பொறுப்பு

This entry is part 23 of 31 in the series 16 டிசம்பர் 2012

கணியம் பதிப்பகத்து சம்பந்தனாரின் மகள் திருமணம். என்னுடைய பதிப்பகத்தார் வீட்டுத்திருமணம். நான் எழுதுவதை எல்லாம் அவர் வெளியிட்டுத்தான் நான் எழுத்தாளன் என்று ஆனேன். அப்படியெல்லாம் இல்லை என்று நான் எப்படிப்பொய்ச்சொல்வது. எழுதியதைப் புத்தகம் என்றாக்கி ஒர் உருக்கொடுத்து க்கொண்டு வந்தால்தான் வெளியுலகம் நாம் எழுதியிருப்பதாய் சொல்கிறது. என்னத்தை நாம் அப்படி எழுதியிக்கிழித்து விட்டோம் என்பது யாருக்கும் தெரியவேண்டிய அவசியமே இல்லை.
எவருக்குமே அக்கறை இல்லாத எழுத்தின் ஆழம் கனம் இவை பற்றி நாம் மட்டும் கவலைப்படுவானேன். எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் பாடியவன் பாட்டைக்கெடுத்தான் என்பதுதான் அன்று தொடங்கி என்றும் உலகப்பார்வை.
கணியம் பதிப்பகத்தாருக்கு இந்த ப் புத்தக வெளியிட்டால் எல்லாம் காசு ஏதும் வந்ததா இல்லையா என்கிற விஷயம் யார் போய் யாரைக்கேட்பது. லாபம் என்று ஒன்று வருவதானாலேதான் அவர் இப்படி காரியமெல்லாம் தொடருகிறார் என்று மாத்திரம் சொல்லலாம். மற்றபடி எனக்கு ஏதும் பணம் கிணம் கொடுத்தாரா என்பதெல்லாம் உங்களுக்கு எதற்கு. அதைமட்டும் என்னோடு விட்டுவிடுங்கள். தேவரகசியங்கள் என்றைக்கும் பகிரத்தக்கன அல்ல.
திருமண வரவேற்புக்குத்தான் என்னை அழைத்திருந்தார்கள்.வரவேற்புக்கு மட்டுமே அழைப்பு தருவது என்பது இப்போது எங்கும் வாடிக்கையாகிவிட்டது.திருமணத்தில் மணமகன் மங்கல நாண் அணிவிக்கும்போது மலரும் மஞ்சள் அரிசியும் தூவி எல்லாருமாக மண மண்டபத்தில் வாழ்த்துவது என்பதெல்லாம் இப்போது அனுசரிக்கப்படுவதில்லை. காதும் காதும் வைத்த மாதிரி திருமணச்சடங்கு நாலு பேருக்குள் முடிந்துபோகிறது.
திருமணத்திற்கு முன்னரே பலானது எல்லாமே பூர்த்தி என்பது ஒரு தனிக்கதை. இப்படிச்செய்வதிலே சம்பந்தப்பட்டவர்ட்களுக்கு நன்மைகள் பலது இருக்கக்கூடும். ஆகத்தானே இது எங்கும் தொடரும் கதை..
சென்னையில் திருமண மண்டபத்தைக்கண்டுபிடித்து நாம் தேடிய உறவினரோ நண்பரோ அவர்கள் மண்டபத்துள்ளே இருப்பது உறுதியாகிவிட்டால் பின்னர் வேறென்ன வேண்டும். நம் முகம் மலர்ந்துவிடுகிறதுதான். அத்தனை விலாச சிக்கல்கள் அத்தனை கொளறுபடிகள். செல்போன் ஆளுகைக்காலம் இது. இல்லாவிட்டால் நாம் அம்போதான். இருக்கும் இடம் சொல்லி செல்லவேண்டிய இடம் ஒன்றிற்கு ஆற்றுப்படுத்தும் கருவியாய் செல் போன்கள் பணிசெய்துகிடக்கின்றன, செல் பேசி இருப்பதால் நம்மை விடாமல் தொடர்வது பிரச்சனைகள் மட்டுமா சவுகரியங்கள் எல்லாம்தான்.
சம்பந்தனார் தெரிகிறார். அவர் துணைவியும்கூடத்தான். வரவேற்பு முகப்பிலே கைகள் கூப்பி நின்றபடிக்கு இருவரும் எத்தனை அன்போடு வரவேற்கின்றனர்,
‘நிலவன் வாங்க வாங்க’
என்னைத்தான் அழைத்தார் சம்பந்தனார். எத்தனையோ அழகாய் நான் பற்கள் முழுவதும் காட்டியிருப்பேன். வீடியோ க்காரருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்.
‘நேரா விருந்துக்கு ஹாலுக்குப்போயி சாப்புடணும் அப்புறம் மண்டபத்துல வரவேற்பு’
‘சரிங்க’
சம்பந்தனாரிடம் சொன்னேன். திருமண சாப்பாட்டுக்கூடம் சென்றேன். தலையில் நீட்டுக் குல்லாய் அணிந்தோர் கையுறை அணிந்தோர் பதார்த்தங்களை பரிமாறிக்கொண்டு சுற்றி சுற்றி வந்தனர்.சாப்பாட்டு இலையில் எத்தனையோ வகைகள் வரிசை வரிசையாக வைத்திருந்தனர். எதை எப்படி உண்பது என்பதே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. நல்ல சாம்பார் ஒரு கரண்டி கிடைத்தால் தேவலை என்று இருந்தது..யார் கொண்டு கொடுப்பார்கள். விருந்துச் சாப்பாடு முடித்து எழுந்து நிற்போர் குடிப்பதற்கும் தின்பதற்கும் எத்தனையோ தினுசுகள் அங்கங்கே .போர்க்களமாய்த் தெரிந்தது அதே அந்தப்பகுதியில். வெற்றிலை பீடா இத்யாதிகள்
வழங்கிட சில வடக்கத்திக்காரர்கள். அவர்கள்கொடுத்தால்தான் பீடா சரியாக இருக்குமா என்ன.
ஒருவழியாய் சாப்பாடு முடிந்து வரவேற்பு மண்டபம் சென்றேன்.
சம்பந்தனார் மண்டபத்தில் எல்லாரையும் அங்கங்கே பார்த்து பார்த்து அமர வைத்துக்கொண்டு இருந்தார். மெல்லிசை என்று பெயரில் வல்லிசையை ஒரு குழு மய்யமாய் அமர்ந்து வழங்கிக்கொண்டிருந்தது .யாரும் அதனை சட்டைசெய்ததாய் தெரியவே இல்லை.பின்னர் ஏன்தான் அவர்கள் தொடருகின்றார்களோ என்றிருந்தது. அட்வான்சு வாங்கிய பணம் இன்னும் வாங்கவேண்டிய பணம் என்று இருக்கவே செய்யும். மெல்லிசை கேட்போர் காது கிழிந்துபோய்விடுமோ என்ற அளவுக்கு டிரம்களின் ஒலி வந்துகொண்டே இருந்தது..
ராஜா ராணி இருக்கையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர்.’ மணப்பெண்ணின் தலை முடி முகத்தில் கொஞ்சமாய் வீழ்ந்து வீழ்ந்து முகத்தை மறைத்து க்கொண்டிருந்தது. கொஞ்சமாய் என்றால் நீளமாய்த்தான்.யாரேனும் இதனைக்கவனிக்கிறார்களா இல்லையா. பக்கத்தில் பெண் தோழி ஒருவள் வாட்ட சாட்டமாய் நின்றுகொண்டிருக்கிறாள். அவளுக்கு என்னதான் வேறு வேலை இருக்கிறதோ.. இது விஷயம் எங்கே அவள் சட்டை செய்கிறாள்.. பக்கத்தில் அமர்ந்திருக்கும் புது மாப்பிள்ளை பெண்ணுடன் பேசிக்கொண்டேதான் இருக்கிறார். சும்மா ஒன்றும் அமர்ந்துகொண்டிருக்கவில்லை. தம்பதிகள் லேசாகக்கொஞ்சம் சிரிக்கிறார்கள். ஆனால் பெண்ணின் தலை முடி முகத்தில் விழுவது முகத்தை மறைப்பதுமட்டும் ஏனோ யாருக்கும் ஒருபொருட்டாகவே தெரியவில்லை. மணப்பெண்ணின் தலை முடி முகத்தில் வீழ்ந்து மறைப்பதை அவளே சரி செய்து கொண்டே இருக்கிறாள். எத்தனை முறை சரிசெய்வது. அது வீழ்வதும் அதனை சரிசெய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே. பெண்ணைப்பார்ப்பதற்கு ப்பரிதாபமாகவே இருந்தது. நமக்கு ஏன் வம்பு என்று இருக்கலாம். ஆனால் மனம் விட்டால்தானே. ஏதோ ஒரு பெரும் தவறு நடந்துகொண்டிருப்பதாகவும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லையே என மன உறுத்தல். பக்கத்தில் அமர்ந்திருந்த பதிப்பக நிர்வாகி யிடம் சொன்னேன்.வரும் அது விஷயம் அவரும் கவனிப்பதாகவும் ஆனால் மேடையில் கவனிக்க வேண்டியவர்கள் யாரும் கவனிக்கவில்லையே என்றும் குறைபட்டுக்கொண்டார்.
‘நானே போய் சொல்லிட்டு வந்துடறன். பதிப்பக நிர்வாகி மேடையை நோக்கிக்கிளம்பினார். பெண் தோழியிடம் சென்று நின்றுகொண்டு தானே சொல்ல ஆரம்பித்தார். மணப்பெண் பதிப்பக நிர்வாகி என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிந்து லேசாகச் சிரித்துக்கொண்டார். மாப்பிளைக்கும் இது விஷயம் மணப்பெண்ணே சொல்லி முடித்தார்.
‘ப்யூடி பார்லர் அம்மா எதிரே உக்காந்து இருக்காங்க. சினிமாவுல பெரிய பெரிய கதாநாயகிங்களுக்கு தலைமுடி அலங்கார வேல மேற்பார்வை பாத்துகிட்டு ஔஞ்ச நேரத்துல இங்க வர்ராங்க அவங்கதான் இங்கயும் பொண்ணுக்கு த்தலை முடி அலங்காரம் செய்தவங்க. அதுக்கே தனியா ரூபாய் அய்யாயிரம் கூலி கொடுத்து செய்திருக்கு. நீங்க சொல்லுறது ஏதும் இப்ப அவங்க காதில உழுந்துதுன்னா பெரிய பிரச்சனையாயிடும். நீங்க போய் உங்க இடத்தில உக்காருங்க எங்களுக்குத்தெரியாதா. இதெல்லாம் நீங்க வந்துதான் இந்தமாதிரி செய்திங்க சொல்லுணுமா’
‘ அப்ப இது வேணும்னே செய்துதான் இப்படி தலை முடிய விட்டிருக்காங்களா’
‘ ஆமாம் ஆமாம் நீங்க போய் உங்க வேலயபாருங்க’ அதட்டிச்சொன்னாள்.
பதிப்பக நிர்வாகி பேய் அறைந்தமாதிரி உணர்ந்து வேறு இடத்தில்போய் உட்கார்ந்துகொண்டார். என்னடத்தில் வந்து ஏந்த த்தகவலும் சொல்லாமலே அவர் சென்றது எனக்கு வருத்தமாகவே இருந்தது. அவர் வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டது மட்டும் எனக்குத்தெரிந்துவிட்டது. மற்றபடி தலைமுடி அதேமாதிரி மணப்பெண்ணுக்கு முகத்தில் வீழ்வதும் முகத்தை மறைப்பதும் மணப்பெண் அதனை ஒரம் செய்வதும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.
அன்பளிப்பு க்கவரைக்கையில் எடுத்துக்கொண்டு மேடையை நோக்கி லேசாக நடக்க ஆரம்பித்தேன்.
நான் மேடை அருகில் சென்றதும் மணப்பெண் மாப்பிள்ளையிடம் என்னைப்பற்றி
ச்சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘ சாரு நிலவன்னு புனை பேருல எழுதிகிட்டு இருக்காங்க. அப்பா பதிப்பகத்துல பத்து புத்தகங்க நாவல் சிறுகதைன்னு போட்டு இருக்கம். நல்ல எழுத்தாளர்’
மாப்பிள்ளை என்னைப்பார்த்து ஒருமுறை புன்முறுவல் செய்தார்.ன் அன்பளிப்புக்கவரை ஞாபகமாய் மணப்பெண்ணிடம் ஒப்படைத்தேன்.
எப்போதோ ஒரு முறை மாப்பிள்ளையா பெண்ணா யாருக்கு நாம் அன்பளிப்பு தர வேண்டும் என்பது முக்கியமாய் மறந்துபோய் அன்பளிப்பை மாறி வைத்துவிட்டுவந்ததுமுண்டு. கல்யாண மண்டபமே மாறி மொழிப்பணத்தை யாரோ சம்பந்தமில்லாதவர்களுக்கு வைத்துவிட்டு அதே திருமணத்தில் விருந்து சாப்பிட்டு வந்தவர்கள் என்னிடம் கதை சொல்லக்கேட்டிருக்கிறேன்.
போட்டோக்காரன் தன் திருப்பணி முடித்து எனக்கு நீங்கள் செல்லலாம் என அனுமதி அளித்து முடித்தான். நான் மேடையை விட்டு இறங்கிகொண்டிருந்தேன்.
‘ இவுருதான் என் தலை முடி முகத்துல வந்து வந்து விழுவுதுன்னு பொறுப்பாக் கவலைப்பட்டு மேடைக்குச் சேதி சொல்லி அனுப்புனவரு’
‘ எழுத்தாளர்னு சொல்லிட்ட அப்புறம் இதெல்லாம் கூட இல்லைன்னா’
மாப்பிள்ளை பதில் சொல்லிக்கொண்டிருந்தார். .
நான் வரவேற்புத் தாம்பூலப்பைகள் மொத்தமாய் வைத்துக்கொண்டுவாயிலில் நிற்போரிடம்சென்று ஒரு பை வாங்கிக்கொண்டேன் அந்த .கணியம் பதிப்பகத்து சம்பந்தநாரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ப்புறப்பட்டால் தேவலை. அவரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
—————————————————————————————————

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்புசுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *