முன்னணியின் பின்னணிகள் – 27

This entry is part 28 of 31 in the series 19 பிப்ரவரி 2012

 

 

சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

>>>

”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் பார்த்தாள். அதாவது, நீதான் உதவணும் என்கிற குறிப்பா இது.

”இப்ப அந்த கெம்ப் ரோசியோட ஓடிப் போயிட்டார்னால், அவர் தன் மனைவியை விட்டுப் பிரிஞ்சிருக்கணும், இல்லியா?”

”இருக்கலாம்” என்றேன் நான்.

”யப்பா, நீ ஒரு உபகாரம் பண்ணேன்?”

”சொல்லுங்க, முடிஞ்சா செய்யிறேன்.”

”நீ பிளாக்ஸ்டேபிள் வரை ஒரு நடை போயி அங்க நிலவரம் என்ன பார்த்துட்டு வரியா? அந்த மனைவியிடம் கூட நாம பேசிப் பார்க்கலாம்னு படுது.”

அடுத்தாள் விவகாரத்தில் நான் மூக்கை நுழைக்கிறதே இல்லை. எனக்கு அதில் ஆர்வமுங் கிடையாது.

”நான் எப்பிடி, இதெல்லாம்…”

”உன்னால அவளைப் போயிப் பார்க்க முடியாதா?”

”இல்ல, முடியாது.”

என்ன இப்பிடி வெட்டிக்கிட்டாப் போல பேசுகிறான் இவன், என அவள் நினைத்திருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. மெல்ல புன்னகைத்தாள்.

”சரி அதை விட்டுறலாம். இப்ப முக்கியமா நாம கெம்ப்பைக் கண்டுபிடிக்கணும். இன்னிக்கு சாயந்தரமா நான் எட்வர்டைப் போயிப் பார்க்கிறேன்… அந்தாள் அந்த வீட்டில் இன்னிக்கு ராத்திரியைத் தனியே கழிக்கறதை என்னால் நினைச்சே பார்க்க முடியல்ல. நானும் எங்க மிஸ்டரும் அவரை இன்னி ராத்திரிக்கு எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திறலாம்னு முடிவு பண்ணிட்டோம். இங்க ஒரு அறை காலியா இருக்கு. இங்க வந்து அவர் எதும் எழுத கிழுத செய்யணும்னா செஞ்சிக்கலாம். ஆல்குட், என்ன நான் பண்றது சரியா வரும்ல?”

”அருமை!”

”அவர் ஒண்ணு ரெண்டு வாரம் இங்கயே எங்ககூடவே தங்கிக்கலாம். கோடையானால் எங்க கூடவே வெளியவும் போய்வரலாம். நாங்க பிரித்தானி வரை போலாம்னிருக்கோம். அவருக்கும் இந்த இடமாற்றம் பிடிக்கும்னு தோணுது. அது மனசை மாற்றி ஆறுதல் தரும்னு இருக்கு.”

”இப்ப முக்கியக் கேள்வி என்னன்னா…” என்றார் பார்த்தன் திரஃபோர்டு. அவர் மனைவியைப் போலவே அவர் பார்வையும் அதே பரிவோடு என்மீது படிந்தது. ”இந்த சின்ன சாபோன்ஸ், (அறுவை வைத்தியன்) பிளாக்ஸ்டேபிள் போவானா? போயி அங்க நிலவரத்தை அறிஞ்சி வருவானா? இந்த விஷயத்தில் நாம எங்க இருக்கம்னு நமக்குத் தெரியணும், அது முக்கியம்.”

புதைபொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் மனுசரின் பேச்சு அது. பாமரத்தனமாய் அவர் பேசக்கேட்க வேடிக்கையாய் இருந்தது.

”அட அவன் எல்லாம்போவான். மாட்டேன்னு சொல்ல மாட்டான்…” என்றாள் அவர் மனைவி. என்னை மென்மையாய் ஒரு வேண்டுகோள்ப் பார்வை விடுத்தாள். ”ஏம்ப்பா மறுக்க மாட்டேல்ல? விஷயம் முக்கியம், இதுல நீ ஒருத்தன் தான் எங்களுக்கு உதவ முடியும்.”

நடக்கிறது என்ன என்று தெரிந்து கொள்வதில் அவளைப் போலவே எனக்கும் துடிப்பு இருந்தது என்பது அவளுக்குத் தெரியவில்லை. என் நெஞ்சத்தில் எத்தனை ஆழமாய் வடு, கத்திக் கீறல்… அது அவளுக்குத் தெரியாது.

”சனிக்கிழமை வரை நான் ஆஸ்பத்திரியை விட்டு வர இயலாது” என்றேன்.

”அது போதும். ரொம்ப நன்றி. எட்வர்டின் சிநேகிதர்கள் எல்லாருமே உனக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் அப்பா. நீ எப்ப திரும்பி வருவே?”

”திங்கள் காலை லண்டனில் நான் இருந்தாகணும்.”

”அப்ப மத்தியானம் தேநீர் நேரத்துக்கே இங்க வந்துரு. உனக்காக நான் பரபரப்பாகக் காத்திருப்பேன். ஆகா, ஒத்துக்கிட்டியேப்பா, அதுவே பெரிய விஷயம். இப்ப எட்வர்ட் எங்க இருக்கார், எப்பிடி இருக்கார்னு நான் பார்க்கிறேன்.”

அவ்ளதான், என்னை வெட்டியாச், எனப் புரிந்து கொண்டேன். ஆல்குட் நியுடனும் எழுந்து என்னுடன் கீழிறங்கினார்.

”நம்ம இசபெல் இன்னிக்கு… அரகானின் கேதரின் போல சின்ன விஷயத்தை ஊதிப்பிட்டாள், இப்ப எல்லாம் சகஜமாயிட்டது…” என முணுமுணுத்தார். கதவு சாத்தப்பட்டது. ”என்னவொரு பொன்னான வாய்ப்பு அவளுக்கு. நம்ம நண்பர் அதை விட்றப்டாது. ஒரு அழகி, இதயமோ தங்கம்! வானில் இருந்து இறங்கிவந்த தாரகை…”

இந்தாள் என்ன பேசுகிறார் என்றே எனக்கு விளங்கவில்லை. ஆனால் திருமதி பார்த்தன் திரஃபோர்டையிட்டு நான் சொன்னது முன்னே எல்லாம் பின்னாளில் அறிந்தவையே. என்னவோ அவளைப் பற்றி குத்தலாய்த் தான் பேசுகிறார் என்றே பட்டது. அட அந்தாளுக்கு வேறெப்படியும் பேசவும் தெரியாது. தமாஷ் பண்ணுகிறதாக நினைக்கிறாரா அவர். எதற்கும் சிரித்து வைத்தேன்.

”உன் இளமையினால் நீ இப்படி நடந்து கொள்கிறாய். (மேலே திறந்த) குண்டலா கார், எந்த டிஸ்சி அதற்கு அப்படிப் பேர் வெச்சானோ…” என ஆரம்பித்தார்.

”இல்ல, நான் பஸ்ல போயிக்கறேன்” என்றேன்.

”ஓ. நீ எதும் சாரட் பிடிச்சால், கூட வழில நான் இறங்கிக்கலாம்னு பார்த்தேன். ஆனால் நமக்கு வசதி ஜனதா போக்குவரத்துன்னு நீ ஆரம்பிச்சியானால், எனக்கு வசதி சதுர்சக்கரவூர்தி என்பேன்…”

எப்ப பாரு வார்த்தைகளை வைத்துக்கொண்டு வர்றவன் போறவன் மேலெல்லாம் சாணியடிக்கிறார்.

ஒரு காரை கையசைத்து வரச்சொன்னபடி ரெண்டே ரெண்டு விரல்களை கைகுலுக்க என்று நீட்டினார்.

”திங்கள் வரேன். உன் பயணத்தின் முனைப்பும் முடிவும் பற்றி அற்றைத் திங்கள் அறிந்து கொள்ளலாம்.”

>>>

நான் சொன்னதெல்லாம் பழைய கதை, பல வருடங்களுக்கு முன் ஆல்குட் நியுடனைப் பார்த்த கதை. நான் பிளாக்ஸ்டேபிளுக்குக் கிளம்பு முன்னாலேயே, எனக்கு திருமதி பார்த்தன் திரஃபோர்டிடம் இருந்து கடிதம்… (முன்னாலேயே உஷாராய் என் வின்சன்ட் சதுக்க முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.) திரும்பி வந்ததும் தன் இல்லத்துக்கு வர வேண்டாம்… ஏன், என்பதை பிறகு நேரில்  சொல்வாள் அவள்… விக்டோரியா ஸ்டேஷனில் ஆறு மணிக்கு முதல்வகுப்புப் பயணிகள் காத்திருப்பு அறையில் சந்திக்கலாம். திங்கள் கிழமை. மருத்துவமனையில் வேலைகளைப் பரபரவென்று முடித்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ சீக்கிரம் ரயில் நிலையத்துக்குக் கிளம்பினேன். கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவள் வருகிறதைப் பார்த்தேன். சின்னச் சின்ன அடிகளாய் கொஞ்சம் தடுமாற்றத்துடன் வந்தாள்.

”ஹ்ம். உனக்கு எதுவும் சொல்றதுக்கு இருக்கா? எங்காவது சத்தமில்லாத மூலைல நாம உட்கார்ந்து பேசலாம்.”

அப்படியொரு இடம் தேடி அமர்ந்து கொண்டோம்.

”உன்னை இங்க ஏன் வரச்சொன்னேன், அதை நான் மொதல்ல சொல்லிறணும்” என்றாள் அவள். ”எட்வர்ட் எங்ககூடத் தான் இருக்கார். முதல்ல அவர் இல்ல, வேணாம்னார்… நான்தான் வருந்தி வருந்திக் கூப்பிட்டேன். இன்னமும் அவர் பதட்டமா, ஜுரம் வந்தாப்போலத்தான்… ரொம்ப கடுப்பாய் இருக்கிறார். இப்ப அவர் உன்னைப் பார்க்க வேணான்னு இருந்தது.”

தேங்காய் உடைத்தாப் போல நான் என் கதையைச் சொல்ல, கவனமாய்க் கேட்டுக் கொண்டாள். அவ்வப்போது தலையை ஆட்டிக் கொண்டாள். ஆனால் பிளாக்ஸ்டேபிளின் கலவரத்தை அவள் புரிந்துகொள்ளும்படி என்னால் சொல்ல முடியவில்லை. நான் போகும்போதே அந்த ஊர் செய்தியில் கொதித்துக் கொண்டிருந்தது. வருட வருடமாய் அங்க இப்படி பரபரப்பான நிகழ்ச்சி எதுவும் நடக்கவே இல்லை. சனங்களுக்கு இப்ப வெறும் வாய்க்கு அவல் கிடைச்சாப் போல. எல்லார் மத்தியிலும் இதைத் தவிர வேறு பேச்சே கிடையாது. ஹம்ட்டி டம்ட்டி ஹேட் எ க்ரேட் ஃபால்… ன்கிற நர்சரி பாடல் ஞாபகம் வந்தது எல்லாருக்கும். பிரபுவின் கொடி யிறக்கம்…

குப்புற விழுந்தாராம் கோயிந்தம் பிள்ளை.

திடீரென்று ஜார்ஜ் கெம்ப் ஆளையே காணவில்லை. ஒரு வாரம் முன்னால் வியாபார விஷயமா லண்டன் வரை போக வேண்டியிருக்கிறதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தவன். அடுத்த ரெண்டு நாளில் அவனுக்கு எதிராக திவால் நோட்டிஸ் பதிவானது. வீடு கட்டித் தருகிற அவன் வேலை சரியாகப் போகவில்லை போலிருந்தது. பிளாக்ஸ்டேபிளை ஒரு கடல்கரை உல்லாசப் பயணிகள் தங்குமிடம் என உருவாக்க அவன் முயற்சி செய்தான். அது போணியாகவில்லை. சமாளிக்க என்று கிடைத்த இடத்தில் எல்லாம் கடன் கேட்டு கைநீட்டி யிருக்கிறான்.

என்னென்னவோ வதந்திகள் ஊருக்குள்ளே. எதோ கொஞ்சம் சேமிப்பு என்று வைத்திருந்தவர்கள் அவனை நம்பி பணங் கொடுத்துவிட்டு முழுசுமே இழந்திருந்தார்கள். விவரங்கள் தெளிவாய் இல்லை. ஆளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். என் மாமனுக்கோ, அத்தைக்கோ இந்த லேவாதேவி பரிவர்த்தனை எதுவும் தெரியாது. சனங்கள் என்னிடம் சொன்ன விவரங்களும் எனக்கு சரியாகப் புரியவில்லை.

என்ன தெரிந்தது, ஜார்ஜ் கெம்ப்பின் வீடு அடமானத்தில் இருக்கிறது. பொது அறிவிப்பு ஒன்று பார்த்தேன். அவனது தட்டுமுட்டு சாமான்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவன் சம்சாரத்துக்கு ஒரு பென்னி கூட மிஞ்சவில்லை. இருபது, இருபத்தியொண்ணு வயதுகளில் ரெண்டு பிள்ளைகள். கரி வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அந்த வியாபாரமும் விருத்தியடையாமல் படுத்து விட்டது. முகத்தில் கரி பூசிவிட்டது.

கைப்பணமும், கடன் வாங்கிய பணமுமாய் கிடைச்ச வரை அள்ளிக்கொண்டான் ஜார்ஜ் கெம்ப். ஒரு 1500 பவுண்டு அவன் தேத்தியிருப்பதாய்ப் பேச்சு. எல்லாம் சனங்கள் சொன்னது. எவ்வளவு பணம் என்று அவங்களுக்கு எப்பிடித் தெரிந்தது, எனக்குத் தெரியவில்லை. அவன் கிடைத்தால் உடனே கைது செய்ய உத்திரவு பிறப்பிக்கப் பட்டதாகவும் சேதி. அவனா, அவன் நாட்டைவிட்டே ஓடியிருப்பான், என்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டதாகச் சிலர். சிலர், இல்ல கனடா என்கிறார்கள்.

”எப்பிடியும் அவனைப் பிடிச்சிருவாங்க” என்றார் மாமன். ”அவனைப் பிடிச்சி ஆயுள் தண்டனை குடுக்கணும்.”

மொத்த ஊருமே அவனையிட்டுக் கொதித்துக் கிடந்தது. சனங்கள் அவனை மன்னிப்பதாக இல்லை. ஏன்னா அவன் எப்பவும் ஹோஹோன்னு கத்திப் பேசுவான். சண்டியர்னு நினைப்பு. ஊரில் யாரைப் பார்த்தாலும் அவனுக்கு ஒரு எகத்தாளம். கிண்டல். எல்லாருக்கும் தண்ணி வாங்கிக் குடுப்பான். தோப்பில் விருந்தளிப்பான். அப்படியே எல்லாரையும் கைக்குள்ள போட்டுக் கிட்டான். ஒரு சேவல் தொப்பி. அந்தக் கேடுகெட்ட பன்னாடை அதை தலைல வைக்கிற தினுசே சகிக்காது.

ஆனால் ஆக மோசமான செய்தியை மாமன் ஞாயிறு இரவு கேள்விப்பட்டார். சர்ச் பிரார்த்தனைகள் எல்லாம் முடிந்தது. உக்கிராண அறையில் சர்ச் பொறுப்பாளர் சொன்னார் அந்தச் செய்தியை. கடந்த ரெண்டு வருஷமா அவன் வாரா வாரம் ரோசி திரிஃபீல்டை ஹாவர்ஷாமில் சந்திக்கிறான். ஒரு பொதுவிடுதியில் அவர்கள் ராத்திரி கொட்டம் அடிக்கிறார்கள். அந்த விடுதியின் குத்தகைக்காரன், பிரபு ஜார்ஜின் வாய்ப்பந்தலில் மயங்கி அவனும் ஏகப்பட்ட பணத்தைக் குடுத்திருக்கிறான். இப்ப அவனுக்கும் போட்ட காசு எள்ளுன்னு ஆனதும், இப்ப வந்து எல்லா விவரமும் கக்கிட்டான். அட மத்தவனை ஏமாத்தினான் போனான்றதெல்லாம் தனிக்கதை… அவனுக்கு நான் இத்தனை செஞ்சிருக்கேன், அவனோட நெருங்கிப் பழகியிருக்கேன்… எனக்கே வைக்கிறானா ஆப்பு, ஆள் பெரிய டூப்பு…. இனியும் என்னத்தை மூடி மறைக்கிறதுன்னு வெளிய விட்டுட்டான்.

”நான் நினைக்கிறேன், அவங்க ரெண்டு பேருமா எங்கியாச்சும் ஓடிப் போயிருப்பாங்களாட்டருக்குது” என்றார் மாமன்.

”இருக்கலாம்” என்றார் பொறுப்பாளர்.

ராத்திரி சாப்பாட்டுக்கடை முடிந்து வேலைக்காரி வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தாள். நான் சமையல் அறைக்குப் போய் மேரி ஆனுடன் கலந்து கொண்டேன். அவளும் சர்ச்சில் வைத்து இந்தக் கதையெல்லாம் கேள்விப்பட்டிருந்தாள். என் மாமனோ மேடையில் உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார்… அந்நேரத்தில் கீழே இதுங்கள் இதுபற்றி குசுகுசுவென்று பேசித் தீர்த்தன.

”நம்ம பாதிரியார் சொல்றாரு, அவங்க ரெண்டு பேருமாத்தான் ஓடிப் போயிருப்பாங்கன்றாரு” என்றேன் நான். எனக்குத் தெரிந்த விவரங்களை அவளுக்கு நான் மூச்சு விடவில்லை.

”ஆமாமா, அப்டிதான்” என்றாள் மேரி ஆன். ”அவளுக்கு காதல்னா அது அவன் ஒருத்தன் மேலத்தான். அவன் வார்த்தைக்கு அப்பிடியொரு மயக்கம் அவளுக்கு. அவன் விரலாட்டிக் கூப்பிட்டால் போதும், யாரை வேணா விட்டுட்டு அவன் பின்னால் வந்துருவாள்.”

நான் கண்ணைத் தாழ்த்திக் கொண்டேன். ஏற்கனவே எனக்கு அவளையிட்டு வஞ்சிக்கப்பட்ட ஆத்திரம். என்னிடம் அவள் ரொம்ப மோசமாய்த்தான் நடந்து கொண்டாள். ”இனிமே அவளை நாம பார்க்கவே போறதில்லை” என்றேன். சொல்கையிலேயே உள்ளே படபடத்தது. ”யப்பா, சனி ஒழியட்டும்” என்றாள் மேரி ஆன் சந்தோஷமாய்.

இந்தக் கதையை யெல்லாம் திருமதி பார்த்தன் திரஃபோர்டுக்கு, அவளுக்கு வேண்டிய அளவில் சொல்லி முடித்தேன். ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடமிருந்து. இந்தக் கதை அவளுக்கு வருத்தம் அளித்ததா, திருப்தி யளித்ததா தெரியாது.

”ஹ்ம். அத்தோட ரோசி கதை முடிஞ்சாப்ல நாம அவளை மறந்துற வேண்டிதான்” என்றாள். எழுந்துகொண்டு எனக்குக் கை கொடுத்தாள். ”இந்த இலக்கியவாதிகள் ஏன் இப்பிடி கன்னாபின்னான்னு கல்யாணம் முடிச்சிக்கிட்டு விழுந்து வார்றாங்கன்னே தெரியல. ச்… ரொம்ப பாவம் அப்பா இதெல்லாம். ரொம்பப் பாவம். நீ செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. இப்ப நாம எங்க இருக்கம்னு பிடிபடுது இல்லியா? விஷயம் என்னன்னா, எட்வர்டின் எழுத்து வேலை பாதிக்காமல் நாம பாத்துக்கணும் பாத்துக்க.”

அட அதுக்கும் எனக்கும் என்ன இருக்கு, என நினைத்துக் கொண்டேன். நிசம் என்னன்னால், அவள் எனக்கு யோசிக்க எதையும் விட்டு வைக்கவில்லை. அவளுடன் விக்டோரியா ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். செல்சிக்கு கிங்ஸ் தெரு வரை போகிற பேருந்து வந்தது. அதில் அவளை ஏற்றி விட்டேன். திரும்பி என் இடத்தை நோக்கி நடராஜா சர்விஸ் விட்டேன்.

>>>

பிறகு திரிஃபீல்டுடன் தொடர்பு விட்டுப் போனது. அவரைத் தேடிப் போக லஜ்ஜையாய் இருந்தது. தேர்வு நெருக்கடிகள் வேறு. நான் தேறியதும் வெளிநாடு போய்விட்டேன். எப்போதோ நாளிதழில் ஒரு சேதி, திரிஃபீல்ட் ரோசியை விவாகரத்து செய்து விட்டார், என வாசித்த ஞாபகம். அவளைப் பற்றி பிறகு சமாச்சாரம் ஏதும் தெரியவரவில்லை.

அவள் தாயாருக்கு மாத்திரம் அடிக்கடி பணம் வந்துகொண்டிருந்தது. பத்து பவுண்டு. இருபது பவுண்டு. நியு யார்க் தபால் முத்திரையுடன் பதிவுத் தபாலில் வந்து சேர்ந்தது. ஆனால் அனுப்புனர் முகவரி இல்லை. உள்ளே கடிதம் கிடிதம் எதுவும் இல்லை. அது ரோசி அனுப்பியதாகத் தான் இருக்கும், திருமதி கானுக்கு வேறு யார் பணம் அனுப்புவார்கள்?

வருடங்கள் கடக்க, ரோசியின் தாயார் மரணமடைந்து விட்டாள். அந்தச் சேதி ரோசிக்கு எட்டியதாகத் தான் படுகிறது. ஏனென்றால், கடிதங்கள் வரத்து நின்று விட்டது.

>>>

தொடரும்

storysasnkar@gmail.com

 

Series Navigationஇவள் பாரதி கவிதைகள்Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *