இளைஞன்

This entry is part 3 of 29 in the series 3 நவம்பர் 2013

 

யூசுப் ராவுத்தர ரஜித்

‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுடன் இதோ நம் இளைஞன். 6 பாடங்களில் 17 புள்ளிகள். 5 பாடங்களில் 13 புள்ளிகள். தொடக்கக் கல்லூரியா?  தடையில்லை. பல்துறைக் கல்வியா? அதற்கும் தடையில்லை. இந்தப் புள்ளிகளை வைத்துக் கோலம் போடவேண்டும். எந்தக் கோலத்தை எப்படிப் போடப் போகிறான். அதற்கு முன் அந்த இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இவன் பெயர் சசிகுமார். சுருக்கமாக சசி. ‘ரேப்’ பாடல்களில் அதிக ஈடுபாடு. ஆங்கிலத்தில் காதல் கவிதை வடிக்கத் தெரிகிறது. மடி கணினியில் மயக்கும் இசைகளை பதிவிறக்கி அதை வேறு குடுவையில் கலந்து இடையே தன் காதல் வரிகளைப் பாடி புதிய ரேப் பாடலை உருவாக்குகிறான். யூ டியூபில் அதைச் செருகிவிடுகிறான். எத்தனை பேர் அதைக் கேட்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பார்த்துப் பசியாறுகிறான். மேற்கத்திய நடனத்தின் நுணுக்க அசைவுகள் அத்தனையும் அத்துபடி. எலும்பையும் வளைத்துக் காட்டுகிறான். தன் பள்ளி இறுதிநாளில் இவன் ஆடிய ஆட்டத்திற்கு எழுந்த கைதட்டலை அடக்க முயன்றும் முதல்வர் தோற்றுப் போயிருக்கிறார். கட்டுரை எழுதும் போட்டியில் கலந்து கொண்டான். கட்டுமானப் பணிகளால் குடியிருப்புத் தொகுதிக்கு ஏற்படும் சிக்கல்களை அவன் செதுக்கியிருந்தான். அதை அவிழ்த்தும் காட்டியிருந்தான். முதல் பரிசு அவனுக்குத்தான் கிடைத்தது. நடிப்பதிலும் அவனுக்கு துடிப்பான ஆர்வம். பல கோணங்களில் தன்னைப் படம்பிடித்து, தன்னைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து நடிகர்களைப் பற்றிக் கூறும் ஒரு வலைத் தளத்தில் தந்திருக்கிறான். ஆண்டுச் சந்தா அதற்கு 150 வெள்ளி. அவ்வப்போது நடிப்பதற்கு அழைப்புகள் வரும். விளம்பரப் படங்கள் குறும்படங்களென்று அவன் நடிக்கும் பிரத்தியேகக் காட்சிகளை ஒரு தனி கோப்பில் சேர்த்து வைக்கிறான். அம்மா அப்பாவுக்கு அதைக் காட்டி  ரசிக்கிறான். அவன் வாழ்க்கை இலட்சியம் என்ன தெரியுமா? உலகப் புகழ்பெற்ற வில்லியம் (கற்பனைப் பெயர்) என்ற ஹாலிவுட் நடிகரைப் போல் நடித்துப் புகழ் பெறுவதுதானாம். வில்லியம் நடித்த அத்தனை படங்களும் அவனின் தனி ஆல்பத்தில். எந்தக் கதை வேண்டும். எந்தக் காட்சி வேண்டும். அவனிடன் கேளுங்கள். அடுத்த நிமிடம் தகவல்கள் தயார். குறைகளை அவன் அலசும்போது அவனின் ஆழ அகலங்கள் புரிகிறது. அவன் படிக்க விரும்புவது பல்துறைக் கல்லூரியில் ஊடகத் தொடர்புத் துறையில் ஒரு பட்டயம்.

அவனின் தாயார் ராணிசந்திரா. அவர் என்ன சொல்கிறார். கேட்போமா?

‘என் மகன் தொடக்கக் கல்லூரியில்தான் படிக்கவேண்டும். சீருடை ஒழுக்கம் அவசியம். அது பல்துறை கல்லூரியில் இல்லை. சலிக்கப்பட்ட மாணவர்கள்தான் தொடக்கக் கல்லூரிக்கு வருகிறார்கள். அவனின்  தோழமைகள் அவனை உயர்த்தும். படிக்காமல் அங்கு படியேற முடியாது. இரவின் முன் பகுதி அவனுக்குப் பகல். பகலின் முன்பகுதி அவனுக்கு இரவு. இந்தச் சுழற்சியை முதலில் மாற்றவேண்டும். இரவு 1  மணிக்குத்தான் வீடு வருகிறான். கேட்டால் நண்பர்கள். இதெல்லாம் உடைக்கப்படவேண்டும். பதினெட்டை நெருங்குகிறான். பெண் நண்பர்கள் அவன் பாதையை மாற்றலாம். அது மாறிவிடக் கூடாது. அது மாறாமலிருக்க அவன் அவனாக இருக்க தொடக்கக் கல்லூரிதான் உதவும். எல்லாம் தெரிந்தும் அவன் அப்பா எதையும் கண்டு கொள்வதில்லை. பயமாக இருக்கிறது. அவன் எதிர்காலம் அவனுக்குப் பாதை சொல்லுமா அல்லது இருளில் தள்ளுமா? தொடக்கக் கல்லூரி நிச்சயம் பாதை காட்டும்.

2

பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பு, அழுக்குப் படாத சட்டை, ஆறாயிரம் சம்பளம், மில்லியனில் வீடு எல்லாமே சாத்தியம். நான் சொல்வதை அவன் கேட்டால்’

இளைஞனின் தந்தை செல்வநாயகம். அவர் சொல்வதைக் கேட்போம்.

‘படிப்பு திணிக்கப்படுவதல்ல. அவனால் விரும்பி உண்ணப்படுவது. ரேப் பாடல்கள் எழுதி இசையமைத்துப் பாடுகிறான். யூ டியூபில் ஆயிரமாயிரம் பேர் ரசிக்கிறார்கள். அந்தத் திறமை நானா கற்றுத் தந்தேன்? மேற்கத்திய நடனம் நானா சொல்லிக் கொடுத்தேன். கட்டுரை கதைகள் தமிழில் வேண்டுமானால் என்னால் எழுத முடியும். ஆங்கிலத்தில்?  நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. அவன் சர்வசாதாரணமாக எழுதுகிறான். அவனின் எந்தத் திறமையும் என்னிடம் இல்லை. காட்டுக் குருவிக்கு கடிவாளம் போட நான் விரும்பமாட்டேன். அவன் அவனாக வளரட்டும் அதற்குள்ள அனுபவம் அறிவு அவனிடன் ஏராளம் ஏராளம். ஒரு தொலை பேசிக்குள் இருக்கும் விளங்காத நுணுக்கத்தையும் இவன் விவரித்துச் சொல்கிறான். ஒரு மடிகணினிக்குள் இவன் செய்யும் வித்தைகள் வேறு எவரும் செய்யமுடியுமா என்பது சந்தேகமே. காற்றுக்குத் திசை சொல்ல எனக்குத் தெரியவில்லை. தகுதியும் இல்லை. அவன் விரும்பியதைப்  படிப்பதுதான் அவனுக்கும் சரி. எனக்கும் சரி. முடிவெடுக்கும் பொறுப்பை  நான் கையில் எடுத்ததில்லை. அவன் எடுக்கட்டும். நான் கூடச் செல்கிறேன்.’

தொடக்கக் கல்லூரிக்கும் விண்ணப்பம் போட்டாகிவிட்டது. சேருவது அடுத்த கட்டம். நாளை நீ ஆன் பல்துறைக் கல்லூரியில் அவனுக்கு நேர்முகத் தேர்வு. செல்வநாயகம் அழைத்துச் செல்கிறார். ஊடகத் தொடர்புத் துறைக்கு 10 புள்ளிகள் அல்லது அதற்கும் குறைவாகத் தேவை. இவனிடம் 13 புள்ளிகள். எப்படி நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுத்தார்கள். செல்வநாயகத்திற்குப் புரியவில்லை. சசி சொன்னான்.

‘நான் விண்ணப்பத்தில் தந்திருக்கும் தகவல்கள் அடிப்படையில்தான் என்னை அழைத்திருக்கிறார்களப்பா. அவர்களை திருப்திப் படுத்துவது  என் பொறுப்பு. நிச்சயம் வாங்கிவிடுவேன். நீங்கள் கூடமட்டும் வாருங்கள். அது போதும்.’

சசியின் தன்னம்பிக்கை செல்வாவை திகைக்க வைத்தது. நேர்முகத் தேர்வுக்கு சசி மட்டுமே அனுமதிக்கப் பட்டான். இதோ நேர்முகத் தேர்வு தொடங்குகிறது.

‘ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாய்?’

‘இயற்கையிலேயே எனக்கு இதில் ஈடுபாடு. இதோ பாருங்கள் நான் நடித்த சில காட்சிகள். பட்டியல் இது. பார்க்க விரும்புவதைச் சொல்லுங்கள் நான் திறக்கிறேன். ஆறு குறுபம் படத்திற்கான கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். நேரம் அனுமதித்தால் ஒரு கதையைச் சொல்கிறேன். ஒரு புகைப்பட நிபுணரை கைவசம் வைத்திருக்கிறேன். முதலீடு செய்ய ஒரு மனிதரைத் தேடிக்  கொண்டிருக்கிறேன். கண்டுபிடித்து சம்மதிக்க வைப்பேன். நானே எழுதி இசையமைத்த ஒரு ரேப் பாடலை யூ டியூபில் 1,15, 900 பேர் இதுவரை கேட்டு பாராட்டி இருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் அதை இசைத்துக் காட்டுகிறேன். எனக்கு இடம் தாருங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் ஆச்சரியம் அடையும் அளவுக்கு சாதனைகளை என்னால்  செய்துகாட்ட முடியும்.

3

நேர்முகத் தேர்வு முடிந்தது. அடுத்த நாளே மின்னஞ்சல் வந்தது.

‘உங்களுடைய திறமை எங்களுக்குத் திருப்தியாக இருக்கிறது. அதற்காக நாங்கள் வகுத்துக் கொண்ட தகுதிச் சட்டத்தை கொஞ்சம் தளர்த்தி அனுமதி தருகிறோம். இன்னும் 10 நாட்களுக்குள் நீங்கள் கல்லூரியில் சேர்ந்துவிடவும். ‘

கடித விபரம் கேட்டு சசியை அணைத்துக் கொண்டார் செல்வநாயகம். ராணிக்கு மட்டும் அதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் குறுக்கே நிற்பதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஒதுங்கிக் கொண்டார். அப்பாவாச்சு பிள்ளையாச்சு.

பல்துறைக் கல்லூரிக்கு சசி சென்று கொண்டிருக்கிறான். சில மாதங்கள் ஓடின. எது மாறவேண்டும் என்று ராணிசந்திரா விரும்பினாரோ அது மாறவே இல்லை. மாறாக இன்னும் தீவிரமாக இருக்கிறது. எப்போது சசி தூங்குகிறான் என்றே தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் காதில் ஒலிப்பானைப் பொருத்திக் கொண்டு மடிகணினியை குடைந்து கொண்டே இருக்கிறான். நன்பர்களோடு வெளியே செல்கிறான் இரவு 2 மணிக்குத்தான் வருகிறான். .. பெரிய பெரிய பணக்காரப் பிள்ளைகள் அவனைச் சுற்றி.  புகைக்கிறார்களாம். ஒரு சீனப் பெண்ணோடு நெருக்கமாகப் பழகுகிறானாம் அடிக்கடி அவள் வீட்டுக்குப் போகிறானாம். ராணி பயந்தது போலவே நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சும்மா இருக்க முடியும்.  இனி செல்வநாயதகத்திடம் தனியாகவோ, சசியிடம் தனியாகவோ கேட்பதில் பயனில்லை. இருவரும் வீட்டில் இருக்கும்போது கேட்க வேண்டும். அன்று இருவரும் வீட்டில் இருந்தார்கள். சரியான சமயம் இது. அதிகமான அழுத்தத்தில் டயர் வெடிப்பதுபோல் வெடித்தார் ராணி. இதோ.. அந்த உரையாடலைக் கேட்போம்.

‘உங்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாதது போன்ற நாடகமா? தினமும் 2 , 3 மணிக்கு வீட்டுக்கு வருகிறான். எங்கே போகிறான் என்று ஒரு நாளாவது கேட்டீர்களா?’

‘நான் ஏன் கேட்க வேண்டும். என்னிடன் சொல்லிவிட்டுத்தானே அவன் போகிறான்.’

‘அவன் செய்வதெல்லாம் தெரியுமா?’

‘தெரியும்’

‘அப்படியென்றால் நீங்களும் உடந்தையா?’

‘உடந்தையாக இல்லாவிட்டால் உளைச்சலுக்கு ஆளாவேன். அவன் அறிவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவனிள் தன்னம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.’ அவன் புகைக்கிறான். இதெல்லாம் வாலிபக்குசும்புகள். .அதிகமாகத்தான் இருக்கும் இந்த வயதில் நானெல்லாம் அந்த வயதில் துண்டு பீடி குடித்திருக்கிறேன். பிறகு கடந்ந 50 ஆண்டுகளாக நான் சிகரெட்டைத் தொட்டதில்லை. தொட்டபோது யாரும் கண்டிக்கவில்லை. விட்டபோது யாரும் பாராட்டவும் இல்லை. அவனுக்குக் கிடைக்கும் கனிகளை அவன் ருசிக்கட்டும். இனிப்பவைகள் ஒரு நாள் புளிக்கத் தொடங்கும். துப்பிவிடுவான். வாழ்க்கை பற்றிய என் விதிகள் எனக்குச் சரி. உனக்குப் பிடிக்கவில்லை யென்றால் நீயே திருத்த முயற்சி செய்’

4

சசி குனிந்தபடி புன்னகைக்கிறான்.  பாவம் ராணி. எதிர் நீச்சல் போடுவதும் தோற்பதும் அந்தத் தோல்வியையே வாழ்க்கையாக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்டார். என்றாலும் ராணி விடுவதாக இல்லை. தொடர்ந்தார்.

‘சரி. விடுங்கள். ஒரு சீனப் பெண்ணோடு தோளில் கைபோடும் நெருக்கம் இருக்கிறது. தெரியுமா? தெரியாதா?’

‘தெரியும். அவள் நேற்று முளைத்தவள் அல்ல. தொடக்கப் பள்ளியிலிருந்தே நன்பர்கள். அவர்கள் வீட்டுக்கு நானும் சென்றிருக்கிறேன். அவள் அப்பா இன்னொரு பெண்ணோடு வெறொரு இடத்தில் வாழ்கிறார். கேள்விப்பட்டிருப்பாய்.  நீ அடுத்த கேள்வியைத் தொடுக்குமுன் நானே சொல்லிவிடுகிறேன். அந்தப் பெண்ணோடு அவர் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை. ஏன் தெரியுமா? இந்தப் பிள்ளையை மட்டுமே அவர்கள் மகளாகக் கருதுவதால். அந்த பந்தத்திற்கு பழுது வந்துவிடக் கூடாது என்பதால். உடைந்துபோன குடும்பம்தான். உடைந்ததெல்லாம் உருப்படாதது என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதே. அந்தப் பெண் 6 பாடங்களில் 8 புள்ளிகள். 5 பாடங்களில் 4 புள்ளிகள். நம் மகனைவிட இரண்டு மடங்கு வெற்றியோடு ‘ஓ’ நிலையை முடித்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு உளைச்சல்கள் இருக்குமானால் இந்த வெற்றி சாத்தியமல்ல. இந்த வயதில் இதுபோன்ற ஈர்ப்புகளை நான்  பட்டிருக்கிறேன். நீ பட்டிருக்கிறாயா என்பதை நீயே யோசித்துக் கொள். இந்தப் பெண்ணின் நட்பை ஏன் வெட்டவேண்டும். அதை அப்படியே விட்டுவிடு. ஆகுமானால் மட்டுமே தொடரும். ஆகாதென்றால் அறுந்துவிடும். இது என் அனுபவம். நாம் சிறு வயதில் செய்த வாலிப குசும்புகளை நம் பிள்ளைகள் செய்யக் கூடாது என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை காட்டுமிராண்டித்தனம். தேவையில்லாமல் அவனைத் துப்பறியும் வேலையில் ஈடுபடாதே.’

இப்படி அடிபடுவோம் என்று ராணி எதிர்பார்க்கவில்லை.  மாதங்கள் சில கழிந்தன. சசிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்தச் செய்தியை அப்படியே அப்பாவிடம் சொன்னான் சசி.

‘அப்பா! கலிபோர்னியாவில் வில்லியமின் சூட்டிங்குக்கு துணை நடிகர்கள் தேவையாம். உலகம் முழுவதுமிருந்து கல்லூரி மாணவர்களை எடுக்கிறார்களாம். விரும்புகிறவர்கள் தெரிவிக்க வேண்டுமாம். அவர்கள் வரச்சொன்னால் சொந்தச் செலவில்தான் செல்லவேண்டுமாம். வில்லியம் தோன்றும் திரையில் நம் முகம். நான் எழுதினால் நிச்சயம் எடுப்பார்களப்பா. கலிபோர்னியா சென்றுவர $5000 வேண்டும். தொலைபேசி பில்களையே நாம் தாமதமாகத்தான் செலுத்துகிறோம். நான் முயற்சி செய்ய விரும்பவில்லை யப்பா. நான் உங்களுக்குப் பிரச்சினை ஆகிவிடக் கூடாது.’

‘இல்லை சசி. நீ எழுதிப் போடு. கிடைத்துவிட்டால் பிறகு பணத்தைப் பற்றி யோசிப்போம்.’

‘அப்பா! யோசித்துச் சொல்லுங்கள். கிடைத்து நான் போகாவிட்டால் அவர்களை அவமானப் படுத்தியதுபோல் ஆகிவிடும்.’

‘தெரியும். நீ எழுதிப் போடு.’

 

5

நடிப்புத்  துறையில் தன் அனுபவங்களை, தன் படங்களை அழகாகத் தொகுத்தான் சசி. வில்லியமின் முகப்பக்கத்துக்கும் தனக்கு வந்த மின்னஞ்சல் முகவரிக்குமாக அதை அனுப்பி வைத்தான். அதோடு கலிபோர்னியா  செல்லும் விருப்பத்தையும் முறைப்படி எழுதிவிட்டான். சிங்கையில் சசி நடித்த ஒரு குறும்படத்தின் இயக்குநர் ஏற்கனவே ஒரு வில்லியம் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அவரும் சசியைப் பரிசீலிக்கும்படி கடிதம் எழுதி விட்டார்.

 

பத்து நாளில் பதில் வந்தது. அடுத்த மாதம் தேதி 5,6 ல் சூட்டிங்காம். வில்லயமுக்கு பின்னால் நிற்கும் மாணவர்களில் முதல்  வரிசையில் வில்லயமுக்கு அருகில் இடம்  ஒதுக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் இதில் கண்ட முகவரிக்கு நேரில் வந்துவிடவும்.  எங்களிடமே தங்கிக் கொள்ளலாம். இங்குள்ள குடிநுழைவுத் துறைக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். அவர்களிடன் இந்த மின்னஞ்சல் நகலைக் காட்டவும்.’

செல்வநாயகம் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. அடுத்த மூன்றே நாட்களுக்குள் டிக்கெட் எடுத்துவிட்டார். அடுத்த மாதம் முதல் தேதி அவன் புறப்படவேண்டும். புறப்படும் விமானம் இறங்கும் நேரம் சொல்லியாகிவிட்டது. அவர்களே விமான நிலையத்திற்கு வந்து அழைத்துக் கொள்வதாக மறு உறுதிக் கடிதமும் கிடைத்துவிட்டது. அடுத்த மாதம் 1ம் தேதி புறப்பட வேண்டும். 15ம் தேதி திரும்ப வேண்டும். இதுதான் ஏற்பாடு.

வில்லயமோடு இருக்கும் கனவுலகில் சசி மிதந்தான்.  எவ்வளவு பெரிய நடிகர். அவருக்குப் பின்னால்  என் முகம். வானம் தரையாகவும் தரை வானமாகவும் தெரிந்தது.

ராணி கேட்டார். ‘இப்போது இருக்கும் நெருக்கடியில் இது தேவையா? நீங்கள் என்ன பைத்தியமா? அது என்ன முக்கிய வேடமா? வெறும் முகம் காட்டும் வாய்ப்புதானே. ‘

இந்த அடிகள் செல்வநாயகம் எதிர்பார்த்ததுதான். பேசி முடிக்கட்டும் என்று பொறுத்திருந்தார். பின் தொடர்ந்தார்.

‘கடந்த காலங்களை கொஞ்சம் நினைத்துப் பார். உன் குடும்பத்தில் என் குடும்பத்தில் எத்தனையோ செலவுகள். தவிர்க்க நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். என் நிலை சசிக்குத் தெரியும். இந்த விஷயத்தைச் சொன்னால் அப்பாவுக்கு வீணான உளைச்சல் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம். சொல்லிவிட்டான். எனக்கு வயது 65. உனக்கு வயது 58. நம் பிளைளக்காக நாம் எந்த தியாகமும் செய்வோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் விதைக்கப்பட வேண்டும். இதில் ஒரு மிகப் பெரிய வாய்ப்பின் கதவுகள் திறக்கப்படலாம். பொறுமையாயிரு.’

1ம் தேதி. செல்வநாயகமும் ராணிசந்திராவும் விமான நிலையம் சென்றார்கள். இதோ சசி விடை பெற்றுக் கொள்கிறான்.24 மணி நேரம் பறந்தான். கலிபோர்னியா சேர்ந்தான் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது சசிகுமார் என்ற பெயர் பதாகையுடன் ஒருவர் காத்திருந்தார். அவரோடு நேராக அலுவலகம் வந்தான். வருகையைப் பதிவு செய்தான். அவர்கள் சொன்னது சசி எதிர்பார்க்காதது. சூட்டிங் 6ம் தேதிதானாம். நாளைக்கு குரல் தேர்வாம். பிறகு புகைப்படத் தேர்வாம். அவைகளை முடித்துக்கொண்டு 6ம்  தேதி சூட்டிங். சூட்டிங் பற்றிய குறிப்புரையில் அவனுக்கு வசனமோ அருகாமைக் காட்சிகளோ இல்லை.

6

ஆனாலும் இந்தக் குரல் தேர்வுகள் வழக்கமா அல்லது வேறு எதுவுமா? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அன்று இரவு செல்வநாயகத்திடம் பேசும்போது எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லிவிட்டான்.

6ம் தேதி பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நாட்களாக கோடிக்கணக்கான நொடிகளாக அவனைப் பிய்த்துத் தின்ற ஆசை இதோ நிறைவேறப் போகிறது. வில்லியத்தைப் பார்க்கப் போகிறான். அதுவும் கைக் கெட்டும் தூரத்தில். ஒரு மின்னலைப் பிடித்து கழுத்துச் சங்கிலி யாக்கிக் கொண்டதுபோல் உணர்ந்தான். அவன் கால்களுக்குக் கீழே நிலா கிடக்கிறது. கைக் கெட்டும் தூரத்தில் பறிக்கச் சொல்லி கெஞ்சுகின்றன விண்மீன்கள். இதோ வில்லியம். மேகங்களுக்கிடையே பளிச்சென்று விடுபட்ட சூரியனாக. சூட்டிங் தொடர்ந்து. சசி நிற்கும் இடம் நகரவேண்டிய இடம் எல்லாம் துல்லியமாகச் சொல்லப்பட்டது. இரண்டு நாள் சூட்டிங் முடிந்தது.

அன்று மாலை தயாரிப்பு நிறுவனம் சசியை அழைத்தது. பெரிய வட்ட மேசையில் படம் சம்பந்தப்பட்ட அனைவரும் அமர்ந்திருந்தார்கள். சசி நுழைந்தான். அமரச் சொன்னார்கள். உதவி இயக்குநர் சொன்னார்.

‘எங்களுடைய அடுத்த தயாரிப்பில் வில்லியமோடு நடிக்க ஓர் இந்திய முகம் தேவை. உங்கள் புகைப்படம், உங்கள் குரல் எல்லாம் நச்சென்று ஒத்துப் கோகிறது. உங்களுக்குச் சம்மதமென்றால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள். உங்களுக்கு 18 ஆகவில்லை என்று அறிகிறோம். உங்கள் அப்பா வரவேண்டும் விமானச் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ‘

சசிக்குள் சரவெடிகள். நரம்புகளெல்லாம் பல்புகளாக எரிந்தன இல்லை ஒளிர்ந்தன. உடனே அப்பாவை அழைத்தான். ‘ இன்று மாலை உங்களுக்கு இ டிக்கெட் அனுப்புவார்கள். புக்கிங் எல்லாம் இங்கேயே செய்துவிடுவார்களப்பா. நீங்கள் உடனே புறப்பட்டுவிடுங்கள். வில்லியமின் அடுத்த பட்த்திற்காக  ஒப்பந்தமாகி யிருக்கிறேனப்பா.’

செல்வநாயகம் ராணியிடம் சொன்னார்.  ‘அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பதை இறைவன் இதுவரை யாருக்கும் சொல்லித்  தரவில்லை. இப்போதுகூட பெரிய எதிர்பார்ப்புகள் என்று ஏதுமில்லை. போகிறேன். இது எப்படி தொடர்கிறது என்று பார்க்கிறேன். ஓரிரு நாட்களில் வந்துவிடுகிறேன்.

செல்வநாயகம் கலிபோர்னியா வந்துவிட்டார். அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சசி. சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தன.

‘நாளைக் காலை 10 மணிக்கு உடன்பாட்டில் கையெழுத்துப் போடவேண்டும். எல்லாம் விபரமாகத் தெரிவிக்கப்படும்.  அவகாசம் தரப்படும். நீங்கள் யோசித்து முடிவு செய்யலாம்’

திட்டவட்டமாகச் சொன்னார்கள் படக் குழுவினர்.

அடுத்தநாள் காலை. 10மணி. படக்குழுவினர் வந்தனர்.  சில பத்திரங்கள் விரிக்கப்பட்டன. 280,000 அமெரிக்க டாலர்கள் சம்பளமாம். 100,000 டாலர் முன்பணமாம். பத்திர விபரங்களைச் சொன்னார்கள். காற்றைவிட லேசாகிப் போனான் சசி. செல்வநாயகம் சசியை நிமிர்ந்து

7

பார்த்து உதடுகளை மடித்துக் கொண்டார். கண்ணீரை அடக்க அவர் அப்படிச் செய்வது வழக்கம். அகில உலகத்திற்கு ஒரு மாபெரும் கலைஞன் அறிமுகமாகப் போகிறான். செருப்புத் தைக்கும் குடும்பத்திலிருந்து ஒரு ஜனாதிபதியை அடையாளம் கண்ட  அமெரிக்கா ஒரு சராசரிக் குடும்பத்திலிருந்து சாதிக்கப் பிறந்தவனை இன்று அடையாளம் காட்டியிருக்கிறது.

முற்றும் 

Series Navigationநாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.அப்பா
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *