திற்குப் பிறகுதான் இந்துக்களின் சிலை வழிபாடு தோன்றியது என்று கூறப்படுகிறது. இந்துக் கோயிகளில் மிகப்பழமையானதாக பேஸ்நகரில் உள்ள விஷ்ணு கோயில் கருதப்படுகிறது. இது சுமார் கி.பி 140- க்கு முந்தையதாகும். இது செங்கற்களுக்கிடையே முதன்முதல் சுண்ணாம்புச் சுதை வைத்துக் கட்டப்பட்டது. ஹிலியோடோரஸ் எனும் கிரேக்கத் தூதனால்தான் இங்குள்ள கருட ஸ்தம்பம் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சாசன்ன்ங்கள் வரலாற்றுக் கலத்தை அறிய மிகவும் உதவி செய்கின்றன.
உதயகிரி மலைத்தொடரிலிலும் சில இந்துக்கோயில் குகைகள் காணப்படுகின்றன. எல்லோராவில் உள்ள 16 குகைக்கோயில்களில் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன. மும்பையில் உள்ள எலிபண்டா குகைக்கோயிலும் குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னாட்டைப் பொருத்த மட்டில் பல்லவர் கால்த்த்ஹ்க்குமுன்னர் இருந்த கோயில்கள் பல அழிந்திருக்கலாம். மகேந்திர வர்மன் அதனால்தானோ என்னவோ செங்கற்கள், உலோகம் ஏதுமின்றி அமைத்தான்.
பல்லவர் காலத்தை 4 பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலில் மகேந்திர வர்மன் காலம். தென்னாட்டில் தேர்ந்தெடுத்த மலைச் சரிவுகளில் அவன் குகைக்கோயில்களை அமைத்தான். அவற்றில் தூண்களையும் அமைத்தான் அவை சதுரமாகவும் எட்டுப்பட்டைகளை உடையதாகவும் இருந்தன.
இரண்டாவது நரசிம்ம பல்லவன் காலம்: தந்தை வழியிலேயே நரசிம்ம வர்மனும் அமைத்ததுதான் மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்கள் என அழைக்கப்படும் குகைக் கோயில்களாகும். இவற்றில் சதுரமகாவும், நீண்ட சதுரமாகவும், வளைந்த குதிரை லாடம் போன்ற அமைப்பும் காண முடிகிறது.
மூன்றாவது ராஜசிம்மன் காலம்: காஞ்சின் கைலாசநாதர் கோயிலும், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலும் இக்காலத்தவையாகும். பட்டையான வடிவங்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன.
அடுத்து அபராஜிதன் காலம்: கலை மேலும் வளர்ச்சி பெற்று மீண்டும் உருண்டை வடிவ லிங்கங்கள் தோன்றின.
சோழர் கால மென்றாலே நினைவுக்கு வருவது தங்சைப்பெரிய கோயில்தான். முற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் முக்கியமானது திருச்சி மாவட்டத்தில் சீனிவாச நல்லூரில் உள்ள குரங்கநாதர் கோயிலாகும். 50 அடிநீளம் உடைய இக்கோயிலில் 20 அடி சதுரமான கருவறை உள்ளது. கோயில் கட்டி முடித்தவுடன் குரங்கு ஒன்று அசுத்தப்படுத்திவிட்டதால் அபிஷேக ஆராதனைகள் நிறுத்தப்பட்டு இன்றுவரை இக்கோயில் பூட்டப் பட்டுள்ளது.
பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் கருவறைகளின் மேலும் வாயில்களின் மேலும் கோபுரமைப்புகள் தோன்றின. பிற்காலத்தில் கோபுர வாயில்கள் பெரியதாகி கருவறை விமானத்தையே மங்கச் செய்துவிட்டன. சிதம்பரம், கும்பகோணம், சிதம்பரம் திருவானைக்கோயில்களில் இதைக் காணலாம். விஜய நகர மன்னர் காலத்தில் கோயில்களின் தூண்களில் கற்பனை மிருகங்களுள் பாயும் குதிரையும் தோன்றின. கி.பி 1600-க்குமேல் வந்த நாயக்கர் காலத்தில் பிரகாரச்சுற்றுகள் அதிகமாயின. ஸ்ரீரங்கக் கோயிலில் சுமார் பத்துச் சுற்றுகள் உள்ளன. மேலும் இதே போல மதுரை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமேஸ்வரம், திருநெல்வேலி ஆகிய நகரங்களின் கோயில்களில் காணலாம்.
கேரள நாட்டுக்கோயிகள் நேபாள நாட்டுக் கோயில்களைப்போல் மரத்தால் செய்யப்பட்டவையாகும். பொதுவாகக் கோயில்கள் வளர்ந்த விதத்தைக் குப்தர் காலத்திலிருந்து அறிய முடிகிறது.
1. தட்டையான மாடம், சிறிய முன் மண்டபம் உள்ள சதுரக் கோயில்கள்
2. அடுத்த வளர்ச்சி தட்டையான மாடம் சதுரக் கோயில் ஆனால் மேலேமூடிய திருச்சுற்றுகள் உடையவை.
3. அடுத்து நீண்ட சதுரம் பின்பக்கம் வளைந்த லாடம் உள்ளவை.
4. இவற்றுடன் வளைந்த லாடம் போன்ற அமைப்பு கொண்டவை.

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடுஇலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது
author

வளவ.துரையன்

Similar Posts

10 Comments

  1. Avatar
    ramu says:

    திருமயம் கல்வெட்டு பற்றி குறிப்பிட்டது இருந்தீர்கள். உண்மையில் இந்த கல்வெட்டு பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதியில் உள்ளது. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு ஆராய்ச்சியாளர் (திரு கே ஆர் சீனிவாசன் ) நாட்டியக் கலை மற்றும் இசை பற்றியதாம். இதில் பாதி அழிக்கப் பட்டு சைவ வணைவ கோவில்களுக்கு இடையே (பக்கத்தில் பக்ககத்தில் அமைந்துள்ளது வெகு நாள் இரண்டுக்கும் ஓரே வாயில்படியாம் ) நடந்த சண்டையைப் பற்றியும் இதனை தீர்க்க ஒரு நாயக்க தளபதி “அப்பன்னா தண்டநாயக்க”வினால் எழுதப் பட்ட தீர்ப்பு இருக்கிறதாம். திரு கே ஆர் சீனிவாசன் புதுக்கோட்டை சமஸ்தான கல்வித் துறை DPI அவர்களின் சகோதரர் ஆவார்.

  2. Avatar
    BS says:

    திருமயம் மதுரைக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள ஊர். தீரர் சத்யமூர்த்தி பிறந்த ஊர். இங்குள்ள மலையடிவாரத்தில் இருகோயில்கள் உள்ளன. 1. சிவனுக்கு 2. பெருமாளுக்கு. பெருமாளின் பெயர் சத்யமூர்த்தி பெருமாள். பள்ளிகொண்ட பெருமாளும் (கரிய உருவத்துக்குப்பேர்போனவர்) உண்டு. (“மையார் கடலும், மணி வரையும், மா முகிலும், கொய்யார் குவளையும், காயாமும் போன்ற இருண்ட மெய்யானை, மெய்ய மலையானை, கைதொழா கை கையல்ல காண்டோமா” எனத் திருமங்கையாழ்வார் பெருமாளின் கரிய நிறத்தைப்போற்றுகிறார்) இவ்வூருக்கும் பல்லவர்களின் தொண்டை நாட்டிற்கும் எப்படித் தொடர்பு உண்டாகியிருக்கும்? எங்கோ பாண்டிய நாட்டில் கிடக்கும் ஊரிது. பாண்டியரை வீழ்த்தி மதுரைக்கருகில் வந்தனரா பல்லவர்கள்? இசையை மட்டும் குறிப்பாக இவ்வூர் கல்வெட்டில் எழுதிப்போகக் காரணம்? நாயக்கர்கள் காலம் சமீபத்திய காலம். பல்லவரும் பாண்டியரும் முந்துறமுன்னம் சென்றவர்கள். சைவ – வைணவப்போராட்டம் நாயக்கர் காலத்தில் இருந்தது; அப்போது பல வைணவக்கோயில்களை சைவர் ஆக்கிரமிக்க முயன்றனர் என்பதும் சரி. நாயக்கர்கள் தெலுங்கர்கள். வைணவர்கள். எனவே முழுவதும் அழிக்கவிடாமல், இங்கொன்று அங்கொன்று கலக்க அனுமதித்தார்கள் என்பதே சரி. பல்லவர் இங்கு வந்தாரென்றால் இசையை மட்டுமே ஏன் கல்வெட்டில் குறித்துச்சென்றார்? ஏன் பிறவிடங்களில் தம் கல்வெட்டுக்களை விட்டுச்செல்லவில்லை? கோயில் என்ற காரணத்தால் தம்மைப்பற்றி எழுதாமல் இசையை மட்டும் எழுதிச்சென்றனரோ? நினைவிருக்கட்டும். சத்யமூர்த்திப்பெருமாளைப் பாடியவர் திருமங்கையாழ்வார் மட்டுமே. திருமங்கையாழ்வாரும் மகேந்திரபல்லவனும் சம காலத்தவர்கள் மட்டுமன்றி, நண்பர்கள். (K Neelakanta Shastri in Oxford History of South India) ஆழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோயிலை புணருத்தானம் செய்தானவன் என்பதை ஆழ்வாரே தன் நன்றி சொல்லும் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். ஆக, திருமயம் கோயில் காலத்தில் பல்லவன் அங்காண்டான் என்பது உறுதி. ஆனால், இங்கு வந்தானா?

  3. Avatar
    BS says:

    சைவ வைணவச் சண்டை திருமலை நாயக்கர் காலத்தில் உச்சிக்குச் சென்றதும், அவர் சைவ அமைச்சர்களைக் கொண்டிருந்ததும், இதுவரையில்லா விழாவொன்றை ஏற்படுத்தி சைவ-வைணவருக்கிடையே ஒற்றுமையுண்டாக்கவே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவைக் கண்டுபிடித்து அரங்கேற்றினட்தும் கள்ளழகர் கோயில் கலங்கமான வரலாறு.

  4. Avatar
    BS says:

    திருமெய்யம் என்பதே பெயர். திருமயம் என மாற்றாதீர்.

  5. Avatar
    BS says:

    ..இருண்ட மெய்யானை, மெய்ய மலையானை, கைதொழாக் கை கையல்ல காண்டாமே
    – திருமங்கையாழ்வார்.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\\ இருண்ட மெய்யானை, மெய்ய மலையானை, கைதொழாக் கை கையல்ல காண்டாமே \\

    மேற்கண்ட சிரி வைணைவ திரிபுக்குச் சொந்தக்காரர் அன்பர் ஜோ

    திருமங்கையாழ்வார் திருவாக்கு :-

    மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
    கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
    மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
    கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே

  7. Avatar
    BS says:

    Lovely Krishnakumar. I wholeheartedly thank you for inserting the missing but important words.

    ஆழ்வாரின் பாசுரம் நீங்கள் போட்டதே! பலே பலே…ஆழ்வார்களையெல்லாம் படிக்கத் இறங்கி வந்தாச்சே! மெத்த நன்றிகள்.

    திருமயம் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியரே (வளவ துரையன்) எழதியதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? திருமெய்யம் என்பதற்குச் சான்றாக திருமங்கையாழ்வாரின் பாசுரம் என்னால் போடப்பட்டது. மகேந்திர பல்லவன் தமிழகத்தின் வடபகுதியில் (தொண்டை நாடு) ஆண்ட போது வாழ்ந்தவர் திருமங்கையாழ்வார். எனவே திருமெய்யம் கோயில் சிறப்புடன் பல்லவன் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். ஆழ்வார்கள் ஏற்கனவே சிறப்புடன் இருந்த பெருமாள் கோயில்களை மறக்காமல் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். அதன்படி, திருமெய்யம் பள்ளிகொண்ட பெருமாளிடம் வந்திருக்கிறார் ஆழ்வார். சத்திய மூர்த்தி என்ற திருநாமம் பிறகாலத்தில் – ஆழ்வார் காலத்திற்குப்பின் – சூட்டப்பட்டிருக்கவேண்டும். அக்கோயிலில், இரு சனனதிகள் – ஒன்றில்தான் சத்தியமூர்த்திப்பெருமாள். இன்னொன்றில் பள்ளிகொண்டபெருமாள். பள்ளி கொண்டான் குடைவரைக்கோயில் பள்ளிகொண்டிருக்கிறார். அஃதே ஆதிதெயவம் அங்கே. கரிய திருமேனி. கரிய என்றால் அப்படிப்பட்ட கருமை. அத்திருமேனியைக் கண்ட எவருமே அக்கருமையைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் அசராமல் இருக்க முடியாது. அக்கருமையைச் சிறப்புச் செய்யத்தான் அப்பாசுரம். மேலும் குடைவரைக்கோயில், பெருமாளின் திருமேனியும் அம்மலைக்கல்லே என்பது திண்ணம். எனவே மெய்ய மலையானை என்கிறார். அச்சாதவரத் திருமேனிகளை ஆராதித்தவர்கள் ஆழ்வார்கள். கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பாடவேண்டும் போலிருக்கும். பெருமாள் பக்கத்திலே வந்தாச்சில்ல.; போய்ப்பாருங்கள் திருமெய்யத்தை. ஏனென்றால், சங்கேந்தும் கையானை, கை தொழா கை, கையல்ல காண்டாமே !

  8. Avatar
    paandiyan says:

    சைவ வைணவச் சண்டை எல்லாம் டுபாக்கூர் வறலாறு. அது எல்லாம் வெளியில் வந்து நாளாகிவிட்டது. வேற?

    1. Avatar
      BS says:

      சைவம், வைணவம், பவுத்தம், சமணம், சீவகம் – என்றெல்லாரும் ஒற்றுமையாக வாழ்ந்ததாகத்தான் வரலாறு. சண்டை சச்சரவு என்பதெல்லாம் வெறும் டுபாக்கூரு.
      சைவம் – வைணவம் சண்டை என்பது இந்துமத எதிர்ப்பாளர்கள் கட்டிய கதை.
      சோழன் கூரேசரின் கண்களைத்தோண்டவில்லை.
      பெரியநம்பியைக் கொல்ல வரவில்லை.
      இராமானுஜரை நாட்டைவிட்டே ஓடும்படிச் செய்யவில்லை.

      இதுதாங்க நம்ம வரலாறுங்க.

  9. Avatar
    ramu says:

    பல்லவர் காலத்துக்கு முன் கோவிலைக் எல்லாம் செங்கல் கொண்டு கட்டப்பட்ட்டது பல்லவ மன்னர்கள் எல்லாம் தான் குடவரை ( மலையைய குடைந்து கட்டினார்கள் என்பது பலச் ஆராச்சியசளர் கண்ட முடிவு கோவிலை கட்டினார்கள் பல்லவர் ஆட்ச்சியிலே என்றால் மன்னர்கள் அங்கு நேரில் வரவேண்டும் என்று பொருள் இல்லை காலத்தை குறிப்பிடவே அவாறு சொன்னேன் த்னார்ந்த வார் புனல் சூழ் தடைவரி மேல் கிடந்தானை ” என்றால் அங்கு சிர்ப்பிகளால் செதுக்கப்பாட்ட அந்த பெருமாள் மூர்த்தத்தை குறிப்பிடுகிறார் திருமச்ங்கை மன்னன் செங்கல்லால் கட்டப்பட்ட கோவிகளில் பெருமாள் மூர்த்தம் கல்லில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும்இல்லை பல்லவ மன்னன் நரசிம்ம வர்மா பல்லவனின் காலம் 642 கி பி திருமங்கை ஆழ்வாரின் காலம் 776 கி பி என்பது சரித்திர ஆராஇச்சியசலர் முடிவு முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *