மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31

This entry is part 3 of 43 in the series 24 ஜூன் 2012

34. நாயக்கர் அவையை அலங்கரித்திருந்தார். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டியிருந்தது. சிறையிலடைத்திருந்த முதல் குற்றவாளியை நாயக்கர் அழைத்துவரும்படி கட்டளையிட்டார்.

– கள்வனை அவைக்கு கொணருங்கள்.

வேல்கம்பு காவலர்கள் இருவர் கள்வனை அவை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர். கள்வனுக்குக் கடப்பக்கால் போட்டிருந்தது.

– தளவாய் என்ன நடந்தது?

தளவாய் தமது ஆசனத்திலிருந்து எழுந்து மன்னரை கைகூப்பி வணங்கினார். கூப்பிய கைகள் கூப்பியவண்ணமிருக்க, அவர் தலை சக காரியஸ்தர்கள்மீது விழிகளை ஒருமுறை ஓடவிட்டு, மீண்டும் நாயக்கர் தரிசனத்திற்கு வந்தது. நாயக்கர் அதனை ஏற்றுக்கொண்டதுபோல தலையை மேலும் கீழும் அசைத்தார். தளவாய் செருமிக்கொண்டு பேசினார்:

– சர்வ சீவ தயாபரனாய் இருக்கப்பட்ட இராயரே! தரணியில் வேறெங்கும் கிருஷ்ணபுரத்திற்கு ஒப்பான நகரில்லையெனக் கொண்டாடப்படும் எமது சக்கரவர்த்தியே! உமக்குத் தண்டனிட்டு சொல்லிக்கொள்வது. கடந்த சில மாதங்களாக நமது காவற்காட்டில் கள்வர் பயம் அதிகரித்திருப்பதாக புகார் வந்தது. அதன்பேரிலே காவற்காட்டில் கூடுதலாக சேவகர்களை அனுப்பிக் கண்காணித்துவந்தோம். நேற்றையதினம் கூட்டேரிப்பட்டு சந்தையில் தங்கள் காளைகளை விற்று பணமாக்கிக்கொண்டு உள்ளூர் தரகன் ஒருத்தனுடன் பதினென்குடிமை வகையறாக்களில் இருவர் ஊர் திரும்பியிருக்கின்றனர். சாயங்காலவேளை, கிருஷ்ணபுரத்திற்கு மூணு நாலு வழியிலே காவற்காட்டில் குறுக்கிட்டு, கிருஷ்ணபட்டணமெனும் பேருரைத் கட்டியெழுப்பிய மேன்மைமிகு இராயர் முன் நிற்பதற்குத் தகுதியற்ற இக்கள்வன், குடியானவர்கள் கையிருலிருந்த பணத்தையும், சந்தையில் அவர்கள் வாங்கிவந்திருந்த வஸ்திரங்களையும் பறிச்சுக்கொண்டு ஓடியிருக்கிறான். பாதித்தவர்கள் குய்யோமுறையோ வென்று சத்தம்போட்டிருக்கிறார்கள். அவர்கள் குரலைக்கேட்டதும் காவற்காட்டிலிருந்த நமது காவலர்கள் திருடனை துரத்திப் பிடித்து அடித்துக் கேட்கிறபோது தன் பூர்வீகம் திருவண்ணாமலைபக்கமென்றும், காவற்காட்டில் வழிப்பறி செய்கிறானென்பதும் தெரியவந்தது.

நாயக்கர் பார்வை குற்றவாளிபக்கம் திரும்பியது.

– நல்லது! கள்வனை நாளை பகல் பட்டணத்து கடைத்தெருவிலே முத்திரை சாவடிக்கு எதிரேவைத்து சகல சனங்களும் பார்க்கத்தக்கதாக தூக்கிலிடும். அதுவரை கசையாளைவைத்து அய்ம்பது கசையடி கொடுத்து கிடங்கிலே போட்டுவையும். வேறு ஆக்கினையில்லை.

– தங்கள் உத்தரவுப்படி ஆகட்டும் பிரபு

பதிலளித்த தளவாயின் பார்வையைப் புரிந்துகொண்டவர்கள்போல காவலர்கள் திருடனை இழுத்துச்சென்றார்கள். இராயர் கள்வனுக்குத் தண்டனையை வழங்கி முடிக்கவும், காவலனொருவன் வேகமாய் நடந்து வந்து தலை தாழ்த்தி வணங்கினான்:

– மகாபிரபு! நேற்றைய தினம் நமது பட்டணம்வந்து சேர்ந்து விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வெள்ளை மனுஷன் தங்களைச் சமூகம் காண வந்திருக்கிறார்.

– வரச் சொல்.

வெள்ளைமனுஷன் எனக் காவலனால் அறிவிக்கப்பட்ட திருச்சபைகுரு நிக்கோலா லெவாண்ட்டா; நாயக்கரை வணங்கினார்:

– ஸ்ரீமான் கிருஷ்ணபுர பட்டம் இராயருக்கு தாழ்மையான வந்தனங்கள்.

– பாதரே! உமது வருகையால் எமது அரசாங்கமும் குடிகளும் பெருமை அடைந்தனர். ஆசனத்தில் அமர்ந்து இவ்விடம் வந்த வயணத்தை தெரிவிக்கவும்.

விருந்தினர் ஆசனத்திலமர்ந்த போர்ச்சுகீசியரான நிக்கோலா லெவாண்ட்டா, நாயக்கரையும் அவையில்ருந்த பிற காரியஸ்தர்களையும் இரண்டாவது முறை வணங்குவதுபோல தலையை அசைத்தார்.

– பிரபு நீர் அறியவந்திருப்பதுபோல மகா இராயர் வெங்கடபதியிடமிருந்து இரண்டு தினங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, வழியில் சாந்த்தோமில் தங்கி இளைப்பாறி நேற்று காலமே பயணப்பட்டு எமது பரிவாரத்துடன் இவ்விடம் வந்தோம். யாம் வந்திருக்கும் வயணத்தை நீர் ஓரளவு யூகித்திருப்பீரென்ற போதிலும் சற்று விபரமாகவே தெரிவிக்கிறேன். போர்ச்சுகீசியரான எமக்கு ஒலாந்துகாரரிடமுள்ள பகையையும் வெறுப்பையும் தங்கள் சமூகம் அறியாததில்லை. தேவனாம்பட்டனத்தில் கோட்டைக்கட்டிக்கொள்ள அவர்களுக்கு நீர் அளித்துள்ள உத்தரவை ரத்து செய்யவும், துரிதகதியில் நடைபெற்றுகொண்டிருக்கு அவர்கள் பணியை உடனடியாக நிறுத்தும்படியும், உமக்கு மேலானப்பட்டவரான மகாராயர் வெங்கடபதியார் இட்டிருந்த உத்தரவை தாங்கள் பொருட்படுத்தவில்லையென்று தெரிகிறது. இந்நிலையில் சாந்த்தோமே திருச்சபைகுரு எம்மை மீண்டும் விஜயநகர சக்கரவர்த்தியை கண்டு உத்தாரம் பெற்று, தங்களிடம் நேரில் அவ் உத்தரவை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரிலே யாமும் உமது சக்கரவர்த்தியைச் சந்தித்து அவருடைய புதிய உத்தரவுடன் தங்கள் சமூகம் வந்திருக்கிறேன்.

பாதரே நிக்கோலா லெவாண்ட்டா, தம்மிடமிருந்த ஓலையை இராயரிடம் கொடுத்தார். நாயக்கர் அதனை ஒரு முறை வாசித்து தமது ராஜகுருவிடம் கொடுக்க பின்னர் முக்கியஸ்தர்களில் கரங்களையும் பார்வையும் தரிசித்துக்கொண்டு மன்னரிடம் ஓலை திரும்பவும் வந்தது. இம்முறை இராயசம் வசம் அவ்மோலையைக்கொடுக்க அவர் பத்திரபடுத்திக்கொண்டார். சம்பிரதாயங்கள் முடியட்டுமென காத்திருந்தவர்போல இராயர் திருச்சபை குருவைப் பார்த்து:

– பாதரே லெவாண்ட்டா, இது விபரம் எமது அரசவைக் காரியஸ்தர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது. பிறபகல் இருநாழிகைக்குப்பிறகு உம்மை மறுபடியும் சந்தித்து ஆவன செய்வேன். தற்போதைக்கு நீர் சென்று சற்று ஓய்வெடும் -என்றார்

போர்ச்சுகீசிய திருச்சபை குரு விடபெற்றதும் அரசாங்க முக்கிய காரியதரிகள் மந்திராலோசனை சபையில் சந்திப்பதாகக்கூறி ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுக்கொண்டார்கள்.

35. நாயக்கர் உத்தரவின் படி இராஜகுரு, பிரதானி, இராயசம் தானாதிபதியென அரசாங்கத்தின் பெரிய மனிதர்கள் மந்திராலோசனை சபையில் கூடியிருந்தனர். வெயில் கடுமையாக இருந்தது. மந்திராலோசனை பொதுவில் இரகசியமாக கூடி, பெரும்பாலும் இரவுக்காலங்களில் அரசாங்கத்தின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதுண்டு. பிரச்சினையின் தீவிரம் கருதி பகற்பொழுதென்று பாராமல் கூடியிருந்தார்கள்.

இராகவ ஐயங்கார் முதலில் எழுந்தார், செருமினார். :

– சாளரங்களை கொஞ்சம் திறந்துவிடுங்கள். நாமென்றாலும் சகித்துக்கொள்வோம் மன்னரால் ஆகிற காரியமா. விடயத்திற்கு வருகிறேன். வெள்ளை மனுஷன் சபையில் கொண்டுவந்த சேதியை சகலரும் அறிவீர்கள். இதிலுள்ள சாதக பாதக விடயங்களை அலசி ஆராய வேணும். மன்னரும் நானும் இவ்விபரம் குறித்துபேசி ஓரளவு தெளிவாக உள்ளோம். எனினும் உமது கருத்தின்றி தீர்மானமாக முடிவெடுக்க இயலாது. ராஜாங்கத்திற்கு அதானால் கிடைக்கக்கூடிய பலாபலன்களென்ன, பொருள் அடிப்படையில் ஏற்படும் இலாப நட்டங்களென்னவென்று பலதையும் தீரயோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்கைப் பார்க்கிற பிரதானியார் நந்தகோபால் பிள்ளை என்ன சொல்கிறார்?

– மகாராஜாவுக்கும், பிறருக்கும் வந்தனம்! பொருள் அடிப்படையில் எனதுக் கருத்தைக்கேட்டிருக்கிறீகள். ஒலாந்துகாரர்கள் நம்மிடம் நேரிடையாக வார்த்தையாடுகிறார்கள். கோட்டைக்கட்டிக்கொள்வதற்கு முன்பாக கணிசமான தொகையொன்றை அவர்கள் அளித்திருக்கிறார்கள். அதுவன்றி எதிர்காலத்தில் அவர்கள் கப்பல்கள் ஒவ்வொன்றும் தேவனாம்பட்டனத்தில் துறைபிடிக்கும் முன்பும், அங்கிருந்து புறப்படும் போதும் வியாபார நடவடிக்கைகளின் அடிப்படையிலும் தீர்வையாகவும் வேறு வகையிலும் பெறக்கூடிய அனுகூலங்கள் இருக்கின்றன. இதை நாம் போர்ச்சுகீசியர்களிடம் எதிர்பார்க்கவியலாது. அவர்கள் பரமசிவன் கழுத்தைச் சுற்றிய பாம்பு. அவர்களுக்கு மகாராயர் வெங்கடபதியாரின் சகாயமுண்டு. எனவே போர்ச்சுகீசியர்களால் கிடைக்கவிருக்கும் பலன்கள் சந்திரகிரிக்கேயன்றி கிருஷ்ணபுரத்திற்கு அல்ல. வந்திருந்த வெள்ளை மனுஷன் பேசிய தோரணையை நேரில் கண்டீர்கள். போர்ச்சுகீசியர்களுக்கு சாதகமாக இயங்கினால் நமக்கு பொருள் அடிப்படையில் பலனில்லை என்பதுதான் எமது கருத்து.

– நமது அரசாங்கத்திற்கு இதனால் ஏற்படக்கூடிய இலாப நட்டமென்ன? தானாதிபதி நீர் சொல்லும்- நாயக்கர்.

– பிரபு நட்டமென்று சொல்ல எதுவுமில்லை. தேவையின்றி வியயநகர சாம்ராச்சியத்தை பகைத்துக்கொள்வானேன். ஏற்கனவே இரண்டுமுறை மகாராயரிடம் மோதி கண்டபலனென்ன? இதில் யோசிக்க ஒன்றுமேயில்லை. வேண்டுமானால் போர்ச்சுகீசிரியரிடம் நைச்சியம் பேசி ஒலாந்துகாரர்களிடம் பெற்றத் தொகையை அவர்களிடம் கேட்டுப்பெறலாம். தேவனாம் பட்டனம் நமதெல்லைக்குள் வருவதால் நமக்கதில் முழு உரிமையுமுள்ளது. மகாராயர் போர்ச்சுகீசியர்களுக்கு உதவ நினைக்கிறாரேயன்றி பொருள் அடிப்படையைலான எதிர்பார்ப்புகள் இருக்க முடியாது. விஜயநகரம் அவர்களுக்குச் செலுத்தவேண்டிய தீர்வையைக் காலக்கிரமத்தில் நம்மிடம் எதிர்பார்க்கிறது. நமக்கு, ஒலாந்துகாரர்கள் உறவு முறை அல்லவே. எனவே ஒலாந்துகாரர்களிடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை போர்ச்சுகீசிரியகளிடம் போட்டுக்கொண்டு ஒலாந்துகாரர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றினால் அரசியல், நிதி இரண்டிலும் சாதக பலனேயன்றி பாதகப்பலனில்லை. .

– மெத்த சந்தோஷமடைந்தோம். உமது பதில்கள் மிகவும் திருப்தியாக இருக்கின்றன. பிற்பகல் போர்ச்சுகீசிய பாதரே லாவெண்ட்டாவிடம் அவர்களுக்குச் சாதகமானப் பதிலை அளிப்போம். உடனடியாக தேவனாம்பட்டனத்தை போர்ர்சுகீசியர்களிடம் ஒப்படைக்குமாறு ஒலாந்துகாரர்களுக்கு ஆணையிட்டு உத்தரவொன்று தயாரித்து எமது கைச்சாற்றுக்குச் சுணக்கமின்றி அனுப்பிவையுங்கள்.

(தொடரும்)

——————————————————————

Series Navigationசங்கர் தயாளின் “ சகுனி “உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *