[பிப்ரவரி 15, 2013]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
http://www.youtube.com/watch?
“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”
டிமிட்ரி ரோகோஜின் [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]
“இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”
நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]
ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு. வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT]. வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன. 50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார். விளைந்த சேதாரச் செலவு : சுமார் 33 மில்லியன் டாலர். பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது.
ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry] கூறுகிறார்.
அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது. வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது. இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது ! 150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது ! இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !
விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:
“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி, டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சிறப்பு அறிவிப்பு மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள் [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை. அவை விண்வெளியிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க முடியா. விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா ! விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும். மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள் மேன்மைப் படுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும். அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும். அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும். அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும், பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது. விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம் பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.
ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.
1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.
இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.
++++++++++++++++++++
தகவல்:
- http://www.telegraph.co.uk/
news/worldnews/europe/russia/ 9872020/Meteoroid-falling- over-Russia-caught-on-camera. html - http://www.telegraph.co.uk/
news/newsvideo/9872507/The- science-behind-Russian-meteor- strike.html - http://www.telegraph.co.uk/
science/space/9872991/ Asteroid-passing-Earth-is- closest-ever-of-this-size.html - http://www.youtube.com/watch?
v=90Omh7_I8vI&feature=player_ embedded - http://www.dailygalaxy.com/my_
weblog/2013/02/10-ton-meteor- explodes-over-russia-injuring- hundreds-this-am.html?utm_ source=feedburner&utm_medium= feed&utm_campaign=Feed%3A+ TheDailyGalaxyNewsFromPlanetEa rthBeyond+%28The+Daily+Galaxy+ –Great+Discoveries+Channel% 3A+Sci%2C+Space%2C+Tech.%29 - http://rt.com/news/meteorite-
crash-urals-chelyabinsk-283/ - http://rt.com/news/
scientists-explain- chelyabinsk-bolide-337/ - http://en.wikipedia.org/wiki/
Tunguska_event [February 19, 2013]
+++++++++++++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 3, 2013)
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2