முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்

This entry is part 32 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

>>>
மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக ஒரு ஒருமணிப் போல மெல்ல சவாரிவிட்டேன். நடராஜா சர்விஸ். சிறு அளவில் ‘சுதி’ ஏத்திக்கொண்டேன். ராய் எனக்கு காக்டெய்ல் தரமாட்டார் என்பது நிச்சயம். இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. கடைகளை பராக் பார்த்தபடி தெருவில் மெல்ல இறங்கிப் போனேன். (அப்படியே சரியான நேரத்துக்கு உள்ளே போய் தலையைக் காட்டுகிற மும்முரமோ அவசரமோ நான் காட்டவில்லை.) கிறிஸ்டிஸ் பழைய சாமான் ஏலக்கடை. எனக்கு வாங்க என்று குறிப்பாய் எந்தத் தேவையும் இல்லாவிட்டாலும், புதுசாய் எதும் வந்திருக்கிறதா என வேடிக்கை பார்க்கிற யோசனை. ஏலம் ஆரம்பித்திருந்தது. கட்டை குட்டையான சில கருப்பு ஆசாமிகள் தங்களுக்குள் துட்டு பரிமாறிக் கொண்டிருந்தார்கள், விக்டோரியா படம் போட்ட வெள்ளித் துட்டு. கடனே என்று அதைப் பார்த்தபடி ஏலக்காரன் இரைந்து கொண்டிருந்தான். ‘பத்து ஷில்லிங் கேட்டிருக்காங்க… பத்து… பதினொண்ணு… பதினொண்ணு-ஆறு!…’
ஜுன் மாத துவக்கம். ராஜ வீதி பிரகாசமாய் இருந்தது. ஏலக்கடைச் சுவரின் சித்திரங்களில் புழுதி அப்பி அப்பிடியே கறைபடிந்திருந்தது. வெளியே வந்தேன். சனங்கள் விட்டேத்தியாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அழகான நாள். இதை என்னாத்துக்குப் பரபரப்பா அனுபவிக்கணும் என்கிற மெத்தனம். எல்…ல்…லாம் இன்ப மயம். சுகம். நியதிகளின் பரபரப்பில் எப்பவுமே காணத் தவறிய வாழ்க்கையின் அழகுகள் இப்போது திடுதிப்பென்று, அட, அவர்களுக்கு வாழ்க்கையின் கவிதை தட்டுப்பட்டாப் போலிருந்தது.
நல்ல உயர்தர மெஸ் தான் ராயுடையது. மகா அமைதி காத்த இடம். வாசல் காவல்காரனும், உதவிக்கான சிறுவனும் தவிர ஆளில்லை. என்னாச்சி, எல்லாவனும் தலைமைப்பரிசாரகனின் இழவுக்குப் போயிட்டானுகளா? உள்ளே அப்பியது அந்த வெறுமை. ராயின் பேரைச் சொன்னதும் அந்தச் சிறுவன் ஒரு காலி வராந்தா வழியே அழைத்துப் போனான். ஐயா இங்க உங்க கைத்தடியும் தொப்பியும் விட்றலாங்க… உள்ளே காலியாய் கூட்டமில்லாமல் கூடம். ஆள் அதில் நிறைந்தால் அந்தக் கூடம் நடுவில் ட் சேர்ந்துவிடும். கூடத்தில் ஆளுக்கு பதிலாக ஆளுயரப் படங்களில் விக்டோரிய அரசுப் பிரமுகர்கள். ஒரு பொதுக் தோல்சோபாவில் இருந்து எழுந்துகொண்டு வரவேற்றார் ராய்.
”நேரா மாடிக்குப் போயிறலாமா?”
இவன் காக்டெய்ல் தரமாட்டான், நான் அப்பவே நினைச்சேனே, அது சரியாப் போச்! இப்போது எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. படிகளில் கனமான விரிப்புகள். வழியில்கூட யாரும் தட்டுப்படவில்லை. புதிய விருந்தாளிகளுக்கான உணவுக்கூடத்துக்குப் போனோம். அங்கேயும் நாங்கள் இருவரே. சின்னதும் அல்லாத பெரிதும் அல்லாத அறை. பரிசுத்த வெளேர். ஒரு மகா ஜன்னல். ஸ்காட்லாந்து கட்டட வல்லுநர் ஆதம் வடித்த மோஸ்தரில் இருந்தது அது. அதன் பக்கத்தில் உட்கார்ந்தோம். பணிவே உருவமாய் ஒரு பரிசாரகன் வந்து உணவுவகைகளின் ஜாபிதா தந்தான். மாட்டுக்கறி. மட்டன். குறும்பாடு. குளிர்ப்படுத்திய சல்மான் மீன். கடுக்கென்ற ஆப்பிள். புளிக்கீரை. மற்றும் துவர்ப்பான புளூபெர்ரி. அதன் உணவு வரிசையை மேய்கிறேன். ஒண்ணும் சுகமில்லையே, என்று பெருமூச்சு வருகிறது. அட தெருமூலை உணவு விடுதிகள்… பிரஞ்சு உணவுகள். பார்க்கவே நாவூறி, கடக்முடக்கென்று கடித்துச் சாப்பிடும் வகைகள். கோடைக்கான மெல்லிய ஃப்ராக்குகளில் மகா மேக்கப்புடன் அழகான பெண்கள் வருவார்கள். ஃப்ராக் பார்க்கலாம். பராக் பார்க்கலாம்.
”வீல் மற்றும் ஹாம் பட்டாணி… சாப்பிடலாம் நீங்க” என்றார் ராய். கன்னுக்குட்டியில் சமைத்தது.
”ஹாம்? ம்” என்றேன் நான்.
”என் சாலட்டை நானே கலந்துக்கறேன்…” என்று பரிசாரகனிடம் சொன்னார். அதில் இணக்கமும் இருந்தது, அதிகாரமும் த்வனித்தது. அப்படியே திரும்பவும் அந்தப் பட்டியலைப் பார்த்தார். சுமுகமாய் என்னிடம், ”அடுத்து அஸ்பாரகஸ் சாப்பிடலாமே நீங்கள்…?”
”ம். நல்லாயிருக்கும்…”
இப்ப அவரது அலட்டல் இன்னும் அதிகமாகிவிட்டது.
”எங்க ரெண்டு பேர்த்துக்கும் அஸ்பாரகஸ். சமையல்காரன்கிட்ட நல்ல சரக்கா எடுத்துப் போடச்சொல்லு. ம்… முன்னாடி நீங்க குடிக்க என்ன விரும்பறீங்க? ஹாக் ஒரு பாட்டில், என்ன சொல்றீங்க?” ஜெர்மானிய வெள்ளை ஒயின் அது. ”இங்க எங்க எல்லாருக்கும் ஹாக் ரொம்ப இஷ்டம்…” என்றார்.
தலையாட்டினேன். உடனே ஒயின்தயாரிப்பாளனை அருகழைத்தார். முன்போலவே அதிகார தோரணை குறையாத சாத்விக பாவம்… சிலாட்களுக்கு அது சாத்தியபாவம், என ஆச்சர்யமாய் இருந்தது. ராஜாக்கள் தங்கள் படைத்தளபதியை அழைத்து இப்படித்தான் கட்டளை போடுவார்கள் என்று தோன்றியது. கருப்பு அங்கிக்கார ஒயின்தயாரிப்பாளன், கழுத்தில் அலுவலக முத்திரை தெரிகிற வெள்ளிச் சங்கிலி. மிடுக்காக உள்ளே வந்து ஒயின்வகைப் பட்டியலை ஈந்தான். ராய் அவனைத்தெரிந்த பாவனையில் மரியாதையாகத் தலையாட்டினார்.
”ஹலோ ஆர்ம்ஸ்ட்ராங், எங்களுக்குக் கொஞ்சம் லீப்ஃப்ரௌமில்ச், கலவை எண் 21…”
”நல்லது ஐயா.”
”எப்பிடிப் போகுது எல்லாம்? நல்லாப்போயிட்டிருக்கா?… இதுக்கு மேல அதிகம் நாம எதிர்பார்க்க இயலாது, இல்லியா?”
”அப்டிதான் படுது ஐயா.”
”என்னன்னா… பாதிவேலைல பிரச்னையை நாமே வரவழைச்சிக்கப்டாது… சரியா ஆர்ம்ஸ்ட்ராங்?”
ராய் இதமான மந்தகாசமான புன்னகை சிந்தினார். அந்தாளின் பழுத்த அனுபவத்தில் இதற்கு இந்தாள் பதில் எதிர்பார்ப்பதை உணர்ந்தபடி பேசினான்.
”அதுண்மை சார்.”
ராய் சிரித்தபடி என்னைப் பார்த்தார். இந்த ஆர்ம்ஸ்ட்ராங், ஒரு வித்தியாசமான பிரகுருதி… என குறிப்புணர்த்த விரும்பினாப் போலிருந்தது.
”ம். கொஞ்சம் குளிர்ச்சியா இருக்கட்டும்… ரொம்ப குளிர்ப்படுத்திப்பிடாதே. சரியா, தொண்டைக்கு இதம்மா இருக்கணும் ஆர்ம்ஸ்ட்ராங். இங்க எல்லாம் கச்சிதம்னு நம்ம விருந்தாளிக்குச் சொல்ல விரும்பறேன் நான்… பாத்துக்க.” என்னைப் பார்க்கத் திரும்பினார். ”ஆர்ம்ஸ்ட்ராங் எங்களோடவே பத்து நாப்பத்தெட்டு வருஷம் இருக்கிறான்…” அந்தாள் விலகிப்போனான். ”உங்களுக்கு இங்க வர்றதில் சிரமம் ஒண்ணும் இல்லியே? நல்ல அமைதியான இடம் இது. மனசாரப் பேசலாம்னு நினைச்சேன். நாம பேசியே கொள்ளைக்காலம் ஆச்சே. நீங்க ஆள் பரவாயில்லை… நல்ல சுதாரிப்பா இருக்கீங்க…”
அவர் எப்பிடி இருக்கிறார் என்று சட்டென நான் கவனிக்க நேர்ந்தது.
”உங்க நேர்த்தியளவுக்குப் பாதிகூட நான் தேறமாட்டேன்…”
”சிக்கலில்லாத கறைப்படாத மேன்மையான வாழ்க்கை…” என்று சிரித்தார். ”வேலை கொள்ளையாக் கெடக்கு. நிறைய உடற்பயிற்சிகள். உங்க கோல்ஃப் விளையாட்டு எப்பிடிப் போயிட்டிருக்கு? நாம கூட ஒருவாட்டி சேர்ந்து ஒரு ஆட்டம் ஆடலாம்னிருக்கு…”
சும்மாங்காட்டியும் பேசுகிறார். என்னைப் போல உப்புக்குதவாத விளையாட்டு ஆசாமியுடன் ஒரு முழு நாள்… அதை ராய் விரும்பவே மாட்டார். உதடொட்டாத பேச்சு… வேறெதோ சொல்ல வர்றார். மணியோசை இது… யானை வரும் பின்னே.
ஆள் வாட்டசாட்டமாய் திடகாத்திரம். அழிச்சி ரெண்டாள் தேத்தலாம். நரைமுடி சுருள் சுருளாய்க் கிடந்தது. அவருக்கு அது பாந்தமாய் இருந்தது. வெளிப்படையான மனிதராய் அது அவரை இனங்காட்டியது. சூரியன் பட்டுப்பட்டு அந்த முகம் இளமைப்பொலிவாய்க் கண்டது. உலகத்தை ஊடுருவி அனுபவித்து உள்வாங்கும் பார்வை. தெளிவான பிரகாசமான கண்கள். சின்ன வயசில் போல அத்தனை ஒல்லிப்பிச்சான் இல்லை இப்போது. பரிசாரகன் வந்து ரோல்ஸ் தின்னத் தந்தபோது, அவர் ரைவிட்டா, என்று மாற்றிக் கேட்டார். (ரை தானியத்தில் தயாரித்த ஒயின்.) இனி மெலிய வாய்ப்பில்லை என்றாலும் சதைபோடாமல் தவிர்க்கலாம் அல்லவா? ஆனால் அந்த ஊத்தம் கூட பண ஊத்தமாய்த்தான், கௌரவ அம்சமாய்த்தான் தெரிந்தது. இந்த வசதிக்கு சோத்தில் அடிபட்டாப் போல ஒல்லியாய் இருத்தல் தகாது. அவரது பார்வைக்கு ஒரு தோரணையைத் தந்தது உருவம். அவர் நடைபாவனை எல்லாமே அலட்டலாக அவரது தன்னம்பிகையின் வெளிப்பாடாக இருந்தது. கனபாடிகளாக இருந்தார். நாற்காலியை நிறைத்துக்கொண்டு ஒரு அருங்காட்சியகச் சிலை.
அவர் தன் பரிசாரகனுடன் பேசியதில் இருந்து அவரது இயல்பை நான் எழுத விரும்பியபடி சரியாய் அடையாளப்படுத்தினேனா தெரியவில்லை. புத்திசாலித்தனமோ, உற்சாக நகையுணர்வோ அற்ற உரையாடல். அவரால் அப்படித்தான் பேச முடியும். ஆனால் தங்குதடையற்ற சரளமான பேச்சு. சிறிது புன்னகை சேர்த்துக் கொள்வார். அவர் பாவனையில் அது ரொம்ப நகைச்சுவையான விஷயம் போல இருக்கும். அதில் சிரிக்க ஏதுமில்லா விட்டாலும். எதைப்பற்றியும் அவர் எதாவது காமென்ட் அடித்துக்கொண்டே தான் இருந்தார். அந்த நாளின் எதாவது சேதியை எடுத்து அவர்பாட்டுக்குப் பேச ஆரம்பித்து விடுவார். கேட்டுக்கொள்வதில் நமக்கு எந்த சிரமமும் இராது. கழுத்துக்குமேல இருந்தது தலை. முடிஞ்சால் ஆட்டிட்டுப் போ.
நிறைய எழுத்தாளர்கள் தங்கள் வித்வத்துவத்தை ,சந்திக்கவரும் நபரிடம் காட்ட, வாட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். வாக்கியங்களை அவர்கள் உருவாக்கும்போதே கவனமற்ற கவனத்துடன் செதுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சொல்வது திருந்தச் சொல். தேவைக்கதிகமா ஒரு கமா கூட இராத பேச்சு. அந்தாட்களோடு நம்மால் கலந்துரையாட, பதில் சொல்ல முடியாது. தலையாட்டத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் புத்திசாலி. நீ ஆமாம் போடவேண்டும்.
உயர்மட்ட பிரமுகர்களிடம் பெரிய வார்த்தைஜாலம் இராது. பேச என்று நிறைய வார்த்தைகள் கிடையாது. தேவைக்குப் பேச மொழி. அதன் சோலி அம்புடுதேன்… இந்தமாதிரி வளவளவென்று பேசுகிறாட்களோ, கத்திக்கூர்மையாய் நறுக்குத் தெரித்த பேச்சு கத்திப் பேசுகிறவர்களோ அவர்களை நெளிய வைத்துவிடுகிறார்கள். ஆனால் ராயுடன் கலந்துரையாட இப்படி வில்லங்கங்கள் இல்லை. ஒருமாதிரி உல்லாச த்வனியுடன் அவர் பேசுவார். அவருக்குத்தெரிந்ததைப் பகிரும் எளிமை. குதிரைவளர்க்கிற வேலையாளிடம் குதிரைக்காரி பேசும் எளிமை அது.
ஆள் எழுத்தாளர்னே சொல்ல முடியல்லப்பா, தன்மையாப் பழகறார் மனுசன்… என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள் எல்லாரும். அதைவிட உசத்தியாய்த் தன்னைச் சொல்ல முடியாது என்று அவரும் நம்பியதாய்த் தெரிந்தது.
அவரொத்த புத்திசாலிகள் எப்பவும் சில தயார் வார்த்தைகளை எடுத்து விடுவார்கள். (இப்ப இதை எழுதற சமயம் எனக்கு உதாரணத்துக்கு வந்த வார்த்தை – ‘இது வேலைக்காவாது’. பரவலா எல்லாவனும் இதைச் சொல்லித் திரிகிறான்.) அதேபோல பிரபலமான குணாம்சக் குறிப்புகள், மகாலெட்சுமி போல, அல்லது தானுண்டு தன் சோலியுண்டு… இப்படி.) அவன் வட்டாரத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வினைச்சொற்கள் பயன்படுத்துதல் – (ஒத்திக்கோ.) இப்படிப் பிரயோகங்களில் சிறிதே பேசினாலும் ஒரு அந்தரங்கத்தைப் பகிர்கிற சாயல் கிடைத்து விடும். இதை ரொம்ப யோசித்தோ மெனக்கிட்டோ பேச வேண்டியிருக்காது.
லோகத்தில் ஆகக் கில்லாடிகளான அமெரிக்கர்கள், இந்த பேச்சு ரகசியத்தை கச்சிதமாய், கன நேர்த்தியாய் ஆக உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். வட்டார வழக்கு என்று இடக்கு மடக்கான பிரயோகங்கள் சங்கேதங்கள் என அவர்கள் பேச்சே மகா சுவாரஸ்யமும் வேடிக்கையுமானது. சட்னு என்ன சொல்ல வரான்னே பிடிகுடுக்க மாட்டார்கள். பேச்சைத் தாண்டி முக்கிய விஷயங்களுக்கு, பெரிய வியாபாரப் பேச்சுக்கு மனசைச் செலுத்தி விடுவார்கள். அவர்கள் பேசும்போதே மகிழ்ச்சியாய்ப் பரவசமாய் இருக்கும்.
ராய் நிறைய விஷயம்தெரிஞ்ச ஆள். சின்ன சமாச்சாரத்திலும் கூட சரியான வார்த்தை போட்டு அழகாய்ப் பேசுவார். கேட்க சுகம். பேசும்போதே தானே ரசித்துப் பேசுவார். அப்போதுதான் கண்ட கேட்ட உய்த்துணர்ந்த புத்துணர்ச்சி தெரிக்கும் வார்த்தைகள்…
இப்போது என்னுடன் எங்கள் இருவருக்குமான நண்பர்களைப் பற்றி அளந்துகொண்டிருந்தார். சமீபத்தில் வெளியான புத்தகங்கள் பற்றியும், ஓப்பரா பற்றியுமாய்ப் பேச்சு வளைந்து நெளிந்து போனது. (ஓப்பரா – நாட்டிய நாடகம்.) கலகலப்பாய் இருந்தார். எப்பவுமே இதமாய்ப் பழகும் ஆசாமிதான் அவர். அதிலும் இன்னிக்கு, காலை உரசும் நாய்தான்… எனக்கே கிறுகிறுப்பாய் ஆயிட்டது, முகமெல்லாம் நக்கப்பட்டாப் போல.
ச், நாம என்ன இப்பிடி இத்தனை காலம் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமலேயே இருந்திருக்கம், இல்லே? – என்று வருத்தம் பாராட்டினார். உங்களை நான் இவ்வளவின்னில்லை, அவ்வ்வளவு நேசிக்கிறேன்… உங்களுக்கு எப்பவுமே என் மனசில் ரொம்ப ஒஸ்தியான இடம் வெச்சிருக்கிறேன்.
இது, இந்த நெகிழ்ச்சிகரமான நட்புபாராட்டல் இன்னமும் வளரும் என்று எனக்குப் பட்டது. இப்ப நான் என்ன எழுதிட்டிருக்கேன், என்று விசாரித்தார். அவரது அடுத்த புத்தகம் பற்றி நான் விசாரித்தேன்… நாங்கள் ஒருத்தருக்கொருத்தர், எங்க தகுதி அளவுக்குப் புகழோ வெற்றியோ எங்களுக்குக் கிட்டவில்லை என்று அங்கலாய்த்தோம். கன்னுக்குட்டி கதுப்பை உண்டோம். செய்முறை விளக்கத்துடன் ராய் சாலட் தயாரித்தார். இருவருமே உதடுகளைச் சப்புக் கொட்டி ஹாக் அருந்தினோம். ஹா என்றிருந்தது ஹாக்.
எப்பதான் விஷயத்துக்கு வரப்போறார். புள்ளியாய் வைக்கிறார். கோலம் போட ஆரம்பிக்கவே இல்லையே.
என்னால் நம்ப முடியாத விஷயம், அத்தனை வேலைமும்முரம் இருக்கிற ஆசாமி, லண்டனில் இப்போது அவர்பக்கம் காத்து அடிக்கிறது… ஒரு மணி என்னுடன் விரயமாக்கியிருக்கிறார். நான் யார்? மதிப்புரை எழுதுகிறவன் அல்ல. சக எழுத்தாளன் நான். எனக்கு ஆள் பிடிக்கவோ, சிபாரிசு செய்கிற மாதிரியோ, ஒரு சாமர்த்தியமும் கிடையாது. மார்செல் பிரவுஸ்ட் அல்ல நான். ரஷ்யன் பாலே நடனம் மட்டிசே பற்றி நான் லவலேசமும் அறியேன். என்னிடமும் அவர் இதைப் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்க ஏதும் கிடையாது. ஆனால் அத்தனைக்கும் நடுவே என் சூட்சுமம் ஒன்று சொன்னது. அந்தாள் பிரபலமான வசதியான எழுத்தாளர்… இல்லாவிட்டால், இத்தனை ஒட்டுறவுக்கு என்னிடம் குறைந்தது நூறு பவுண்டு கடன் கேட்டிருப்பார்.
சொல்லவந்த விஷயத்தை அவர் சொல்லாமலேயே, அதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே இந்த உணவுக்கூடல் முடிஞ்சிருமாய்த் தோன்றியது.
ஆ அவரா, பார்ட்டி ரொம்ப உஷார்ப் பேர்வழி. ரொம்பக் காலம் இடைவெளிவிட்டு இப்ப திரும்ப முதன் முதலா சந்திக்கிறோமே எனவும் அவர் நினைத்திருக்கலாம். பழைய நட்பின் நரம்புகளை மீட்டிக்கொள்ளவும் விரும்பியிருக்கலாம். இந்த முதல் விருந்தை ஒரு பெரிய மீனைப் பிடிக்க வீசிய சின்ன மீனாகக்கூட தூண்டில் போடுகிறாரோ என்னமோ?
”பக்கத்து அறைக்குப் போயி, அங்க காபி சாப்பிடலாமா?”
”உங்க இஷ்டம்…”
”ம். அங்க இன்னும் நாம வசதியா இருக்கலாம்…”
அவர் பின்னால் போனேன். இந்த அறை இன்னும் விசாலமாய் இருந்தது. கைவைத்த தோல்மெத்தை பொதுக் நாற்காலிகள். பெரிய சோபாக்கள். மேஜைகளில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள்… இரண்டு வயசாளிகள் ஒரு மூலையில் என்னவோ சத்தமில்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நட்புடன் ஒரு சிறு தலையுயர்த்தல். சட்டென பிரியமாய் ஒரு உற்சாக வாழ்த்தை வழங்கினார் ராய்.
”ஹலோ ஜெனரல்!” கைதூக்கி சத்தங் கொடுத்தார்.
ஜன்னல்பக்கம் போய் நின்றபடி இன்னிக்கு நாள் எப்படிக் கழியப் போகிறது, என யோசித்தேன்… அந்த செய்ன்ட் ஜேம்ஸ் தெருவின் சரித்திரப் புராதன அம்சங்களை அறிந்துகொள்ளப் போகிறோமோ? அட இந்த கிளப்பின் பேரே கூட எனக்குத் தெரியவில்லை என நினைக்க வெட்கம் பூசியது. ராயிடம் கேட்கவும் தயக்கம். என்னடா இவன், எல்லாருக்கும் பரவலா தெரிஞ்ச விவரம் கூட தெரியாமல் தடிமாடாட்டம் நிக்கிறான்… என அவர் நினைக்கக் கூடும். என் மதிப்பு குறையும். என் மதிப்பு குறையக்கூடும்.
தன் பக்கமாய் என்னை அழைத்தார் ராய். ”காபிகூட கொஞ்சம் பிராந்தி எடுத்துக்கறீங்களா?”
”இல்ல பரவால்ல.”
”அட சாப்பிடுங்க சும்மா.”
அந்த கிளப்பில் பிராந்தி பிரசித்தம். ஒரு சோஃபாவில் அருகருகே உட்கார்ந்து கொண்டோம். அருகில் அலங்காரமாய் கணப்பு. சிகெரெட் பற்றவைத்துக் கொண்டோம்.
”போனதடவை எட்வர்ட் திரிஃபீல்ட், கட்டக்கடேசியா லண்டன் வந்திருந்தபோது எங்ககூடத்தான் மதியம் சாப்பிட்டாரு….” என்று ராய் இயல்பாய் ஆரம்பித்தார். ”எங்க பிராந்தியை ருசி பாருங்கன்னு சொல்லிச் சொன்னேன். ஆகான்னுட்டார் ருசி பார்த்திட்டு. போனவார இறுதியில் நான் அவரோட விதவை-மனைவியோட தான் தங்கியிருந்தேன்…”
”அப்பிடியா?”
”உங்களை அவ ரொம்ப விசாரிச்சாள்…”
”நல்ல பெண். என்னை அவ ஞாபகம் வெச்சிட்டிருக்கறதே பெரிய விஷயம் தான்…”
”நல்லா ஞாபகம் வெச்சிருக்கா… ஒரு ஆறு வருஷம் முன்னால அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருக்கீங்களாமே. இல்லே? அவ கணவர், பெரியவர் உங்களோட ரொம்ப சந்தோஷமா நட்புபாராட்டிப் பேசிட்டிருந்தாராம்.”
”அது சரி, ஆனால் அவ அவரை…”
”ஓ நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க. அவ ரொம்ப கவனமா அவரோட விருந்தாளிகளைத் தேர்வு செஞ்சாள்… அவரைப் பார்க்க எப்பவும் நிறையப் பேர் வந்து தொந்தரவு குடுத்துக்கிட்டே தான் இருந்தாங்க. அவள் பக்கத்துல இருந்து அவரைப் பாத்துக்கிட வேண்டியிருந்தது. ரொம்ப நெகிழ்ச்சியான மனிதர். சட்னு யார் தூக்கிக்கிட்டாலும் போயிர்ற குழந்தை மாதிரி. அதைப்பத்தி நீங்க யோசிக்கறது நல்ல விஷயம்தான். அவர் அவள்கூட அத்தனை சுரத்தா, உற்சாகமா இல்லைன்னு நினைக்கிறீங்க இல்லியா? பெரியவருக்கு வயசு 84. அவர் ஆசைப்படி அவரை, கயிறை தளர்த்தி விட்டிருக்கலாம்னு நினைக்கறீங்க. பெரியவர் இறந்து போனதிலிருந்து அவளோட நான் அடிக்கடி சந்திச்சிப் பேசிட்டு வரேன். பாவம் ரொம்ப வெறுமையா உணர்றாள். அந்த இழப்பு அவளை ரொம்ப பாதிச்சிருக்கு. அவ தன் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிச்சிட்டாள். 25 வருஷமா அவளுக்கு உலகமே அவர்தான்றா மாதிரி வாழ்ந்திட்டாள். ஒத்தெல்லோ மாதிரி, அப்பிடிச் சொல்லலாமில்லையா அவளைப்பத்தி? சே பாவப்பட்ட ஜென்மம்!”
”அவரைப்பார்க்க அவள் இன்னும் இளமையாய்த்தான் இருக்கிறாள்… அவ இன்னொரு கல்யாணம் கட்டிப்பாள்னு தான் தோணுது…”
”ம்ஹும். அப்பிடி அவளால நினைச்சே பாக்க முடியாது…”
அப்புறம் இருவருமே மௌனமாகி விட்டோம். நாங்கள் பிராந்தியை உறிஞ்சும் ஸ்.
”என்னன்னா, திரிஃபீல்ட் இத்தனை பிரபலம் ஆகறதுக்கு முன்னாடியே அவரை நல்லாத் தெரிஞ்ச ஒரு சில ஆட்களில் நீங்களும் ஒருத்தர் இல்லியா? அப்பல்லாம் அவரோட நீங்க ரொம்ப இதுவா, நெருக்கமா ஊடாடிட்டிருந்தவர்தானே?”
”ஓரளவு…” என்றேன் நான். ”அப்ப நான் சின்னக் குஞ்சு. அவருக்கு நடுத்தர வயசு. நாங்க ஒண்ணும் அப்படி ஆதர்ச நண்பர்கள்னு சொல்ல முடியாது…”
”அப்பிடி இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அவரைப் பத்தி மத்தவர்களுக்குத் தெரியாத எத்தனையோ விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். உண்டா இல்லையா?”
”இருக்கலாம்.”
”எப்பவாவது அவரைப் பற்றிய நினைவுகளை எழுதணும்னு நீங்கள் யோசிச்சது உண்டா?”
”ஓகோ… அப்டில்லாம் ஒண்ணில்ல.”
”அவரைப் பத்தி எழுதப்பட வேண்டும். அதை நீங்களே எழுதவேண்டும்னு நினைக்கல்லியா? அவர் நம் காலத்தின் ஆகச் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருத்தராச்சே? விக்டோரியர்களின் கடைசித் துளி. இலக்கிய சாம்ராட். கடந்த நூறு ஆண்டுகளாக கால வெள்ளத்தில் அடித்துப் போகப்படாத எந்த நாவலையும் போலவே அவரது நாவல்கள் ஒண்ணொண்ணுமே அழியாப்புகழ் வாய்ந்தவை…”
”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.”
கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *