கள்ளிப் பூக்கள்

This entry is part 4 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கோவில், குளம், பூசைகள், வழிபாடுகள் என அனைத்தும் செய்து முடித்த தம்பதியருக்கு ஆண்டவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குலம் தழைக்க வந்த குழந்தையை தெய்வமாகக் கொண்டாடினார்கள். தவழுகிற பருவத்தில் தவழ்ந்து, பால் பற்களும் சரியான காலத்தில் முளைத்து, நடைபயிலும் பருவத்திலும், உணவு உண்ணும் பழக்கத்திலும் மற்ற குழந்தைகளைப் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் தம் இரண்டு வயதுவரை வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மூன்றாம் வயது ஆரம்பிக்கும் தருணம், குழந்தையின் போக்கில் பெற்றோர்கள் சில மாற்றங்களை உணர்ந்தனர். குழந்தை திடீரென பெற்றோர்களின் அழைப்பிற்கு கவனம் செலுத்தவில்லை. தனிமைப்படுத்தப்பட்டது போன்றும், சுற்றி நடக்கும் விசயங்களில் ஈடுபாடு இல்லாமலும் நடந்து கொண்டது. இரண்டு வயது குழந்தைக்குரிய மழலை இயற்கையாகத்தான் இருந்தது. நாளாக ஆக, குழந்தையிடம் பல மாற்ற்ங்கள் தெரிய ஆரம்பித்தது. தனிமையில் இருக்க ஆரம்பித்தது. மற்ற குழந்தைகளுடன், பேசவோ, விளையாடவோ செய்யாமல் ஒதுங்கி இருந்தது. பெற்றோருக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை புரிந்தது.

 

குழந்தையை பள்ளியில் சேர்த்தார்கள். மற்ற குழந்தைகளுடன் கலந்து பழக ஆரம்பித்தால் குழந்தை சரியாகலாம் என்று தோன்றியது. ஆனால் ஆசிரியர்கள் குழந்தையின் பழக்க வழக்கங்களில் இருக்கும் மாற்றங்களைக் கண்டறிந்து மருத்துவம் பார்க்க பரிந்துரை செய்தனர், அந்த நேரத்தில் குழந்தை பட்டாசு போன்ற திடீர் சத்தங்களுக்கும், பளிச்சென்று மின்னும் விளக்கைக் கண்டும், தெருவைக் கடக்கும் போதும் மிகவும் அஞ்சி ஒடுங்கிப்போனது. ஒரு பொருள் வேண்டுமானல் அதிகமான பிடிவாதம பிடித்தோ முரட்டுத்தனமாக நடந்துகொண்டோ எப்படியும் அடைந்தேதீர வேண்டும் என்பது போல நடந்துகொண்டது. மருத்துவரிடம் பரிசோதித்தபோது தாங்கள் இதுவரை கேள்விப்படாத, ஆனால் இன்று கரையான் புற்று போல அமைதியாக வெகு வேகமாக வளர்ந்து, குழந்தைகளின் மன நலத்தை குறிவைத்து தாக்குகின்ற ஆட்டிசம் என்கிற நோயால தாக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சிக்குள்ளானார்கள், பெற்றோர்கள். ASD (Autism Spectrum Disorders,) ADHD/ADD and Behavioral patterns ADHD (Attention Deficit Hyperactive Disorder) , போன்ற நோய்களும் இதில் அடங்கும்.

 

ஆட்டிசம் நோய் என்பது குழந்தைகள் தங்களின் வெளியுலகத் தொடர்பு மற்றும் சமூகச் சூழலை எதிர்கொள்வதில் உள்ள சிரமங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகள் கொண்டதே. ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களைச் சுற்றி நடக்கின்ற, குறிப்பாக பலமான ஓசைகள், மிகப்பிரகாசமான ஒளியமைப்புகள் , அதிகமான மக்கள் கூட்டம் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுடைய உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் பெரும் சிரமம் கொள்கிறார்கள். வழமைக்கு மாறான பழக்கங்களும், தனியாக விளையாடுவதிலேயே விருப்பம் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இயற்கையிலேயே சலன புத்தி உடையவராகவும், ஒரே விதமான சாடைகளை திரும்பத் திரும்பச் செய்பவராகவும் இருப்பதால் எளிதாக மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டு இருப்பது அறிய முடிகிறது. கல்வி கற்பதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. நேரிடையான கண் பார்வையை முழுமையாக தவிர்ப்பதும், கவன ஈர்ப்பு இல்லாமல் இருப்பதும் இவர்களின் இயல்பு. தனக்கு வேண்டுவதை உணரவோ, பசி எடுத்தால் சொல்லக்கூடிய நிலையோ கூட இல்லாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். இவர்களுக்கு மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் மருத்துவம் ஆகிய இரண்டு சிகிச்சைகளும் அவசியமாகிறது. இவையிரண்டும் ராஜ வைத்தியங்கள் என்று அனைவரும் அறிந்ததே. ஒரு சாதாரண நடுத்தர குடும்பச் சூழலில் உள்ள குழந்தைக்கு இது போன்ற வைத்தியங்கள் கிடைப்பது சாத்தியமே இல்லை.

 

‘Behavioral Therapy’. போன்ற ஒழுக்க நடைமுறைப் பயிற்சிகள் அவசியமாகிறது. குழந்தையின் மன அழுத்தம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு பெற்றோரின் முழு ஈடுபாடும், தனிப்பட்ட கவனமும் மிக அவசியம்.  சில குழந்தைகள் ஒரு சில பழக்கங்களை விடாமல் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக, குச்சிகள், பென்சில்கள், சோப்புக் கட்டிகள் போன்றவைகள். ஊஞ்சல், சாய்வு நாற்காலிகள், போன்றவற்றிலும் விடாமல் ஆடிக் கொண்டிருப்பார்கள். சரியான பயிற்சியும், வழிகாட்டுதலும் கிடைத்தால் மட்டுமே இக்குழந்தைகள் ஓரளவிற்காவது சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ முடியும் என்பதுதான் நிதர்சனம்.

 

தேசிய ஆட்டிசச் சங்கம் The National Autistic Society (NAS) கிட்டத்தட்ட  55க்கும் மேலான வருடங்களைக் கடந்திருக்கும் இவ்வேளையில், முதன் முதலில் ஆட்டிசம் நோய் கண்டறியப்ப்பட்ட குழந்தைகள் இன்று தங்களுடைய ம்த்திய வயதை எட்டியவர்களாக உள்ளனர்.

 

இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தை பிறக்கும் போதே மிகச் சிறந்த அறிவாளியாகப் பிறக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டு அதற்கான பல குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சில நேரங்களில் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரில் யாரேனும் ஒருவர் அதிகப்படியான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, குடும்பத்தில் புற்றுநோய் சரித்திரம் அதிகமாக உள்ள பெற்றோரின் குழந்தைகளோ, குடி மற்றும் போதை மருந்து பழக்க நோயாளிகளுக்கு பிறக்கும் குழந்தைகளோ இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகலாம் என்பதும் ஒரு கருத்து இருந்தாலும், அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

 

உலகளவில் தோராயமாக 88இல் ஒரு குழந்தை ஆட்டிசம் நோயினால் அவதிப்படுவதாக அறியவருகிறது. இதற்கான புள்ளி விவரங்கள் அரசாங்கத்தினால் சரியாகக் கணிக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் விருப்பமாக உள்ளது. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனிப்பட்ட கவனம் தேவைப்படுகிறது. விசேசமான பள்ளிகளும் அவசியமாகிறது. நகரத்தில் இருப்பது போன்று கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த வசதிகள் கிடைப்பது அரிது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டியது அவசரத் தேவை. இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் குழந்தையின் பாதிப்பு பற்றிய புரிதலே இன்றி, அந்தக் குழந்தையை மென்மேலும் சிரமத்திற்குள்ளாக்குகிறார்கள். நம் நாட்டில் மிகச்சிறந்த நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் இருந்தும், மற்றைய வளர்ந்த மேலை நாடுகள் போன்று சரியான, விழிப்புணர்வுத் திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. பலவிதமான வைத்திய முறைகளை விளம்பரம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறியப்பட்ட சரியான, மருத்துவச் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வையும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் தெளிவும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் அவசரத்தேவையாகும். மருத்துவர்களும் சேவை மனப்பான்மையுடன் இக்குழந்தைகளுக்கான சிகிச்சை அளிப்பதில் இயன்றவரை கட்டணத்தில் சலுகைகள் கொடுத்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.

 

உலகளவில் ஆட்டிசம் பற்றிய பல முடிச்சுகள் இன்றளவிலும் அவிழ்க்கப்படாமலே இருப்பது வேதனைக்குரிய விசயம். இந்தியாவில் மருத்துவர்களிடையே ஆட்டிசம் பற்றி பல மாற்றுக் கருத்துகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன. பல நேரங்களில் நோயாளிகள் தவறான சிகிச்சையைப் பெறுவதற்கும் இது காரணமாகிவிடுகிறது.

 

ஒரு குழந்தையிடம் மாற்றம் ஏற்படும் போது பெற்றோர் முதலில் தங்கள் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர். குழந்தை சற்று மந்த புத்தி கொண்டுள்ளது. கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னாலும், மனநல மருத்துவர், மனோதத்துவ நிபுணர் என செல்கின்றனர் சிலர். இறுதியாக குழந்தைக்கு மனநல பாதிப்பும், கவனக்குறைபாடும் இருப்பதாகக் கூறி ”ஹைபர் ஆக்டிவ்” நோயை கட்டுப்படுத்துவதற்கான  மருந்தை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். பல மாதங்கள் மயக்க நிலையில் (sedation) வைத்திருக்கும் மருந்துகளை முயற்சித்துவிட்டு, எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அடுத்து மீண்டும் என்ன பிரச்சனை என்று அலசி ஆராய ஆரம்பிக்கிறார்கள். நகரங்களில் பல மருத்துவர்கள் எளிதாக இந்நோயைக் கண்டறிந்தாலும், இன்னும் கிராமப் புறங்களில் சரியான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை என்பதுதான் உண்மை.

 

இந்தக் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகள் புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். அதற்கான மையங்களும், இல்லங்களும், அக்குழந்தைகள் பெரியவர்களாக வளரும் பொழுது, அவர்களுக்கான அன்றாட தேவைகளையும், எளிதான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டியதும் அரசாங்கத்தின் அவசரத் தேவையாகும். இக்குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோர்களுக்கு இயலாமையோ, அல்லது அவர்களின் இறப்பிற்குப் பிறகோ இவர்களைப் பராமரிக்க்கக்கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட அரசாங்க இல்லங்கள் உடனடியாக கட்டமைக்கப்பட வேண்டியது அவசியம். சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. அதற்கான பிரத்யேகமான தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் மத்தியதரக் குடும்பங்களே பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அரசாங்கம் இதனையும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது குறிப்பிடும்படியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் இல்லை. அதற்கான முயற்சியும் விரைவாக எடுக்க வேண்டியதும் அவசியம்.

 

ஆட்டிசம், மனநல பாதிப்புகள் மற்றும் பலதரப்பட்ட நோய்களுக்கான, “நிர்மயா”  மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சமூகநலத்துறை அமைச்சர் ஸ்ரீமதி மீராக்குமார் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் வரை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டம், தில்லி, கைமூர், சண்டிகார், ஜபல்பூர், அகர்தலா, ரேரெய்லி, ஈரோடு, எர்ணாகுளம், அஹமதாபத் மற்றும் பாஹேஷ்வர் ஆகிய பத்து மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் / காப்பாளர்களுக்கு ரூபாய் 75000 வரை வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இரயில் பயணச் சீட்டுகளில் 75% சலுகை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் மட்டும் இவர்களின் வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு போதுமானதாக இருக்க முடியாது. எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்களை அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சங்கமும் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

 

சமுதாயமும் இக்குழந்தைகள் நலனில் அக்கரையும், அவர்களின் பெற்றோருக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டியதும் அவசியம். யாருக்கு எந்த நேரத்தில் என்ன வியாதி வரும் என்று யாரும் கணிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது நம் கடமையாகும். சமீபத்தில் ஒரு தாய் மனநலம் பாதிக்கப்பட்ட தம் குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்ததறகான காரணமாக, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அக்குழந்தையை தொல்லையாகக் கருதி வீட்டில் குடியிருக்க அனுமதி மறுப்பதையே காரணமாகச் சொல்லியிருந்தது, நெஞ்சைப் பிழியும் செய்தி. ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் தொல்லைகள் ஓரளவிற்கு குறையும் என்பதும் திண்ணம். போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக போர்க்கால நடவடிக்கை எடுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியதைப்போல இந்த ஆட்டிசம் நோயை ஒழிப்பதற்கும் மற்றும் அக்குழந்தைகளை பராமரிப்பதற்கும் அது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அடுத்து வரும் தலைமுறைகளே கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது என்பது வருத்தத்திற்குரியது.

 

பி.கு. இதற்கு தகுந்த ஆதாரங்களுடனான் செய்திகளை வல்லுநர்களோ, ஆய்வாளர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ பதிவு செய்தால் அத்னை இக்கட்டுரையுடன் இணைக்க ஏதுவாகும்.

Series Navigationபூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?சீதாயணம் நாடக நூல் வெளியீடு
author

பவள சங்கரி

Similar Posts

17 Comments

 1. Avatar
  பவள சங்கரி says:

  நாட்டில் சமீப காலங்களில் மிகப்பரவலாக பெருகிக் கொண்டிருக்கும் இந்த குறைபாடு பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லையோ?

  தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு ஆட்டிசக் குழந்தை. ஏதோ ஒரு துறையில் மிகப் பெரும் ஜீனியசாக இவர்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறார்கள். எதில் ஈடுபாடு கொண்டாலும் அதில் மிக ஆழ்ந்து போவது இவர்களுடைய இயற்கை குணம்.. பல விஞ்ஞானிகள் இது போன்று இருந்திருப்பதாக ஆதாரம் இருக்கிறது… இதைவிட சுவாரசியம் ஆட்டிசம் குறைபாடு மற்றும் தெரபி குறித்த ஆய்வாளர் மைதிலி சாரி அவர்கள் சொல்கிற ஒரு விசயம் மிக ஆச்சரியம்.

  நம் இந்தியாவில் குழந்தை வளர்ப்பில் உள்ள பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களின் வளர்ச்சியைப் பாதிப்பதாகக் கூறுகிறார். பாட்டி, தாத்தாவிடம் வளரும் குழந்தைகள் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு.,அதிகமாக செல்லம் கொடுத்து கெடுக்கப்படுகிறார்களாம். மிகவும் பொத்திப் பொத்தி வளர்கப்படுவதாலும் அவர்களுடைய சுதந்திர உணர்வு தடைபடுகிறதாம். ஐந்து வயது குழந்தையை காரில் ஏறும் வரைகூட நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு போவது போன்ற பழக்கங்கள்…அதற்கு சிறந்த உதாரணம் என்கிறார் மைதிலி சாரி. ..

  ஆன்மீக நெறியில் ஆழ்ந்து இருப்பவர்கள், தனிமையை நாடி, மெய்யுணர்வில் ஆன்மாவுடன் ஒன்றி இருப்பதைப் பற்றி அவர் உதாரணம் காட்டுவது சிந்திக்கக்கூடியதாக உள்ளது. 841A.Dயில் சங்கரா திக்விஜயா என்ற அறிஞரால் சொல்லப்பட்ட கதையிது. இந்திய ஞானி சங்கராச்சாரியார், அவர்கள் அதிசயத்த்க்க வகையில் தம்முடைய இரண்டு வயதிலேயே உபநிடதங்கள், மற்றும் சமஸ்கிருதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவ்ராக இருந்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் கோகர்கணத்திற்கு தம் சீடர் பெருமக்களுடன் சென்றுள்ளார். அங்கு பிரபாகரா/திவாகரா (இரண்டு பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது) என்ற தந்தை த்ன்னுடைய ஏழு வயது மகனை சங்கராச்சாரியாரிடம் கொண்டு வந்திருக்கிறார். குழந்தை கேட்கும் திறம் பெற்றிருந்தும், பேச்சுத்திறனின்றி இருப்பதாகக் கூறுகிறார். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் இன்றி, தம் சகவயது சிறுவர்களிடமும் சேர்ந்திராமல், அடிக்கடி ஏதோ ஓர் மூலையில் அமர்ந்து கொண்டு மேலே வானத்தைப் பார்த்துக்கொண்டு ஆழந்த சிந்தனையில் இருப்பதாகக் கூறினார். அந்தச் சிறுவனின் அழகைப்பற்றிச் சொல்லும் போது, அவனுடைய தந்தை தீயிலிடப்பட்ட கரித்துண்டு தங்கமென ஒளிர்வது போன்று அவன் முகமும் ஒளிர்வதாகக் கூறுகிறார். பசியிருந்தும் உணவு வேண்டும் என்று கேட்காமலும், தனக்குக் கொடுக்கப்படுவது எதுவானாலும் அதை மட்டும் உண்பதாகவும், எந்த ஞானமும் இல்லாமலும் இருப்பதாகக் கூறுகிறார். எந்த தண்டனையும் அவனை பாதிப்பதுமில்லை. இவனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று சங்கராச்சாரியாரிடம் கேட்டிருக்கிறார்.

  சக்கராச்சாரியார் அந்த சிறுவனிடம் “நீ யார்” என்று கேட்டிருக்கிறார். அச்சிறுவன் முதன்முதலாக அன்று “நித்யோபலப்திஸ்வருபோஹமாத்மா” அதாவது நிலையான் ஞானமும், உணர்வு நிலையும் குணநலனாகக் கொண்ட ஆத்மன் நான் என்று பேசினானாம்.. அத்வைத தத்துவத்தில் ஊன்றித் திளைத்திருக்கும் உன்னத ஆத்மா என்பதை உணர்ந்த சங்கராச்சாரியார், ஹஸ்தமலகா என்று நாமகரணம் சூட்டி, அவனை துறவு வாழ்க்கைக்கு அட்சதை போடுகிறார். உள்ளங்கை நெல்லிக்கனியாக தத்துவம் உணர்ந்தவன் என்று பொருளாம்….இது போன்ற புராணக் கதைகளைச் சொல்லி அதனுடன் தங்கள் பேரக்குழந்தைகளை சம்பந்தப்படுத்தி பெற்றோருக்கே தடுமாற்றம் வருவதுபோல் நடந்து கொள்வதும் நடக்கிறது என்கிறார்….

  அன்புடன்
  பவள சங்கரி

 2. Avatar
  punaipeyaril says:

  நாட்டில் சமீப காலங்களில் மிகப்பரவலாக பெருகிக் கொண்டிருக்கும் இந்த குறைபாடு பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லையோ?–>> நிறைய இருக்கிறது. ஆனால், நான் முன்பே சொன்னது போல் உங்கள் படைப்புக்களில் ஒரு படபடப்பு – அதாவது நிறைய எழுதனும், அதுவும் வேறு வேறு தளங்களில் நிறைய எழுதனும், என்ற படபடப்பு மட்டுமே இருக்கிறது. அதுவும் போக மேலுள்ளது கட்டுரையிலும் வராது… கதையிலும் வராது எனும் முறையில் எழுதப்பட்டுள்ளது. எண்ணிக்கைக்காக எழுத வேண்டும் என்றெண்ணாமல், எண்ணங்களுக்காக எழுத வேண்டும் என இனி கீ போர்டை தட்டுங்கள்… ஆட்டிஸம் பற்றி நிறைய இணையத்தில் தரமான கட்டுரைகள் இருக்கின்றன… உங்கள் பின்னூட்டம் பின் மேலுள்ளதை படித்த பின் இது மாதிரி கட்டுரைகளை நீங்கள் எழுதாமல் கதைப்பதே நன்று என்று தோன்றியது…

  1. Avatar
   பவள சங்கரி says:

   அன்பின் திரு புனைப்பெயரில்,

   வணக்கம். முதலில் தங்களிடம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த படைப்பும் அவசர, அவசரமாக எழுத வேண்டுமே என்று எழுதியது அல்ல.. குறிப்பாக ஆட்டிசம் பற்றிய இந்த படைப்பு. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு, சில காலமாக உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருக்கிற இதற்கு தீர்வாக, பல தளங்களில் மேய்ந்ததோடு, சென்னையில் சில பள்ளிகளை நேரில் சென்று பார்த்தேன். அத்தோடு பாதிக்கப்பட்ட சில பெற்றோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறேன். தயவுசெய்து அந்த வேதனையை உங்கள் அமில வார்த்தைகளால் கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களுக்கு என் எழுத்துக்கள் பிடிக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. எந்த ஒரு படைப்பும் அப்படி குப்பை போல எவரும் எழுதி தள்ள மாட்டார்கள். அதற்கு வேறு மாதிரி படைப்புகளும், தளங்களும் இருக்கிறது. தங்களைப் போன்று அறிஞர்கள் நல்ல ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கிவரும் திண்ணை போன்ற தளத்தில் தரமற்ற படைப்புகளை அளிக்க வேண்டிய அவசியமில்லை ஐயா. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

   அன்புடன்
   பவள சங்கரி

  2. Avatar
   பவள சங்கரி says:

   அன்பின் திரு புனைப்பெயரில்,

   வேறு வேறு தளங்களில் நிறைய எழுதுவதால் நான் பெறப்போவது என்ன. கலீல் கிப்ரான் பல காலமாக நான் படித்துக் கொண்டிருக்கிறேன். இணையத்தில் சமீப காலமாக (மூன்று ஆண்டுகள்) எனக்கு பரிச்சயம். வலைப்பூ ஆரம்பித்தவுடன் தான் இதெல்லாம் எனக்கு பரிச்சயம். அதற்கு முன்பு நோட்டில், டைரியில் என்று நிறைய எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்போது ஒவ்வொன்றாக தட்டச்சி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். சில சிறுகதைகள் மட்டும் தற்போது தோன்றும் போது எழுதுவேன். உங்களுக்கு இதில் ஏதும் பிரச்சனை இருக்காது என்று எண்ணுகிறேன். இதில் கதை போன்ற பகுதி என்று எதைச் சொல்கிறீர்கள். ஒவ்வொரு வரியும், கண்டதையும், வாசித்ததையும், நேரிடையாக அனுபவத்தில் கண்டதையும் எழுதியிருக்கிறேன். அதற்கான ஆதாரங்களை இணையத்தில் தேடி உறுதி செய்துகொண்ட பின்பே எழுதினேன்… பெயரும் , புகழும் கிடைக்க வேண்டும் என்று உண்மையாக இதை எழுதவில்லை. பல அறிஞர்கள் உலவும் திண்ணையில் ஏதேனும் தீர்வு கிடைக்காத என்ற ஏக்கமே அந்த இறுதி வரிகளுக்கான காரணம். ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

   அன்புடன்
   பவள சங்கரி

  3. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திண்ணையில் பெண் எழுத்தாளார் என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று திண்ணை ஆசிரியரே கட்டளை இடாத போது இந்த முகமூடி அறிவாளி பிறருக்கு எழுத்து விதி முறைகள் கூறுவது ஒரு பின்னோட்டமா ? இதை ஏன் திண்ணை அனுமதிக்கிறது ?
   சி. ஜெயபாரதன்

 3. Avatar
  punaipeyaril says:

  ASD (Autism Spectrum Disorders,) ADHD/ADD and Behavioral patterns ADHD (Attention Deficit Hyperactive Disorder) , போன்ற நோய்களும் இதில் அடங்கும் — > ”நோய்” என்ற வார்த்தையை நீங்கள் உபயோகித்திருப்பது தவறு. தயவு செய்து சரியான வார்த்தைகளை உபயோகியுங்கள்.

 4. Avatar
  punaipeyaril says:

  பி.கு. இதற்கு தகுந்த ஆதாரங்களுடனான் செய்திகளை வல்லுநர்களோ, ஆய்வாளர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ பதிவு செய்தால் அத்னை இக்கட்டுரையுடன் இணைக்க ஏதுவாகும்.— எக்கச்சக்கமாக இணையத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை முன்னெடுத்து செல்லும் வகையில் உங்களின் மேலுள்ள படைப்பு இல்லை.

  1. Avatar
   பவள சங்கரி says:

   இணையத்தில் இருக்கும் எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் ஆய்வாளரோ, மருத்துவ வல்லுநரோ அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் சார்பில், வேதனை தாளாமல் எழுதியுள்ளேன். தயவுசெய்து தவறான கண்ணோட்டம் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

   அன்புடன்
   பவள சங்கரி

 5. Avatar
  punaipeyaril says:

  உங்கள் கட்டுரையில் உள்ள படம் கூட அந்த பள்ளியில் தான் எடுக்கப்பட்டுள்ளது என கூகுள் சொல்கிறது. அது பற்றிய விவரமோ , இந்த கட்டுரைக்கு ஆதாரமா படம் http://www.disabilityindia.com/html/aprilvol1.html சுட்டியில் எடுத்தாண்டிருக்கிறீர்கள். அதற்கான ஒரு கிரடிட் கொடுக்கப்படாதது தவறு. கட்டுரையாளர் பிற இடங்களில் இருக்கும் படங்கள், தகவல்களை எடுத்தாளும் போது அதற்கான விவரங்களை தராதது ’காப்பி ரைட் ஆக்ட்” படி குற்றமே… பேர் வரணும் என்று சுவரேறி குதிக்கக் கூடாது…

 6. Avatar
  admin says:

  படத்துக்கு எழுதியவர் பொறுப்பாளி அல்ல.
  பொருத்தமான படத்தை இணையத்தில் தேடி எடுத்து போட்டது நாமே. தவறு எமது.

 7. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர். says:

  /////அதாவது நிறைய எழுதனும், அதுவும் வேறு வேறு தளங்களில் நிறைய எழுதனும், என்ற படபடப்பு மட்டுமே இருக்கிறது. அதுவும் போக மேலுள்ளது கட்டுரையிலும் வராது… கதையிலும் வராது எனும் முறையில் எழுதப்பட்டுள்ளது. எண்ணிக்கைக்காக எழுத வேண்டும் என்றெண்ணாமல், எண்ணங்களுக்காக எழுத வேண்டும் என இனி கீ போர்டை தட்டுங்கள்////

  மதிப்பிற்குரிய புனைப் பெயரில் அவர்களுக்கு,

  “கள்ளிப் பூக்களுக்கு” தங்களின் பின்னூட்டங்கள் படித்ததும்….கட்டுரைக்கும் உங்கள் பின்னூட்டம்..
  மிகவும் வித்தியாசமாக இருந்தது.

  அது ஏன் சார்..? இப்படி நேரடியாகத் தாக்குகிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்க வில்லை, சரியெனப் படவில்லை
  என்றால் விட்டு விட வேடியது தானே..உங்களுக்குத் தெரிந்தது அனைவருக்கும் தெரியுமா? சில கட்டுரைகள்
  தெரியாதவர்களுக்காக தெரிந்து கொள்வதற்காக எழுதப் படுகிறது.

  ஒரு சமூகப் பிரச்சனையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கும் அவர்களின் மனப் பாங்கை ஏன் உங்களால் காண முடியவில்லை?
  ஒரு கட்டுரையை எதற்காக இப்படி அறுவை சிகிச்சை செய்தது அதில் உள்ள விஷயங்களை கரைத்து விடுகிறீர்கள்.

  நீங்கள்…படிக்கவும் வேண்டாம்…பாராட்டவும் வேண்டாம்….பரிகாசம் செய்வது ஏன்..?

  இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் ” திருவிளையாடல் தருமிக்கு ” வந்த நிலையை ஏற்படுத்தினால்….யாருக்கு மேற்கொண்டு எழுத மனம் வரும்..இதனால் ஒரு எழுத்தாளியின் பேனா முறிகிறது.

  சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும் என்று இருக்க…எங்கள் இதயங்கள் இயந்திரங்கள் அல்ல.

  ஏன் என்று கேட்டால்..? திண்ணைக்கு வந்து விட்டால் எல்லாம் பொது என்று பதில் சொல்லும் சாமர்த்தியம் உங்களுக்கு..!

  அப்போ திண்ணையில் வந்தமர்ந்தால் தானே…போவார், வருவார் வாய்க்கு பயப்பட வேண்டும்…?

  வேறு யாரும் ஒன்றும் சொல்வதில்லை…நீங்கள் மட்டும் ஏன் சர்…..? ஏன்…? குச்சியைக் காட்டி அதட்டிக் கொண்டு..!

  உங்கள் இது போன்ற பின்னூட்டத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்..
  முதலாவதாக….
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 8. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இப்படி அடிக்கடி மொட்டைக் கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட மாதர்களை அப்படி எழுது, இப்படி எழுது, எப்படி எழுதாதே, என்று கட்டளை இடும் இந்த சட்டாம் பிள்ளை யார் ?
  இவை எல்லாம் பின்னோட்டமா ? முழுக்க முழுக்க பெண் சீண்டல்கள் (Harassment) !!!
  கடிக்கும் நாய்கள் திண்ணையில் கட்டப் பட வேண்டும்.
  இந்த முகமூடி யாரென்று திண்ணை வாசகர்கள் அறிய வேண்டும். திண்ணை ஆசிரியர் அவர் யாரென்று அறிவிக்காமல் அவர் பிறருக்கு அறிவுரையாய்க் குரைப்பதை நிறுத்தச் செய்வாரா ?
  திண்ணையில் பெண் எழுத்தாளர் எழுதுவது திண்ணைக்கும் பிடிக்க வில்லையா?
  இந்த முகமூடி யார் ? யார் ? யார் ? யார் ? அளவுக்கு மீறி பிறருக்கு வேண்டாத அறிவுரை கூறும் இந்தப் பெரியார் யார் ?
  இவர் யார் திண்ணை எழுத்தாளருக்கு அறிவுரை கூறுவது ? தமிழ்நாட்டு சாக்ரடிஸா ?
  சி. ஜெயாரதன்.

 9. Avatar
  இளங்கோ says:

  /*இவை எல்லாம் பின்னோட்டமா ? முழுக்க முழுக்க பெண் சீண்டல்கள் (Harassment) !!!
  கடிக்கும் நாய்கள் திண்ணையில் கட்டப் பட வேண்டும். */

  திரு ஜெயபாரதன் அவர்களுக்கு,

  இங்கே எழுதும் பெண் எழுத்தாளர்களை யாரும் harass பண்ண முடியாது. அப்படி ஒரு ஐயம் தேவையில்லை. அப்படி ஒரு முயற்சி நடக்குமாயினும் கூட, அதை எதிர் கொள்ள வல்லமையுள்ளவர்கள் நமது தோழிகள். கவலை கொள்ளாதீர்கள்.

  திண்ணையில் பின்னூட்டம் இடுவோர், தங்களைப் பற்றிய முறையான விவரங்களோடுதான் பின்னூட்டம் இட முடியும் என்று ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, “புனைப்பெயரில்” எழுதும் ஒருவரை தரக்குறைவாகத் தாக்குவது என்ன நியாயம்? அவரின் பின்னூட்டம் தரக்குறைவாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால் கூட, நீங்களும் பதிலுக்கு தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகப் படுத்த வேண்டுமா?

  புனைப்பெயரில் தொடுத்த குற்றச்சாட்டுகளுக்கு பவளா விளக்கமாக, தெளிவாகப் பதிலிறுத்தியிருக்கிறாரே. பிறகு எதற்கு இவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம்?

  இளங்கோ.

 10. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இந்தப் புனை பெயரானுக்கு நான் எழுதும் பதில்.

  திண்ணை பொதுத் தமிழர் வலைப் பதிவு. அதில் ஒருவர் எழுத விரும்பியதை, விரும்பிய நேரத்தில், அவர் விருப்பம் போல் கூட்டியோ, குறைத்தோ, முழுமையாய் அறிந்தோ, அல்லது அறியாமலோ, அரைகுறையாகவோ, எதிர்த்தோ, ஆதரித்தோ எழுவது அவர் உரிமை. அதை இப்படி எழுது, அப்படி எழுது, எப்படி எழுதாதே என்று ஒருவர் அதிகாரம் செய்து அறிவுரை கூறுவது வலை நெறிப்படி அறிவீனம்.

  இது ஒருவர் எழுதுவதைத் தடுக்கும் வன்முறையாகும். இதை நிறுத்திக் கொள்ள பலமுறை அவருக்கு எழுதிவிட்டேன். அவர் தனது மேதாவித் தன்மையைக் காட்டிக் கொள்வதில் தவறுவ தில்லை.

  இந்திரா காந்திக் கட்டுரையிலும் இதே மாதிரி முகமூடியின் அறிவுரைப் பின்னோட்டம்தான்.

  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

 11. Avatar
  admin says:

  அனைவருக்கும் அன்புடன்

  எழுத்தை விமர்சியுங்கள். எழுத்தாளரை அவமரியாதை செய்யாதீர்கள்.

  கருத்தை விமர்சனம் செய்யுங்கள்.

  அன்புடனும் பண்புடனும் நடந்துகொள்வதற்கு நம்மை நாமே நினைவூட்டிகொள்வோம்.

  கடுமையான வார்த்தைகள் என்று கருதினால், கடுமையான வார்த்தைகள் என்று சொல்லி நகர்ந்துவிட்டு, கருத்தை மட்டுமே விமர்சனம் செய்யுங்கள்.

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *