முள்வெளி – அத்தியாயம் -2

This entry is part 20 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“இறைவன் உருவமற்றவனா?” “ஆம்”

“இறைவன் உருவமுள்ளவனா? “ஆம்”

“இறைவன் ஆணா?” “ஆம்”

“இறைவன் பெண்ணா?” “ஆம்”

“இறைவன் குழந்தையா?” “ஆம்”

“இறைவனிடம் ஆயுதமுண்டா?” “ஆம்”

“இறைவன் விழாக்களை விரும்புவானா?” “ஆம்”

“இறைவன் விரதம் வேண்டுமென்றும் புலன் சுகம் வேண்டாமென்றும் சொல்லுவானா?” “ஆம்”

“இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” “ஆம்”

“இறைவன் திருவோடு ஏந்தியவனா?” “ஆம்”

“இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” “ஆம்”

“இறைவன் கோவணமணிந்த துறவியா?” “ஆம்”

இன்னும் மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பல வடிவங்களில் இறைவனை நாம் காண்கிறோம். இறைவன் எல்லாம் வல்லவன். இதை எல்லா மதங்களும் சொல்கின்றன. உருவமே இல்லாமலும் விதவிதமான வடிவங்களில் காட்சி தரவும் இறைவன் வல்லவன். மனித வடிவில் அவதாரம் எடுக்க வல்லவன். எல்லா உயிர்களிலும் உறைகிறவன். இப்படி நாம் புரிந்து கொள்ளும் போது தான் நமது குடும்பம் அதை விடப் பெரிய சமுதாயம் என்ற இரண்டு இடத்திலும் இறைவனின் அம்சம் நாம் செய்கிற எல்லாவற்றிலும் இருக்கும் படியாக நாம் வாழ்கிறோம். இறைவன் என் போலத் துறவியோ இல்லை உங்களைப் போல சம்சாரியோ இருவருக்குமே ஒரு போலத் தான். அவனை நாம் பக்தி செய்யும் போது அதன் பலன் நம் அன்றாட வாழ்க்கையிலேயே கிடைக்கிறது. தொடர்ந்து இறைவன் நாமத்தைச் சொல்லுங்கள். இறைவனைத் துதித்துப் பாடுங்கள். அவன் லீலைகளை வியந்து போற்றுங்கள். ஓம் சாந்தி.

அரங்கத்திலிருந்து சிறு சலசலப்புடன் ஒவ்வொருவராகக் கலைந்து சென்றார்கள். சாமியாரைச் சந்திக்க மேடையில் இருந்த வரிசையில் சுப்பிரமணியமும் இருந்தார். சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்கவே எஞ்சியோர் இருந்தனர். சிலர் அவரிடம் மெல்லிய குரலில் பேசியதும் ஒரிரு நிமிடங்கள் தான். ” சாமீ. என் பேரு சுப்பிரமணியம். ரியல் எஸ்டேட்டுதான் என் தொழில். மறைமலை நகர் கிட்டே நம்ம ஆசிரமும் எங்க கம்பெனிதான் பண்ணுனது.”

“நல்லது. நீங்க இதெல்லாம் ட்ரஸ்ட் செகரிட்டரிக்கிட்டே பேசலாம்”

“அதுக்கு இல்லை சாமீ… எங்க பார்ட்னர் ராஜேந்திரன் உங்களை வந்து பார்த்தாரா?”

“என்னை சந்திக்கிறவங்க யாரு கிட்டேயும் நான் பேர் கேக்கறது இல்லை. அவங்களா குறிப்பிட்டா உண்டு. ராஜேந்திரன்னு அறிமுகப்படுத்திக்கிட்டு பேசின மாதிரி நினைவில்லை”

அதற்குள் ஆசிரமத்து ஊழியர் ஒருவர் சாமியார் காதோரமாக ஏதோ சொல்ல அவர் எழுந்து வரிசையிலுள்ளவர்களுக்கு வந்தனம் செய்து கிளம்பினார்.

இந்தக் கதைத் தலைப்பு முதல் + இரவுன்னு போட்டிருக்கு. கதை முழுவதுமே ஒரே ஈமெயிலுக்குள்ளே வந்திடுது. ஒரே லொகேஷன் தான். காமெரா மேன் ராஜு , புரொடக்ஷன் மேனேஜர் ஜெயகுமார் இருவரையும் பார்த்துப் பொதுவாகச் சொன்னான் செந்தில்.

“முதல் + இரவு” தலைப்பு டீவி ஸீரியலுக்கு ஒத்து வருமான்னு தெரியலியே” என்றான் ராஜு.

“ஒரு லெட்டர் மாதிரியோ பழைய நினைப்பு மாதிரியோ எழுதினாலும் ரெண்டு சிட்சுவேஷன் மூணு லொகேஷன் மாதிரி கொண்டு கிட்டு வரலாம்.ஓபனிங் படிங்க”

இரவு மணி பதினொன்று.

அன்பு ப்ரியா, நீ நிச்சயம் பார்த்தாக வேண்டும் என்பதற்காகத் தான் இதற்கு முந்தைய மெயிலுடன் என் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தேன்.

“லொகேஷனைக் குறிப்பிட்டு வர்ற பாராவைப் பிடிச்சுப் படிங்க”

மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள கடைகளில் எத்தனை பாசி மணி மாலைகள், தோடுகள், கண் மை, ஸ்டிக்கர் பொட்டு, வளையல்கள், ‘க்ளிப்’புகள், கிரீம், பௌடர், மேக் அப் சாமான்கள் எல்லாம் வாங்கியிருப்போம்?

“புரட்டுங்க.. அடுத்த லொகேஷன்?”

சிவன் கோயில் பிரகாரத்தில் மறைவான சற்றே இருளான இடங்களில் தென்படும் ஜோடிகளைத் தொந்தரவு செய்யாமல் நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்த ப்ரியாவின் கண்கள் சிரிக்குமே?

அடுத்தது?

பகல் வெய்யிலின் சூடு இன்னும் இறங்காத பாறையின் மீது அமர்ந்தபடி காவிரிப் பாலம் மீது மரவட்டை போல ஊர்ந்து வரும் ரயிலை, எறும்புகளாய் ஆண்டார் வீதியிலும் புலிவார் ரோடுகளிலும் நம் கல்லூரி அருகிலும் தென்படும்….

நிறுத்தி விட்டுப் பக்கங்களைப் புரட்டினான்.

கம்ப்யூட்டர் துறை எனக்கு வருமானத்தையும் படித்த, இங்கிதம் தெரிந்த ஆண் நண்பர்களையும் கொடுத்தது..

“அடுத்த அவுட் டோர் எது?” என்றான் ராஜு. தேடினான். “இன்டோர் அவுட்டோர் மாறி மாறி ஒரே பக்கத்தில் வருது ஸார்.”

ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் அப்பா என்னைத் தன்னோடு வாக்கிங் வர முடியுமா என்று கேட்டார். நான் அவருடன் பேசியே பல நாட்கள் ஆகியிருந்தன. எனவே நான் மறுக்கவில்லை. அன்று அவர் என் அக்கா மற்றும் அண்ணன் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேசியபடியே வந்தார். எனக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. என் திருமணம் பற்றிப் பேசினால் நான் எதாவது ஹாஸ்டலுக்குப் போய் விடுவேனோ என்று அவர் பயப்படுகிறாரோ? ஒரு “ஐஸ் க்ரீம் பார்லர்” வந்தது. “ஐஸ் க்ரீம் சாப்பிடுகிறாயா?” என்று அவர் கேட்ட போது என்னைத் தூக்கி அந்த ஸ்பரிஸம் ஒரு கணம் வந்து போனது. கண் கலங்கி விட்டேன். ஆனால் சமாளித்துக் கொண்டேன். அன்று இரவு நான் உறங்கி விட்டேன் என் நினைத்து மிகவும் மென்மையாக என் தலையைத் தடவிக் கொடுத்து விட்டுப் போனார்.”

“எனக்கு டைம் ஆயிடுச்சு ஜெயகுமார் ஸார்” என்று ராஜு கிளம்பினான். செந்தில் அடுத்த இடத்தை அடையாளம் கண்டு வைத்திருந்தான். “க்ளினிக்” ஸார்.

அந்த லேடி டாக்டருக்கு நடு வயது இருக்கும். அம்மாவின் ஃபைலை மேஜை மீது வைத்து என்னிடம் பேச ஆரம்பித்தார்.

வேறே லொகேஷன் எதுவும் இருக்கா செந்தில்?

இருக்கு ஸார். வீடு. பெட் ரூம் அல்லது டிராயிங்க் ரூம்.

முதலிரவில் அவரிடம் பழைய விஷயம் எதையும் பேச வேண்டாம் என்று அம்மா அறிவுரை கூறினாள். அவளுக்கு என்னைப் பற்றி எந்த அளவு தெரியும் என்று பதட்டமாயிருந்தது.

“அவ்வளவு தானே?’ என்றார் ஜெயகுமார்.

“பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே” ன்னு போட்டிருக்கு ஸார்”

“ஓகே. அது ஓபனிங்க் ஸாங்க்”

அன்பு ராஜேந்திரன்
தங்கள் மெயிலுக்கு சற்று தாமதமாகவே பதில் எழுதுகிறேன். இதற்காக நான் செயற்கையாக மன்னிப்புக் கோரவில்லை. என் தொழில் அப்படி. மனநல மருத்துவம் என்பது சிகிச்சைக்காக வருபவரின் பின்னணியையும் எந்த ஒரு குறிப்பிட்ட முனையில் ஒருவரின் மனப்பாங்கு சாதாரண வாழ்க்கையே அவருக்கு சாத்தியமில்லாமற் போனது என்று தொடங்கும் பரிசோதனை. இது மிகவும் காலம் எடுத்துக் கொள்ளும் பணி.

இதனாலேயே நான் நேரமின்மை என்னும் நெருக்கடியிலேயே எப்போதும் செயற்பட என்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய புதிய வீட்டின் மாதிரிகளை அந்தக் காரணத்தினாலேயே உங்களை மெயிலில் அனுப்ப வேண்டினேன். நீங்கள் இணைத்துள்ள மாதிரிகளை என் மனைவியுடன் கலந்து ஆலோசித்து விரைவில் எங்கள் முடிவைத் தெரியப் படுத்துகிறேன்.

கடவுள் சம்பந்தமான தமிழ்ப் பாடல்களை நீங்கள் மன் அமைதிக்காக அடிக்கடி கேட்பதாகவும் ஆனாலும் மனம் அமைதியுறவில்லை என்று பொதுவாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

எனக்கும் இசையில் ஈடுபாடு உண்டு. மனநல மருத்துவம் இசையை மட்டுமல்ல வேறு எந்த ஒரு கலையையும் ஒரு மருந்தாக அங்கீகரிக்கவில்லை. உண்மையில் சில கலைஞர்களும் எழுத்தாளர்களும் வெவ்வேறு மன உச்சங்களில் இயங்கும் அபூர்வமான திறன் கொண்டவர்கள்.

உங்கள் அன்றாட வாழ்க்கை சிக்கலில்லாமல் செல்லும் பட்சத்தில் நீங்கள் இயல்பாயிருக்கிறீர்கள் என்றே கொள்ளலாம். மரியாதைகளுடன் ரவீந்திரன்

தெப்பக்குளத்தின் மீது நிலவும் அதன் அருகிலுள்ள மேகங்களும் பிரதிபலித்தன. தவளைகளின் சுறுசுறுப்பான ஒலி. வண்டுகளும் தட்டான் பூச்சிகளும் நில்வொளியை ஊடுருவிக்கொண்டிருந்தன.

“தம்பீ, எங்கிட்டெல்லாம் உங்களைத் தேடுறது. அய்யிருதான் கோயிலைப் பூட்டிக் கிட்டுப் போறப்போ சாயங்காலமே உங்களை கொளத்திலே பாத்தேன்னாரு.. வாங்க தம்பி.. இந்தக் கொசுக்கடியிலே எதுக்கு உக்காத்திருக்கீங்க? ” செல்லாயி ராஜேந்திரனை எழுப்பினார்.

சலனமற்ற அவன் முக பாவத்தை அவர் இருளில் காண இயன்றிருக்காது. அவன் தோளைத் தொட்டு “எந்திரிங்க.. எந்திரிங்க” என்று குரலை உயர்த்தவும் மெதுவாக எழுந்து அவருடன் படிகளில் ஏறினான்.

Series Navigationமெங்பெய்யிலிருந்து வந்த பெண்அணையா விளக்கு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *